சோவியத் – ரஷ்ய சினிமா
ரஷ்ய திரைப்படங்கள் -1
யு.எஸ்.எஸ்.ஆர். என அறியப்பட்ட சோவியத் சோஷலிஸ ஒன்றியம் மற்றும் ரஷ்யாவுக்குள் நமது பயாஸ்கோப்காரன் வந்து இறங்கியிருக்கிறான். பயாஸ்கோப்காரன் தனது மிக நீண்ட சர்வதேச சினிமா பயணத்தில் தன் பயாஸ்கோப் வழியாக தமிழ்நாட்டு திரைப்பட ஆர்வலர்களுக்கு பல்வேறு மொழி, நாடு, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் வரலாற்றுத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தியும் விவரித்தும், ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுமாய் பல்வேறு விதமான- ரசனை முதன்மையாக ரசனை உணர்வோடு முனைந்து காட்டி வந்தவன். இந்த நீண்ட தன் பயணத்தின் இறுதிக் கட்டமாய் ரஷ்யாவுக்குள் வந்திருக்கிறான். ரஷ்ய திரைப்படங்கள் மற்றும் சோவியத் யூனியனின் வெவ்வேறு பிராந்தியங்களின் ஓரிரு திரைப்படங்களோடு அவனுடைய நீண்ட பயணம் நிறைவுற உள்ளது.
சோவியத் ரஷ்யா உலகின் தலைசிறந்த திரைப்பட மேதைகளுள் கொஞ்சம் பேரை தன் பங்களிப்பாக அந்நாடு அளித்துள்ளது. அவர்தம் உலகு சிறந்த திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் கொஞ்சத்தை பயாஸ்கோப்காரன், ரசனைரீதியாக உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறான்.
ரஷ்ய சினிமா எனும்போது, பல தேசியங்களை உள்ளடக்கிய சோவியத் சோஷலிஸ ஒன்றியமாயிருந்த நிலையிலேயே, திரைப்படத் தொழில் என்பது மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இரு பகுதிகளின் சினிமா உற்பத்தியைக் காட்டிலும் ஒன்றியத்தின் இதர பகுதிகளான உக்ரைன், ஜியார்ஜியா, உஸ்பெக், கனிஸ்தான் பகுதிகள் மிகவும் பின் தங்கினதாகவே இருந்திருக்கின்றன. வரும் அத்தியாயங்கள் ஒன்றில் ஓரிரு திரைப்படங்கள் வழியே பார்க்கலாம். திரைப்பட வினியோகம் என்பதும், வெளிநாட்டுத் திரைப்படங்களை திரையிடல் என்பதும் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இரு நகரங்களிலேயே நடைபெற்று வந்திருக்கிறது.
1917- உலகின் மகத்தான அக்டோபர் போல்ஷெவிக் புரட்சி 300 வருட ரோமனோவ் பேரரசை (ROMANOV DYNASTY) விட்டு மக்களாட்சியை தோழர் லெனின் தலைமையில் உருவாக்கியது. ப்ரோலிடேரியன் சோஷலிஸ புரட்சியின் தலைவர் லெனின் அவர்களின் சினிமாவைக் குறித்த கருத்தும் தீவிர செயல்பாடும் முக்கியமானது.

‘எல்லா கலைகளிலும் மிகவும் முக்கியமானது சினிமா என்பதை நீங்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று லெனின் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறார். (V.I.லெனின், படைப்புகளின் திரட்டு- பாகம் 43 -பக்கம் 591). மேலும் அவரது சினிமா குறித்த இந்த வார்த்தைகள் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்பட்டன. அவர் இதை புரட்சிக்குப் பிறகு எழுதினார். 1908 வாக்கிலேயே லெனின், கம்யூனிஸ்ட் கட்சியில் தனது சக தோழர் விளாடிமிர் போஞ்ச் ப்ருயெவிச் (VLADIMIR BONCH BRUYE VICH) என்பவரோடு உரையாடுகையில், எதிர்கால சோவியத் சினிமாவை வரைபடமாக்கிக் காட்டுகிறார்.
எந்த ஒரு கலையின் செயல் நோக்கமும் கேள்விக்கு இலக்காகிறது. அதற்கான வழிமுறைகள் சந்தேகத்திற்குள்ளாகின்றன. தனிநபருக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இடையிலான நீண்ட முரண்பாடு, தேசத்துக்கும் பிரஜைக்கும் இடையிலான ஒவ்வாமைமிக்க முரண்பாடு, நிர்வாகக் கட்டமைப்புக்கும் அதை எதிர்க்கும் போராளிக்குமிடையிலான கிளர்ச்சிகள், பிறகு புரட்சிகர போராளிகளே பின்னர் நிர்வாகத்தைக் கைப்பற்றி நிர்வாகமாகுதல், பிறகு மற்ற பிற புரட்சியாளர்களுக்கு அந்தப் புதிய புரட்சிகர நிர்வாகம் ஏற்கப்படாது அவர்களின் இருப்பை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. இந்தக் கருத்தியலில், அதிகாரமும் பணமும் குட்டி முதலாளிகளும் நம்பும்படி புனையப்பட்ட கற்பனைக் கதைகள்- மலிவான கதைகளையெல்லாம் திரைப்படமெடுக்கும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வந்த தீயசக்திகளிடமிருந்து திரைப்பட ஆக்கம் விடுவிக்கப்பட்டு உழைக்கும் மக்களின் அரசிடம் கைமாறியது. போல்ஷெவிக்குகள் 1917- அக்டோபரில் அதிகாரத்தைக் கைப்பற்றியதும், லெனின் மேற்கூறிய பிரகடனத்தை கூறினார். சினிமா தன் இரு அடிப்படைக் கூறுகளால் லெனினை ஈர்த்தது. மாபெரும் அளவிலான பொதுமக்களோடு அதற்குள்ள நெருங்கின தொடர்பும் அதையொட்டி பெருமளவிலான உற்பத்தியுமான (WAR AND PEACE- வரை) இரு முக்கிய கூறுகள். மிகக் குறைந்த செலவில்- அனுமதியில் மிக அதிகளவு மக்கள் ஒரு கேளிக்கையை கண்டுதுய்ப்பது. லெனின் இதைச் சொல்லும் காலத்தில் சினிமா பேசவில்லை. வெறும் சலனம்தான். எனவே அவர் அதை எளிய காட்சி மொழி என்றே குறிப்பிடுகிறார்.
1919, ஆகஸ்ட் 27-ஐ சோவியத் சினிமாவின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. புகைப்படம் மற்றும் சினிமா ஒளிப்பதிவுத் துறையின் பேரில் லெனின் இந்தத் தேதியில் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அது மக்கள் கல்வியுடன் சேர்க்கப்பட்டு பின்னாளில் யூ.எஸ்.எஸ்.ஆர். கோஸ்கினோ (U.S.S.R.KOSKINO என்றானது. அதாவது, திரைப்பட ஒளிப்பதிவாக்கத்துக்கான தேசியக் குழு (STATE COMMITTEE FOR CINEMATOGRAPHY) என்றானது. சிதறிக்கிடந்த தனியார் சினிமா ஸ்டூடியோக்கள் உலகளாலிய தேசிய திரைப்பட வலைதளம் என்றானது. அதனால் திரைப்படங்கள், தயாரிப்பாளர், உதவியாளர், நடிக, நடிகையர், இதர கலைஞர்கள் எல்லாம் தேசியமயமாக்கப்பட்டது.
ஆரம்பகாலத்து அதியற்புத சோவியத் ரஷ்ய திரைப்படங்களையும் அவற்றின் கர்த்தாக்களையும் சற்று சுருக்கமாக ஒரு பார்வையில் சொல்லிவிடலாமென்று. செர்காய் ஐசென்ஸ்டின் (SERGEI EISENSTEIN 1898-1948) தம் 26-வது வயதில் இன்றளவும் சினிமாவின் பல்வேறு அங்கங்களிலும் தனித்துயர்ந்து நிற்கும் (THE BATTLE SHIP POTEMKIN) எனும் மெளனத் திரைப்படத்தை 1925ல் தயாரித்து இயக்கினார். இது ஓர் உண்மை நிகழ்வைக்கொண்டு உருவான திரைப்படம். இப்படம் 1970-களில் சென்னை சோவியத் கலாச்சார மையத்து அரங்கில் திரையிடப்பட்டபோது நானும் அசோகமித்திரனும் மாம்பலத்திலிருந்து சைக்கிளில் பயணித்துச் சென்று பார்த்தோம். எனது சக ஓவியர் ரங்கராஜ் என்பவர் வால்டர் தாம்சன் விளம்பர நிறுவனத்தில் (பின்னாளில் ஹிந்துஸ்தான் தாம்சன்) ஓவியராகயிருந்தவர். அவரும் எங்களோடு படம் பார்க்க சேர்ந்து கொண்டார். ஆறு மணிக்கு படம் என்று அறிவிப்பு. ஆறிலிருந்து ஏழரை வரை ரஷ்யர் ஒருவர் ரஷிய – ஆங்கிலத்தில் பொடெம்கின் புரட்சியைப் பற்றி பேசி முடிக்கவும் படம் ஆரம்பமாயிற்று. பிரின்ஸ் பொடெம்கின் தாவ்ரிசெஸ்கி (PRINCE POTEMKIN TAVRICHESKY) என்பது ஜார் அரச யுத்தக் கப்பல். 1905ல் இந்தக் கப்பலின் மாலுமிகள் தங்கள் கப்பல் தலைவன், கப்பல் மருத்துவர், இதர அதிகாரிகளுக்கு எதிராக செய்த கிளர்ச்சி பெரிதாகிறது. கேப்டன் புழுக்கள் நெளியும் மாட்டிறைச்சியை சாப்பிடச் சொல்லுகிறான். மாலுமிகள் மறுத்தபோது கப்பலின் டாக்டர் ‘‘அது நல்லதுதான். சாப்பிட்டால் உடம்புக்கு ஆரோக்கியம்’’ என்று கூறுகிறார். வெகுண்டெழுந்த கப்பல் தொழிலாளர்கள் டாக்டரைத் தூக்கி கடலில் வீசியெறிகின்றனர். கப்பல் கேப்டன் அந்த மாலுமிகளை டார்பாலினால் மூடி கப்பல் படை வீரர்களைக் கொண்டு சுட்டுக் கொல்ல உத்தரவிடுகிறான். ஆனால் யுத்தக் கப்பலின் கடற்படை வீரர்கள் கப்பல் தொழிலாளர்களைத் தமது சக தொழிலாளச் சகோதரர்களாய் உணர்கிறார்கள்.
அவர்களைச் சுட மறுப்பதோடு புரட்சியில் சேர்ந்து, அதிகாரிகளையும் தலைவரையும் பிணயக் கைதிகளாக்கி, கப்பலை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து ஒதிசா துறைமுகத்தை அடைகின்றனர். ஒதிசா துறைமுகத்துக்கு பொடெம்கின் கப்பல் வருவதை அறிந்த ராணுவம் சிப்பாய்களை ஏவுகிறது. மிக உயரமான இடத்திலிருந்து கீழே இறங்க ஏராளமான படிக்கட்டுகளில் மக்கள் ராணுவத்தைக்கண்டு அஞ்சி ஓடுகின்றனர். ஒரு பயங்கர துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ஒரு தாய் தன் குழந்தையைத் தள்ளுவண்டியில் வைத்து அதையும் தள்ளிக்கொண்டு பயந்து ஓடி வருகையில் குண்டடிபட்டு செத்து விழ, தள்ளுவண்டி படிக்கட்டுகளில் அலறும் குழந்தையுடன் நிற்கிறது. இந்த ஒதிசா படிக்கட்டு துப்பாக்கிச் சூட்டுக் காட்சி திரைப்படக் காட்சி ரூபரீதியாக உலகப்புகழ் பெற்றது. இக்காட்சியின் கேமரா கோணங்கள் பற்றியே தனித்தனியாக புத்தகங்கள் வந்துள்ளன. இப்படத்துக்கென இரண்டு கேமரா கலைஞர்கள் ஒளிப்பதிவாக்கியுள்ளனர். விளாடிமிர் போபோவ் (VLADIMIR POPOV) மற்றும் எடுவார்டு திஸ்ஸெ (EDUARD TISSE) என்ற இருவரும் இப்படத்தின் மூலம் புகழ்பெற்றனர். இன்றளவும் உலகின் தலைசிறந்த பத்து திரைப்படங்கள் எனறு யார் பட்டியலிட்டாலும் அதில் நிச்சயம் இந்தப் படம் இடம்பெறத் தவறினதில்லை. ஐசென்ஸ்டீன் மார்க்ஸிய தத்துவத்தில் முழுதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சினிமா கலைஞனாக அவரை நோக்கும்போது அவரது அரசியல் கோட்பாடு தெரியவே தெரியாது. இவர் இதற்கு முன்னும் பின்னுமாக ‘‘VIVA MEXICO’’, THE STRIKE) மற்றும் ‘‘IVAN THE TERRIBLE’’ ஆகிய மெளனப் படங்களையும் செய்துள்ளார். BATTLESHIP POTEMKIN சோவியத் புரட்சிகர சினிமாவின் முன்னோடி. திரைப்படமாய் கருதப்படும் அதே சமயம், முற்றிலும் புதிய வகைமையைத் தன் சகல காட்சி ரூபப் பிரிவுகளிலும் கொண்ட படத்துக்கான ஒப்பற்ற முன் மாதிரியாகவும் கொண்டாடப்படுகிறது.

ஐசென்ஸ்சடீன் திரைப்படத்திறன், திட்டம், வெளிப்பாடுகளுக்கு அன்றைய சமமானமற்றொரு சோவியத் ரஷ்ய திரைப்பட மேதை விசெவோலோட் புடோவ்கின் (VSEVOLOD PUDOVKIN). புடோவ்கின் செய்த மகத்தான திரைப்படங்களில் மாக்சிம் கார்கியின் அமர நாவல் ‘MOTHER’ மிகவும் குறிப்பிடத்தக்கது. புடோவ்கின் ‘‘மதர்’’ மெளனத் திரைப்படத்தை 1926ல் செய்து திரையிட்டார். கார்கியின் ரஷ்ய நாவல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது. நாவலின் தளதளத்த-இழுக்கும் பக்கங்களின் இடைவெளிகளைக் குறைத்து தன் திரைப்படத்துக்கென மிக இறுக்கமான கதை வடிவமாக்கி திரைப்படமாக்கினார் புடோவ்கின். புடோவ்கின் தம் ‘‘மதர்’’ படத்துக்கு அன்றைய கால கட்டத்தில் திகழ்ந்தோங்கியிருந்த மாஸ்கோ தியேட்டர் கலைஞர்கள் வேரா பரனோஸ்காயா (VERA BARANOSKAYA) என்பவரை தாய் பாத்திரத்திலும் நிகோலேய் பலாகோவ் (NIKOLAI BALAKOV) என்பவரை மகன் பாத்திரத்திலும் வைத்து அவர்களின் அற்புத நடிப்பில் படம் பண்ணினார். தாய் பாத்திரத்தின் குடிகாரக் கணவன் என்ற ஒரு பாத்திரத்தை தம் படத்தில் புகுத்தியிருப்பார் புடோவ்கின். நாவலில் இப்பாத்திரம் இருக்காது. சாதாரண விவசாயப் பெண்ணானவள் தன் மகன் புரட்சிக்கான ஆயுதங்களை வைத்திருந்ததால் போலீசிடம் சிக்கியதையடுத்து புரட்சியில் தன்னை உட்படுத்தி புரட்சியைத் தொடர்ந்து தலைமையேற்று நடத்துபவளாக மாறுகிறாள். புடோவ்கினையடுத்து வேறு சிலரும் சிறிது கால இடைவெளியில் MOTHER நாவலை திரைப்படமாக்கி வந்திருக்கிறார்கள்.
ஒரு சமயம், 1970-களில் சென்னை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவின்போது அன்றைய நாளில் கிடைத்த சோவியத் ரஷ்ய தயாரிப்பிலான ‘‘MOTHER’’ வண்ணப்படத்தை விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாகத் திரையிட்டுக் காட்டும் பெரு முயற்சியில் சோவியத் நாடு தமிழ்ப் பதிப்பின் உதவியாசிரியராயிருந்த தி.க.சிவசங்கரன் ஈடுபட்டிருந்தார். எட்டு மணிக்கு படம் திரையிடல் தொடங்கிற்று. ஆரம்பக் காட்சி. தொழிற்சாலை சங்கு அலற, ஆலைப் புகைப் போக்கியிலிருந்து புகை வெளிக் கிளம்பி நகர்ப் பகுதியை புகை மூட்டம் சூழ்ந்து மறைக்கும் அரிய காட்சி. சாரிசாரியாக வெளியில் வரும் தொழிலாளர்களின் பெருமூச்சு வெளிப்படுவதோடு ஷிப்டு முடிந்து வீட்டுக்குப் போகும் காட்சி. இச்சமயம் எதிர்பாராவிதமாய் புரொஜக்டரில் கோளாறு ஏற்பட்டு திரைப்படச் சுருள் நின்றுபோனது. இரவு ஒன்பதரை வரை புரொஜெக்டரின் கோளாறு சரியாக்கப்படவில்லை. பலரும் எழுந்து போய்விட்டனர். பிறகு வேறொரு நிபுணர் வந்து சரியாக்கி படம் ஓடி முடிய இரவு பதினொன்றாகிவிட்டது. நான் என் நண்பர் இதயனின் அறையில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் அங்கிருந்தே என் அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றேன். கார்க்கியின் ‘‘தாய்’’ மீண்டும் சோவியத் ரஷ்யாவில் படமாக்கப்பட்டது. இப்படம் 1990ல் கான் சர்வதேச திரைப்பட விழாவில் காட்டப்பட்டு பரவலான பாராட்டுக்களைப் பெற்றது. க்ளெப் பான்ஃபிலோவ் (GLEB PANFILOV) என்ற சோவியத் ரஷ்யாவின் திரைப்பட இயக்குனர் கார்கியின் ‘மதர்’ நாவலை அதன் பாத்திரங்கள், கதைப் போக்கு, நிகழ்வுகளை புறக்கூத்தாகப் பார்க்காமல் அகக்கூத்தாக உள் வாங்கி அதைப் புதிய போக்கில் காட்சிரூபமாக்கியுள்ளார். கார்க்கி மிகவும் ஆழமான, நெருக்கமான இழைகளாய் கதை நிகழ்வுகளை பின்னி நெய்துள்ள நாவலின் முக்கிய பாத்திரமான தாயின் மனவோட்டத்தைக்கொண்டே பான்ஃபிலோவ் தன் புதிய ‘‘தாய்’’ திரைப்படத்தைச் செய்திருக்கிறார். இப்படத்துக்கென கான் திரைப்பட விழாவில் ‘‘சிறப்பு ஜுரர்கள் விருது’’ க்ளெப் பான்ஃபிலோவுக்கு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே வெவ்வேறு இயக்குனர்களால் உருவாக்கப்பட்ட ‘தாய்’ திரைப்படங்களிலிருந்து இந்தப் புதிய MOTHER கட்டமைப்புரீதியாக வெகுவாக வித்தியாசப்படுகிறது. பான்ஃபிலோவ், 1934ல் பிறந்தவர். இவரது முதல் திரைப்படம் ‘‘THERE IS NO CROSSING UNDER FIRE’’ என்ற 1964ல் வெளிவந்த படம். எவ்கெனி காப்ரிலோவிச் (YEVGENI GABRILOVICH) என்பவரின் சிறுகதையை வைத்து உருவான இத்திரைப்படம் 1918-20 காலத்து ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் உருவாக்கம் பெற்றது.

இந்தக் கால கட்டத்து ரஷ்ய திரைப்பட மேதைகளில் மற்றொரு முக்கிய ஆளுமை அலெக்சாண்டர் டாவ்ஷெங்கோ (ALEXANDER DOVZHENKO). இவர் உக்ரைனிலுள்ள சோஸுனிட்சியா என்ற நகரிலிருந்து வந்தவர். சமூக நிலவரத்தை தத்துவார்த்த வழியில் இணைத்து ஓர் அழகியலை தம் அரிய திரைப்படங்கள் ‘‘ZVENIGOR,’’ ‘‘EARTH’’ மற்றும் ‘‘ARSENAL’’ ஆகியவற்றில் ஆராதித்தவர். டாவ்ஷெங்கோ உக்ரைனின் கைவ் (KEIV) மற்றும் ஓடிஸ்ஸா ODESSA ஆகிய நகரங்களிலிருந்த இரு ஸ்டுடியோக்களில் பணி செய்தவர். அக்டோபர் புரட்சிக்கும் முன்பாகவே உக்ரைனின் கைவ் நகரில் திரைப்படத் தொழில் தொடங்கப்பட்டதென்றாலும் 1920-களில்தான் உக்ரேனிய தேசிய சினிமாட்டோகிரஃபி (NATIONAL UKRAIN CINEMATOGRAPHY) என்பது உறுதியாக செயலில் இறங்கிற்று எனச் சொல்லப்படுகிறது. USSR எனும் சோவியத் சோஷலிஸ குடியரசுகளின் ஒன்றியம் 1922ல் உருவாக்கப்பட்டதும் ரஷ்ய சினிமா என்பதும் சோவியத் சர்வ தேசிய மொழிப் படங்களை உள்ளிட்டதாயிற்று. உக்ரைனைத் தொடர்ந்து ஜியார்ஜியா, பைலோரஷ்யா, அசர்பெய்ஜன், அர்மேனியா ஆகிய சோவியத் ஒன்றிய நாடுகள் தத்தமக்கான தேசிய அரசு திரைப்பட நிறுவனங்களை ஆரம்பித்துவிட்டன. சோவியத் யூனியனின் திரைப்படரீதியான பொற்காலம் 1920கள்- 1930களின் இறுதியில் முடிந்து போனதாயிற்று. அதாவது 30களில் பேசும் படம் ஆரம்பமாகி, ஐசென்ஸ்டீன்- புடோவ்கின் – டாவ்ஷெங்கோ மெளனப்படக் காலம் முடிந்துபோனதற்குப் பின் திரைப்படம் பேசத் தொடங்கிய பின் மிக விரைவில் சர்வதேச அளவில் கடுமையான அளவில் போட்டி ஏற்பட்டது. மெளனத் திரைப்படம் பேசும் படமானதும் (TALKIES) பல வகையிலும் ‘‘பணமீட்டல்’’ அதிகரிக்கவும் போட்டியேற்பட்டது. திரைப்பட ஆக்கம் வியாபாரமானது. ஹாலிவுட் முதலான பெரு முதலீடுகள் கொண்ட பெரு முதலாளிகளின் பலத்த போட்டி சோவியத் சினிமாவுக்கு இடையூறாக நின்றது.

அலெக்ஸாண்டர் டாவ்ஷெங்கோ 1930-களில் செய்த முக்கிய திரைப்படம் ‘‘EARTH’’ (ZEMLYA- 1930). சோவியத் மெளனத் திரைப்படங்களிலேயே EARTH மிகப் பெரிய சாதனைப்படமாகக் கருதப்படுகிறது. டாவ்ஷெங்கோவின் சமகால பெருங்கலைஞர்களில் மிக முக்கியமானவர் உலகப் புகழ்பெற்ற நவீன ஓவியர் மார்க் ஷகல் (MARC CHAGALL). டாவ்ஷெங்கோ உக்ரைன் பிரதேசத்து கிராமிய நிகழ்த்துக் கலைகள், பிற பழங்குடி கலை வடிவங்களிலிருந்து அழகியல் பாதிப்புகளை உள்வாங்கிக் கொண்டவர். உக்ரைனின் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் தொடக்க கால உற்சாகத்தையும் வரவேற்பையும் அவரது ‘‘EARTH’’ திரைப்படத்தில் பல இடங்களில் நாம் காண முடிகிறது. கோதுமைப் பயிர் கதிர் முற்றி பயிர்கள் சாய்ந்து காற்றுக்கு ஆற்றின் அமைதியான அலையசைவுகள்போல அசையும் காட்சி, பழமரங்களில் பழங்கள் பழுத்துத் தொங்கிக் குலுங்குதல், குதிரைகள் நிலத்தை மித்தோடும் காட்சி என்பவை எடுத்துக்காட்டுகள். EARTH திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் டேனில் டெமுட்ஸ்கி (DANILL DEMUTSKY) என்பவர். பலத்த பாராட்டுக்குரிய கேமரா கலைஞர் டெமுட்ஸ்கி.
கிராமத்து உழவர்களின் கமிட்டிக்குத் தலைமை தாங்கும் இளைஞன் ஒருவன் முக்கிய பாத்திரம். இவனது பெருமுயற்சியில் அவ்வூருக்கு முதன்முதலாக டிராக்டர் வருகிறது. டிராக்டரின் வருகையைக் கண்டதும் கிராம மக்கள், விவசாயிகள் அடையும் குதூகலத்துக்கு அளவேயில்லை. ஒவ்வொருவரும் டிராக்டரை வைத்து தங்கள் எதிர்கால வாழ்வைக் கனவு காணும் காட்சிகளை டெமுட்ஸ்கியின் கேமரா ஜாலம் செய்கிறது. இந்தக் காட்சியை டாவ்ஷெங்கோ பிரமாதமாக கோர்வை புரிந்திருக்கிறார். ஓர் அமெரிக்கப் படம் நினைவில் இடருகிறது. ‘‘FIDDLER ON THE ROOF’’ என்று ரஷ்ய யூத தையல்காரர் ஒருவரின் குடும்பத்தைக் கொண்ட கதை. 1971ல் வெளிவந்த சிறந்த திரைப்படம். ஜார் காலத்துக் கதை. எல்லாவிதமான உடைகளையும் கையாலேயே-கைத்தையல் வேலை செய்தே தைத்துக் கொடுத்து வந்த ரஷ்ய யூத தையல் குடும்பம். எல்லாம் பெண் பிள்ளைகள். ஒரு கோட்டு சூட் தைக்க வேண்டியிருந்தால் குடும்பத்தினர் எல்லாருமே கைத் தையல் போடுவதில் ஈடுபடுவார்கள். மூத்த பெண்ணுக்கு கல்யாணமானதும் அந்த மாப்பிள்ளை இளைஞன் – அவனும் தையல் கலைஞனே- அப்போது புதியதாக பாரீஸில் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் தையல் இயந்திரத்தை வரவழைக்கிறான். பாரிஸிலிருந்து ரஷ்யாவுக்கு இறக்குமதியான முதல் தையல் மெஷின் உண்டாக்கிய வரவேற்பும் குதூகலமும் அதையொட்டின எதிர்காலக் கற்பனைகளும் அந்தப் படத்தில் டாவ்ஷெங்கோ போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் டிராக்டரின் வருகையால் கூட்டுப்பண்ணை விவசாயம் அதிகரித்து வெற்றியடைந்தால், அப்போது இவர்களைச் சுரண்டிக் கொழுத்த பெருமுதலாளிகள், அந்தக் கமிட்டித் தலைவனான இளைஞனைக் கொன்று விடுகின்றனர். ஆனால் அவனது மரணம்-வேறுவிதமாய்ச் சொன்னால் தியாகம் – கிராம மக்களையும் விவசாயிகளையும் மேலும் உக்கிரமாக ஒன்றுபடுத்தி பலம் கொள்ள வைத்துவிடுகிறது.
டாவ்ஷெங்கோ படத்தின் இறுதியை பிறப்பு, இறப்பு, அறுவடை, ஒற்றுமை என்பன போன்ற விஷயங்களை இறந்தவர்களின் மூலமாகவே உணர்த்திவிடுகிறார்.
தோல்ஸ்தோய், தாஸ்தாயெவ்ஸ்கி ஆகியோரின் புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படமானது குறித்து விரிவாகப் பேசுமுன் நமது பயாஸ்கோப்காரனின் ரஷ்ய சினிமா அனுபவங்கள் முளைத்த விதம் பற்றியும், ஜனரஞ்சகரீதியாக ரஷ்ய திரைப்படங்கள் குறித்த பொதுஜன வரவேற்பு மற்றும் ரசனை குறித்தும் சிறிது பார்க்கலாம்.
அது 1956ல் ஒரு நாள், சேலம் அம்பிகா திரையரங்கில் ஒரு புதிய அயல்நாட்டுத் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. வண்ணப்படம், ‘‘இங்கிலீஷ் படம்’’ என்றுதான் எழுதப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் பெயர், ‘‘THE SWORD AND THE DRAGON’’ என்பது. இந்தப் படத்தின் சுவரொட்டியே வித்தியாசமாக-அதாவது வழக்கமாய் ஆங்கிலத் திரைப்படங்கள் என்றால் கொண்டிருக்கும் எந்த ஒரு கவர்ச்சியுமில்லாத வடிவில் – காணப்பட்டது. வழக்கமாய் செய்து நிறுத்தப்படும் பானர் எதுவுமில்லை.
‘‘சாகசம் நிறைந்த ஒரு ரஷ்யப் படம்’’ என்று எழுதப்பட்டிருந்தது. முதல் நாள், முதல் காட்சியிலேயே எப்போதும் அரங்கில் ஆங்கிலப் படங்கள் என்றால் நிறைந்து களைகட்டும் கடைசி வகுப்பில்கூட என்னையும் சேர்த்து ஐம்பது பேர் இருந்தார்கள். படம் முடிந்து வெளியில் வரும்போது கடைசி வகுப்பு டிக்கட் அறைக்கு முன்னால் நின்றிருந்த வரிசையிலிருந்து ஓரிருவர் என்னை நிறுத்தி, ‘‘படம் நல்லாயிருக்கா தம்பி சண்டையிருக்கா? சண்டைப் படம்தானே?’’ என்று கேட்டுக் கொண்டார்கள்.
அது தான் என் நினைவுக்குத் தெரிந்து சேலத்து திரையரங்கம் ஒன்றில் திரையிடப்பட்ட ஜனரஞ்சக வகை- இது முக்கியம்- ஜனரஞ்சக வகை ரஷ்யப் படம். ஒரு ரஷ்ய மாவீரன் பெயர் இல்யா முராமெட் (ILYA MURAMED) நாட்டையே பமுறுத்தி வந்து ஊரிலுள்ளோரை விழுங்கி பசியாறிக்கொண்டு போனபடியிருந்த ராட்சத ட்ரேகன் ஒன்றைவெட்டிச் சாய்த்து சாகசம் புரிகிறான் என்பது கதை. DAVID AND GOLIATH கதைபோல. இல்யாவாக நடித்த ரஷ்ய நடிகருக்கு நீலக் கண்கள், மஞ்சள் தாடி, மஞ்சள் தலைமுடி, பருத்த கை, கால்கள். அதன் பிறகு சேலம் இம்பீரியலில் ‘‘T-32TANK’’ என்ற இரண்டாம் உலகப் போர் கதையைக்கொண்ட ஒரு திரைப்படம், ‘‘இது ஒரு ரஷ்ய யுத்தப் படம்’’ என்ற தமிழ் தலைப்போடு ஒரு வாரத்துக்கு காட்டப்பட்டது. பின்னாட்களில் சென்னைக்கு வந்த பிறகு ஜனரஞ்சகரீதியிலான திரைப்படங்கள் என்று ரஷ்யாவில் (U.S.S.R) தயாரிக்கப்பட்ட பிரமாண்ட படங்கள்கூட வசூல், ரசனை ரீதியாக ஓடவில்லை. 1964-ல் வெளிவந்து சென்னை தியேட்டரில் நல்ல விளம்பரங்களோடு திரையிடப்பட்ட புகழ்பெற்ற ரஷ்யன் ஆக்க்ஷன் படம் ‘‘THE SOLDIER’S FATHER’’ இரு வாருங்களே சரியான வசூலின்றி ஓடியது.
இதையடுத்து முற்றிலும் வண்ணத்திலும் பாலே நடனத்திலுமாய் செய்கோவ்ஸ்கியின் (TCHAIKOVSKY) அற்புதப் பின்னணியின் சிம்ஃபோனி இசையுடனான படமாய் ‘‘THE SLEEPING BEAUTY’’ (தூங்கும் அழகி) திரையிடப்பட்டது. இசையின் உச்ச கம்பீரமும், பாலே நடன வேகமும், முக பாவங்களுமான தேவதைக் கதை SLEEPING BEAUTY- 70.M.M. திரையில் சஃபையர் திரையரங்கு திரையிட்டது. ஒருவாரம்-ஒரேவாரம்தான். ஓர் அற்புத பாலே நடன வடிவிலான இப்படத்தை செய்காவ்ஸ்கியின் உருக்கும் இசையுடன் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
1972-ல் சென்னை சஃபையர் திரையரங்கு ஏராளமான பானர் விளம்பரங்களோடு திரையிட்ட பிரமாண்டமான 70.M.M. இரண்டாம் உலகப்போர் திரைப்படம் ‘‘THE LIBERATION’’ நான்கைந்து வாரங்களே ஓடியது. டிமிட்ரி வோஸரோவ்-ன் (DIMITRY VOZAROV) அற்புதமான இயக்கத்தில் அமைந்த இந்த ஆக்ஷன் படமும் ரசிகர்களை கவரவில்லை. இந்த இயக்குனர் இயக்கிய இப்படத்தின் தொடர்ச்சியான 2-ம் உலகப்போர் திரைப்படம் ‘‘BATTLE FOR BERLIN OR FALL OF HITLER’’ படமும் பிரமாண்ட போர்க் காட்சிகளோடிருந்தும் 50 நாட்களே வசூல் அதிகமின்றி ஓடி மறைந்தது. என்ன காரணம்?
ஜனரஞ்சக திரைப்படங்கள் – ஜனரஞ்சக ரசனை என்பது ஒரு வகைமை. பொழுதுபோக்க. அது பெருவாரியான மக்கள் போக்கின் ரசனை. மந்தைக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம். இதில் பேர்பாதிக்கு பாமரத்தன்மை மேலோங்கியிருக்கும். இந்த விதமாய் அமெரிக்க – ஐரோப்பிய ஆங்கிலம் பேசும் திரைப்படங்களில் ரசனை வேறுபடுவதில் ஹாலிவுட் திரைப்படங்களின் ஆதிக்கம் மேலோங்கியது ஒரு காரணம். ஜனரஞ்சக ரசனையை ஊக்குவித்தவை ஹாலிவுட் திரைப்படங்கள். ஹாலிவுட் ஜனரஞ்சக திரைப்படங்களிலேயே ஜனரஞ்சகம்- ஜனரஞ்சகமில்லாத ‘‘ஆர்ட் ஃபிலிம்’’ வகைகளுமுண்டு. ஜனரஞ்சக ஹாலிவுட் படங்களிலேயே ‘‘ஆர்ட் ஃபிலிம்’’களுக்கான அழகியல் சங்கதிகள், நிதான சலனம் என்பதும் இருக்கின்றன. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களின் ஜனரஞ்சகத்தன்மையே, பாமர ஜனரஞ்சக ரசனைக்கு ஏற்றதான, வரவேற்கப்பட்ட, எதிர்பார்த்தல் மிக்க, விரும்பி ஏற்கப்பட்ட, விஷயமாகி புத்தியில்- மூளையில் ஹாலிவுட்தனமான ரசனை சிகரெட் நிகோடின் கணக்கில் சேர்மானமாகியது. எனவே வெளிநாட்டு சினிமா என்றாலே அதில் ஹாலிவுட்தனம் இருந்தால் ஆயிற்று. இல்லையென்றால் சோம்பல் முறிப்பு – கொட்டாவி- கண்மூடல், சலிப்போடு திட்டிக்கொள்ளும் சுருதி சேராத ரசனை. பிற ஐரோப்பிய சினிமா தயாரிப்புகளை-சோவியத் ரஷ்யா உட்பட, கீழை நாட்டுப் படங்களான சீனா, ஜப்பான், கொரியா, ஈரான் திரைப்படங்களையும் ஹாலிவுட் படங்களோடு இறக்குமதி செய்து அவ்வப்போது திரையரங்குகளில் பரவலாகத் திரையிட்டுக் காட்டப்பட்டு வந்திருந்தால் ஓரளவுக்கு இந்நிலைமை சரியாயிருக்கும். சர்வதேச திரைப்பட விழாவிற்குச் சென்றோ, திரைப்படச் சங்கங்களில் அங்கத்தினராகி சர்வதேச சினிமாவைக் காண்பது என்பதெல்லாம் எல்லோருக்கும் வாய்க்காது.
சர்வதேச ரசனைரீதியாய் ஒரு ஜனரஞ்சகம் வாய்க்க வழியில்லை. இதனாலெல்லாம் ஒரு கால கட்டத்தில் சோவியத் ரஷ்ய திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்ட போதும், சோவியத் திரைப்படங்களுக்கான பிரத்தியேக திரைப்பட விழாக்கள் இலவச அனுமதியுடன் நடந்தபோதும்கூட மக்களின் ரசனைபூர்வ ஆதரவு குறைவாகவே இருந்திருக்கிறது.
– வளரும்.
எழுதியவர்
விட்டல்ராவ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.