நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக – தமிழில்: ச. வீரமணி

BJP insulting parliament Article in tamil translated by S. Veeramani. நாடாளுமன்றத்தை அவமதித்திடும் பாஜக - தமிழில்: ச. வீரமணி
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளன்றே, ஆளும் பாஜக அரசாங்கம் எந்த அளவிற்கு, நாடாளுமன்றத்தையும் அதன் ஜனநாயகபூர்வமான செயல்பாட்டையும் அவமதித்திடும் என்பதைக் காட்டிவிட்டது.

அரசாங்கம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை விவாதிக்கத் தயார் என்றும், எதிர்க்கட்சியினரால் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் பதில் கூறத் தயார் என்றும் பிரதமர் மோடி அறிவித்ததற்கு முற்றிலும் முரணாக, மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்வது தொடர்பாக எவ்விதமான விவாதத்தையும் நடத்த ஆளும் கட்சி மறுத்துவிட்டது.

எப்படி 2020 செப்டம்பரில் நாடாளுமன்றக் குழுக்களில் முறையான விவாதம் மற்றும் ஆய்வு எதுவுமின்றி மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டுவந்து நிறைவேற்றியதோ, அதேபோன்றே இப்போதும் அவற்றின்மீது எவ்விதமான விவாதத்தையும் நடத்த அனுமதிக்காது, ஒருசில நிமிடங்களிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைத் தலைவர்களுமே நாடாளுமன்றத்தின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளித்திடவில்லை என்பதைக் காட்டின.

மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைப்பதில் தங்களுக்கு நிச்சயமற்ற தன்மை இருப்பதால், அங்கே ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் திமிர் மிகவும் மோசமானமுறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அங்கே அது, முக்கியமான சட்டமுன்வடிவுகள் எதையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மறுப்பதையும், சட்டமுன்வடிவுகளின் மீது ஒருங்கிணைந்த விவாதம் எதையும் நடத்த மறுப்பதையும், எல்லாவற்றையும்விட மிக மோசமான முறையிலும் ஆட்சேபகரமான முறையிலும் உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையையே (division and voting) அனுமதிக்க மறுப்பதும் போன்று எதிர்க்கட்சிகளைப் பேசவிடாது செய்திடும் அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது.

மாநிலங்களவை, முதல் நாளன்றே ஒட்டுமொத்த கூட்டத்தொடர் காலத்திற்கும் 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதைப் பார்த்தோம். அவர்கள் அனைவரும் சென்ற கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 12 அன்று கட்டுப்பாடில்லாமல், வன்முறை பாணியில் நடந்துகொண்டார்கள் என்று குற்றஞ்சாட்டி இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு செய்தால் எதிர்க்கட்சியினர் ஆவேசம் கொண்டு எதிர்வினையாற்றுவார்கள், அதனைப் பயன்படுத்திக்கொண்டு சட்டமுன்வடிவுகள் அனைத்தையும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பின்றி எளிதாக நிறைவேற்றிக்கொண்டு விடலாம் என்கிற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

இந்த சமயத்தில் சென்ற கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாகக்” கூறப்பட்ட நிகழ்வின்போதுதான், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்திடும் சட்டமுன்வடிவானது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அனுப்பப்படாமலேயே நிறைவேற்றப்பட்டது என்பதையும், இதன்மீது வாக்கெடுப்பிற்கு விடக்கூட மறுக்கப்பட்டதையும் நாம் நினைவுகூர்ந்திட வேண்டும்.

சென்ற கூட்டத்தொடரின்போது நடைபெற்ற சில நிகழ்வுகளுக்காக “ஒழுங்குபடுத்தப்படுவதற்காக” (“disciplining”) மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்பது செல்லத்தக்கதல்ல என்பதுடன், அந்த சமயத்தில் கட்டுப்பாடின்றி நடந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 33 உறுப்பினர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இளமாரம் கரீம் பெயரையும் இணைத்து இப்போது நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், மாநிலங்களவையில் வலுவாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகளின் குரலை எப்படியாவது நசுக்கிட வேண்டும் என்கிற ஆளும் கட்சியினரின் நோக்கம் தெளிவாகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் உரிமைகள் மீதான தாக்குதல்களை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரப்படும் பிரச்சனைகள் மீது எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றுபட்டு செயல்படுவது, எப்படி ஒன்றுபட்ட எதிர்ப்பினை, நாடாளுமன்றத்திற்குள்ளே, கட்டி எழுப்ப முடியும் என்பதைக் காட்டுகிறது.

ஆனால், நாடாளுமன்றத்திற்கு வெளியே, எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குத் தலைமையேற்பதற்காக, மமதா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளும் முயற்சிகள், பலனளிக்கப்போவதில்லை. எப்படி காங்கிரஸ் கட்சி முன்னணிப் பாத்திரம் வகிப்பதற்கான விருப்பம் ஒன்றுமில்லாது ஆயிற்றோ அதேபோன்றே இவர்களின் முயற்சிகளும் பலனளிக்கப் போவதில்லை.

உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தால் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்பதை விவசாயிகள் போராட்டம் காட்டியிருக்கிறது. இதிலிருந்து எதிர்க்கட்சிகள் உரிய படிப்பினையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அகில இந்திய அளவில் அனைவருக்குமான “தலைவர்” ஒருவருடன் ஒற்றுமை என்பது காரியசாத்தியமில்லை. உழைக்கும் மக்களின் பல்வேறு தரப்பினரின் ஒன்றுபட்ட நடவடிக்கைகள் மூலமாகவே விரிவான ஒற்றுமையை உருவாக்கிட முடியும். இதற்கு, இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராக, மாற்றுக் கொள்கைகள் மற்றும் அரசியலை முன்னிறுத்துவதன்மூலமும், அதனைச் சுற்றி அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளை அணிதிரட்டுவதன் மூலமும் மட்டுமே சாத்தியம்.

(டிசம்பர் 1,2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.