Subscribe

Thamizhbooks ad

பிராமணிய குலாப் ஜாம்: ஒரு திரைப்படம் குறித்த கலாச்சார விமர்சனம் – மாதுரி தீக்சித் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

 

மராத்தியத் திரைப்படமான ’குலாப் ஜாம்’ குறித்த கலாச்சார விமர்சனத்தை சாதி எதிர்ப்பு மற்றும் பிராமணிய எதிர்ப்புக் கண்ணோட்டத்தில் இந்தக் கட்டுரை வழங்குகிறது. இந்த திரைப்படம் சாதி மற்றும் நகர அடையாளங்களின் கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்துகின்ற புதிய முயற்சியாக இருக்கிறது. தற்போது அன்றாடம் நடந்து வருகின்ற அரசியல் விவாதங்கள், சைவம் அல்லாத உணவுப் பொருட்களிலிருந்து, சைவ உணவுகளை வேறுபடுத்துவதோடு மட்டும் நின்று விடுவதாக இல்லை. அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களின் மீது நல்ல மற்றும் தீய குணங்களைச் சுமத்துகின்ற வகையில் இருந்து வருவதன் மூலம், ஹிந்து தேசியவாத அமைப்பில் யாரெல்லாம் குடிமக்கள் என்ற இடத்தைத் தீர்மானிக்கின்ற வகையிலேயே அந்த விவாதங்கள் இருக்கின்றன.

 1526ஆம் ஆண்டு இந்தியாவில் முகலாயப் பேரரசைத் துவக்கிய முகலாயர்கள், இத்தாலிக்கு காலணிகளைக் கொண்டு போய் சேர்த்ததைப் போல, இந்திய இனிப்பு வரிசைக்குள்ளே குலாப் ஜாமுன்களையும் கொண்டு வந்து சேர்த்தனர்… தங்களுடைய அதிகாரத்தை முகலாயர்கள் இழந்து விட்ட போதும், இந்த குலாப் ஜாமுன்கள் மட்டும் தங்களுடைய கம்பீரமான இருப்பை இன்று வரையிலும் தக்க வைத்துக் கொண்டுள்ளன (ரூப்ஸ் மற்றும் ரூப்ஸ் 2014:170).

குலாப் ஜாம் – 2018ஆம் ஆண்டு சச்சின் குந்தால்கர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மராத்தியத் திரைப்படம். சமையல் சார்ந்த மற்றும் வரலாற்றுச் சிறப்புகளுக்கு அப்பாற்பட்ட நினைவுகளையும், உறவுகளின் ரகசியங்களையும் இந்த குலாப் ஜாமுன் திரைப்படம் தன்னிடத்தே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மதிய உணவோடு சேர்த்து வழங்கப்பட்ட குலாப் ஜாமூனால் மிகவும் ஈர்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின் கதாநாயகனான ஆதித்யா நாயக் (சித்தார்த் சந்தேகர்) மராத்திய உணவு வகைகளைச் சமைப்பதற்கு கற்றுக் கொள்ள விரும்பி, ராதா அகர்கரிடம் (சோனாலி குல்கர்னி) வந்து சேர்கிறான்.

லண்டனில் உணவகம் ஒன்றைத் திறக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்ற ஆதித்யா, சமையலைக் கற்றுத் தருவதில் ராதாவிடம் இருந்த தயக்கத்தை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவளுக்காக “டயல்-எ-செஃப்” என்றழைக்கப்படும் புதியதொரு வசதியை அவன் வெற்றிகரமாக ஏற்படுத்தித் தருகிறான். இறுதியில் லண்டனுக்கு கிளம்புகிற வேளையில், மிக நேர்த்தியாகச் செய்யப்பட்ட குலாப் ஜாமுன்களை ராதாவிடம் கொடுத்து அவன் பிரியாவிடை பெறுகிறான்.

லண்டனில் இருக்கும் ஆதித்யா உணவகத்தில், அவனுடைய கவனத்தைக் கவர்ந்த மிக அழகான பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, சிறிய தட்டில் நன்றாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் மூன்று ஜாமூன்களை அவன் தருவதாக திரைப்படம் முடிவடைகிறது. இனிப்பிலே துவங்குகின்ற அந்த திரைப்படம் பல்வேறு பயணங்கள்/உறவுகளின் முடிவில் அந்த இனிப்புடனேயே முடிவடைகின்றது.

மராத்திய திரைப்படத் துறையில் இருந்து இன்று வரையிலும் வெளியாகின்ற திரைப்படங்களை ஒத்ததாக இருக்கின்ற இந்த திரைப்படம், பலவகையான மராத்தி இனிப்பு வகைகளைத் தயாரித்து வழங்குவதில் தன்னுடைய கணிசமான நேரத்தையும், கவனத்தையும் செலுத்தியிருக்கிறது.

உணவு குறித்து நாம் கற்பனை செய்கின்ற, பார்க்கின்ற, பேசுகின்ற அனைத்தையும் சந்தேகத்திற்கிடமின்றி ஊடுருவிச் செல்வது மட்டுமல்லாது, வாழ்முறை நோய்கள், உடல் எடை மற்றும் பளபளப்பான தோல் ஆகியவை குறித்து செயற்கையாக நம்மிடையே இருக்கின்ற கவலைகளைப் பற்றியும் இந்த திரைப்படம் கூறுகிறது. அதோடு குறிப்பிட்ட சாதி சார்ந்த சைவ உணவை (கோகணஸ்த பிராமணச் சமையல்) ’உண்மையான’ மராத்தி உணவு என்று  இந்தப்படம் பரிந்துரைப்பதுடன் அந்த உணவை முன்னிறுத்தவும் செய்கிறது.

உணவு குறித்த சமூக-கலாச்சார உரையாடல்

FILM: GULABJAAM

இந்தியாவில் உணவு என்பது வெறுமனே கலாச்சாரம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்கவில்லை. அது ஒரு அடையாளமாக, குறிப்பாக சாதி குறித்த அடையாளமாக, தொடர்ந்து சிலரை விலக்கி வைக்கும் தன்மையுடன் அன்றாட நடைமுறையாக இருந்து வருகிறது. மிக சமீபத்தில் சஞ்சீவ்கபூர் எனும் சமையற்காரர் மலபார் பனீர் என்றழைக்கப்படுகிற உணவைப் புதிதாக சமைத்ததற்காக கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். மீன், மாட்டிறைச்சி மற்றும் பிற அசைவ உணவுப் பொருட்களே மலபார் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வருவதால், உணவுப் பொருள் ஒன்றின் பெயருக்கு முன்னதாக வெறுமனே மலபார் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே அந்த உணவுப் பொருளை மலபார் உணவாகக் கருத முடியாது என்று இணையப் பயன்பாட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்ற பனீர்மயமாக்கலின் ஒரு பகுதியாகவே அவருடைய முயற்சி இருக்கின்றது என்ற கருத்தை அவர்கள் கூறியிருந்தனர். வெகுகாலமாகவே தங்கள் சாதி மற்றும்/அல்லது மத ஒழுங்குமுறைகளின் அடிப்படையிலேயே இந்தியர்கள் தங்களுடைய உணவு மீதான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். பூண்டு அல்லது வெங்காயத்தை நிரந்தரமாகவோ அல்லது ஒரு சில பருவ காலத்திற்கு மட்டுமோ உண்ணாமல் இருப்பது அதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

தான் நேசித்து வந்த உறவினரின் இழப்பை முன்னிட்டு தங்களுக்கு விருப்பமான உணவைத் தவிர்ப்பதை சிலர் சமூக நடைமுறையாகக் கொண்டிருக்கிறார்கள். சமூகம், பிராந்தியம், சாதி அல்லது உள்ளூரில் உணவு கிடைக்கும் தன்மை போன்ற உணவு கட்டுப்பாடுகளைச் சார்ந்தே உணவுப் பழக்கம் இருந்து வருவதால், அனைத்து விதமான உணவு வகைகளையும் ஒருவர் உண்ணாமல் இருப்பதற்கான சாத்தியம் ஏற்படுகிறது. விளைவாக உணவு என்பது சமத்துவத்திற்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது. கலாச்சாரத்தின் மைய நீரோட்டத்தால் அந்த நிலை ஏற்றுக் கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு விடுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தலித் சாதியினரின் உணவுகள் மற்றும் அவர்களுடைய சமையல் பழக்க வழக்கங்களின் மீது கவனம் செலுத்த முயன்று வருகின்ற அறிஞர்கள், அவ்வாறான உணவுகளை உள்ளடக்கி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். 2011ஆம் ஆண்டில் தலித் உணவுகள் பற்றிய ’ஹீதலி பாரதீய நஹிகா?’ (இந்த உணவு இந்திய உணவு இல்லையா?) என்ற தலைப்பிலான ஆய்வின் முடிவுகளை புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கிரந்தி ஜோதி சாவித்ரி பூலே மகளிர் ஆய்வு மையம் வெளியிட்டது.

உணவு என்பது முழுமையான பிரம்மம் அல்லது பிரபஞ்சம் (ஃபெர்னாண்டோ 2016) என்பதாக பழைய புராணத்தில் கூறப்பட்டிருப்பதின் அடிப்படையில், “அன்னஹூ அபூர்ணபிரம்மா” (உணவு என்பது முழுமையற்ற பிரம்மம்) எனும் தலைப்பிலான புத்தகத்தை ஷாகு படோல் என்பவர் எழுதியிருக்கிறார். சுற்றுச்சூழல் குறித்து மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்ட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஐந்தாம் வகுப்பு பாட நூல் பிராமண உணவையே அனைவருக்குமான அடிப்படை உணவாகச் சித்தரிக்கிறது. இன்றைக்கும்கூட, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் பெரும்பாலும் சைனீஸ் உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன.

இன்னமும்கூட உணவு மீதான புனிதத்துவம் குறித்து சாதி அடிப்படையில் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கின்ற கருத்துக்கள் அனைத்தும், உயர்ந்த இடங்களில், பெருநகரங்களில், உலகமயமாக்கலுக்கு ஆளாகியிருக்கின்ற படித்த மேல்தட்டு வகுப்பினர் மத்தியில் இருந்தே வருபவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பணியில் அமர்த்துவதற்காக தான் விதித்த நிபந்தனைகளை மீறி, தான் ஒரு பிராமணர், திருமணமானவர் என்று நடித்ததாக தன்னுடைய சமையற்காரர் மீது இந்திய வானியல் துறையின் முன்னாள் இயக்குநரான மேதா ஹோலே என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்ததைக் குறிப்பிடலாம். தன்னுடைய குடும்ப சமயச் சடங்குகளின் போது, உணவைச் சமைத்ததன் மூலம் அந்தப் பெண்மணி தன்னுடைய மத உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டதாக அவரது புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நமது உணவு மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கின்ற அக்கறையை சமீபத்தில் 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் நம்மால் காண முடியும். சில கலோரிகளை நுகர்வதற்குத் தேவையான வாங்கும் திறனைப் பொறுத்தே, நாடு தழுவிய அளவில் இருக்கின்ற வறுமையின் அளவை நாம் அளவிட்டு வருகிறோம். நமது பள்ளிகளில் வழங்கப்ப்டுகின்ற மதிய உணவு, ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்ப்பது தவிர, குழந்தைகளைப் பள்ளிகளிலே தக்க வைத்துக் கொள்வது என்ற காரணத்திற்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. மலிவான விலையில் தானியங்களை வழங்குவோம் என்ற வாக்குறுதி தேர்தல் அறிக்கைகள் மூலமாக அளிக்கப்படுகின்றது.

Gulab Jamun Movie Poster (#7 of 7) - IMP Awards

சாதியின் மொழியாக இருப்பதைப் போல, உணவு வர்க்கத்தின் மொழியாகவும் இருக்கின்றது. வாழ்முறை நோய்கள் பெருகி வருவதன் காரணமாக, சிறுதானியங்களை அவற்றிலுள்ள ஊட்டச்சத்து மதிப்பைக் கருத்தில் கொண்டு உயர்தட்டு வகுப்பினர் உட்கொண்டு வருவதால், அவற்றின் விலை அண்மைக்காலங்களில் அதிகமாக உயர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக, உணவின் மீது ஏர்படுத்தப்படுகின்ற கலாச்சாரத் தணிக்கை அரசியல், சமூக துருவமுனைப்புகளால் ஆதரிக்கப்படுவதாக இருக்கின்றது. இன்று ரயில்களில் பயணிக்கின்ற ஒருவரிடம் மிகச் சாதாரணமாக, மிகவும் எளிதாக, பயணத்தின் போது அசைவ உணவை உட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாட்டிறைச்சி மற்றும் பசுவதை போன்ற பிரச்சினைகள் சாலைகள், வீடுகள், ஓடுகின்ற ரயில்கள் என்று பல இடங்களில் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதற்கான காரணங்களாக மாறிப் போயிருக்கின்றன. பல்கலைக்கழக வளாகங்களிலுள்ள விடுதிகளில் நடத்தப்படுகின்ற மாட்டிறைச்சி திருவிழாக்கள் எதிர்ப்பையும், கடுமையான விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.

ஆளும் கட்சியின் ’பழைய திட்டங்களை’ உறுதிப்படுத்துகின்ற வகையிலே, குடிமக்களின் உணவுத் தட்டில் வைக்கப்படுகின்ற உணவின் மீது தலையீடு செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை வைத்திருப்பது, உண்பது ஆகியவற்றிற்கான தடைகளை விதித்து இயற்றப்பட்ட புதிய சட்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அரசின் இத்தகைய தலையீடு, கால்நடைகள் தொடர்பான வர்த்தக நடைமுறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கும், மக்களின் வேலையிழப்பிற்குமே இட்டுச் சென்றிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், தெருக்களில் அலைந்து திரியாத வகையில் கால்நடைகளைக் கட்டிப் போட்டு வைப்பதன் மூலமாகவோ அல்லது கால்நடைகள் மேய்ந்து விடாமல் வயல்வெளிகளில் விளைந்து நிற்கும் பயிர்களைப் பாதுகாப்பதற்காகவோ இயற்கை வளங்களின் மீது உரிமை கோரி மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையில் எதிர்பாராத மோதல்கள் ஏற்படுவதற்கும் இத்தகைய தலையீடுகள் வழி வகுத்திருக்கின்றன. உண்மையாகப் பார்த்தால், சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை இந்திய உணவுக் கலாச்சார அம்சத்திலிருந்து யாராலும் பிரித்து விட முடியாது என்பது தெரிகிறது.

திரைப்படம் திணிக்கின்ற பிராமணியக் கருத்து

கலாச்சாரம் குறித்த பொருளாக இந்த திரைப்படம் உருவாக்கியிருக்கும் சமூக அர்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு, உணவு குறித்த சமீபத்திய விவாதங்களை உள்ளடக்கிய இத்தகைய பரந்த பார்வை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. சைவ உணவின்பால் தற்போது நிலவுகின்ற அரசியல் உள்ளர்த்தங்களை முழுமையாக நியாயப்படுத்துகின்ற குறியீடுகளுக்கு மத்தியில், சைவ உணவுப் பொருளை முன்னிறுத்துகின்ற இந்த குலாப்ஜாம் திரைப்படம் உண்மையில் மிகுந்த சிக்கல் வாய்ந்ததாகவே இருக்கிறது. இன்றைய யதார்த்தத்தில் இருப்பதைப் போன்று, வெறுமனே அசைவ உணவுப் பொருட்களிலிருந்து சைவத்தை வேறுபடுத்துவதோடு மட்டும் அவர்கள் நின்று விடவில்லை.

மாறாக, சாப்பிடும் மக்களின் குணநலன்களை நல்லது, கெட்டது என்று வகைப்படுத்துகின்ற வகையிலும், ஹிந்து தேசியவாத திட்டத்திற்குள் தங்களுக்கான இடத்தை மக்கள் தீர்மானித்துக் கொள்ளும் வகையிலும் அவர்கள் செயல்பட்டிருக்கின்றனர். எனவேதான், உணவைப் பதப்படுத்துவதற்காக பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது தேவையற்றது என்பது ராதாவின் கருத்தாக இருக்கிறது. பிராமணத் திட்டத்தில் உள்ளவாறு சைவ உணவோடு (சாத்வீக வகை) தொடர்புடைய தார்மீக எண்ணங்களை தூக்கிப் பிடிக்கின்ற இந்த திரைப்படம் முற்றிலும் சாத்தியமற்றதாக, அதிரடியான தீர்ப்பை வழங்குவதாக, பாகுபாடு காட்டுவதாகவே இருக்கிறது.

Gulabjaam trailer: Siddharth Chandekar struggles to learn cooking from  Sonali Kulkarni

பக்தி, கனிவு, முரட்டுத்தனம், உணர்திறன், துணிவு, ஆர்வம், வன்முறை மற்றும் கேடு போன்ற தனிப்பட்ட குணநலன்கள், குறிப்பாக முஸ்லீம் கதாபாத்திரங்கள் மீது மாசு கற்பிக்கும் வகையில், உணவோடு நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன. அதற்கேற்றவாறு நல்லது, உணர்ச்சி மற்றும் மந்தநிலை போன்ற குணங்களை மையப்படுத்தி உணவுகள் சாத்வீக, ரஜஸ், தமஸ் என்று பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. பாலினம் சார்ந்த பாகுபாடுகளும் உண்ணுகின்ற உணவின் வகையைப் பாதிக்கின்றன. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பூண்டு அல்லது வெங்காயம் போன்ற பொருட்கள் முறையற்ற பாலியல் ஆசைகளைத் தூண்டும் என்று கருதப்படுவதால், பிராமண விதவைகள் அவற்றை உட்கொள்வது தடை செய்யப்பட்டிருக்கின்றது.

இத்தகைய கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே இந்தப் படத்தில் வருகின்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் இருக்கின்றன. சமையல் பொருட்கள், அவற்றின் தரம், அவை பயன்படுத்தப்படுகின்ற விகிதாச்சாரம் அல்லது சுவையான உணவைச் சமைப்பதற்கென்று இருக்கின்ற வகைகள், வழிமுறைகள் பற்றி ராதா ஒருபோதும் பேசுவதில்லை.

அதற்குப் பதிலாக, ’சமைக்கின்ற ஒவ்வொரு முறையும், அதற்கென உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ அல்லது ’சமைக்கிற அனைத்துடனும் என்னுடைய இதயத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்…’ என்பது போன்ற வெற்று வார்த்தைகளின் மூலம் நம்மை கனவுலகிற்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்த திரைப்படம் சமையல் நிகழ்ச்சியிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதை, இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்/இயக்குனர் ஆகியோர் சுயநினைவோடு முயற்சித்திருக்கிறார்களா என்பது இந்தப் படத்திலிருந்து நமக்குத் தெரியவில்லை.

அடுத்ததாக, ராதா அந்த நகரத்தின் மையப் பகுதியில் இருக்கின்ற ஒரு பழைய கல் கட்டிடத்தில் வாழ்கின்ற பிராமணப் பெண்ணாக இருக்கிறார். அந்த இடம் பிராமணியத்தின் கோட்டையாக அடையாளம் காணப்படுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பேஷ்வாவின் இல்லத்திற்கு அருகில் உள்ள சனிவார் வடாவின் அருகே இருக்கிறது. காலையில் வானொலி கேட்பது, தேநீர் தயாரிப்பது, குளியல், அதற்குப் பிறகு உணவு தயாரித்தல் என்று தொடர்ந்து அவள் கடைப்பிடித்து வருகின்ற பழமையான பழக்க வழக்கங்கள் அவளது வாழ்க்கையில் ஒரே மாதிரியான தன்மை இருப்பதைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது, அவள் பாதுகாப்பற்று இருப்பதையும், தன்னைச் சுற்றியுள்ள உலகிலிருந்து அவள் தனித்திருப்பதையும் காட்டுகின்றன.

விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் இருந்த 11 வருடங்கள் உட்பட, சில காரணங்களுக்காக அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நண்பர்கள் யாருமில்லாத நிலையில் தன்னுடைய ஒரே உறவான சகோதரியைக்கூட அச்சத்தின் காரணமாக நேரடியாகச் சந்திக்க இயலாதவளாக அவள் இருக்கிறாள். இருட்டில் காட்டப்படும் திரைப்படங்களில் மட்டுமே அவளுடைய வாழ்வில் காதல் இருப்பதை, ரன்பீர்கபூரின் திரைப்படங்களைப் பார்ப்பதில் அவளுக்கிருக்கின்ற ஆர்வம் காட்டுகிறது.

அவளது தனிமை, நடுத்தரவயது, மிகவும் ஒழுக்கமான வேலை, பாலியல் அடக்குமுறை, வாழ்க்கையில் அவளுக்கென்றிருந்த ஒரே தஞ்சமான சமையல் மீதான பக்தி ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து விஜய் டெண்டுல்கரின் புகழ் பெற்ற நாடகமான சாகரம் பைண்டரில் இருக்கின்ற லக்ஷ்மியை நமக்கு நினைவூட்டுகின்றன.

பாலியல் அடக்குமுறையின் விளைவாக அவர்களுடைய பழக்கவழக்கங்களில் இருக்கின்ற விசித்திரத்தன்மை மற்றும் அவர்களின் பேச்சு மற்றும் செயல்களில் பதுங்கியிருக்கிற சாதி சார்ந்த நடத்தைகள் என்று லக்ஷ்மி, ராதா ஆகிய இருவரிடமிருக்குமிடையே இரண்டு வகைகளில் ஒற்றுமைகள் இருக்கின்றன. சமையலறையில் எறும்புகளுடன் லக்ஷ்மி பேசுகின்ற ’பேச்சு’ (அப்போது அவளுடைய சிரிப்பு சகாரத்தை கவர்ந்திழுக்கிறது) அவளுடைய மனோரீதியான பாலுணர்வு பற்றிய பார்வையை வழங்குகிறது, அதுபோன்றே தான் தயாரிக்கிற உணவுடன் ராதா பேசுகின்ற பேச்சும் இருக்கிறது.

சகாரத்தின் கொடூரமான குற்றத்தை (கோபத்தில் சம்பாவைக் கொலை செய்தது) நியாயப்படுத்தப்படுகின்ற வகையில் லக்ஷ்மியின் ஆழ்மனது உடனடியாக வெளிப்படுகிறது. தன்னுடைய கணவன் மீது கொண்டிருக்கும் வழக்கத்திற்கு மாறான பக்தி, அவளுடைய பிராமணிய மத வழக்கத்திலிருந்தே வருவதாக உள்ளது. இது மிகவும் பலவீனமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், ஆதித்யா மீது ராதா கொண்டிருக்கும் அளவிற்கு மீறிய ஈர்ப்பு அறிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. ரன்பீர்கபூரின் திரைப்படங்களைப் பார்ப்பதில் கிடைக்கின்ற உள்ளார்ந்த சந்தோஷத்தை அவனோடு பகிர்ந்து கொள்வதன் மூலமும், தன்னுடைய மூத்த சகோதரியின் கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வதன் மூலமும், முற்றிலும் அவளை அறிந்திராத அந்த மனிதன், மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே அவளுக்கு நம்பகத்தன்மை மிக்கவனாக மாறுகின்றான்.

நம்பிக்கைக்குரியவனாக அவள் அவனைக் கருதுவதால், தேவைப்படும் போது அங்கேயே தங்கியிருக்குமாறு அவன் கேட்டுக் கொள்ளப்படுகிறான். தன்னுடைய வீட்டில் தங்கியிருக்கும் ஓர் இரவில் ஆதித்யா தன்னுடைய உடைகளை மாற்றிக் கொள்வதை அவள் காண்கிறாள். அவனைப் பிரிந்திருக்கும் போது ஏற்படுகின்ற தாங்க முடியாத தருணங்களை மறப்பதற்காக மயக்க மருந்துகளை அவள் எடுத்துக் கொள்கிறாள். ’தன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமென்றால், ஏன் தன்னுடைய வாழ்க்கையில் அவன் நுழைந்தான்’ என்று கேட்பதாக ராதா அவனுக்கு எழுதிய ஒரு கடிதம் இருக்கிறது.

கோகணஸ்த பிராமண சாதி உணவுகளை மட்டுமே அதிகாரப்பூர்வமான மராத்தி உணவாகக் காட்டுவதன் மூலம் மகாராஷ்டிராவில் இருக்கிற மற்ற சாதி, பிராந்திய உணவு வகைகள் முற்றிலும் விலக்கி வைக்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரமாக அறியப்படுகின்ற, முன்னர் பிராமண அதிகார மையமாக விளங்கிய புனே நகரம், இந்தக் கதையின் களமாக இருக்கின்றது.

Gulabjaam' gets ready for release on 16th February

ஆதித்யா ’என்னை மோசமாக நடத்துங்கள், நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னைத் திட்டுங்கள், ஆனால் எனக்கு கற்றுக் கொடுங்கள்.’ என்று கூறுவதன் மூலம், சீடர்கள் படுகின்ற கஷ்டங்கள், அவர்களிடம் உள்ள சளைக்காத தன்மையுடன் பிராமணிய அறிவை வழங்குவதற்கென்று இருந்த பண்டைய குருகுல முறையை  நமக்கு நினைவூட்டுகிறது. தனக்கு கற்றுக் கொடுப்பதற்கு விரும்பாமல் தயக்கத்துடன் இருக்கின்ற அந்த கடுமையான ஆசிரியரின் கவனத்தைப் பெறுவதற்காக, உண்மையில் சமையல் கற்கத் தொடங்குவதற்கு முன்னதாக பல நாட்களுக்கு, கடைகளுக்குச் செல்லுதல், மாவு அலசுதல், உலர்த்துதல், மாவு அரைக்கும் ஆலைகளுக்குச் சென்று வருதல், பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற சமையல் தொடர்பான பிற வேலைகளை ஆதித்யா செய்ய வேண்டியிருக்கிறது.

சமையலை முடிப்பதற்கு முன்பாகவே உணவை சுவை பார்க்காமல் இருப்பது, சாதி சார்ந்த சமையல் விதிகளைக் கொண்டிருப்பது என்று சுகாதாரம், ஒழுக்கம் பற்றி அந்த ஆசிரியை காட்டுகின்ற அக்கறை சைவ உணவைப் புனிதப்படுத்தும் வகையிலேயே இருக்கின்றது. அவரது அக்கறை உண்மையில் ஒழுக்க நெறியாக இல்லாமல், ஒற்றை மனோபாவத்துடன் முழு ஈடுபாடு காட்டுவதை நோக்கியதாகவே இருப்பது, “உத்தர் பரன் நோஹே ஜானி ஜேயத்னி கர்மா” (உணவு என்பது வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமல்ல.

அது நெருப்பு வேள்வியை ஒத்ததாக இருக்கிறது) என்ற பிரபலமான சுலோகத்தை பின்னணியில் மெதுவாக ஒலிக்க விடுவதன் மூலம் காட்டப்படுகிறது. உணவு உட்கொள்வதற்கு முன்பாக சுலோகங்களைச் சொல்வது பிராமண சாதிய வழக்கமாகும். ராதிகாவின் சமையலறையில் இருந்து வரும்  சைவ உணவுகளின் அணிவரிசையால், ஆதித்யாவிடமிருந்த அசைவ உணவு தயாரிக்கும் திறமை (அவருடைய அறை நண்பர்களுக்காக அவர் மீன் சமைக்கிறார்) வெகுவிரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.

மாற்றமும் உலகமயமாக்கலும்

உலகமயமாக்கல் மூலமாக மக்களின் வாழ்நிலை, தேவைகள், கனவுகள் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே, இந்தப் படத்தின் கதை சொல்ல வருகின்ற முக்கியமான செய்தியாக இருக்கிறது. அனைத்தும் சந்தைப்படுத்தப்படும் இந்தக் காலத்திற்கேற்றவாறு, அதிகாரப்பூர்வ மராத்திய உணவை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக வேண்டி, அதன் தன்மைகளை விளக்க வேண்டிய தேவை இருப்பதாக இந்தத் திரைப்படம் கருதுவதாகவே தோன்றுகிறது. ஆனால், மஹாராஷ்டிரா உணவு வகைகளைப் பொறுத்தவரை மூங்கில் கூடைகளில் பச்சை வாழை இலை மீது பொன்னிறத்தில் வறுக்கப்பட்ட சூடான உணவு வகைகளை எடுத்து வைப்பது, அவ்வளவாக வரவேற்பைப் பெறுவதாக இருக்காது என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.

தினந்தோறும் வாழை இலைகளை அதிகமாகப் பயன்படுத்துகின்ற தென்னிந்தியப் பகுதிகளைப் போலல்லாமல், சில குறிப்பிட்ட தினங்களில் தெய்வங்களுக்கு பிரசாதத்தை படைப்பதற்கு மட்டுமே வாழை இலைகளில் உணவுகளைப் பரிமாறுவது என்பது மராத்திய உயர்சாதிக் கலாச்சாரத்தில் இருக்கிறது. நாம் தேர்வு செய்து கொள்ளக்கூடிய வகையில் ஏராளமான வகைகள் அதிகரித்திருப்பதை, நாம் உலகமயமாக்கலின் கீழ் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எளிதில் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இருக்கின்றன என்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

Gulabjaam: A Marathi Food Film With a Caste Problem - Arré

மேலாதிக்க சாதியின் உணவு, கலாச்சாரம் ஆகியவற்றை இந்த திரைப்படம் முன்னிறுத்துவதைப் பார்க்கும் போது, அவற்றை ஏற்றுக் கொள்வது என்பது கூட்டு வாழ்க்கை மீதான ஒரு மாற்றாக, அடிமைப்படுத்துவதாக, மாற்றுவதாக, ஏமாற்றுவதாக, இடையூறு செய்வதாக இருக்கிறது என்பதை அது கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

மாற்றத்திற்கான மாற்று அர்த்தங்கள் இல்லாவிடில், தினந்தோறும் சிரித்துக் கொண்டே ஆதித்யா கடந்து செல்கின்ற குறுகலான சந்துகளில் உள்ள கல் சுவர்களில் தொழில்நுட்பத்தின் உதவியால் மேக்புக் வழுக்கிக் கொண்டு செல்வது, ராதாவின் சமையலறையில் இருக்கின்ற புதிய, பளபளப்பான டயல்-எ-செஃப் கருவி ஆகியவை வீணாகிப் போய் விடும். அதே போல், லண்டனில் உள்ள வங்கியில் மிக அதிகமாக பணத்தை சம்பாதிக்கக்கூடிய  வேலையை விட்டு விட்டு, வழக்கத்திற்கு மாறான வேலை ஒன்றைத் தேர்ந்தெடுப்பவராக ஆதித்யாவை காட்டுவதில் இருக்கின்ற அரசியல், தன்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாத காதலியை விட்டு அவர் பிரிந்து செல்வது போன்றவை எந்தவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இல்லை.

முடிவு

இவையனைத்தையும் கொண்டு பார்த்தால், இந்த திரைப்படம் ஒரு சாதி மற்றும் ஒரு நகரத்தின் கலாச்சார மேலாதிக்கத்தை மிக முக்கியமாக ஆதரிப்பதன் மூலமாக, வலுவான கலாச்சார விமர்சனத்தை உருவாக்குகிறது. மராத்திய கலாச்சாரத்தின் அங்கமாக இருக்கின்ற நாடகம், இலக்கியம், மொழி, சுற்றுச்சூழல் குறித்த அக்கறை, இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு சாதி மற்றும் புவியியல் ரீதியிலான இடம் ஆகியவற்றின் மேலாதிக்கத்தை உருவாக்குவதற்கான புதிய தளமாக உணவு இங்கே பேசப்படுகிறது.

எண்களை எண்ணுவதைக் கூட மறந்து விடுகிற நல்ல சமையல்காரராக இருக்கின்ற அந்த பிராமணப் பெண், கோமாவால் பாதிக்கப்பட்டு பகுதியளவு நினைவிழந்த பிறகும்கூட, சாதி அடிப்படையிலான உணவையோ அல்லது சாதி அடிப்படையிலான சமையல் பழக்க வழக்கங்களையோ மறந்து விடவில்லை. ஜீ ஸ்டூடியோ நிறுவனம் திரைப்படத்தின் தயாரிப்பாளராக இருப்பது, ஊடகங்களால் உருவாக்கப்படுகின்ற மிகப் பெரிய கலாச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த திரைப்படம் இருக்கிறது என்ற கருத்தையே நமக்குத் தெரிவிக்கிறது.

மாதுரி தீக்சித், பெம்ராஜ் சாரதா கல்லூரி, அகமத் நகர்

https://www.epw.in/engage/article/brahminical-gulabjaam-cultural-critique-of-a-marathi-film

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Latest

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன....

1 COMMENT

  1. பிறர் உணவைக் குறை சொல்வது எப்படி ஏற்றுக்கொள்வது. ஆனால் சாதாரண மக்கள் முக்கியமாக “வேறு சாதியைச் சேர்ந்த படித்த மக்கள்” ஏற்கனவே பாதித்தூரம் நகர்ந்துவிட்டார்கள் என்பதையும் இந்த விமர்சனத்தின் ஊடே உள்ள சில வாக்கியங்கள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. சாப்பாடுதான-ன்னு நாம எதையும் சாதாரணமா நினைக்கக் கூடாது போல. மிக வித்தியாசமான எல்லோருக்கும் எல்லாவிசயத்திலேயும் “அரசியல்” தெரிஞ்சிருக்கனும்னு சொல்ர இப்படிப்பட்ட கட்டுரைகள் அவசியம் தேவை. இன்னும் சுருக்கமாக எழுதமுடியுமான்னு தெரியல, இவ்வளவு பெரிய விசயத்தை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here