புதியதோர் உலகம்  செய்வோம்

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு  சாய்ப்போம்

பொது உடைமை கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்,

என்று பாடிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை மேதினமன்று  நினைவு கூர்வது சாலச் சிறந்தது.  புதுச்சேரியில்  1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி  பிறந்த சுப்புரத்தினம், பாரதியார் மேல் கொண்ட பற்றால் பாரதிதாசன் என்று பெயர் மாற்றிக்கொண்டார்.  72 ஆண்டுகள் வாழ்ந்த பாரதிதாசன் கவிஞராக செயல்பட்டதுடன், தமிழாசிரியராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வாழ்ந்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் போர்வாளாக தனது கவிதைகளை படைத்த பாவேந்தர் தந்தை பெரியாரின் தீவிர தொண்டர்.  பெரியாரின் சர்வதேச மனிதநேயம், பகுத்தறிவு, பெண் கல்வி, பெண்ணுரிமை, இளைஞர்களின் எழுச்சி, தமிழ்ப் பற்று, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு  ஆகிய கருத்தியல்கள்  அவரது படைப்புக்களில் ஆதிக்கம் செலுத்தின.  இருண்ட வீடு, குடும்ப விளக்கு, உலகம் உன் உயிர், எதிர்பாராத முத்தம், கண்ணகி புரட்சிக்காப்பியம், குறிஞ்சித்திட்டு, சுயமரியாதைச் சுடர், சேரதாண்டவம், தமிழச்சியின் கத்தி, தமிழியக்கம், தமிழக்கு அமிழ்தென்று பேர்,  பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திச்சூடி,  அழகின் சிரிப்பு ஆகியவை அவர் எழுதிய முக்கிய நூல்கள்.

அறிஞர் அண்ணா இவரை 1946ஆம் ஆண்டு புரட்சிக்கவி என்று பாராட்டி ரூ.25,000 பரிசு வழங்கினார்.  இவரது  பிசிராந்தையார் நாடக நூலுக்கு  சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. திருக்குறளின் பெருமையை விளக்கி 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.  பாரதிதாசனை புரட்சிக்கவிஞர் என்று ஏன் கூறுகிறோம் என்று சிந்தித்தால்  அவர் எழுதிய பல்வேறு வரிகள் அதனை நிரூபிக்கின்றன.

சித்திர சோலைகளே

     உமை நன்கு திருத்த  இப்பாரினிலே

முன்னம் எத்தனை தோழர்கள்

ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே….

என்று கூறும்போது தொழிலாளர்களின் தோழராக தன்னை முன் நிறுத்துகிறார் புரட்சிக்கவிஞர்.

பாரதிதாசனும் பெரியாரும்

வாலாஜாபாத் சொற்பொழிவு

பாரதிக்கு தாசன் என்று பாரதியின் மேல் பேரன்பு கொண்டாலும், பாரதியின் பக்தியை பாரதிதாசன் பெறவில்லை. தந்தை பெரியாரின் கொள்கை அவரை ஈர்த்தது. பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளினார். தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக்  கொள்கையில் ஆழ்ந்த பற்றுக்  கொண்டார். அதனால்தான்

இல்லை என்பார் சிலர்

உண்டென்று சிலர் சொல்வார்

எனக்கில்லை கடவுள் கவலை

என்று கவிதை வடிவில் கொள்கைக் குறிப்பு அறிவித்தார்.

தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு , மதவெறி எதிர்ப்பு ஆகியவற்றை வன்மையாகக் கண்டித்து, இவை இல்லாத சுயமரியாதை உலகு அமைக்க வேண்டும் என்று கவிதை வடித்தவர் பாரதிதாசன்.

சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்

தாங்கி நடைபெற்றும் வரும் சண்டை உலகிதனை

உதையினில் துரும்பு போல் அலக்கழிப்போம்

பின்னர் ஒழித்திடுவோம் புதியதோர் உலகம் செய்வோம்

பேதமில்லா அறிவுடைய அவ்வுலகத்திற்கு

பேசு சுயமரியாதை உலகு எனப் பெயர் வைப்போம்

ஈதே காண் சமூகமே ! யாம் சொன்ன வழியில்

ஏறு நீ, ஏறு நீ, ஏறு நீ, ஏறே,

அண்டுபர் அண்டாத வகை செய்கின்ற

அநியாயம் செய்வது எது,

மதங்கள் அன்றோ?

என்று  சாதி மத பேதங்களும் மூடவழக்கங்களும் இல்லாத சுயமரியாதை உலகு அமைக்க அறைகூவல் விடுத்தவர் புரட்சிக்கவிஞர்.

சர்வதேசக் குடிமகன் என்ற நிலையில் உலக மக்கள் எல்லாம் ஒன்றே என்று அனைவரையும் அரவணைக்கும் தாயுள்ளத்தில் தான் இன்பம் என்று கூறினார் பாவேந்தர். தானுன்டு தன் பிள்ளையுண்டு என்று இருப்பவர்கள் கடுகளவு உள்ளம் கொண்டவர்கள் என்று சாடுகிறார் பாவேந்தர்.

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண்

டென்போன் சின்னதொரு கடுகுபோல்

உள்ளங் கொண்டோன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்

…….தூய உள்ளம் அன்பு உள்ளம்

பெரிய உள்ளம் தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே

என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்,

அங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்ததாலே,

என்று உள்ளத்தின் சிறுமையை கடுகுள்ளம், துவரையுள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சு உள்ளம் என்று எடுத்துக்காட்டி பரந்த விரிந்த தாயுள்ளத்தை பெரிதாக்கி காட்டினார் புரட்சிக்கவிஞர்.

நான் ஒரு பூரண பகுத்தறிவாதி, எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, மொழி பற்றோ கிடையாது என்றார் தந்தை பெரியார். உலகம் உன்னுடையது என்ற பாடலில் இந்த கருத்தியலை மிக அழகாக விளக்கினார் பாவேந்தர்.

மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று,

இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!

தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!

மீசையை முறுக்கி மேலே ஏற்று!

உன்வீடு, உனது பக்கத்து வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நாட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு!

ஏறி நன்று பாரடா எங்கும்,

எங்கும் பாரடா இப்புவி மக்களை,

பாரடா உனது மானிடப்பரப்பை,

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்,

என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!

அறிவை விரிவு  செய்! அகண்டமாக்கு!

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

அணைந்துகொள், உன்னைச் சங்கமமாக்கு!

மானிட சமுத்திரம் நானென்று கூவு!

பிரிவிலை, எங்கும் பேதமில்லை,

உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்!

புகல்வேன் , உடைமை மக்களுக்குப் பொது,

புவியை நடத்து, பொதுவில் நடத்து

என்று பொதுவுடைமை, சர்வதேசியம், அறிவுத் தேடல், ஆகியவற்றை உயர்த்திப் பிடித்தவர் புரட்சிக்கவிஞர். அறிவை விரிவு செய்து அகண்டமாக்கினால் விசாலைப் பார்வை கிடைக்கும், எனவே இந்த உலகமே உன்னுடையது என்றார் பாவேந்தர்.

பாரதிதாசனும் பொதுவுடைமையும்

Remembering Bharathidasan: Prolific poet and Dravidian politics ...

முன்னர் குறிப்பிட்ட வரிகளிலேயே பாரதிதாசனின் படைப்புலகில் பொது உடைமை கருத்திற்கும் முக்கிய இடம் உண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது.

புகல்வேன் , உடைமை மக்களுக்குப் பொது,

புவியை நடத்து, பொதுவில் நடத்து  என்றும்

புதியதோர் உலகம்  பற்றிக் கூறுகையில்

பொது உடைமை கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்,

என்றும் முழங்கினார். அது மட்டுமல்ல அவரின் உலகப்பன் பாட்டு என்ற கவிதையில் அவருக்கு பொது உடைமை மீதிருந்த பற்றும் அதற்கு ஏற்படக்கூடிய தடைகளையும் பற்றி நயமாகக் கூறியிருப்பார்.

ஏழை முதலாளி என்பது இல்லாமற் செய்

என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்து துள்ளி,

ஆழமப்பா உன்வார்த்தை ,, உண்மையப்பா

அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா,

ஆழமப்பா உன் கருத்து, மெய்தானப்பா,

அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,

தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்று சொல்லித்

தகதகென ஆடினான். நான் சிரித்து,

 

ஆடுகின்றாய்  உலகப்பா, யோசித்துப்பார்,,

ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா, ,

தேடப்பா ஒரு வழியை என்று சொன்னே.

செகத்தப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்

உதையப்ப ராகிவிட்டால், ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ

என்று ஒப்பப்பர்கள் என்று  ஏற்றத் தாழ்வில்லா வாழ்க்கையைக் குறிப்பிடுகிறார் என்பது சிறு குழந்தைகளுக்குக் கூட புரியும்.

சுயமரியாதை இயக்கத்தின் ஈர்ப்பு, பொது உடைமை கருத்தியலின் தாக்கம் ஆகியவற்றால் கல்வி, பெண்ணுரிமை, இளைஞர் விடுதலை, வீரம், ஆகியவை குறித்தும் நல்ல பல கவிதைகளை அளித்துள்ளார் பாவேந்தர்.

பாரதிதாசனும் கல்வியும்

யார் தமிழர்??? -தமிழை உயிராக ...

கல்விதான் மனிதனை முன்னேற்றும், படிப்பதால் பக்குவம் பெற முடியும் என்று பறைசாற்றியவர் புரட்சிக்கவிஞர். குலக்கல்வி குறித்த விவாதங்கள் தலையெடுத்த காலத்தில், நூலைப்படி என்று முழங்கியவர்.

நூலைப் படி சங்கத்தமிழ் நூலைப்படி

முறைப்படி நூலைப்படி

காலையிற்படி கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும் படி

நூலைப்படி

கற்பவைக் கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டும்

அப்படிக்

கல்லாதவர்

வாழ்வதெப்படி?

என்று, நாள் முழுக்க நூல் வாசிக்க வேண்டும், கல்லாதவர்களால் வாழ முடியாது என்றார் புரட்சிக்கவிஞர். இப்படி படித்தால் என்னவெல்லாம் நலம், நூலகத்தின் முக்கியம் என்ன என்றும் கூறியிருக்கிறார்.

மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்

மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து

தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்

சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்

இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்

இலகுவது புலவர் தரு சுவடிச்சாலை,

புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்

புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்

என்று புத்தகசாலைக்காக அவர் இயற்றிய கவிதை கல்வி எவ்வாறு மனிதனை பக்குவப்படுத்துகிறது என்று இயம்புகிறது.

பாரதிதாசனும்   பெண்ணுரிமையும்

கல்வி பெற்ற பெண் உள்ள  குடும்பம் குடும்ப விளக்கு என்றும் படிக்காத மனிதர்கள் வசிக்கும் வீடு இருண்ட வீடு என்றும் இரு பெரும் காவியங்களை படைத்தார் பாவேந்தர்.  பெண் குழந்தைகளை கல்வி கற்கும்படி அன்னையர்கள் அறிவுறுத்துவது போல் பாட்டெழுதியுள்ளார். கல்வி கற்ற அன்னையர் பாரதிதாசன் காலத்தில் எத்தனை பேர் இருந்தனரோ, ஆனால் கல்வியின் மகத்துவம் குறித்து தாய் கூறுவது போல் இயம்பியுள்ளார்.

தலைவாரி பூச்சுடி உன்னைப் பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள்

உன் அன்னை…

விலைப் போட்டு வாங்கவா முடியும்?

கல்வி

வேளைதோறும் கற்று வருவதால்

படியும்!

மலை வாழை அல்லவோ  கல்வி நீ

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

படியாத பெண்ணாய் இருந்தால், கேலி

பண்ணுவார் என்னை இவ்வூரார்

தெரிந்தால்!,

.. கடிதாய்  இருக்கும் இப்போது – கல்வி

கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது,

கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு

பெண் கல்வி, பெண் கல்வி என்கின்றது

அன்போடு.

என்று கற்றலின் இனிமையை கல்வி என்பது வாயார உண்ண வேண்டிய மலைவாழைப்பழம் என்கிறார் புரட்சிக்கவிஞர்.

பாரதிதாசனும் வீரமும்

bharathiar tamil essay

இளைஞர்கள் சிங்கம் போல புறப்பட்டு சமூக மாற்றத்திற்கு உழைக்க வேண்டும். தன்னை இகழ்ந்தவர் நடுங்க சுய மரியாதையை உயர்த்திட விழி திறந்து புலியென்ன செயல் செய்ய வேண்டம் என்கிறார் புரட்சிக்கவிஞர்.

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு

திறக்கப்பட்டது,,,சிறுத்தையே வெளியில் வா,,

எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்

புலிஎனச் செயல் செய்யப்ப புறப்படு  வெளியில்

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே

சிம்புட் பறவையே சிறகை விரி! எழு!

சிங்க இளைஞனே திரும்புமுகம்!, திறவிழி!

ஜனநாயத்திற்கு எதிரான சக்திகளை அழிக்க கொலை வாளினை எடுக்க வேண்டும் என்று புரட்சிக்கவிஞர் கூறியுள்ளதால் அவர் வன்முறையை பரிந்துரைக்கிறார்  என்று பொருள் கொள்ளத்தேவையில்லை. சரி நீதி, சமமே பொருள் ஜனநாயகம் என்ற கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க அவர் வார்த்தை  வாளினை ஏந்தியுள்ளார்.

கொலைவாளினை எடடாமிகு

கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே, உயர்

குணமேவிய தமிழா,

தலையாகிய அறமே பரி

சரிநீதி யுதவுவாய்,

சமமேபொருள்  ஜனநாயம்

எனவே முரசறைவாய்!

என்று உயர் குணம் கொண்ட தமிழைனை அநீதிக்கு எதிராக போராட அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்.

இலக்கியம் என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருளை விளக்கும்.

வலியோர் சில எளியோர்தமை

வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்

நிலையம் எனும் நினைவா?

…உதவாதினி ஒரு தாமதம்

உடனே விழி தமிழா!

என்ற பாவேந்தரின் வரிகளை  இந்த கொரோனா காலத்திற்கும் ஏற்றபடி படிக்கலாம்.  இந்த நோயை வலிமையாகவும் இதனால் வாடும்  மக்கள் எளியோராகவும்   இதனைத் தடுக்க தமிழர்கள் உடனே  தாமதம் இல்லாமல் விழிக்க வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம்.   இந்த தனித்திருக்கும் நாட்களில் பாவேந்தரின் கவிதைகளைப் படித்து மலைவாழை சுவை பெறுவோம்.

பாரதிதாசன் 1963ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் தன்னுடைய பொது வாழ்க்கையினால் செத்தொழியும் நாளும் தனக்கு திருநாளே என்று கூறியவர்.

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்

மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்

என்னால் தினையளவு நலமேனும் கிடைக்கும்  என்றால்

செத்தொழியும் நாள் எனக்குத்

திருநாளாகும் !

என்று கூறிய புரட்சிக்கவிஞர்  புதைக்கப்படவில்லை, தன் கருத்துக்களால் தமிழர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார். அவரது வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கு முழங்கும்.

4 thoughts on “புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – சிவ.வீர. வியட்நாம்”
  1. தந்தையின் வழியில் எழுத்துலக பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர் .

      1. தொகுப்பு ..! மிக சிறப்பு!. வாழ்த்துக்கள்.

  2. உங்கள் எழுத்துக்கள் பாரதிதாசன் கவிதைகளைப் படிக்க என் ஆர்வத்தைத் தூண்டுகின்றன-நன்றி இது போன்ற மேலும் வலைப்பதிவுகளை எழுதுங்கள்-

    Regards Arivuchudar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *