நாடு தழுவிய அளவில் 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான மிகமுக்கியமான தேசிய அளவிலான நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இந்த முடிவு திடீர் திருப்பம் கொண்டதாக இருந்தது.

அந்த அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்படாமல், மற்ற நாடுகளில் இருந்து விலகி நிற்பதாக காணப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பிற்குப் பின்னர், ஊரடங்கு தொடங்கியவுடனே நோய்த்தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 28க்குள் அந்த எண்ணிக்கை 933 ஆக உயர்ந்து நின்றது.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கை, மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டதாகவும், நாட்டில் உள்ள ஏழைகளும், வீடற்றவர்களும் அதனால் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்தது. வைரஸால் ஏற்பட்ட உலகளாவிய கோவிட்-19 தொற்று நோய் மார்ச் 11இலிருந்தே பரவுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்த போதிலும், சுகாதார அவசரநிலை நிலவுவதாக அறிவிக்க இந்தியா மறுத்து விட்டது. நாட்டின் பெரும் பகுதிகள் வழக்கம் போலவே இயங்கி வந்தன. இப்போது கூட, நாடு முழுமைக்கும் 30,000க்கும் குறைவான மக்களே பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவில் மிகக் குறைவான அளவில் இருக்கிறது.

‘ஏப்ரல் பிற்பகுதியில் தீவிரமாகும்’

முன்னணி பொது சுகாதார நிபுணரும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கைக்கான அமைப்பின் இயக்குநருமான ரமணன் லட்சுமிநாராயண், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்திலே இந்த தொற்றுநோயின் உச்சநிலை இந்தியாவில் ஏற்படும்,

அந்த நேரத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவமனை படுக்கைகளும், முக்கியமான மருத்துவ சேவையும் தேவைப்படும் என்று கணிக்கிறார். அப்போதுதான் பேரழிவு ஏற்படக்கூடும்.

Indian Politicians Pick Magic Over Science in Coronavirus Fight

இந்தியாவில் 1,000 பேருக்கு வெறுமனே 0.5 மருத்துவமனை படுக்கை மட்டுமே இருக்கிறது. ஒப்பீட்டளவில் இத்தாலியில் ஆறு மடங்கிற்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.7 சதவீதத்தை மட்டுமே இந்தியா சுகாதாரத்திற்காகச் செலவிடுகிறது.

ஆனால் அமெரிக்கா தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதத்தை சுகாதாரத்திற்காகச் செலவிடுகிறது.

இந்திய அரசாங்கமோ தேசியவாதத்தை அருவருப்பான முறையில் காட்சிப்படுத்துவதற்காக, மிக உயரமான சிலைகளை உருவாக்குவதற்கு பெரும் தொகையை ஒதுக்கியதுதான் நடந்திருக்கிறது.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கடந்த சில ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மூளைக் காய்ச்சல் நோயால் இறந்திருந்த போதிலும், அவசரகால சிகிச்ச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், ராமரின் சிலையை அமைப்பதற்காக கடந்த ஆண்டு 450 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை ஒதுக்கினார்.

2018ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட, 40 கோடி ரூபாய் மதிப்பிலான சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேலின் 597 அடி உயர சிலையை விட உயரமான ராமர் சிலையை நிறுவுவதே தன்னுடைய அரசின் நோக்கம் என்று ஆதித்யநாத் கூறினார்.

பீதியை தூண்டிவிட்ட மோடியின் வார்த்தைகள்

நீண்டகாலமாக தவறாக நிதி ஒதுக்கப்படுவது மட்டுமே இங்கே பிரச்சினையாக இருக்கவில்லை. மார்ச் 24 அன்று ஊரடங்கை அறிவித்தபோது, தங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களை மக்கள் எவ்வாறு பெறுவார்கள் என்பது பற்றி மோடி எதுவும் குறிப்பிடவில்லை. அவரது வார்த்தைகள் மக்களிடையே பீதியைத் தூண்டி விட்டன.

மோடி தன்னுடைய உரையை முடிப்பதற்குள்ளாகவே, அதிக எண்ணிக்கையில் மக்கள் வீதிகளில் குவிந்தனர். மருந்தகங்களில் பதட்டமான முகங்களுடன் மக்கள் திரண்டனர். சமூக விலகல் என்பது முற்றிலும் மறக்கடிக்கப்பட்டது.

PM Modi asks people to take coronavirus lockdown seriously

பிரதமர் மோடி

பதட்டமடைந்த குடும்பங்கள் பல்பொருள் அங்காடிகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேமித்து வைத்துக் கொண்டன. பால், முட்டைகள் அங்காடிகளின் அலமாரிகளில் இருந்து மறைந்து போயின.

இந்தியாவில் தனிச்சலுகை பெற்றிருக்கும் சிறிய எண்ணிக்கையிலான செல்வந்தர்கள், தங்களுடைய குளிர்சாதனப் பெட்டிகளில் வாரக்கணக்கில் தேவைப்படும் பொருட்களைச் சேமித்து வைத்துக் கொண்டனர்.

அதேவேளையில், நாட்டின் பெரும்பாலான அன்றாட கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளை முதுகில் கட்டிக் கொண்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக காவல்துறையினர் இரக்கமின்றி அவர்களை அடித்ததால் அழுது கொண்டிருக்கும் சிறு குழந்தைகளை அவர்கள் இழுத்துக் கொண்டு சென்றனர்.

மும்பையின் தாராவியில்…

மும்பையில், தடியடி நடத்தும் காவல்துறையினரின் பரிசோதனையிலிருந்து தப்பி தங்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்று எண்ணிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கண்டெய்னர் லாரிகளில் தங்களை நெரித்து அடைத்துக் கொண்டு கிளம்பினர்.

அந்த லாரிகளில் இருந்து வியர்வை, வெற்று உடல்களுடன் வெளியேறிய அந்த இளைஞர்களின் இதயத்தை நொறுக்குகின்ற படங்கள், நாட்டின் தொலைக்காட்சி சேனல்களில் தலைப்புச் செய்திகளாக மாறின.

சமூக விலகலைக் கடைபிடிக்கிறீர்களா என்று, ஒரு சதுர மைலுக்கும் குறைவான பரப்பளவில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்ற ஆசியாவின் மிகப்பெரிய சேரியான தாராவியில் உள்ள தொழிலாளர்களிடம் நான் கேட்டபோது அவர்கள் சிரித்தனர்.

India's Lockdown Helps Its Rich but Ignores Its Poor

சமீபத்தில் டெல்லியில் இருந்து தத்தம் ஊருக்கு செல்லும் தொழிலார்கள்

மோடியின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், மூச்சு விடக்கூட இடம் இல்லாமல், எட்டு பேரால் நிறைந்திருந்த குடிசைக்கு வெளியே நின்ற நான் அங்கிருந்தவர்களிடமிருந்து சற்றே தள்ளி நிற்க முயற்சித்து, சமூக விலகலைப் பற்றி அவர்களிடம் பேசுவதை ஆபாசமாக உணர்ந்தேன்.

மும்பையில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளியான கன்ஷியாம் லால், தன்னுடைய அன்றாட ஊதியமான 200 ரூபாயைக் கொண்டு எட்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு உணவளிப்பதாக கூறினார்.

உணவு குறித்தே கவலைகள் இருப்பதால், தன்னால் வைரஸைப் பற்றி கவலைப்பட முடியவில்லை என்று அவர் கூறினார். அரசு மருத்துவமனையில் டயாலிசிஸில் இருக்கும் தனது மனைவி ஆஷாவைப் பற்றி அவர் நிறைய கவலைப்பட்டார். இனிமேல் அந்த மருத்துவமனை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக ஆகிவிடும். ’உங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று எவ்வளவு எளிதாக பிரதமரால் சொல்ல முடிகிறது’ என்று அவர் என்னிடம் கேட்டார். மேலும் ’நான் ஒரு வாரம் வெளியே செல்லவில்லை என்றால், என் குழந்தைகளும், மனைவியும் இறந்து போவார்கள்’ என்றார்.

மருத்துவர்களின் கதி

கன்ஷியாம் லாலின் அச்சங்கள் மிகையானவை அல்ல. 2 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 400 வென்டிலேட்டர்கள், தீவிர சிகிச்சைக்காக ஆயிரம் படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன

. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானோர் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற மும்பையின் கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், தங்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் தூர விலக்கி வைப்பதாக என்னிடம் சொன்னார்கள்

. ’இங்கே நாங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களைப் போல நாங்கள் நடத்தப்படுகையில், குளியலறையில் உடைந்து அழுது கொண்டிருக்கிறோம்’ என்று பெயர் சொல்ல விரும்பாத இளம் மருத்துவர் ஒருவர் கூறினார்

ஏழைகளுக்கு கிடைக்காத சலுகை ‘சமூக விலகல்’

மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை. பணக்கார இந்தியர்கள் தங்கள் பால்கனிகளில் நின்று கொண்டு கைதட்டினார்கள். பாத்திரங்களைத் தட்டினார்கள். ’மோடி, மோடி’ என்று கூச்சலிட்டார்கள். அது தேசியவாதம் குறித்த தவறான கொண்டாட்டமாக இருந்தது. நாட்டில் இருக்கின்ற அடிப்படையான பிளவை அது எடுத்துக் காட்டுவதாக இருந்தது. ஒருபுறம், கை சுத்திகரிப்பு திரவம், மாம்பழக் கூழ் மற்றும் அரைக்கப்பட்ட காபி ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும் உயர் நடுத்தர, உயரடுக்கு வர்க்கத்தினர் தேசபக்தி செல்ஃபிக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Amid the Coranavirus Pandemic, Social Distancing Is a Privilege ...

ஆனால் மறுபுறத்தில் மிகப் பெரிய அளவிலான அடித்தட்டு மக்களுக்கு, தங்களுடைய ஏழ்மையுடன் வறுமையை எதிர்த்துப் போராடுகின்றவர்களுக்கு சோப்பு, தண்ணீர் அல்லது கழிப்பறை வசதிகள் எதுவும் கிடைப்பதில்லை. அவர்கள் சேரி முழுவதும் நிரம்பி கொத்தாக வாழ்கிறார்கள். இவர்களே வைரஸால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை, சமூக விலகல் என்பது, தங்களுக்கு கிடைக்காத, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கின்ற சலுகையாகவே இருக்கிறது.

வைரஸ் வந்தபோது இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது?

கடந்த மாதத்தில் அண்டை நாடான சீனா உட்பட உலகின் பெரும்பகுதிகளுக்கு மிகவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கையை எழுப்பிக் கொண்டிருந்தபோது, இந்திய தலைநகரில் ரத்தக்களரியை ஏற்படுத்திய படுகொலைகள் உலகளாவிய தலைப்புச் செய்திகளை உருவாக்கி இருந்தன. அந்த கலவரத்தில் 54 பேர் கொல்லப்பட்டனர்

. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மோடியின் அமைச்சரவையில் உள்ள உயர்மட்ட அமைச்சர்களின் வெறுப்பு நிறைந்த பேச்சுகளாலேயே அந்த படுகொலைகள் நிகழ்ந்திருந்தன. தில்லி மாநகரத்தில் இருந்த காவல்துறையினர் வெறுமனே அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். முகமூடிகளையும், கையுறைகளையும் உலகம் சேமித்துக் கொண்டிருந்த போது, தனது சொந்த அரசாங்கத்தாலேயே தூண்டி விடப்பட்ட வகுப்புவாத நெருப்பை அணைப்பதில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

புதுதில்லியில் நடந்த வன்முறையால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், உறவினர்களுடன் மருத்துவமனைகளிலும், தங்களுடைய வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டவர்களுடன் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண முகாம்களிலும் வசித்து வந்தன. கோவிட்-19இன் அச்சுறுத்தலை முன்னிட்டு நாடு திடீரென விழித்துக் கொண்ட போது, அந்த முகாம்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போனது.

News: Delhi Riots toll rises to 38 as bodies are found in drains ...

டெல்லி கலவரம்

கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான வேலையின்மையாலும், மக்களைப் பிளவுபடுத்துகின்ற தேசியவாதம் தீவிரமடைவதாலும் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவிற்கு, இப்போது தன்னுடைய பொருளாதாரத்தின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்ற, குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் வசதிகள் இல்லாத முறைசாராத் தொழிலாளர்களுக்கு பெரும் அடியைத் தருகின்ற இந்த தொற்றுநோயைக் கையாள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஊரடங்கு குறித்து மத்திய அரசின் முடிவு தாமதமானது என்றாலும், சேதத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கின்றன.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை உள்ளடக்கிய அனைத்து வகையான பொதுப் போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதால், பயணம் செய்வது, அனைவரும் ஒன்று கூடுவது ஆகியவை அதிக அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கு உதவுகின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்த சில வாரங்கள் இந்திய மக்களுக்கு மிகவும் நெருக்கடியான காலமாக இருக்கும் – குறிப்பாக இந்திய ஏழை மக்களுக்கு.

நன்றி: பாரின் பாலிசி.காம் இணைய ஏடு

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு

One thought on “வைரஸா உணவா – ராணா அயூப்”
  1. மிகவும் வருத்தமாக இருக்கிறது. தடையுத்தரவான 21 நாளைக் கடத்துவது சிறு வியாபாரம் செய்து வந்த மக்களுக்கும் புலம் பெயர்ந்த மக்களுக்கும் தான் அதிக சவால்களையும் துன்பத்தையும் தருகின்றன . இவர்களுக்கு சரியான வழியை அரசு ஏற்படுத்த வேண்டும் .- உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *