பொதுவாக முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம், அந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக தொடர்ந்து தனது  முயற்சிகளை மேற்கொள்ளும். புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பது இத்தகைய முயற்சிகளில் ஒன்றாகும். இவ்வாறு தோன்றும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தொழில்நுட்பங்களும் தொழிற்புரட்சிகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.ஒவ்வொரு தொழிற்புரட்சியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மையமாக வைத்து தொழில்வளர்ச்சியை ஊக்கப்படுத்தி வருகின்றது.

முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் தமது சுரண்டலைத் தொடர்வதற்கும் இத்தொழிற்புரட்சிகள் உதவிகரமாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு தொழிற்புரட்சியும் அதற்கே உரித்தான விளைவுகளையும் கொண்டிருக்கின்றது. இத்தொழிற்புரட்சிகள் ஒரு வகையில் முதலாளித்துவத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன. அடுத்தடுத்து தோன்றிய தொழிற்புரட்சி ஒவ்வொன்றிலும் அதனளவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான வீச்சும் விரிவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

தொழிற்புரட்சி என்பது விவசாயம் மற்றும் கைவினைத் தொழில் சார்ந்த உழைப்பாளிகளை மையப்படுத்திய நிலவுடைமைப் பொருளாதார அமைப்பிலிருந்து இயந்திர உற்பத்தி, தொழிற்சாலைகள், மூலதனம், பரிவர்த்தனைப் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திமுறைக்கு மாறியதைக் குறிப்பதாகும்.

தொழிற்புரட்சிகளில் முதலாவது தொழிற்புரட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சமூகத்தின் உற்பத்திமுறையையே முற்றிலும் மாற்றியமைத்தப் புரட்சியாகும். அடுத்தடுத்து வந்த தொழிற்புரட்சிகள் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் சமூகத்தின் உற்பத்திமுறையை முற்றிலும் மாற்றியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் தொழிற்புரட்சி என்பது 18வது நூற்றாண்டில் ஏற்பட்டது. குறிப்பாக, 1760 களில் பிரிட்டனில் இந்தத் தொழிற்புரட்சி ஆரம்பித்தது. ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் விளைவாகஅறிவியல் துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் முதலாம் தொழிற்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்தன. இதன் மூலம் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பிற்போக்கு நிலையிலிருந்த மத்தியக் காலம் முடிவுக்கு வந்தது. எனவேதான் முதலாம் தொழிற்புரட்சி ஒட்டு மொத்த சமூகத்தைப் புரட்டிப் போட்ட புரட்சி என்று கூறப்படுகின்றது.

முற்றிலும் மனித ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டிருந்த கைவினைத் தொழில் சார்ந்த விவசாயஉற்பத்திமுறையை மாற்றி,நீராவி இயந்திரம்மூலம் செயல்படக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கியது. மரக்கரியைப் பயன்படுத்தி வந்த நிலைமாறி நிலக்கரியின் பயன்பாடு அதிகரித்தது. இயந்திரக் கருவிகளில் இருந்த மரத்தாலான பாகங்கள் நீக்கப்பட்டு முற்றிலும் உலோகத்தாலான கருவிகளாக மாற்றியமைக்கப்பட்டன.  நீராவிஆற்றல் மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டதால், ரயில் போக்குவரத்தைத் துரிதமாக்கியது

கைவினைப் பட்டறைகள் இருந்த இடத்தை பெரிய ஆலைகள் இடம் பிடித்தன. இதன்மூலம் பல மணி நேரம் பலர் செய்யும் வேலையைக் குறைந்த நேரத்தில் இயந்திரத்தின் மூலம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் உருவாக்கும் துணிகளை ஒரு நூற்பாலையில் உற்பத்தியானது. உலோகவியல், வேதியியல், இயற்பியல், இயந்திரவியல் போன்ற அறிவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றியதால், ஆலைத்தொழில் உற்பத்திக்குத் தேவையான புதிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறாக, தொழிற்துறையில் மலைக்கத்தக்க வளர்ச்சியைத் ஊக்குவித்தது.

19வது நூற்றாண்டில் இரண்டாவது தொழிற்புரட்சி மின்சக்தியால் ஒளியூட்டப்பட்டது. அதாவது நீராவி ஆற்றலுக்கு  பதிலாக அனைத்து தொழிற்சாலைகளையும் மின் சக்தியை பயன்படுத்தி இயக்கியதுதான் இரண்டாம் தொழிற்புரட்சியின் முதன்மையான அம்சமாக விளங்கியது. இதன் மூலம் தொழில்துறையின் உற்பத்தி ஆற்றலை வெகுவாக வளர்த்தது.

குறிப்பாக, 1870-ல் இருந்து 1915 வரையிலான காலகட்டத்தில் தொழிற்துறையில் ஏற்பட்ட நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும், மிகப் பெருமளவில் எஃகு உற்பத்தித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் இரண்டாம் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. முதன் முதலில் 1860களில் எஃகு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக, பெசிமர் செயல்முறை என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறைச் செயல்முறை ஆகும்.

மேலும் உற்பத்திச் செயல்முறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாயின. உற்பத்திக்குப் பயன்படும் பொருட்களைக் கொண்டுச்செல்ல இடைவிடாமல் நகரக்கூடிய கன்வேயர் பெல்ட் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் ஆலைகளின் பொருத்தும் வரிசை இயந்திரம் உருவானது. இந்த உற்பத்தி நிகழ்முறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் உச்சமான தொகுப்புவரிசை உற்பத்தி நிகழ்முறை என்பது ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் ஹென்றி போர்டு உருவாக்கிய முறை ஆகும். இதனால் உற்பத்தித் திறன் பெருகி பெருமளவிலான உற்பத்திச் சாத்தியமானது. பல தரப்பட்ட பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் உற்பத்திச் செய்யப்பட்டன. இது இரண்டாம் தொழிற்புரட்சியை மிகவேகமாக உந்தித்தள்ளியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில் தொலைபேசி வலைப்பின்னல் பரவலாகத் துவங்கியது. இந்தப் போக்கின் விளைவாக உலகளாவிய அளவில் சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை முதலாளித்துவம் பெற்றது.

20வது நூற்றாண்டில் தோன்றியது மூன்றாவது தொழிற்புரட்சி ஆகும். அதாவது 1960 மற்றும் 1970-களில் தொடங்கி, பின்னர் 1980-களில் பரவலான மின்னணுவியல் தொழில்நுட்பம் மூன்றாம் தொழிற்புரட்சிக்கு அடித்தளம் இட்டது. உற்பத்திச் செய்யக்கூடிய இயந்திரம் என்ன செய்யவேண்டும் என்பதை கணனி மொழியில் கட்டளை இட்டால், அதை உடனடியாகச் செய்து முடித்துவிடும்.

Modes of Work and Digital Labour - PoliticsEastAsia.com

கணிப்பொறித் துறையின் வளர்ச்சியால் இயந்திரங்களைக் கணினிமயமாக்கியது. தொழிற்துறை அதிவேகமாக கணினிமயமாக்கப் பட்டது. இது மூன்றாவது தொழிற்புரட்சியின் காலகட்டம் ஆகும். இதன் தொடர்ச்சியாக ஆலை உற்பத்தி மற்றும் சந்தை ஆகியவற்றைக் கையாள்வதில் இணையத் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றியது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்ப யுகம்தான் நான்காம் தொழிற்புரட்சியின் காலம் என்று அழைக்கப்படுகிறது.   மின்னிலக்க தொழில்நுட்பம்தான் நான்காம் தொழிற்புரட்சிக்கு உந்துச்சக்தியாக அமைந்ததுள்ளது. இது மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கிச் சமூகத்தை நகர்த்திச் செல்கிறது. கணினிப் பயன்பாடுகள் அதிகரித்ததன் விளைவாக மின்தரவுகள் பெருமளவில் குவிந்தன. பெரிய அளவில் உற்பத்தியான மின்தரவுகளைத் தொகுத்துப் பகுப்பாய்வு செய்யும்தொழில்நுட்பம்தான் நான்காம் தொழிற்புரட்சிக் கட்டத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையாக கருதப்படுகிறது. இதன் பங்கு அளப்பரியது.

இத்துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வு ஆற்றியுள்ள பங்கும் குறிப்பிடத் தக்கதாகும். இத்தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு மின்தரவுகளின் அளவற்ற பெருக்கம்தான் அடிப்படைக் காரணியாக விளங்குகிறது. இதை அடிப்படியாகக் கொண்டு மீப்பெரு மின்தரவுகளைப் பகுப்பாய்வு, பொருட்களின் இணையம், செயற்கை நுண்ணறிவு, தானியங்கல், முப்பரிமாண அச்சு போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உண்மையில், மூன்றாம் தொழிற்புரட்சியின் நீட்சியாகத்தான் நான்காம் தொழிற்புரட்சி  தோன்றியது. ஆனால் அதன் வளர்ச்சிப் போக்கின் எல்லை மிகப் பெரியது.

 மின்னிலக்கத் தொழில்நுட்பம்  (டிஜிட்டல் தொழில்நுட்பம்)

Digital Labour in Oil and Gas - Automating Processes - Cenozon Inc.

முதல் மூன்று தொழிற்புரட்சிகளில் தோன்றிய தொழில்நுட்பங்கள் தொழிற்துறையின் உற்பத்தி நடவடிக்கைக்கு மட்டும் ஊக்கமளித்து வந்தன. ஆனால் நான்காம் தொழிற்புரட்சியின் காலத்தில் தோன்றியுள்ள மின்னிலக்க தொழில்நுட்பங்கள், உற்பத்தித் துறையில் மட்டுமின்றி, விநியோகம், பங்கீடு, நுகர்வு ஆகிய உற்பத்திச் சார்ந்த துறைகளிலும் செயலாற்றுகின்றன. மேலும் அவை உற்பத்தித்துறைக்கு அப்பாலும், இதர பல்வேறு துறைகளிலும் ஊருடுவிப் பலவிதமான பரிணாமங்களை மேற்கொண்டிருக்கின்றன. அதாவது, அரசியல் பொருளாதார தளங்களிலும் சமூக, கலாச்சாரத் தளங்களிலும்  மின்னிலக்க தொழில்நுட்பங்கள்  பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இந்த வகையில் மின்னிலக்க தொழில்நுட்பங்கள் தனித்துவம் பெறுகின்றன. மின்னிலக்க தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் பிரமாண்டமாக வளர்ச்சிப் பெற்றதை அடுத்து அது அரசியல் பொருளாதார துறையில் ஒரு வகையில் தீர்மானகரமானத் தன்மையைப் பெற்றிருக்கின்றது.

பொருள் உற்பத்தியும் மெய்நிகர் உற்பத்தியும்

தொழிற்புரட்சிகளின் ஊடாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பங்கள் முதலாளித்துவ உற்பத்திமுறையைப் பெரிதும் சார்ந்து இயங்கி வந்திருக்கின்றன. இவை பொருள்தன்மை வாய்ந்த உற்பத்தியை மேற்கொண்டிருக்கின்றன. மேலும் பொருள்உற்பத்தியில் உடலுழைப்பு முதன்மையாக விளங்குகின்றது.  ஆனால் மின்னிலக்க தொழில்நுட்பங்கள் பொருள் தன்மையில்லாத உற்பத்தியை மேற்கொள்கின்றன. இதற்கான களம் எல்லையற்ற இணையத்தளம் ஆகும். இந்தத் தளத்தில் நிகழ்த்தப்படும் உற்பத்தி மெய்நிகர் உற்பத்தி எனப்படுகின்றது. இங்கு உருவாகும் தகவல்கள்தான் சரக்குகள் ஆகின்றன. இத்தகைய  தகவல் உற்பத்திக்கு மூளைஉழைப்பே முதன்மையானதாகும். இணையத் தளத்தில் செயல்படும் அனைத்து நடவடிக்கைகளும் மின்தரவுகளை உருவாக்குகின்றன. இத்தகைய மின்தரவுகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தும் அனைவராலும் உற்பத்திச் செய்யப்படுகின்றன.

இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்ப உற்பத்திச்சக்திகள் பெரிதும் துணைபுரிகின்றன. நவீன முதலாளித்துவச் சமூகத்தில் வளர்ந்துள்ள தகவல் உற்பத்திச்சக்திகள் தனித்து இயங்குவதில்லை.  தகவல் உற்பத்தியை நிலைநிறுத்த வேண்டுமானால்  விவசாய உற்பத்தி, சுரங்க மற்றும் தொழிற்சாலை உற்பத்தி போன்றவை பொருள்சார்ந்த உற்பத்தி அவசியமான முன்நிபந்தனையாக விளங்குகின்றது. ஆகவே தகவல் தொழில்நுட்ப உற்பத்தியானது பொருள்சார்ந்த உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இவை பொருள்உற்பத்திச் சக்திகளை அடிப்படையாகக் கொண்டு  தம்மை உயர்தளப்படுத்திக் கொள்ளும் தன்மையுடையது.

மின்னிலக்க  உழைப்பு நேரமும் வாழ்க்கை நேரமும்

Humanising digital labour: The toll of content moderation on ...

மின்னிலக்க யுகத்தில் என்ன வகையான உழைப்புச் செலுத்தப்படுகிறது, உபரி எவ்வாறு பெறப்படுகிறது, மூலதனத் திரட்சி எவ்வாறு நடைபெறுகிறது, உழைப்புப் பிரிவினை எவ்வாறு நிகழ்கிறது போன்ற பல்வேறு விசயங்களை மார்க்சிய கருதுகோள்களின் வழியாக பார்க்க இருக்கிறோம். மின்னிலக்க ஊடகம், உற்பத்தி, உழைப்பு, மூலதன திரட்சி போன்ற விசயங்கள் குறித்து ஆய்வு செய்து மார்க்சிய அடிப்படையில் விவரித்தவர்களுள் கிறிஸ்டியன் ஃபச்ஸ் முதன்மையானவர் ஆவார்.

முதலில் வேலை குறித்தும், உழைப்பு குறித்தும், இவை  இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்தும் பார்ப்போம். வேலை, உழைப்பு, உழைப்புச்சக்தி, உழைப்புச் செயல்முறை, உழைப்புக்கோட்பாடு  போன்ற பல்வேறு வகையினங்களை உருவாக்கி ஆய்வுச் செய்தவர் மார்க்ஸ்.

வேலை என்பது சுதந்திரமான மனிதச் செயல்பாடாகும். எவருடைய நிர்பந்தமும் கட்டாயமும் இல்லாமல் முழுமையான விருப்பார்வத்துடன் ஆற்றும் நடவடிக்கையாகும். வேலையுடன் ஒன்றி போய்விடுவதால், வேலையில் ஈடுபடுபவர் அவரது நடவடிக்கையிலிருந்து அந்நியப்பட்டு போய்விடுவதில்லை. ஆனால் உழைப்பு என்பது சுதந்தரமான செயல்பாடன்று, மாறாக அது ஒருவகையில் நிர்பந்தத்தின் காரணமாகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ நடைபெறுகின்றது. எனவே உழைப்பில் ஈடுபடுபவர் உழைப்பிலிருந்து அந்நியப்பட்டுப் போகிறார்.

மேலும் உழைப்புப் பொருட்களிலிருந்தும் உற்பத்திப் பொருட்களிலிருந்தும் உழைப்பிலிருந்தும் அந்நியப்பட்டுப் போகிறார். இதற்கு காரணம் முதலாளித்துவத்தின் உபரிச்சுரண்டல் ஆகும். ஆனால் வேலை, உழைப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் சில பொதுவான தன்மைகள் உண்டு. வேலையில் ஈடுபடுபவரோ அல்லது உழைப்பில் ஈடுபடுபவரோ  எந்த உற்பத்திச் சாதனத்தையோ அல்லது கருவியையோ உடைமையாக கொண்டிருக்கமாட்டார்.

‘வேலை’ என்பது மானுடவியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்று மார்க்ஸ் விளக்கினார்.  அதாவது வேலை என்பது எல்லா சமூகங்களிலும் காணப்படும் உணர்வுபூர்வமான உற்பத்தி நடவடிக்கையாகும். அது இயற்கையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தேவையைப் பூர்த்திச் செய்யும் விதமாக, பயன்மதிப்பை உருவாக்கும் நடவடிக்கையாகும்.

வேறு வகையில் கூறினால், உழைப்புப் பண்புரீதியாக தீர்மானிக்கப்படும்போது அது வேலை எனப்படுகின்றது. ஆனால் உழைப்பு அளவுரீதியாக அளக்கப்படும்போது வேலை என்ற தன்மையை இழந்து மதிப்பை உருவாக்குகிறது. இது வர்க்க சமூகத்தில் வரலாற்று ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பாக மாறுகின்றது.

அடிப்படையில் மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை “உழைப்பு” என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை ‘உழைக்கும் திறன்’ என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, உழைப்பு என்பது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.  உழைப்பின் மதிப்பை ஒரு பொருளை உற்பத்திச் செய்ய சமூக ரீதியில் செலவிடப்படும் வேறுபட்ட நேரங்களின் சராசரி நேரத்தைக் கொண்டு அளவிடப்படுகின்றது.  அதாவது சமூக ரீதியில் அவசியமான உழைப்பின் நேரம் எனப்படுகின்றது.

மின்னிலக்க உழைப்பு

US elections unlikely to impact Indian IT: JM Financial - The ...

மின்னிலக்க உழைப்பு என்பது இணையத்தளத்தில் நடைபெறும் மனித நடவடிக்கைகளாகும். இணையத்தளங்களில் மனித நடவடிக்கையானது தகவல்தொடர்பு போன்ற மின்னிலக்கக் கூறுகளோடு அதிக அளவில் ஒருங்கிணைந்துள்ளது. கூலி கொடுக்கப்படாத பயனாளிகளின் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் இணையத்தள கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதனப் பெருக்கம் உருவாகின்றது.   இவர்கள்தான் தொழில்நுட்பங்களுக்கான உள்ளடக்கத்தினை உருவாக்கி, வலைப்பூக்கள்,  சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மதிப்பை உருவாக்குகின்றனர். இதுதான் கார்ப்பரேட் முதலாளிக்கு லாபம்  கொழிக்கின்றது.

இங்கு தனிப்பட்ட மின்தரவுகள் மீப்பெரு மின்தரவுத் தொகுப்பாக மாறுகின்ற நிகழ்முறையில், முதலில் ஆதார மின்தரவுத் திரட்டலுக்கான நடைவடிக்கையும், இரண்டாவதாக திரட்டப்பட்ட மின்தரவுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையும் நிகழ்கின்றன. இவற்றில் முதலாவது நடவடிக்கையில் உழைப்பில் ஈடுபடுபவருக்குக் கூலிக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டாவதாக நடவடிக்கையில் அமைப்ப்பாக்கப்பட்ட சம்பளம் பெறும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுத்தப்படுகின்றனர்.

இதன்மூலம். இவ்விரண்டில் மின்தரவுகளை ஒருங்கிணைக்கும் வழிமுறையிலான உழைப்புதான் முக்கியமானது. ஆக மின்னிலக்க உற்பத்தியானது ஓர் இரட்டைத் தன்மையைக்  கொண்டிருக்கின்றது. இது ஒரு புதிய வகையான சுரண்டல் முறையை உருவாக்கியுள்ளது.  கூலிக்கும்  மூலதன பெருக்கத்திற்கும் இதுவரை இருந்துவந்த உறவுக்கு அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

பருண்மை உழைப்பும் அருவமான உழைப்பும்

அடுத்ததாக, பருண்மையான உழைப்பைப் பற்றியும் அருவமான உழைப்பைப் பற்றியும் பார்ப்போம். பொருள் என்னவாக உருவம் கொள்கிறதோ அதற்காக உழைப்பது பருண்மையான உழைப்பாகும். துணி நெய்யப்பட்டதில் காணப்படும் நெசவும், தானியம் உற்பத்தி செய்யப்பட்டதில் காணப்படும் உழவும், பருண்மையான உழைப்பாகும். இவை இரண்டும் பயன்மதிப்பை தரக்கூடியவை.  இந்தப் பருண்மைத் தன்மை வாய்ந்த உழைப்பே சரக்கின் பயன்மதிப்பைப் படைக்கிறது. பொருளை உற்பத்திச் செய்யும் போது அதில் செலவிடப்படுகிற சக்தியைக் குறிக்கிறது. உழைப்பின் பருண்மையான தன்மையிலிருந்து பொருளைப் பிரித்தெடுத்து உழைப்பை மட்டும் தனியே பரிசீலனைச் செய்திடும்போது உழைப்பு அருவமானத் தன்மையைப் பெறுகிறது. இந்த அருவமான உழைப்பே சரக்கின் பரிவர்த்தனை மதிப்பைப் படைக்கிறது.

மார்க்ஸைப் பொருத்தவரை பருண்மையான உழைப்பு என்பது பண்புரீதியாக வரையறுக்கப்படுகின்றது. அது பயன்மதிப்பை உருவாக்குகிறது. ஆனால் அருவமான உழைப்பு என்பது உழைப்புச் சக்தியின் வெளிப்பாடு. இது அளவுரீதியாக மதிப்பிடப்படுகிறது. இதுதான் மதிப்பை உருவாக்குகிறது.

மார்க்சு கூறியபடி, பருண்மையான உழைப்பு முதன்மையாக இருக்கும்போது  உழைப்பு நடவடிக்கையானது  மனித தேவைகளைப் பூர்த்திச் செய்யும் தன்மையுடையதாக இருக்கும். இந்த உழைப்பை அவசிய உழைப்பு என்று மார்க்ஸ் வரையறுத்தார். இதற்கு மாறாக, அருவமான உழைப்பு முதன்மையாக இருக்கும்பட்சத்தில், உழைப்பு நடவடிக்கையானது மதிப்பை உருவாக்குகிறது. இங்கு  நிகழ்வுப் போக்கில் அவசியமான உழைப்பு, உபரி உழைப்பாக மாறுகின்றது.  மின்னில்லத் தொழிற்துறையில் அருவமான உழைப்பு என்பது மின்தரவுகளை தொகுப்பதும் ஒருங்கிணைப்பதுமாகும். இதன் விளைவாக, பருண்மையான உழைப்புக்கும் அருவமான உழைப்பிற்கும் இடையில் ஒரு புதிய வடிவிலான உறவை ஏற்படுத்தியுள்ளது. மின்னியல் உழைப்பு பொதுவாக பருண்மையான உழைப்பாக துவங்கி, அருவமான உழைப்பாக மாறுகின்றது. இதுதான் இணையத்தள முதலாளித்துவத்தின் தனிச் சிறப்பான தன்மையாகும்.

மின்னிலக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை

COVID-19 impact: Internet providers in Kerala to increase speed by ...

பொருள் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும்வரை, உழைப்பை உற்பத்தித் திறனை அளவீடு செய்ய முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருட்கள் உற்பத்தி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை பொருட்கள் உற்பத்தி செய்யமுடியும் என்பதையும் கூறமுடியும். ஆனால் இணையத்தள நடவடிக்கைகளில் மின்தரவுகள் மதிப்புகளாக மாறுகின்றன.   உழைப்பு என்று கருதவியலாத இருப்பிட விவரங்கள்,  உணர்ச்சிகள்,  வலைத்தளங்களைப் பார்வையிடுவது போன்றவைகூட மதிப்புகளாக மாறுகின்றன.

தனிநபர்கள் தொடர்பான மின்தரவுகள்தான் மின்னியல் தொழில்நுட்பத்தின் கச்சாப் பொருட்களாகும்.  இந்தக் கச்சாப்பொருட்கள் எந்தவிதமான கூலியும் கொடுக்காமல் ஏராளமாக கிடைக்கின்றன.  தனிப்பட்ட நபர்களைப் பற்றிய தகவல்கள் பரிவர்த்தனை மதிப்பாக மாறுகின்றன. இதிலிருந்து மூலதனப் பெருக்கம் உருவாகின்றது. இதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்,

இணையப் பொருளாதாரம் என்பது தனிப்பட்ட மின்தரவுகளைத் திரட்டி மீப்பெரு தரவாக ஒருங்கிணைப்பதை அடிப்படையாகக் கொண்டது. மின்தரவு தொகுப்புக்கான வழிமுறையில் ஏற்பட்ட புரட்சியும், மேகக் கணிமை (க்ளைவுட் கம்யூடிங்) இரண்டும் சேர்ந்த்துதான் இணையப் பொருளாதாரம் ஆகும். மீப்பெரு மின்தரவு தொழிற்துறையில் மதிப்பின் அடிப்படையிலான உற்பத்தி நிகழ்முறையை உருவாக்குகிறது.

மின்னிலக்க உழைப்பு நேரமும் வாழ்க்கை நேரமும்

21ஆம் நூற்றாண்டின் மின்னிலக்க முதலாளித்துவ தகவல் தொழில்நுட்பத் துறையில் உழைப்புக் குறித்த முறையான ஒரு திறனாய்வுக் கொள்கையை கிறிஸ்டியன் ஃபச்ஸ் உருவாகியுள்ளார். மின்னிலக்க உழைப்பு என்றால் என்ன என்பது குறித்தும், கணினி, இணையம், சமூக ஊடகம் ஆகியவற்றில் உழைப்பு என்பது எவ்வாறு புரிந்துக் கொள்ளப்படுகின்றது என்பதையும் உழைப்பின் நிலைமைகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்கிறார். மின்னிலக்க உழைப்பை மனித மூளை, மின்னிலக்க ஊடகம் ஆகியவற்றின் உதவியுடன் கூடிய மனித நடவடிக்கை என்று இவர் வறையறுக்கிறார்.

அவரைப் பொருத்தவரை, உழைப்பு என்பது குறிப்பிட்ட இடத்திலும் குறிப்பிட்ட நேரத்திலும் நடைபெறுவதாகும். அதாவது, காலமும் இடமும் உழைப்பின் முக்கியமான பரிமாணங்களாகும். மின்னிலக்க உற்பத்தியில் காலமும் இடமும் முக்கியத்துவம் பெறுகின்றன.  அவுட் சோர்சிங், ஆப்சோரிங் போன்ற சொற்கள் வெளியிடத்தில் அல்லது வெளிநாட்டுகளிலிருந்து உழைப்பை பெறுதலைக் குறிக்கின்றன.

உலகமயம் என்ற சொல் கூட உலகத்தின் எந்த இடத்தையும் எந்த நேரத்தையும் குறிக்கும். ஆக மின்னிலக்க உழைப்பை காலத்திலும் இடத்திலும் வைத்து புரிந்துக் கொள்ளப்படவேண்டும். அதாவது தற்போது பொதுவாக சரக்கு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வரம்பிற்குள் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தின் எல்லைக்குள் வைத்துப் பார்க்கமுடியாது.  குறிப்பாக உலகமயமாதல் சூழலில், ஒரு சரக்கு அது தொடர்புடைய பல இடங்களோடும் பல காலங்களோடும் தொடர்புடையன.

Inside our Audiovisual Art Experience IM.PRINT

உழைப்பும், உழைப்புச்சக்தியும் முதலாளித்துவ சுரண்டலுக்கான அடிப்படைகளாகும். உழைப்பின் ஒவ்வொரு கணமும் லாபத்தை ஈட்டுக் கொண்டே இருக்கும் தன்மை உடையது. மார்க்சியக் கொள்கையின்படி மதிப்பு என்பது ஒரு பொருளை உருவாக்க செலுத்தப்படும் உழைப்பு நேரமாகும். தனிப்பட்ட உழைப்பு நேரத்தை அளவிட முடியாது. எனவே ஒரு பொருளை உருவாக்க எவ்வளவு நேரம் உழைப்பு செலுத்தப்படுகிறது என்ற சராசரி உழைப்பு நேரத்தைக் கொண்டு அளவிடுகின்றோம்.

அதே போல ஒரு சரக்குக்கான சராசரி உழைப்பின் மதிப்பு என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு குழுமத்தில் உள்ள நிறுவங்களில் அல்லது ஒரு நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் அல்லது சர்வதேச அளவிலான தொழிற்சாலைகளில் கிடைக்கும் சராசரியாகும். சரக்கின் மதிப்பை குறைக்கும் போது லாபம் கூடுகின்றது. சரக்கின் மதிப்பைக் குறைப்பதற்காக உற்பத்தியைக் கூட்டவேண்டும். அதாவது உழைப்பின் விலையை கூட்டாமல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான சரக்குகளை உற்பத்திச் செய்யவேண்டும். இதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டமுடியும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை உருவாகும் தொழிற்சாலைகளில் வேலை நேரம் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை கீழ்காணும் சான்றுகளுடன் காணலாம். அதாவது ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுரங்கங்களில் கனிமத் தாதுக்களை வெட்டியெடுக்கத் துப்பாக்கிமுனையில் அடிமைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  அவர்கள் குறைத்த கூலிக்கு பலமணிநேரம் உழைக்க வேண்டும். அல்லது கூலியே இல்லாமல் கூடுதல் நேரம் உழைக்கவேண்டும். அவர்கள் ஈடுபடும் பெரும்பாலான உழைப்பு நேரத்திற்கு கூலிக் கொடுப்பதில்லை.

அதேபோல பாக்ஸ்கான் தொழிற்சலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பு நேரம் அதிகரிக்கப்படுகிறது. சிலமணி நேரம் கூலியில்லாமல் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கின்றது. இதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்புக்கான விலை குறைந்து ஆப்பிள் போனற கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபம் அதிகரிக்கின்றது.  சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் பணிபுரிபவர்களில் பெரும்பாலும் குடிபெயர்ந்துள்ள பெண்கள் ஆவர். இவர்களின் வேலை நிலைமைப் பற்றியும் உழைப்புச் சுரண்டல் பற்றி சொல்லவேண்டியதில்லை.

இந்திய மென்பொருள் பொறியாளர்களும் கூகிளில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்களும் அதிக நேரம் உழைப்பைச் செலுத்தவேண்டும். பொதுவாக,  மென்பொருள் உருவாக்குபவர்கள் பெரும்பாலும் திட்ட அடிப்படையில் பணிபுரிவதால் குறிப்பிட்ட குறுகிய நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.  பெரும்பாலும் இவர்கள் தமது வாழ்க்கைக்கான நேரம் முழுவதுமே உழைக்கவேண்டும் என்பது மின்னிலக்க துறையில் விதியாக இருக்கின்றது.

மேலும் இணையத்தளத்தில் நடைபெறும் இத்தகைய உழைப்பு, வேலை நேரத்திற்கு அப்பால் இருக்கும் வாழ்க்கை நேரத்தையும் மதிப்பாக மாற்றுகின்றது. பொருளுற்பத்தியில் உழைக்கின்ற நேரம் வாழுகின்ற நேரம் என்ற வேறுபாட்டை காணலாம். ஆனால் மின்னிலக்க உற்பத்தியானது, உழைப்பு நேரத்திற்கும் வாழ்க்கை நேரத்திற்கும்  இடையிலான வேறுபாட்டை நீக்கியுள்ளது. இதுதான்  மின்னிலக்க உழைப்பின் முக்கிய பண்பாகும். இந்தக் கோட்பாடுதான் இணையத்தள அரசியல் பொருளாதாரத்தில் முக்கியமான அடிப்படையாக மாறியுள்ளது.

மின்னிலக்க உற்பத்தியும் சர்வதேச உழைப்புப் பிரிவினையும்

U.S. Dept. of Labor Awards $1.5M to Cybersecurity Apprenticeships ...

வரலாற்றுரீதியாக பாலின அடிப்படையில் உழைப்புப் பிரிவினைதான் முதன்முதலில் உருவான உழைப்புப் பிரிவினையாகும். அடுத்ததாக, மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையில் தோன்றியது இரண்டாவது வேலைப்பிரிவினை ஆகும்.

முதல் சர்வதேச உழைப்புப் பிரிவினை என்பது ஐரோப்பிய குடியேற்றத்தின்  ஆரம்ப கட்டத்திலிருந்து துவங்கியது. மைய நாடுகளுக்கும், விளிம்பு  நாடுகளுக்கும் இடையில் எளிய முறையிலான பரிவர்த்தனை இருந்தது.   அப்போது இருந்த தேசங்கள் யாவும் விவசாயம், கனிம பொருட்கள், கச்சாப் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன.

இரண்டாம் சர்வதேச உழைப்புப் பிரிவினை என்பது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை நீடித்தது. இது மைய நாடுகளில் தொழிற்துறை உற்பத்தி முதன்மையாகக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் பொருளாதார உறவு என்பது சர்வதேச வணிக உறவாக மாறியிருந்தது. இந்த காலத்தில்தான் முதன்மையான கச்சாப் பொருட்கள் விளிம்பு நாடுகளிலிருந்து மைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் மைய நாடுகளிலிருந்து விளிம்பு நாடுகளுக்கு இறக்குமதிச் செய்யப்பட்டன.

மூன்றாம் சர்வதேச உழைப்புப் பிரிவினை 1960களில் தோன்றியது.  இந்த கட்டத்தில், மைய நாடுகள் விளிம்பு நாடுகள் ஆகியவற்றின் உற்பத்தியானது சர்வதேச தன்மையைக் கொண்டிருந்தது. முதன் முதலில் நேரடி அந்நிய மூலதனம் அதிகரித்தது.

தற்போதைய மின்னிலக்க தொழில்நுட்ப உற்பத்தியானது உலக அளவில் ஒரு புதிய வகையான உழைப்புப்பிரிவினையை உருவாக்கியுள்ளது. உலகம் தழுவிய இத்தகைய மின்னிலக்க உழைப்புப் பிரிவினை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ் பல்வேறு உற்பத்திச் சக்திகளையும், பலவிதமான சுரண்டல் முறைகளையும், உற்பத்தி முறைகளையும், கொண்டதாகும். இவற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

கணினிப் பொருட்கள் தயாரிக்க முதலில் தேவைப்படும் கச்சாப் பொருட்கள் காந்தலம், கோபால்ட், ஈயம் போன்ற கனிமங்களாகும். ஆப்பிரிக்க நாடுகளில் குறிப்பாக, காங்கோ சனநாயக குடியரசு, எத்தியோபியா,  மொசாம்பிக், ருவாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா, ஜிம்பாப்வே போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தகவல் தொழில்நுட்பங்களுக்கு தேவையான கனிமங்கள் பெருமளவில் உற்பத்திச் செய்கின்றன.  மிகவும் கொடூரமான அடிமைமுறையிலான உழைப்புச் சுரண்டலின் மூலம் மேற்கத்திய நாடுகள் மிகவும் குறைந்த விலையில் இயற்கைச் செல்வங்களை இங்கிருந்து கொள்ளையடித்துச் செல்கின்றன.

Governing the Future: The need for standards for digital labour platforms |  The Mowat Centre

இவ்வாறு கிடைக்கும் கனிமத் தாதுப்பொருட்களை தாய்லாந்து, மலேசியா, சீனா, இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு கொண்டுவந்து உருக்கி, சுத்திகரிப்புச் செய்து மெருகேற்றிச் செறிவூட்டப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு, தொழிற்சாலைகளில் தொழில்நுட்பக் கருவிகளுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட உதிரிப் பாகங்களை சீனாவில் உள்ள போக்ஸ்கான்  நிறுவனத்தில் இணைக்கப்பட்டு முழுமையான தகவல் தொழில்நுட்ப உற்பத்தி பொருட்கள் வடிவமைக்கப்படுகின்றன. அடுத்ததாக,   இந்தியாவிலும், சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்திலும் அதற்கான மென்பொருள் தொழில்நுட்பங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றது.

இத்தகைய தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகளை உலகத்திலுள்ள அனைவரும் பயன்படுத்துகின்றனர். இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின்தரவுகளையும் உற்பத்திச் செய்கின்றனர். இதைப் பயன்படுத்துவர் ஒரே நேரத்தில் நுகர்வோராகவும் உற்பத்தியாளராகவும் இருக்கிறார். இணையத்தை நுகர்வதன் மூலம் தனது உழைப்பைப் பயன்படுத்தி மின்தரவுகளை உற்பத்திச் செய்கிறார். ஆகையால் இந்த உழைப்பை நுகருழைப்பு என்றழைக்கப்படுகிறது. இத்தகைய  உழைப்பு இலவசமாகப் பெறப்படுகிறது.

இணையத்தளம், வலைப்பக்கங்கள், சமூக ஊடகங்கள், விக்கிபீடியா, நுண்பதிவுகள்,  இடுகைகள் பகிர்ந்துகொள்ளும் தளங்கள் போன்றவற்றில் பயனாளிகளான நுகர்வோர் தங்களது உழைப்பை இலவசமாகச் செலுத்துகின்றனர்.  இத்தகைய உழைப்பின் மூலம் மதிப்பையும் உருவாக்குகின்றனர். இதுதான் இணையத்தள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு  லாபத்தை உருவாக்குகின்றது. .

சர்வதேச மின்னிலக்க உழைப்புப் பிரிவினையின் முதற்கட்டத்தில் இயற்கையில் கிடைக்கும் கனிமத் தாதுக்களை வெட்டியெடுக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில் இந்தக் கனிமத் தாதுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. மூன்றாம் கட்டத்தில் இந்த உதிரிப்பாகங்கள் இணைக்கப்பட்டு மின்னிலக்க ஊடகத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப் படுகின்றன. நான்காம் கட்டத்தில் மின்னிலக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தகவல்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி, விநியோகம், சுற்றொட்டம், நுகர்வு ஆகியவை அனைத்தின் ஊடாகவும் மின்னிலக்க ஊடக தொழில்நுட்பங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன.

மின்னிலக்க உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். உழைப்புப் பொருட்களின்மீது மனித உழைப்புச் செலுத்தப்படுகின்றது. உழைப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படுகின்றது. இறுதியில் மின்னிலக்க தொழில்நுட்பப் பொருட்கள் உருவாக்கப் படுகின்றன.

மின்னிலக்க உழைப்பில் வெறும் உள்ளடகத்தைத் தயாரிக்கும் உழைப்பை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக, விவசாயம், தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து உழைப்புகளும் உள்ளடங்கியுள்ளன. மின்னிலக்க உற்பத்தியில் பெரும்பாலும் கூலி உழைப்பு, அடிமை உழைப்பு, இலவச உழைப்பு, நிலையற்ற உழைப்பு, சுதந்திர உழைப்பு, இவை அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய சிக்கலான, விரிந்த அளவிலான சர்வதேச உழைப்புப் பிரிவினையை உருவாக்கியுள்ளது.

காங்கோவின் அடிமை சுரங்கத் தொழிலாளர்கள், கூலி உழைப்பைச் செலுத்தும் போக்ஸ்கான் கூலித் தொழிலாளர்கள், மிகவும் குறைந்த கூலிக்குப் பணிபுரியும் இந்திய மென்பொருள் பொறியாளர்கள்,  கூகிளிலும் இதர மேற்கத்திய கம்பெனிகளிலும் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், சுதந்திர மின்னிலக்க ஊடகவியலாளர்கள் போன்ற அனைத்து பிரிவினர்களும் இணைந்துதான் புதிய சர்வதேச உழைப்புப் பிரிவினையை உருவாக்கிக்கொள்கின்றனர்.

3 thoughts on “மின்னிலக்க (டிஜிட்டல்) உழைப்பும் சர்வதேச உழைப்புப் பிரிவினையும் – அண்ணா.நாகரத்தினம்”
  1. உங்களது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்தக் கட்டுரை முதலாளித்துவச் சுரண்டல் குறித்த புதிய தகவல்களை உள்ளடிக்கியுள்ளது தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள்.

  2. உங்களது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இந்தக் கட்டுரை முதலாளித்துவச் சுரண்டல் குறித்த புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது தொடர்ந்து எழுதுங்கள .வாழ்த்துகள்.

  3. மின்னிலக்கத்தகவல்‌தொழில்நுட்பத்துறையில்‌எவ்வாறுஅனைத்துவகையான உழைப்புகளும் செலுத்த ப்படுகின்றன என்பதை மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படையில் விளக்கியுள்ளது அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *