தமிழகம் முழுவதிலும் சட்டம் ஒழுங்கை காப்பதற்கு1541 காவல் நிலையங்களும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் காவலர்கள் பணியில் இருப்பதாக புள்ளிவிவரங்களில் அறிய முடிகிறது. மரியாதைக்குரிய நீதி வழங்க.. நீதி பரிபாலனம் செய்ய 214 நீதிமன்றங்கள் இருப்பதாகவும் காட்டுகிறது புள்ளிவிவரம்.. சட்டம் ஒழுங்கு தமிழகம் முழுவதிலும் எப்படி காப்பாற்றப்பட்டு வருகிறது, பாதுகாப்பு யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கேள்விப்பட்டு வருகிறோம் கண்கூடாக பார்த்தும் வருகிறோம்.
இருக்கக்கூடிய அனைத்து நீதிமன்றங்களிலும் தினம் ஏதேனும் ஒரு வழக்கிற்காகவது நீதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்.. நீதி பரிபாலனை என்பது தினந்தோறும் எல்லா நீதிமன்றங்களிலும் நிகழ்ந்து கொண்டு வந்தாலும் எங்கேயாவது எப்போதாவது வழங்கப்படும் நீதி மட்டுமே இங்கு எல்லோராலும் பேசப்படுகிறது.. கொண்டாடப்படுகிறது. அப்படி என்றால்
நீதிமன்றங்கள் யாருக்கு ஆதரவாக நீதி வழங்க.. காவல்துறை யார் நலன் காக்க சட்டம் ஒழுங்கு பராமரிக்க.. பாதுகாக்க அமைக்கப்படுகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
இவை இரண்டுமே எவர் கைகளில் அரசு இருக்கிறதோ அதைப் பொறுத்து இரண்டும் செயல்படும். பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக இவர்கள் இருப்பது உண்மை என்று இங்கு நாம் நம்பினால் தஞ்சை கீழ் வெண்மணி தொடங்கி பொள்ளாச்சி சம்பவங்கள் வரை நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடததிய கொடூரங்கள் என்பது குற்றங்களுக்கு காரணமானவர்கள் செய்து காட்டிய கொடுமைகளைக் காட்டிலும் பெரும் கொடூரங்களாகவே தெரிகிறது.
இப்படியான சூழலில்தான் நிலவுடைமையாளர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு அதிகாரப் பொறுப்பில் வரும்பொழுது எளிய மக்களுக்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நிகழ்த்த எல்லைகளை விரிவு படுத்திக் கொள்கிறார்கள்.. கூடவே அவர்களின் உழைப்பை ஏமாற்றி சுரண்டி மிரட்டி பணிய வைத்து தங்களின் வளமையை பெருக்கிக் கொள்கிறார்கள். கீழமையான செயல்களை வழமையாக்கிப் பணம் பார்க்க.. பணம் பறிக்க எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் நில உடமையாளர்களாக இருக்கக் கூடிய பல நிறுவனங்களின் முதலாளிகள். விழித்துக் கொண்டவர்கள் ஒத்து வராதவர்கள் என தாங்கள் நினைக்கக் கூடியவர்களை கொலையும் செய்கிறார்கள், பாதுகாப்பாக சட்டத்தையும் நீதியையும் பணம் கொடுத்து தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கிறார்கள்.
பொதுவெளியில் பலது விவாதத்திற்கு, பலராலும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்படும் பொழுதும் யாராவது எதையாவது சொல்லி வைக்கப் போகிறார்கள் என்கிற கபடம் மிகுந்த எண்ணத்தில் அநீதிகளை கலந்தே நீதி வழங்குகிறார்கள். பொதுவெளியில் வேறு பல விஷயங்கள் பேசப்படும் பொழுது அல்லது திட்டமிட்டு மடை மாற்றப்படும் பொழுது ஒட்டிக்கொண்டிருந்த நீதியும் விலக்கி, நீக்கி, அநீதி நெஞ்சை நிமிர்த்தி வஞ்சகமாக உலா வர இன்னொரு நிதி மன்றத் தீர்ப்பு எழுதப்படுகிறது கள்ளமான தரவுகள் தயார் படுத்தப்பட்டு ஒரு வழக்கிற்கு இரண்டு மூன்று தீர்ப்புகள் வருவது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதை பல்வேறு வழக்குகளில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எளியவர்களுக்கும், எல்லா நிலையிலுள்ள பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிராக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வசதி படைத்தவர்கள் மற்றும் நில உடைமையாளர்களின் கரங்களில் அதிகாரத்தின் அத்தனை சாட்டைகளும் இருக்கும் பொழுது “அண்ணா.. உங்களை நம்பித்தானே வந்தேன் என்னை விட்டுவிடுங்கள்” என்று அலறிடும் இளம் பெண்கள்; சொந்த மாநிலத்தில் வாழ வழியில்லாமல் ஆட்சியாளர்களால் அதிகாரத்தால் விரட்டப்பட்டு தமிழ்நாட்டின் கோவை திருப்பூர் சென்னை இன்னும் பல தொழில் நகரங்களில் தினம் செத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. பிழைக்க வந்தவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக தமிழகத்தில் குற்றச்செயல்கள் எங்கு நடைபெற்றாலும் கைதாகி சிறைக்குள்ளும்.. வீதியில் நடந்திடும் குற்றச் செயல் எதுவாக இருந்தாலும் அங்கே மொழி தெரியாத வேற்று மாநிலத்தவர் இருந்தால் அவரை சந்தேகப்பட்டு கம்பத்தில் கட்டி அடிப்பதும்..
இன்னொருவர் செய்த குற்றச் செயலுக்கு மொழி தெரியாத ஆண் பெண் தொழிலாளர்களை பொறுப்பாக்கி இனவெறி தூண்டும் செயல்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது.. பார்வையாளராக இருக்கும் நம்மில் எத்தனை பேர் அம்மக்களை பிழைக்க வந்தவர்கள்; நம்மை நம்பி வந்தவர்கள் அவர்களை பாதுகாப்பது நமது கடமை என்கிற எண்ணம் இருக்கிறது என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுவோம்..
அம்மக்கள் குடியிருக்க வாடகை வீடு கேட்டு வந்தால்கூட அவர்கள் குறித்த என்ன பார்வையோடு அவர்களை நாம் அணுகுகிறோம் அவர்களோடு எவ்வாறு உரையாடுகிறோம்..? இப்படியான மனநிலையை நமக்குள் கட்டமைத்து வைத்தது யார்?.. அதிலிருந்து எப்பொழுது நாம் விடுபடப் போகிறோம்..? இந்தக் கேள்விகளை நமக்குள் நாமே கேட்டுக் கொண்டு தொடர்வோம்.
இங்கே எழுத்தாளர் ஜீவா அவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் நாள் ஒன்றின் பொழுதினில் கண்களில் இருட்டை அப்பிக்கொண்டு நாள் முழுவதும் தாங்கிடும் பணிச்சுமையின் உடல் வலியோடு சமையல் கூடம் ஒன்றினில் மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டுகளை தழுவிக் கொண்டிருக்கும் மொழி அறியாத புலம்பெயர்ந்து பெண் தொழிலாளி ஒருவர் தென்படுகிறார்.. அவரோடு சேர்த்து திருப்பூர் நகரம் முழுவதும் பணியின் தொழிற்சாலைகளிலும் இன்னும் பல தொழில் நிறுவனங்களிலும் நிறுவனத்தின் உரிமையாளர்களும், அவர்களுக்கு வெளிமாநிலத்தில் இருந்து ஆட்களை அடிமையாக பிடித்து வரும் புரோக்கர்களும் ஆண் பெண் தொழிலாளர்களும் உடல் சூம்பிக் கிடக்கும் அவர்களின் குழந்தைகளும்.. குறிப்பாக பெண் குழந்தைகளும், பெண்களும் உடலுழைப்பு வழியாக சுரண்டப் படுவதோடு, அவர்களின் ஏழ்மையை இல்லாமையை, இயலாமையை தங்களுக்கு சாதகமாக்கி.. பாலியல் வக்கிர தோடு அவர்களை அணுகி, அதிகாரத்தின் துணையோடும் அரசியல் பாதுகாப்போடும் திமிர் எடுத்து வாழ்ந்திடும் கொடூர நெஞ்சம் படைத்தவர்களை கண்டிடுக்கிறார்..
இவர்களையே தன்னுடைய “துர்கா மாதா” புதினத்தில் கதாபாத்திரங்களாக படைத்திருக்கிறார்.. சாப்பாட்டுக் கூடத்தில் எச்சில் தட்டுகளை கழுவிக் கொண்டிருந்த பெண்ணை; அந்தப் புலம்பெயர்ந்து தொழிலாளியை அரசியல் அறிந்த, தெளிவு பெற்ற பெண்ணியப் போராளியாக துர்காவாகப் படைத்திருக்கிறார். புலம்பெயர்ந்து தொழிலாளிகள், அதிகாரம் ப்படைத்தவர்களால் யாரோ செய்த குற்ற செயல்களுக்கு பலிகடாவாக மாற்றப்படுவது என்பது தமிழ்நாடு முழுவதிலும் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது என்பதை எளிய வார்த்தைகளில் தனது புதினத்தில் கொடுத்திருக்கிறார். நில உடைமையாளர்களின் பாலியல் வக்கிரத்திற்கு இளம் பெண்கள் வஞ்சகமாக ஆட்ப்படுத்தப்படுவதெப்படி.. காவல் துறையும் அதற்கு எவ்வாறு உடந்தையாக கள்ளத்தனம் மிகுந்து செயல்பட்டது என்பதினை பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடூர நிகழ்வின் வலியோடு கொண்டுவந்திருக்கிறார் துர்கா மாதாவில்.
பள்ளிகளில் “குட் டச்,பேட் டச்” என்பதை தவறான புரிதலோடு சொல்லிக் கொடுப்பதால் வீட்டில் இருக்கும் அப்பா உள்ளிட்ட ஆண்களோடு உரையாடுவது பழகுவது என்பதிலிருந்து பெண் குழந்தைகள் எவ்வாறு அன்னியப்பட்டு இருக்கிறார்கள் என்பதை ஆழமான செரிரிவான உரையாடல் வழியாக ஆழமாக பேசி இருக்கிறார். உடல் சார்ந்து பார்வையினை குழந்தைகளுக்குள் அவர்களை அறியாமலேயே வேறு திசை வழிக்கு கொண்டு செல்லும் அபாயத்தை இத்தகைய பயிற்றுவிப்பால் ஆசிரியர் பெருமக்கள் செய்து வருகிறார்கள் என்பதை காத்திரமாக பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர்.
“எனது உடல் எனது உரிமை” என்கிற பெண் உரிமை சார்ந்த முழக்கம் ஒருவகையில் பெண்களுக்கு எதிராக மாறிடும் அபாயத்தை இன்றைய நுகர்வு கலாச்சாரமும் முதலாளித்துவமும் அதனுடைய லாப வெறியும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதையும் பேசியிருக்கிறார். சமூகத்தில் எத்தகைய அரசியல் மாற்றம் நிகழ்ந்தால், நிகழ்த்தினால் மட்டுமே பெண்கள் மீதான பெண் தொழிலாளிகள் மீதான உழைப்புச் சுரண்டலும் பாலியல் வக்கிரத்தை அணுகுவதில் சிறு மாறுதலையும் ஏற்படுத்த முடியும் என்பதை துர்கா மற்றும் டாக்டர் ரவீந்திரன் கதாபாத்திரங்கள் வழியாக உரையாட செய்திருப்பார்.
சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் படைக்கும் கலை இலக்கியம் சார்ந்து எதுவாக இருந்தாலும் அது எளிய மக்களுக்கு ஆதரவாகவும் ஏறி மிதிக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு, வஞ்சகர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பிரச்சாரமே. இந்தப் பிரச்சாரத்தை அழகியலோடும் இலக்கிய நயத்தோடும் ஒருபுறமும்; அதே நேரத்தில் சாதாரண மக்கள் பேசக்கூடிய வார்த்தைகளின் வழியாக எளிய சொற்களை கைகொண்டு பிரச்சாரத்தை நேரடியாக நிகழ்த்துவது இன்னொரு புறமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்..
இந்த இரண்டு வகையான உத்திகளும் சமூக மாற்றத்திற்கு அரசியல் மாற்றத்திற்கு வெவ்வேறு தளத்தில் இயங்கக்கூடிய மக்களைச் சென்றடையும். இரண்டு விதமான உத்திகளுமே அனைத்து மக்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக தான் என்பதை புரிந்து கொண்டு இந்தப் புதினத்தை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. துர்கா மாதா நேரடி அரசியலை நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி உரையாடி வெளிவந்திருக்கிறது.
நாவலாசிரியர் ஜீவா பெண்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பாலியல் வக்கிர தன்மையின் மூல காரணியாக இருக்கக்கூடிய சமூக காரணங்கள் அனைத்தையும் அனைவரையும் ஒரே நாவலுக்குள் கொண்டு வந்து விடலாம் என்கிற எண்ணத்தோடு இதை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்.. இதை தவிர்த்திருந்தால் புதினத்துக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.
புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் எளிய மக்களை சமூக விரோதிகளாகவே கட்டமைத்து வரும் சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் என அனைத்திற்கும் எதிராக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவலங்களை, அவர்கள் உழைப்பு சுரண்டப்படுவதை, பெண் தொழிலாளிகள் வஞ்சிக்கப்படும் அவலத்தை பேசியதோடு மட்டுமல்லாமல் புலம்பெயர்ந்த பெண் ஒருவரையும் தேர்ந்த அரசியல் போராளியாக சித்தரித்து இந்த புதினத்தில் களமாட விட்டிருக்கிறார் வாசிப்பவர்களின் மனதில்.
வாழ்த்துக்கள் தோழர் ஜீவா.
நல்ல முறையில் அச்சடித்து வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் பொன்னுலகம் புத்தக வெளியீட்டாளர்கள். தெளிவான அரசியல் பேசும் க்ரைம் நாவல் துர்கா மாதா.
நூல்: துர்கா மாதா
ஆசிரியர்: ஜீவா
வெளியீடு: பொன்னுலகம் புத்தக_நிலையம்
விலை ₹.150/-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.