“இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – தமிழ்நாடு மாநிலக் குழு” பெருகி வரும் வேலையின்மை பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்காக வேலையற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து வேலை கேட்கும் இயக்கத்தை வலுவாக நடத்திட திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாக வேலையற்ற இளைஞர்களின் பட்டியலை அவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை இணையத்தின் வாயிலாக ஒன்றிணைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
 கள்ளச்சாராயத்திற்கு  எதிராகப் போராடியதால் 1999 ஜூன் 26 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தின் தோழர்கள் கடலூர்-குமார் ஆனந்தன் ஆகியோர் நினைவு தினத்தில் https://www.jobsincrisis.in/ta என்கிற இணையதளத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிமுகப்படுத்தியது. சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று குரல் எழுப்பி வரும் மரியாதைக்குரிய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாகத் துவக்கி வைத்தார்.
இந்த ஊரடங்கால் பன்மடங்கு அதிகரித்துள்ள நெருக்கடி “வேலையில்லா திண்டாட்டம்”. ஒரு புறம் பொருளாதாரம் முடக்கப்பட்டதால், பல கோடி மக்கள் வேலையின்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட, மற்றொருபுறம் இந்த ஊரடங்கையே காரணமாக கொண்டு பணியாட்களைக் குறைத்து லாபத்தை பெருக்குவதை பல நிறுவனங்கள் உக்தியாகவே கடைபிடித்து வருகின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று தனது லாபத்தை தக்கவைத்துகொள்ள ஊழியர்களுக்குப் பல பெரு நிறுவனங்கள் கட்டாய விடுப்பு வழங்கி வருகின்றன.
வரும் காலங்களில் இந்த வேலையின்மை சூழல்குறித்த விரிவான ஆய்வும், வேலை இழந்தோரை ஒன்று திரட்டிப் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமாகிறது. அதனடிப்படையில், உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், கொரோனா ஊரடங்கால், வேலையிழப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், தங்களது பிரச்சனைகளைத் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர்.
இணையதளத்தில் தாங்கள் வேலை இழந்த விவரங்களை விவரிக்கும் வரிகளைப் படிக்கும்பொழுது, நமது மனதை உலுக்கிவிடுகிறது. “என்னுடைய வயது 42 என்னுடைய வேலை பறிக்கப்பட்டது, வீட்டு வாடகை ,வீட்டு செலவு, கல்வி கட்டணம், என பண நெருக்கடியில்  மொத்த குடும்பமும் மன அழுத்தத்தில் உள்ளது. இதற்கு மேல் எனக்கு என்ன வார்த்தை சொல்வதென்றே தெரியவில்லை” என முடிகிறது, SPA & Fitness  கம்பெனியில் வேலை செய்த தொழிலாளியின் பதிவுகள் இப்படி தான் துவங்குகிறது.
No shortcuts to solving India's growing jobs crisis
நண்பர்களே இணையதளம் துவக்கப்பட்ட ஜூன் 26 முதல் ஜூன் 30 மாலைவரை 7400 க்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பார்த்துள்ளனர். இவர்களில் இந்தியாவை தவிர்த்து 35 நாடுகளிலிருந்து  பார்த்துள்ளனர். அமெரிக்காவில் 92 பேர், ஐக்கிய அரபு நாடுகளில் 41 பேர் வலைதளத்தைப் பார்த்துச் சென்றுள்ளனர்.
இணைய தளத்தில் இதுவரை 349 பேர் தங்கள் பாதிக்கப்பட்ட விவரங்களைப் பதிவிட்டுள்ளனர். அவர்களில் 15 பெண்கள் ஒருவர் மாற்று பாலினத்தவர் அடங்குவர். 25 வயது முதல் 34 வயது வரை 33.50% பேரும், 18 வயது முதல் 24 வயது வரை 27.50% பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் 83% பேர் தங்களுக்கான இன்சூரன்ஸ் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ளனர். Provident Fund என்று சொல்லக்கூடிய வருங்கால வைப்புநிதியில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாக 60 பேர் அதாவது 17.7% பேர் தெரிவித்துள்ளனர். சுய கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன் போன்ற கடன்களுக்கு EMI கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக, 188 பேர் அதாவது 53.5% பேர் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதில் 82 பேர் அதாவது 23.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வீட்டு வாடகை கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக 201 பேர் அதாவது 57.3% பேர் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு,  கல்விக்கடன், மருத்துவச் செலவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்குக் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாக 38 பேர் அதாவது 10.8% பேர் தெரிவித்துள்ளனர்.
47.3% பேர் சிறு குறு நிறுவனங்களில் வேலை இழந்துள்ளனர். உதாரணமாகப் 10 பேர் வேலையில் இருந்த இடத்தில் 2 அல்லது 3 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 23.9% பேர் ஐடி கம்பெனிகளில் நடைபெறும் ஆட்குறைப்புக்கு ஆளாகியுள்ளனர். 22.2% பேர் பொருளாதாரப் பிரச்சினைகளைக் காரணம்காட்டி நிறுவனங்களை மூடியதால் நேரடியாகப் பாதிக்கபட்டுள்ளனர்.
மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் தனித்தனியாக, பாதிக்கப்பட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தாலும் உண்மையில் இதில் உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் பெரும்பகுதியான பேர் சந்திப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த 349 பேரில் 52.7 சதவீதமான பேர் நிறுவனம் மூடல், ஆட்குறைப்பால் வேலை இழப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
India's Young Graduate Engineers Struggle to Find Work as Jobs ...
இப்படிப்பட்ட கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள், எளிய நடுத்தர மக்களின் வாழ்நிலை குறித்து அக்கறை காட்டாத போக்கே தெரிகிறது மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. ஊரடங்கு காலத்தில் எந்தவித வருமானமும் இல்லாமல் தவிக்கும் மக்களிடம் இது போன்ற வட்டி வசூல் செய்வதை அரசு ரத்து செய்திருக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு EMI கட்ட முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதுடன்,  உரிய காலத்தில் செலுத்த தவறினால் மேலும்   வட்டி போட்டு வசூல் செய்யப்படும் எனவும் நிதி நிறுவனங்கள் மிரட்டி வருகின்றன. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், ஜனநாயக மாதர் சங்கமும் இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தப் பிரச்சினைகளில் அரசு உரிய தலையீடு செய்திட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரும் ஜூலை 4அன்று மாநிலம் முழுவதும்   போராட்டம் நடத்த உள்ளது.
அதே போன்று வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் வாடகை கேட்கக் கூடாது என்று மாநிலஅரசு அறிவித்தாலும், அதை அமல்படுத்துவதில் நடைமுறையில் சிக்கல் இருக்கிறது. குறிப்பாக வாடகை தரவில்லை எனில் மீண்டும் அவர்களுக்குச் சம்பந்தப்பட்ட வீட்டில் குடியிருப்பதற்கு அனுமதி மறுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில், மக்கள் கடன் வாங்கியோ அல்லது தங்களிடம் இருக்கும் குறைந்தபட்ச சேமிப்பு தொகையையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு அல்லல்படும் சூழ்நிலையைப் பார்க்க முடிகிறது. மேலும் வருமான இழப்பினால் அல்லது வேலையின்மை காரணமாகக் குடும்ப உறுப்பினர்களின் உணவு, குழந்தைகளுக்குக் கட்ட வேண்டிய கல்வி தொகை, மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்குக் கையில் பணம் இல்லா கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற நினைக்கிற அரசு, அதே மக்கள் உணவுக்கு வழியின்றி ,மருத்துவ செலவுக்கு வழியின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருக்கிறார்களே என்று ஏன்? எண்ணவில்லை  என்பதுதான் நமது கேள்வி. மாறாக   டாஸ்மாக் கடையைத்திறந்து தனக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மானியமாககொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தையும்  மறைமுகமாகப் பிடுங்கும் வேலையைத் தான் செய்தார்கள் என்பதே உண்மை.
நண்பர்களே இப்படிப்பட்ட பெரும் கொடுமையான சூழ்நிலையில் தான் இந்திய அரசாங்கம் வரிமேல் வரி போட்டு பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.  மேலும் டோல்கேட் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. உணவுத் தானியங்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. மின் திருத்தச்சட்டம் மூலம் முழுக்க முழுக்க தனியார் வசம் கொண்டு செல்வதற்கான திட்டமிடல், கூட்டுறவு வங்கிகளையும் கபளீகரம் செய்வதற்கான சட்டம், இப்படி ஏராளமான சட்டங்களை இயற்றி எளிய மக்களை மேலும் வறிய நிலைக்குத் தள்ளுகின்ற பணியைக் கொரோனா பரவலை விட வேகமாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
Job crisis in India: New book advises to prepare for short-term ...
இத்தகைய கொள்ளை நோயிலிருந்து மக்களைபாதுகாக்கும் பணியில் இந்தியாவில்  கேரளாவும் உலகில் உள்ள சோசலிச நாடுகளும் திறமையாகக் கையாண்ட விதத்தைப் பொதுச் சமூகம் உற்று நோக்கி வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும், வாராக்கடன் என்கின்ற பெயரில் சலுகையும் அளித்துவருகின்றனர்இந்திய ஆட்சியாளர்கள். இந்த நாட்டில் வேலையின்மையால் பசி, பட்டினியால் வாடும்  ஏழை, நடுத்தர வர்க்க மக்களுக்குக் கையில் பணப்புழக்கம் ஏற்படுத்திட வருகிற ஆறு மாத காலத்திற்கு குடும்பம் ஒன்றிற்கு 7,500 ரூபாய் வீதம் நிவாரணம், ரேஷன் முறையில் உணவு தானியங்களை கொடுக்க வேண்டும் என்று நாம் கேட்டு வருகிறோம். சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குரிய கடன் உதவிகளையும் செய்திட வேண்டும் எனவும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறோம்.
எனவே எல்லோருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை என்கிற உன்னத லட்சியத்தை அடைவதற்கான போராட்டக்களத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இத்தகைய வேலையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள https://www.jobsincrisis.in/ta இணையதளம் வரலாற்றில் ஒரு மைல்கல். இது நிச்சயம் பற்றிப் படர்ந்து சமூக அவலங்களுக்கும் வேலையின்மை பிரச்சினைக்கும் தீர்வுகண்டு எல்லோருக்குமான ஒரு தேசத்தைப் படைப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைத்திட  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எப்போதும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Image may contain: 1 person, standing
சி.பாலசந்திர போஸ்
மாநில இணைச் செயலாளர்-DYFI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *