மாற்றுக் கல்விமுறைகள் இந்தியாவிற்கு புதியதல்ல.  இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த ரவீந்தரநாத் தாகூர், காந்தியடிகள்,  ஜூஜு பாய் பதேக்கா, அரவிந்தர், ஜிதூ கிருஷ்ணமூர்த்தி என பல கல்வியாளர்கள் மாற்றுக் கல்விக்கான யோசனைகளை வழங்கி சென்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் உள்ள எழுத்தறிவற்ற மக்களில் சுமார் 50 சதவிகிதம் பேர்  உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய ஆறு இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இருக்கின்றனர். இதில் மத்திய பிரதேசம் மற்றும் பீகார் தற்போது எழுத்தறிவு விகிதம் சற்று கூடியுள்ளது.  இம்மாநிலங்களின் எழுத்தறிவு விகிதம் உயர அம்மாநில அரசுகள் பெரும் முயற்சிகளை எடுத்து இருப்பினும் அம்மாநிலங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியது மாற்றுக் கல்வி முறையாகும்.

2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள சுமார் 604 மாவட்டங்களில் மிகவும் குறைந்த கல்வியறிவு அதாவது 19% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக இருந்தது மத்திய பிரதேச மாநிலத்தின் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய ஜாபுவா மாவட்டமாகும்.  இப்பகுதியின் பழங்குடியின மக்களின் கல்விக் கனவுகளை கைக்கு எட்டும்படி செய்தவர் சிஸ்டர் ஹெசிந்தா.

அஜ்மீரில் இருந்து ஜாபுவா வருகின்ற ஹெசிந்தா இத்தாலியை சேர்ந்த சிஸ்டர் பெனாட்டோ ரோஸா அவர்களின் ஆலோசனைப்படி அங்கு வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்காக ‘ மேய்ப்பர்  பள்ளி’ என்னும் மாற்றுப்  பள்ளியை துவங்குகிறார். இத்தாலிய திட்டமான இதை இந்தியாவில் எப்படி செயல்படுத்துவது என்று கலந்தாலோசித்து இப்பள்ளிகள்  துவங்கப்படுகின்றன.

GOOD Shepherd School, Solapur Bijapur - Schools in Bijapur ...

இந்த மாற்றுப் பள்ளியில் படிப்பதற்கான முதல் தகுதி நீங்கள் மாடு வைத்திருக்க வேண்டும் என்பதே. ஏனெனில் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் பெரும்பாலும் ஆடு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தனர். அவ்வாறு ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் பொறுப்பு அக்குடும்பத்தின் மூத்த குழந்தையின் தலையில் விடிகிறது. பெற்றோர்கள் விவசாய கூலி வேலைகளுக்கு சென்றுவிட, அக்குழந்தைகள் அவர்களுடைய கால்நடைகளை காடு,மேடு, மலைகள் என மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் அக்குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. என்ன செய்யலாம்?  நம் நோக்கம் அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பது.  ஆனால்,  கால்நடைகளை அவர்கள்தான் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குடும்பத்தின் நிர்ப்பந்தம். இவ்விரண்டையும் பூர்த்தி செய்யும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார் ஹெசிந்தா..

ஜாபுவாவில் உள்ள குழந்தைகள் தினமும் காலை எட்டு முப்பது மணிக்கு தங்கள் கால்நடைகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்கின்றனர். அதுவே அவர்களது பள்ளிக்கூடம். ஆம் குழந்தைகளோடு ஹெசிந்தாவும் செல்கிறார். குழந்தைகளை இரு குழுக்களாக பிரிக்கிறார். ஒரு குழுவினருக்கு பாடங்கள் நடைபெறும்போது மற்றொரு குழுவினர் கால்நடைகளை பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு மணி நேரம் கழித்து இவர்கள் தங்கள் பணிகளை மாற்றிக் கொள்கின்றனர். மதியம் ஒரு மணிவரை இவ்வாறான வகுப்புகள் நடைபெறும். அதன் பின்னர் குழந்தைகள் கால்நடைகளை மேய்த்துவிட்டு  மாலை சுமார் ஆறு மணி அளவில் தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.

இப்பள்ளியில் ஆதிவாசி குழந்தைகளுக்கு முன்னுரிமை தரப்படும். இந்த பழங்குடியின மக்களுக்கு ஆடல் பாடல் போன்ற கலைகளை தங்கள் வாழ்க்கை முறையாக வைத்திருந்ததால் ஹெசிந்தா தனது கற்பித்தல் முறைகளில் ஆடல் பாடல்களை பிரதானமாக வைக்கிறார். குழந்தைகளோடு காடு மலைகள் என்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டு ஆடல் பாடல் மூலமாக கல்வியைக் கற்பித்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு எழுத்தறிவித்து,தொடக்கக் கல்வி முடிக்க வைத்தவர் ஹெசிந்தா.

ஜாபுவா மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களில், 47 மையங்களில்  இந்த ‘மேய்ப்பர் பள்ளிகள்’ செயல்பட்டன. ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு ஆசிரியர் என 47 ஆசிரியர்களும் ஐந்து மேற்பார்வையாளர்களும் இப்பள்ளிகளில் கல்விப் பணியாற்றி வந்தனர். இப்பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டமே பின்பற்றப்படுகிறது. மாற்று முறையில் கல்வி பயின்றாலும் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2155 பழங்குடியின குழந்தைகள் இந்த மேய்ப்பர் பள்ளிகளின் மூலமாக எழுத்தறிவு பெற்றனர்.

The fall of Icarus

இந்த ‘மேய்ப்பர் பள்ளிகள்’ போன்ற திட்டத்தை பிஹார் மாநில முதல்வரான லல்லு பிரசாத் யாதவ் அவர்களும் தனது மாநிலத்தில் கொண்டுவந்தார். மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும் திட்டமாக இது இருப்பினும் இத்திட்டம் பிஹாரில் முழுமையாக செயல்படுத்தப்படாமல் தோல்வியை தழுவியது. லல்லு பிரசாத் யாதவ் கொண்டு வந்த ‘ஒரு நாளுக்கு ஒரு ரூபாய்’ திட்டம், அதாவது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் வழங்கப்படும் என்பதும் அம்மாநில மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்மூலமாக பள்ளி வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதுபோலவே தமிழகத்தில் நமது காமராசர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். மதிய உணவு திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பள்ளியில் சேர்க்கை விகிதம் அதிகரித்தது. மக்கள் பிரதிநிதிகளாக, முதலமைச்சராக இவர்கள் செய்ததை, இவர்களாலும் சென்று அடைய முடியாத மாணவரிடம் கொண்டு சேர்த்தவர் ஹெசிந்தா.

இவருடைய கல்வி முறை மாணவர்கள் அவர்கள் அன்றாட வேலையை செய்துகொண்டே அவர்கள் இருக்கும் இடத்திலேயே கல்வி கற்பது. அவர்களுடைய சூழ்நிலை மற்றும் வாழ்க்கை முறையையொட்டியே கற்றல் கற்பித்தல் நிகழும். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தன் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க ஸ்லேட்டிலும் பாறைகளிலும் தன் பெயரையும் தன்னை சுற்றி உள்ள பொருள்களின் பெயர்களையும் ஒரு மாணவி எழுத, ‘அது அப்படி இல்ல, இதை இப்படி மாற்ற வேண்டும்’ என்று மற்றொரு குழந்தை சொல்ல ஆடல் பாடலோடு,  காடு மலைகளை  சுற்றித்திரிந்து கற்றல் என்பதுதான் ஹெசிந்தா பின்பற்றிய கல்வி முறையாகும்.

கத்தோலிக்க சபையை சேர்ந்த ஹெசிந்தாவை அவ்வளவு சுலபமாக ஜாபுவா கிராமத்து மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள் முதன்முதலாக அக்குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க கிராமத்து மக்களை அணுகியபோது கடும் எதிர்ப்பை சந்தித்ததாக கூறுகிறார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்கள் தங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டனர்.ஒருவழியாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த மேய்ப்பர் பள்ளிகளில் சேர்க்க அனுமதித்த போதும், குழந்தைகளை இப்பள்ளிகளுக்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை என்கிறார் அப்பள்ளி ஆசிரியர் ஒருவர். தங்களைப் பார்த்தவுடன் ஓடி ஒளிந்துகொள்ளும் மாணவர்களும் இருந்தனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களையும் தங்கள் பள்ளியில் இணைந்தோம் என்கின்றார் அவர். சில நேரங்களில் மாடுகள் பயிர்களை மேய்ந்துவிட்டன என்று சண்டைக்கு வரும் பொதுமக்களையும் சமாளிக்க நேர்ந்தது என்கிறார்.

ஆனால் காலம் அப்படியே இருந்துவிடவில்லை. “இந்த மேய்ப்பர் பள்ளி உதவியாலேயே எங்கள் குழந்தைகள் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டனர். இப்பள்ளிகள் இல்லை என்றால் எங்களை போலவே எங்கள் குழந்தைகளும் எழுத்தறிவில்லாதவர்களாகவே இருந்திருப்பர்‌” என்று தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்துகின்றனர் அக்கிராம மக்கள்.

இப்பள்ளிகளில் குழந்தைகள் எழுதவும் படிக்கவும் கற்கின்றனர். தேர்வுகள் பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. தேர்வுகள் தேவை என்றால் அதற்கு தடையுமில்லை. அருகில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு எழுதவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அனைத்தையும் தாண்டி ‘கற்றலில் மகிழ்வு’ என்ற பேரானந்தத்தை ஜாபுவா கிராமத்துக் குழந்தைகள் அடைந்தனர். பழங்குடியின மக்களுக்கு முறையான கல்வி வழங்க முடியாமல் அரசே தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், தன் கல்வி முறையால் அதை சாதித்தவர் ஹெசிந்தா.

 

கட்டுரையாளர்: இரா. கோமதி, ஆசிரியை.

தொடர் 1ஐ படிக்க: 

https://bookday.in/educational-thinker-1-sylvia-ashton-warner/

2 thoughts on “கல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *