மனித உணர்வுகளின் மெல்லிய இழைகளை நுட்பமாய் சித்தரிக்கிறது  கந்தசாமியின் இக்கதை.  இக்கதையில் காதல் சாவு என்கிற விஷயங்கள்  ஒரு செறிவுடனும் நேர்த்தியுடனும் கையாளப்பட்டிருக்கிறது

உயிர்

சா.கந்தசாமி

அற்புதராஜ் சார் கூட எப்போதுமே ஒரு கூட்டம்,  நான்கைந்து பேர்கள்.  பள்ளிக்கூடத்திலாகட்டும், விளையாட்டு மைதானத்திலாகட்டும், ஆற்றங்கரை அவையாம்பாள் தோட்டமாகட்டும்  துப்பாக்கியோடு அவர் எங்கிருந்தாலும் மாணவர்கள் சூழ்ந்து இருப்பார்கள்.  இத்தனைக்கும் அவர் வகுப்பில் படிப்பவர் எவரும் கிடையாது.  கோபால் ஏழாவது, தங்கையாவும் கிருஷ்ணனும் ஆறாவது.

அவர் படித்த பள்ளிக்கூடத்திலேயே இப்போது அவர் ஒரு பெரிய சார்.  அடுத்த ஹெட்மாஸ்டர் அற்புதராஜ்தான்.

அக்காவுடன் சர்ச்சுக்குப் போகும்போது தங்கையா சாரைப் பார்த்தான். கொஞ்சம் பயந்தான்.  அக்கா நையாண்டி பண்ணிப் பண்ணிப் அதைப் போக்கினாள்.  மூன்றாவது நாள் வகுப்பிற்கு போது தங்கையா எட்டாவது சாருக்கு துணிந்து “குட் மார்னிங் சார்” என்றான்.  ஒரு நிமிஷத்திற்குள்ளாக அவன் புகழ் பெற்று விட்டான்.  கேள்வி கேட்டவர்களிடம் “சாரை சர்ச்சிலே பார்த்திருக்கேன்” என்று பெருமையோடு பதிலளித்தான்.

அடுத்த வாரம் சர்ச்சில்  அவரோடுதான் பிரார்த்தனை செய்தான்.  அக்கா ஜாடைகாட்டி கூப்பிட கூப்பிட தலையசைத்து மறுத்து விட்டான்.

சாரை அவனுக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.   சக ஆசிரியர்களுக்கு அவர் மீது பொறாமை.  ஒரு நாள் தங்கையா அவரிடமே அதைக் கேட்டுவிட்டான். அவர் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஏறெடுத்துப் பார்த்து லேசாக முறுவலித்தார்.  அக்காவுக்கப்புறம் சார்தான்.  அக்கா சிரிக்கறதைப் பார்த்துகிட்டே இருக்கலாம்.  எக்களிக்காம உடல் குலுங்காம பூவூவா சிரிக்கும்,  சார் அப்படியும் இப்படியும் தலையசைத்தாலும் மத்தபடி சிரிக்கறதெல்லாம் அக்காதான்.

புளியமரத்தடியில் பத்துக் குத்து ஆடிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்தத போது சார் சிரித்தவாறு நின்று கொண்டிருந்தார்.  சாட்டையைப் பையில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டான்.   சார் தோளில் துப்பாக்கி.  இருவரும் புறப்பட்டனர்.

அற்புதராஜுக்கு வேட்டையிலே தனி விருப்பம்.  எதையாவது சுட வேண்டும்.  தாத்தாவிடமிருந்து வந்த பழக்கம். துப்பாக்கியும் அவரளித்த பரிசுதான்.  ரொம்பப் பழையது குறி தவறாது சுடக்கூடியது.

இரண்டு வருஷத்திற்கு முன்னே அற்புதராஜ் கல்லூரி விடுமறையில் வந்திருந்த போது மாணிக்க ஆசாரி உலைக்களத்தில் நல்ல பாம்பு என்று ஓடி வந்தார்கள்.  அப்போதுதான் அவர் தன்னந்தனியாக துப்பாக்கியை எடுத்தார்.  மனத்தில் தைரியம்.  யார் யாரோ கூச்சலிட்டார்கள்.  ஆளுக்கொரு யோசனை.  இருந்தாலும் குண்டு தப்பவில்லை.  குறி தவறாது சுட்டுப் புகழ் பெற்று விட்டார்.  கேள்விப்பட்டதும் தாத்தா உள்ளம் பூரித்துப் போனார்.

தெரிந்த நாவல் - தெரியாத செய்தி ...

படிப்பு முடிந்து வந்ததிலிருந்து வேட்டைதான் பொழுது போக்கு,  கொஞ்சநாட்கள் எதிர்வீட்டு அந்தோணி கூட சென்று கொண்டிருந்தான்,  அவன் நின்றுபோன சமயத்தில்தான் தங்கையா பழக்கமானான்.

சைக்கிளை எடுத்துக் கொண்டு போக முடியாது.  கூட ஒரு டார்ச் வேண்டும்.  அவையாம்பாள் தோட்டத்தில் குயில் இருப்பது தெரியாது.  சைக்கிளை அவரிடமிருந்து தங்கையா வாங்கிக் தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு உள்ளே போனான்.  சைக்கிளை வைத்து விட்டு டார்ச்சைத் தேடிப்பார்த்தான். சாரை உள்ளே வந்து குந்தச் சொல்லி அக்கா சொன்னாள்.  அற்புதராஜ் பார்வை சற்றே திரும்பியது.  சன்னல் கம்பிகளிடையே புதைந்திருந்த முகம் சட்டென்று மறைந்தது.  அதனுடைய கவர்ச்சியும் அதரங்களில் படர்ந்த புன்னகையும் நினைவை விட்டு அகலவில்லை,

பெரிய டார்ச்சோடு தங்கையா வந்தான்.  அவன் பின்னே கோபால்.  “நம்ப கோவாலு சார், ஏழாம் கிளாசு.” சார் தட்டிக் கொடுத்தார்.  ரொம்ப நாட்கள் சிநேகிதம் மாதிரி கோபால் சாரோடு பேசினான். அவையாம்பாள் தோட்டத்தில் நான்கு குயில்களைச் சுட்டுக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார்கள்.  தண்ணீர் குறைகின்ற வரையில் அக்கரைக்குப் போக முடியாது,  இரு கரைகளையும் மாறி மாறிப் பார்த்த அற்புதராஜ் “அப்ப திரும்ப வேண்டியதுதான்” என்றார்.

“இது என்ன சார் தண்ணி, ஒரே பாய்ச்சலில் அக்கரைக்குப் போய்விடலாம்” என்றான் கோபால். சார் பார்த்தார்.  தண்ணீருக்கு அஞ்சும் பிள்ளையல்ல என்பது தெரிந்தது.   மூவரும் ஆற்றங்கரை வழியே திரும்பினார்கள்.  எங்கெங்கே குயில் வரும், கொக்கு எப்பொழுது எங்கே வரும் என்பதைப் பற்றி கோபால் நிறையச் சொல்லிக் கொண்டு வந்தான்.   கோபால் வீட்டிற்குப் பின்பக்கம் பலாத்தோப்பு.  பார்ததசாரதி அய்யங்கார் கண்டவனையெல்லாம் கூப்பிட்டு கூப்பிட்டு பழம் கொடுப்பார்.  அங்கே அடுத்த வாரம் வேட்டை என்று தீர்மானித்துக் கொண்டு சாலையில் இறங்கினார்கள்.

ஒரு செம்போத்துக் குரல் கணீரென்று கேட்டது.  அற்புதராஜ் இரண்டடி பின் சென்று அரசமரத்தைப் பார்த்தார். தெரியவில்லை ஆயின் குரல் மட்டும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.   தங்கையாவும் சார் கூடவே மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான்.  மரத்திற்கு முன்னே ஒரு சூலம்.  அரசமரத்திலே கிளை வெட்ட மாட்டார்கள்.  ஆட்டுக்குக்கூட ஒரு இலை கிள்ள மாட்டார்கள்.   அது வால்முனி மரம்.  சார் கண்ணிலே பட்டுவிட்டது,  சார் குனிந்துபோய் பனை மரத்தின் கீழ் துப்பாக்கியை மேலே உயர்த்தி சரியாக நின்றார்.  “சார், இங்கே வேட்டையாடக்கூடாது சார், வால் முனிமரம் சார்” என்றான் கோபால்.

சாருக்கு அவமானம் நேர்ந்துவிட்டது மாதிரி தங்கையா துயருற்றான்.  ஆனால் சார் ரொம்ப பெருந்தன்மையோடு கோபால் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். கோபால் வால்முனியின் மகிமையை எல்லைகளை செல்லிக் கொண்டு வந்தான்,  சார் ரொம்ப கவனத்தோடு உன்னிப்பாகக் கேட்டார்.

புன்னை மரம் Calophyllum inophyllum - YouTube

கோபால் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் போய் பார்த்து வைத்துக் கொண்டான்.  புன்னை மரத்திலே ஒரு குயில், பிரப்பங்காட்டிற்குப் பக்கத்திலே நுணாமரத்திலே இரண்டு, நெட்டிலிங்க மரத்தில் இன்னொன்று தொடர்ந்து இன்னொன்று.  தாழைக்குத்துப் பக்கம் போனால்  சுள்ளுக் குருவி நாணத்தாங் குருவி கணக்கா குயில் ரொம்ப இருக்கும்.  தங்கையாவை அழைத்துக் கொண்டு வந்து தோப்புப் பூராவும் காட்டினான் கோபால்.

ஞாயிற்றுக்கிழமை நேராகத் தோட்டத்திற்குத்தான் வந்தார்கள்.  குயில் புன்னை மரத்திலிருந்தது.  அற்புதராஜ் துப்பாக்கியை மேலே தூக்கினார்.  கோபால் ஓடியெடுத்தான்.  குயிலுக்கு அவ்வளவு தந்திரம் தெரியாது.  மடையான் மாதிரி மேலே எழும்பி வெகு தூரம் போகாது.  பச்சரிசி மாமரத்திற்கு வந்துவிட்டார்கள்.  மாமரத்தையொட்டி பெரிய அல்லிக்குளம்.  குளத்திலே அல்லி இலைகளில் குந்தியிருந்த மடையான் கொக்கு சிறகடித்துக்கொண்டு மரத்தில் போய் அமர்ந்தன.

“சார் குயில்” உச்சிக் கிளையில் உட்கார்ந்திருந்த குயிலைப் பார்த்துவிட்டு தங்கையா சொன்னான்.  சாதாரணமாக அவ்வளவு தூரம் குயில் போவதில்லை.  ரொம்பக் கலவரமுற்றுப் போய் விட்டது.  துப்பாக்கியை மேல் நோக்கிப் பிடித்தார்.  “குயில் நடுக்குளத்திலே விழுந்திடுச்சே!” சார்தான் சொன்னார்.  “இருந்தா என்ன சார், இதோ நான் எடுத்தாந்துடறேன்”  சட்டையைக் கழட்டி தங்கையாவிடம் கொடுத்து விட்டுத் தண்ணீரில் இறங்கினான். அல்லிக் கொடியை தள்ளிக் கொண்டே முன்னேறினான். 

நான்கு நாட்களுக்கு முன்னே  நெட்டிலிங்க மரத்திலேயிருந்து குயில் குண்டு பட்டதும் பூவரசு மரக்கிளையிலே தொத்திக் கொண்டு விட்டது.  உச்சிக் கிளை ரொம்ப சிறிய கிளை.  “செத்த குயிலைச் சுட இன்னொரு குண்டா?” என்ற கோபால் தாழ்ந்த கிளையைப் பற்றி ஏறினான்.  “பத்திரம் மேலே ஏறாதே,  ஜாக்கிரதை கெட்டியோ பிடிச்சுக்கோ” சார் கத்தினார்.  

இதழ் 14 (மே 2019) – பாயும் ஒளி

“பெரிய கோயில் தங்க கலசம் நல்லாத் தெரியுது சார்” என்று சொல்லிக் கொண்டே இன்னொரு கிளைக்குத் தாவினான். கீழே ஆறு மேலே குயில். கீழ்க்கிளையிலிருந்து ஒரு தாவுத் தாவி குயிலைப் பற்றிக் கொண்டு கரணம் போட்டான்.  இடது கையில் குயிலோடு கரையேறி வந்தான் கோபால்.

சாருக்கும் அவனை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.  எப்பொழுதும் அவன் அவர்கூடத்தான்.  சாப்பாடு கூட சார் வீட்டில்தான்.  ஆனால் அவன் கவுச்சி சாப்பிட மாட்டான்.  அம்மா அவனுக்காக தனியாகக் குழம்பு வைப்பாள் என்பதை அறிந்ததும் முரண்பாடுகள் கொண்ட விசித்திரமான பையன் என்று சொல்லிக் கொண்டார். ராத்திரியில் எழுந்து பார்த்தால் இருக்க மாட்டான் எங்கே போனாய் என்று கேட்டால் “மாட்டுக்கு வைக்கோல் போடாம வந்துட்டேன் சார், அதுக்காகத் தான் போனேன்” என்பான்.

இரண்டு வருடமாக பொத்திப் பொத்தி ஒருத்தருக்கும் கூட காட்டாமல் வைத்திருந்த வௌவால் அடிக்கும் ஒற்றைத் தென்னை மரத்தை காட்டினான்.  குட்டைத் தென்னை இருபதடிதான் இருக்கும்.  இலுப்பை காலத்தில் அங்கே தான் இரண்டு வௌவால் பழமடிக்கும்.  காலையில் போனால் மரக்காலில் முக்கால் மரக்கால் இருக்கும்.   எல்லாரும் ஆறு மரக்கால் விற்றால், கோபால் ஒரு கலம் விற்பான் அது ரகசியம்.   நட்பு நிறைந்த மனத்தோடு உற்சாகம் பொங்கிப் பெருக, வௌவால் வேட்டைக்கு அற்புதராஜை அழைத்தான்.

இரவு பத்து மணிக்கு மேல் வௌவால் வேட்டை தொடங்கியது.  டார்ச்சு ஒளி வீசியது.  இரண்டு வௌவால்கள். பழந்தின்னி வௌவால்களில் அவ்வளவு பெரியதைப் பார்தததே இல்லை. “நல்ல வெளிச்சத்தில் வௌவால் பறந்துவிடும்”. சார் இதையெல்லாம் பின்னால் சொன்னார். இரண்டு வௌவால்கள் விழுந்தன.  இரண்டும் தங்கையாதான் எடுத்துச் சென்றான்.  அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் சார் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டார்.

தீபாவளியை ஒதுக்கி வைத்த கிராம ...

அடுத்த நாள் இருள் பிரியும் முன்னே மரக்காலை எடுத்துக் கொண்டு ஒற்றைத் தென்னை மரத்தடிக்குச் சென்றான்.  ஒரு கொட்டை கூட இல்லை.   சாருக்கு  சொல்லியிருக்கக்கூடாது என்று தோன்றியது.  உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டான். ரொம்ப நேரம் தங்கையா வந்து கூப்பிடுகின்ற வரையிலும் அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.  மூன்று நாட்களுக்குப்பறம் வேறொரு மரம் கிடைத்து விட்டது.  செங்கழுநீர் மரத்தில் வௌவால்  அடிப்பதைக் கண்டுபிடித்தான்.  ஆனால் எட்டு நாட்களுக்குப் பிறகு சார் துப்பாக்கி குண்டுக்கு அந்த வௌவால் விழுந்தது.

அன்றைக்கு தங்கையா “எங்கக்கா ரெண்டு குயில் கேட்டுச்சு சார்” என்றான்.  ஆற்றங்கரையைக் கடந்து வெட்டாற்றுக்கு வந்தாகி விட்டது.  ஒரு குயில்கூட கண்ணில் தட்டுப்படவில்லை.  போன இடமெல்லாம் கொக்கும் மடையானுந்தான்.  அவையாம்பாள் தோட்டத்தைத் தாண்டி மணிக்கிராமத்திற்கு வந்துவிட்டார்கள்.  புன்னை மரத்தை நோக்கினார்கள்.  இரண்டு குயில்கள்.  புள்ளியும் கறுப்புமாக ஆணும் பெண்ணும்,  சார் குறி தப்பியது. துப்பாக்கி மேலே உயரவில்லை.  இன்பம் துய்க்கும் குயில்களின் காதல் பெருவாழ்வு அவர் மனத்தைக் கரைத்து விட்டது.  

அடுத்த வாரம் சுட்ட எட்டு குயிலும் தங்கையாதான் எடுத்துக் கொண்டு போனான்.   அக்காவின் கேள்விகளை அவன் அடுக்கினான்.  பதில் சொல்லவில்லை.  அதரங்களில் புன்னகையோடியது, தங்கையா வீட்டுப் பக்கம் வந்துவிட்டால் சாருக்கு சிரிப்பு வந்துவிடும்.  கண்கள் சன்னலை நோக்கி அலைபாயும்.  சர்ச்சில் அவள் உணர்த்திய ஆதரவான குறிப்புகளால் அவர் கிளர்ச்சியுற்றார்.  எவ்வளவு எளிமையாகவும் இதயபூர்வமாகவும் இருந்தது அது.

மாடவீதியோடு போகையில் கிருஷ்ணன் வந்து சேர்ந்தான்.  ஆறாம் வகுப்பு தங்களோடு சேர்த்துக் கொள்வதில் இருவருக்கும் விருப்பமில்லை.  ஐயர் வீட்டுப் பையன்.  ஆனால் சார்கிட்டே பசைமாதிரி எப்படியோ ஒட்டிக்கிட்டான்.  கல் அடிப்பதில் அவன் சூரன்.  அவன் திறமை வெகுவாக எல்லாரையுமே கவர்ந்தது. சார் அவனை தட்டிக் கொடுத்தார். இரண்டு மூன்றாகியது.

வேட்டைக்குத் தெற்கே போவதாகத் திட்டம்.  சோமு படையாச்சி பரி போட்டிருக்கிற பிள்ளையார் வடிகாலில் ஏராளமான கொக்காம்.  மழை பொழிந்து விட்டிருந்தது. காவிரிக்கரை நெட்டிலிங்க மரத்தில் குயில் தெரிந்தது. கோபால்தான் பார்த்தான்.  “சுடுங்க சார்” எல்லோரும் சேர்ந்து சாரை இணங்க வைத்தார்கள்,  குண்டு பட்டதும் படபடவென்று சிறகை அடித்துக் கொண்டுபோய் அக்கரையில் விழுந்தது.  கோபால் மேல் சட்டையைக் கழட்டிப் போட்டு விட்டு பத்தடி பின்னுக்கு வாங்கி ஓடி வந்து கரணமடித்தான்.

5 Hunting and Camping Tips for Better Exeperience

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு புங்கமரக்கிளையில் தலைசெருகிக் கிடந்தவனை அற்புதராஜ் மேலே தூக்கிக் கொண்டு  வந்தார்.  அவர் கண்களில் துளும்பிய  கண்ணீர் பொலபொலவென்று கொட்டிக் கொண்டேயிருந்தது.  தங்கையாவையும், கிருஷ்ணனையும் பார்த்தார்.  இருவரும் கோவென்று கதறியபடியே அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

அற்புதராஜ் நிலை குலைந்து போனார்.  அவர் வேட்டைக்குப் போகவில்லை, பள்ளிக்கூடமும் போகவில்லை.  வாழ்க்கையிலேயே நினைவு தெரிந்தப்பறம் முதன் முதலாக சர்ச்சுக்குப் போவதை நிறுத்தி விட்டார்.  உறுத்தும் நினைவுகளில் மனம் குமைந்து குமைந்து கண்களில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது.

சாரைக் காணமல் இரண்டு பேரும் தவித்துப் போனார்கள்.  நான்கு நாட்களுக்குப்புறம் துக்கம்  மனத்தை அழுத்த வீட்டுப் படியேறி உள்ளே சென்றார்கள்.  சார் உள்ளங்கையில் முகத்தைப் புதைத்தபடியே உட்கார்ந்திருந்தார். மௌனமாகத் தலையசைத்து வரவேற்றார்.

“அக்கா உங்களை கேட்டுச்சு” தங்கையா சொன்னான்.

சார் நிமிர்ந்து பார்த்தார்.  அவர் கண்களில் நீர் துளும்பித் திரையிட்டிருந்தது.

அக்டோபர் 1965

(கோணல்கள் தொகுப்பிலிருந்து) 

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

 

One thought on “தொடர் 8: உயிர் – சா.கந்தசாமி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்”
  1. உயிர்மையை உருக்கமாக உணர்த்தும் கதை. இக்கதை மூலம் சா.கந்தசாமிக்கு புக்டே தளம் நல்லதோர் புகழஞ்சலியை செலுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *