காய் யுவான் பீ (1868 -1940)


சீனாவின் கல்வி வரலாற்றை பின்னோக்கி சென்று பார்த்தோமாயின் மிக நீண்ட நெடிய காலமாக ‘ஏகாதிபத்திய தேர்வு முறை’ என்ற சொல்லாடல் நீக்கமற நிறைந்திருந்ததை நாம் காணலாம். சீன அரசு பிரபுத்துவத்திலிருந்து ஒரு தகுதிவாய்ந்த அரசாங்கத்திற்கு மாறுவதற்கான கருவியாக இத்தேர்வு முறை இருந்து வந்தது. கல்வியும் அதிகாரத்தின் அடையாளமாக காணப்பட்டது. ஏகாதிபத்திய தேர்வு முறையில் அர்த்தமற்ற மதிப்பெண்களை குவித்து, அதிகாரத்தின் ஒரு அங்கமாக திகழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட கல்விமுறையின் அட்டூழியத்தில் சிதைந்துபோன எத்தனையோ பிஞ்சுக் குழந்தைகளிலிருந்து வந்த ஒருவன் தனது 30 ஆவது அகவையில் ‘என்ன கல்வி முறை இது? எதற்காக நாம் இதை கற்றோம்! பள்ளிக்கூடங்கள் நமக்கு எதை கற்பித்தன! மதிப்பெண்கள் பெறுவதில் என் குழந்தைப் பருவத்தையும், கடுமையான விதிகளுக்கு உட்பட்டு நான் கற்றுத்தேர்ந்த மொழிப் புலமையை அறிஞர்கள் முன் எடுத்துரைத்து எனது புலமையை நிரூபிப்பதில் என் இளமைப் பருவத்தையும் தொலைத்ததை தவிர வேறொன்றும் இந்த கல்விமுறை எனக்கு தந்து விடவில்லை’ என்று தனது நியாயமான கோபத்தை உந்துசக்தியாக கொண்டு சீனாவின் கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் சென்ற கல்வியாளர் காய் யுவான் பீ.

காய் யுவான் பீ அவர்கள் 11 ஜனவரி 1868 அன்று ஜெஜியாங் மாகாணத்தின் ஷாக்ஸிங்கில் பிறந்தார். அவரது தந்தை ஓர் உள்ளூர் வங்கியின் மேலாளர். வசதியான குடும்பத்தை சேர்ந்தவரான காய் 1890 ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஏகாதிபத்திய தேர்வு முறையின் வரலாற்றில் வெற்றிகரமான இளைய வேட்பாளர்களில் ஒருவரானார். மேலும் தனது 22வது வயதில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன் பின்னர் ஹன்லின் அகாடமியில் உறுப்பினரானார். இது ஒரு அறிஞருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த மரியாதையாகும். இந்த அகாடமியில் 1894-ம் ஆண்டு கம்பைலர் தரத்திற்கு உயர்த்தப்பட்டார்.

காய் அவர்கள் ஒரு சமூகமாற்ற புரட்சியாளராகவும் சீனாவின் இன்றுவரையில் மிக சிறந்த கல்வியாளராகவும் மதிக்கப்படுகிறார்.இவர் 1916- 1926 வரை பெய்ஜிங்கிலுள்ள முக்கிய ஆராய்ச்சி பல்கலைக்கழகமான பீக்கிங் பல்கலைகழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் . இவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் இப்பல்கலைகழகம் சீனாவில் தேசியவாதம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் புதிய உணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

காய் தனது கல்விச் சீர்திருத்த வேலைகளை பழமைவாத கல்வி முறையை சாடுவதிலிருந்து துவங்குகிறார். தன்னுடைய முதல் புத்தகமான பள்ளி கலைத்திட்டம் 1901 இல் வெளியிட்டார். இப்புத்தகத்தில் தனது இளமைப் பருவ அனுபவங்களையும் சமகால சிந்தனைகளையும் பகுப்பாய்வு செய்து பார்க்கிறார். இப்புத்தகத்தில் கல்வியின் அடிப்படைத் தத்துவத்தை மிகவும் வலுவாக தெளிவுபெற கூறியுள்ளார்.

சீனாவின் பாரம்பரிய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளின் காரணங்களை கண்டுபிடிப்பதில் முனைகிறார். தேர்வுமுறைகளை அடிப்படையாக கொண்ட பழைமையான கல்விமுறையின் வரம்புகளை பற்றி சாடுகிறார். அதன் விளைவாக பாரம்பரிய கல்வி முறையின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றார். இவ் விமர்சனங்களை சீன மொழியின் ஆறு சொற்சுட்டுக்குறிப்புகளாக விளக்குகிறார். அவை

· தாழ்வானது
· ஒழுங்கற்ற
· மேலீடான
· அச்சமூட்டும்
· சோர்வடைய செய்கின்ற
· மாயமான

என குறிப்பிடுகிறார். இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணங்களை கீழ்வருமாறு விளக்குகிறார்.

1. கல்வியின் நோக்கம் தாழ்வானதாக இருக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவதை மட்டுமே சொல்லிக்கொடுக்கின்ற சுயநலமிக்க கல்விமுறை இழிவானதாகும்.

2. குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யாத, பழமைவாதம் கொண்ட மற்றும் மாற்றத்தை போதிக்காத பழமையான பாடப்பொருளை கொண்ட கல்வியை ஒழுங்கற்றது என்கின்றார்.

3. மொழியின் உள்ளீடுகளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அப்போதைய கற்றல் கற்பித்தல் முறையினை மேலோட்டமானது என்கிறார்.

4. மாணவர் ஆசிரியர் உறவு முறையை அச்சமூட்டும் என்று குறிப்பிடுகின்றார் ஏனெனில் ஆசிரியர் என்பவர் முழு அதிகாரம் பெற்றவராகவும் மாணவர்கள் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் உரிமை அற்றவர்களாக இருந்தனர்.

5. மனரீதியாக கற்றலுக்கு ஊக்கமளிக்காத மகிழ்ச்சியற்ற சிறைசாலைபோல் பள்ளிகள் இருந்தன. இதையே சோர்வடைய செய்கின்ற என்று குறிப்பிடுகிறார்.

6. பள்ளிக் கல்வி முறையின் நோக்கம் பயனற்றதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கும்போது சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் வெற்றி பெறுவது ஒரு மாய தோற்றம் ஆகும். இது ஏமாற்றத்தை தரகூடியது மற்றும் பயனற்ற முறையாக இருந்தது.

காய் அவர்களுடைய கல்வி பங்களிப்பு:

சீனாவில் புரட்சி ஏற்பட்டு மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சீன குடியரசு உதயமான அச்சமயத்தில் தான் சீன குடியரசின் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார் காய் அவர்கள். புதியதாக உருவாக்கப்பட்ட குடியரசின் கல்வி அமைச்சராக அந்நாட்டின் கல்வி முறை பற்றி காய் பெறும் பொறுப்பையும் அதேசமயம் கவலையையும் சுமந்து கொண்டிருந்தார். தான் படித்த கல்வி முறையில் உள்ள பெரும் குறைகளை தொடரக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதே சமயம் தான் படிக்கும் காலத்தில் இருந்தே மேற்கத்திய கல்விமுறையிலும், மேற்கத்திய நாடுகள் எவ்வாறு விரைவாக வளர்ச்சி காண்கின்றன என்பதின் மீதும் பெரும் வியப்பைக் கொண்டு இருந்தார். காய் அவர்கள் சீனாவில் வளர்ந்திருந்தாலும் அவ்வப்போது மேற்கத்திய நாடுகளுக்கு சென்று கல்வியும் கற்று இருந்தார். எனவே மேற்கத்திய கல்வி முறைக்கும் சீன கல்வி முறைக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டு பார்த்து சீனாவில் கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை எவ்வாறு கலைவது என்பதற்கான திட்டங்கள் காயின் மனதில் இருந்தன. அத்திட்டங்களை மனதில் வைத்துக் கொண்டு மேற்கத்திய கல்வி முறையின் முக்கிய கூறுகளை உட்படுத்தி தங்கள் நாட்டுக்கு ஏதுவான ஒரு புதிய கல்வி முறையை அவர் முன்மொழிந்தார்.

அவை

1) இராணுவகல்வி (military/citizenship)

2) பயன்பாட்டுக் கல்வி (utilitarian)

3) அறநெறி கல்வி (moral)

4) உலகலாவிய கல்வி (a worldview)

5) அழகியல் கல்வி (aesthetic education)

போன்றவையாகும்‌.

புரட்சிகளும் போர்களும் புகை சூழ காணப்பட்ட சீனாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமாக கருதப்பட்டது. சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டை சிதைத்து விடலாம் என்று பிற நாடுகள் கண் கொத்தி பாம்பாக உற்று நோக்கி கொண்டிருப்பதை உடந்த காய் அவர்கள் நாட்டின் மீது மக்களுக்கு பற்றை ஏற்படுத்த நல்ல குடிமக்களை உருவாக்கும் ராணுவ கல்வி தேவை என்று கருதினார். அக்கால கட்டத்தில் சீனா எதிர்கொண்டிருந்த அச்சுறுத்தல்களை கலைய நாட்டின் இளைஞர்களுக்கு தேசியத்தின் மீது பற்றை வளர்க்க வேண்டும், அதற்கு ராணுவ கல்வி உதவும் என்று அவர் நம்பினார். எனவே அதை செயல்படுத்தினார்.

மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை அந்நாட்டு மக்களின் நலனை புறம் தள்ளி, சுயநலமிக்க அரசியல் காரணங்களுக்காகவும், பொருளாதார வளர்ச்சியின் நகர்வுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டதை அவர் வெறுத்தார். கல்வி என்பது அடிப்படையில் இருந்து மக்களின் நலனை, மக்களின் வாழ்க்கை தரத்தை, மக்களின் நல் எண்ணங்களை போற்றி வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறான வளர்ச்சியே ஒரு நீடித்த நெடிய அறிவார்ந்த வளர்ச்சியாக இருக்கும் என காய் நம்பினார். மக்கள் நலனோடு கூடிய நாட்டின் வளர்ச்சியை தரக்கூடிய பயன்பாட்டு கல்வி முறையை அவர் முன்மொழிந்தார். ஜான் டூயி அவர்களின் நடைமுறை கோட்பாட்டில் இவர் உடன்பட்டு இருந்தார். எனவே நடைமுறை தேவைக்கு ஏற்றவாறு கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் விரும்பினார்..

அறநெறிகள் சீனா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகவே என்றும் பார்க்கப்பட்டது. ஆனால் அறநெறிகள் நம்மை அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்வதை அவர் விரும்பவில்லை பாரம்பரியம் என்ற பெயரில் இத்தனை ஆண்டுகளாக நிலவி வந்த மன்னர் ஆட்சி முறை சீனாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததை உணர்ந்திருந்த காய் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்வியலுக்கு ஏற்றவாறு அற நெறிகளை மாற்றி அமைக்க மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கல்விமுறையில் இணைக்க வலியுறுத்தினார். ‘மன்னர் எது சொன்னாலும் கேள்வி கேட்காமல் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது, மன்னர்களை கடவுளாக நினைப்பது, கன்பூசியஸை கடவுளாக வழிபடுவது போன்ற அறநெறிகள் குடியரசின் தன்மையை குறைப்பதாக அவர் சாடுகிறார். எனவே இம்மாதிரியான பிற்போக்குத்தனமான அறநெறிகளை பாடத்திட்டத்தில் இருந்து அறவே எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஆதாரமாகக் கொண்ட அறநெறிகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

21 ஆம் நூற்றாண்டில் உலகமயமாதல் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உலகமே ஒரு சிறிய கிராமம் என்ற வாதங்களும் இன்று இருக்கின்றன. தொலைநோக்கு பார்வை கொண்ட காய் அவர்கள் அப்போதே உலகளாவிய கல்வி முறை வேண்டும் என்று எண்ணினார். மனிதவள அறிவியல் வளர்ச்சியும், ஜனநாயகத் தன்மையும், பொருளாதார வளர்ச்சியும் அன்றைய சீனாவின் தேவையாக இருந்ததை இவர் உணர்ந்திருந்தார். எனவே கல்வியில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்தவை அனைத்தையும் சீனாவின் கல்வி முறையில் உட்படுத்த வேண்டும். ஒரு குறுகிய வட்டத்திற்குள் அல்லாமல் கல்வியின் ‘உலகளாவிய பார்வை’ சீனாவை உலகளாவிய வகையில் வளர்ச்சி பெற செய்யும் என்று எண்ணினார். பழைய காலங்களில் இருந்தது போன்ற தேர்வு முறை ஓட்டப் பந்தயங்கள் ஒரு அடிமைத்தனத்தையே உருவாக்கும், மாறாக அறிவியலும் தொழில்நுட்பமும் உலகளாவிய பார்வையும் சீன கல்வி நிறுவனங்களை மேற்கத்திய தொழில்துளை வளர்ச்சி அடைந்த நாடுகள் போல் மேம்படுத்தும். எனவே உலகளாவிய பார்வை கொண்ட கல்வியை அவர் முன்மொழிந்தார்.

மனிதனின் வாழ்வில் அழகிகள் சார்ந்த தேவைகள் நீக்கமற கலந்திருக்கும் என்று உணர்ந்திருந்த காய் அவர்கள் சீன கலாச்சாரத்தின் அழகியல் தன்மைகளான ஓவியம், இசை, நடனம் போன்றவற்றை புதிய கல்வி முறையில் சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். இது மாணவர்களை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், இலகுவாகவும் வைத்திருக்கும் என்று நம்பினார். அதுவரை அந்நாட்டில் பெருகிக் கிடந்த மதபோதனைகள் இளைஞர்களை குறுகிய பாதையில் கொண்டு சென்று மழுங்கடித்ததை எண்ணிப் பார்த்த காய் அவர்கள், அவ்வாறான மத போதனைகளுக்கு மாற்றாக இந்த கலை அழகியல் சார்ந்த கல்வி அமையும் என்று நம்பினார். இந்த அழகியல் சார்ந்த கல்வி மாணவர்களை சுயநலத்தில் இருந்து அப்பால் கொண்டு சென்று பொதுநலம் மனிதத் தன்மை போன்றவற்றை உணரவும் அவற்றை வளர்க்கவும் பயன்படும் என்று நம்பினார்.

கல்வி சீர்திருத்தங்கள்:

சீன குடியரசின் புதிய கல்வி அவதாரத்தை தீர்மானித்தவர் காய். சீன குடியரசின் வளர்ச்சியின் அஸ்திவாரத்தை அறிவியல் சிந்தனையில் இருந்து கட்டமைக்க எண்ணினார். எனவே தான் தன் பொறுப்பில் இருந்த கல்வியை அறிவியல் தொழில்நுட்பத்தின் அடித்தளத்தில் நிறுவினார். நாட்டை நவீனப்படுத்த கல்வியை நவீனமாக்குவதே முதற்படி என்று எண்ணிய காய் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்.

கல்வியை நவீனப்படுத்துவதை பாரம்பரிய கல்வி முறையின் மீது கடும் தாக்குதலில் இருந்து துவங்கினார். புதிய நாட்டிற்கான சுயமரியாதையை கட்டமைக்க வேண்டுமாயின் கல்வியில் நவீனத்தை நோக்கி தனக்கென ஒரு பாதை அமைக்க வேண்டும் என்றார். எந்த ஒரு நாடாக இருப்பினும் அதற்கென்று பழம் பெருமைகளும் பாரம்பரியங்களும் இருப்பது இயல்பே. ஆனால் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு பழமைவாதத்தில் பொருத்தம் உடையது பொருத்தம் அற்றது என்று பிரித்துப் பார்க்கும் நாடே முன்னேறும். மாறிவரும் சூழலுக்கு தகுந்தாற்போல் தனது கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மாற்றங்களை கொண்டு வர தயாராக இருக்கும் நாடே ஒளிரும். ஆனால் அப்போது இருந்த சீன கல்வியாளர்களோ தங்கள் பண்டை நாகரிகத்தின் அம்சங்களை மாற்ற தங்களை தயார் படுத்தாமலேயே இருந்தனர். நம் பழம் பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பதினால் தொடர் தோல்விகளும் அவமதிப்புகளும் நிகழும்.

காய் அவர்கள் மேற்கத்திய அறிவியல் மீது தீராத தாகம் கொண்டிருந்தார் அந்நாடுகளைப் போல் நம் நாடும் சிறப்புற்று மக்கள் மகிழ்வாக வாழ்ந்திட மாட்டார்களா என்ற ஏக்கம் அவர் மனதில் சுடர் விட்டு எரிந்து கொண்டே இருந்தது. அதற்காக நம் பாரம்பரியத்தை முற்றிலும் மறந்துவிட்டு கண்மூடித்தனமாக மற்றவர்களின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதை காட்டிலும், நமக்குத் தேவையானதை நாமே ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். எனவே சீனாவின் அப்போதைய சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தில் உள்ள சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, நம் நாட்டின் சிறப்பு நிலைக்கு தகுந்த புதிய கோட்பாடுகளை செயல்படுத்தி பார்த்து உண்மையான சீர்திருத்தத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

அவ்வாறு உருவாக்கும் போது முதல் படி நிலையாக மேற்கத்திய நாடுகளின் அறிவியல் ஆர்வத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று என்றார். அறிவியல் ஆர்வத்தை கல்வியின் மூலமாக விதைப்பதே அந்நாடுகளின் வெற்றியின் ரகசியமாக இருக்கிறது என்கிறார். அறிவியல் ஆர்வத்தை உண்டு பண்ணி, அறிவியல் மனப்பான்மையை அதிகரித்து, அதன் மூலமாக மனிதனின் சிந்தனையை விரிவடைய செய்ய வேண்டும். சீனாவின் பழைய கலாச்சாரங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிடாமல் தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுத்து, அத்தோடு மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை சீனாவிற்கு தகுந்தார் போல் வடிவமைத்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த ஒரு கல்வி முறையை பரிந்துரை செய்து கல்வியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்.

கல்வியில் சுதந்திரம்:

கல்வி என்பது மனித அறிவையும், தனிமனித பண்பையும் வளர்க்க வேண்டுமே தவிர, யாருடைய சுயநலத்திற்காகவும் மனங்களை தயார்படுத்தும் ஒரு கருவியாகிவிட கூடாது. இதன் அடிப்படையில் நல்ல கல்வி நிறுவனங்கள் முற்றிலும் எந்த ஒரு தலையீடும், ஆதிக்கம் இல்லாத சுதந்திர நிறுவனமாக (Independent Schooling) கல்வியாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றார்.

அப்போது சீனாவில் கல்வியில் அரசியல் மற்றும் மதங்களின் ஆதிக்கமும் குறுக்கீடும் இருந்து வந்தது. இதை எதிர்த்தார். கல்வி என்பது எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் கல்வியாளர்களிடையே தரப்பட வேண்டுமென கல்வியை காப்பாற்ற ஒரு புதிய நிர்வாக திட்டத்தை பரிந்துரைக்கிறார். அதுவே மாகாண பல்கலைக்கழக திட்டம்.(University Council)

ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க பரிந்துரைத்தார். பல்கலைக்கழகங்கள் அந்த மாகாணத்தின் பள்ளி கட்டமைப்பை பார்த்துக்கொள்ளவேண்டும். பல்கலைக்கழக பேராசிரியர்களைக் கொண்டு ஒரு சிறப்பு கல்வி குழு அந்த மாகாணத்தில் உருவாக்கப்படும் இக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக அதிபரை தேர்ந்தெடுப்பர். கல்வியாளர்கள் அனைவரும் சேர்ந்து விவாதித்து கல்விக் கொள்கையை தீர்மானிப்பார்கள். அந்தந்த மாகாணத்தில் பெறப்படும் வரியிலிருந்து கல்விக்கான நிதி வழங்கப்படும். நிதி பற்றாக்குறை இருப்பின் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு தேவை அரசியல் மற்றும் மத நம்பிக்கைகளின் தலையீடுகள் அற்ற ஒரு சுதந்திரமான கல்விமுறை என்பதை அவரால் முழுமையாக செயல்வடிவம் தரமுடியாமல் போயிற்று. 1922 சீனாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக இது சாத்தியமற்றுப் போயிற்று.

கல்வி என்பது அரசியல் பிடியிலும் மதத்தின் பிடியிலும் இருக்கக் கூடாது என்பதே காயின் சிந்தனை. ஆனால் 1927 ஆம் ஆண்டு சீனாவில் நிறுவப்பட்ட குமிட்டான் தேசியவாத அரசுக்கு காயின் இந்த கல்விமுறை ஏற்புடையதாக இல்லை. பள்ளிகள் சுதந்திரமாக செயல்படுவதை எந்த ஆட்சியாளர்களும் விரும்பவில்லை என்ற கசப்பான உண்மையை காய் புரிந்து கொண்டார். ஆனாலும் தனது கொள்கையில் விடாப்பிடியாக வேலை செய்து கொண்டே இருந்தார்.

கல்வி நிர்வாகம் செயல்படும் விதத்தை மக்கள் முடிவு செய்யட்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். ஜனநாயகமான நிர்வாக முறையில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறார்:

1) பெருவாரியான மக்கள் பரிந்துரை செய்கின்ற திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2) காலத்திற்கு தகுந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சிறந்த நிர்வாகியாகவும் கல்வியாளராகவும் திகழ்ந்த காய் அவர்கள் கல்வியின் அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது ஆபத்தானது என்றார். எப்போதும் தனது பொறுப்புகளை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். கல்வி என்பது நேரடியாக அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களிடமும், கல்வியோடு தொடர்புடையவர்களிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறுவார். பீஜிங் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பேற்று இருந்த காய் உயர்கல்வியில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நிர்வாகமும் ஜனநாயக முறையில் நிகழும் போதே நிகழ வேண்டும் என்று எண்ணிய காய் அவர்கள் கல்வி உதவி திட்டங்களை உருவாக்கி, சிறந்த ஆராய்ச்சிகளையும் ஊக்குவித்து கல்விப் புரட்சியை ஏற்படுத்திக் காண்பித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சென் டியுக்சியோ (Chen Duxiu), ஜான்டூயின் சிந்தனைகளை சீனாவிற்கு அறிமுகம் செய்து கல்வி புரட்சிகளை மேற்கொண்ட ஹூ ஷிஹு(Hu Shih) போன்ற இன்னும் பல தலைவர்களை பீஜிங் பல்கலைக்கழகம் தந்த பெருமை காயின் நிர்வாக முறையை பறைசாற்றும்.

சீனாவின் நவீன கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டு வந்த முதல் மற்றும் மிகப்பெரிய கல்வியாளர் காய். பழமைவாத கல்வி முறையை சாடுவதில் இருந்து, ஐந்து வகையான கல்வி கோட்பாடுகளை பரிந்துரைத்து, அவற்றுக்கு ஜனநாயக முறையில் செயல்வடிவமும் கொடுத்து, கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற முழக்கத்தையும் நிறுவிய காய் சீன கல்வி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் ஆதிக்கமும் பெற்ற கல்வியாளராக போற்றப்படுகிறார்.

இரா. கோமதி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *