யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு , சார்லி தனது கடைசிப் பக்கத்தில் விவரிக்கின்ற அமைதியை வாசகனுக்கும் கடத்திவிடுகிறது. ஆம்! அந்த இளைப்பாறலை, அமைதியின் தரிசனத்தை நம்முள் உணர வைக்கும் அளவிற்கான நேர்த்தியான மொழிபெயர்ப்பு இந்நூலின் தரத்தினைக் கூட்டுகிறது.
“திரைப்படத் துறையில் தோன்றிய ஓர் உண்மையான மேதை சாப்ளின்” – பெர்னாட்ஷா. ஆம் ! பெர்னாட்ஷாவின் கூற்றைப் போலவே இந்தப் புத்தகத்தின் முதல் 70 பக்கங்கள், யதார்த்த வாழ்வின் கடும் இன்னல்களை, சமூக மன உளைச்சல்களை அறம் தவறாது கையாளுகின்ற நிலையிலும் இவர் மேதையாகவே தெரிந்தார். அதனையும் நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
1889 ஏப்16ல் இங்கிலாந்தில் வால்வொர்த்தில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் சுவிட்சர்லாந்து கார்சியரில் அமைதியாக தம் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டது வரையிலான வாழ்க்கைப் பாதையின் ஏற்ற இறக்கங்கள், வேகத்தடைகள், Side viewல் தெரியும் அழகான இயற்கை காட்சிகளான பல சுவாரஸ்ய அம்சங்களே இந்நூல்.
“சார்லியும் அம்மாவும்”, “சார்லியும் சாப்ளினும்”, “சார்லியும் அண்ணன் சிட்னியும்”, “சார்லியும் சிற்றன்னை லூஸியும்” உள்ளடக்கிய அத்தியாயங்களை நீங்கள் கண்ணீர்த் துளிகளை உதிர்க்காமல் கடந்து சென்றுவிட முடியாது.
ஒரு கோப்பை தேநீரை தம் அம்மாவிற்குத் தர இயலாத அளவிற்கு வறுமை ஏற்பட்டதால், அவரது ஊட்டச்சத்து சமநிலை பாதிக்கப்பட்டு அவரை மனநலக் காப்பகத்திற்கு அனுப்பும் அளவிற்குப் போனதால் தனிமைப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சார்லியின் பால்யகாலம் மிகவும் கொடுமையானது.
அம்மா மனநலக் காப்பகத்திலே, அப்பா சிற்றன்னையோடே, அண்ணன் கப்பலிலே உணவு பரிமாறும் ஊழியனாக, அவரவர் சொந்த நிமித்தமாக சிக்குண்டு விட, தனித்து திரிந்த சார்லி், தனது மனதை சமநிலையாக்க செய்தவை கண்ணீர் வரவழைக்க கூடியவை. இதன் விளைவாகத்தான் அவரது தனிப்பட்ட நகைச்சுவைத் திறன் காலத்தால் அழியாத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை உறுதியாக கூறலாம்.
அப்பாவிடம் முதலும் கடைசியுமாக வாங்கிய முத்தம் அதுதான் எனக் கூறும்போதும், அண்ணன் சிட்னியின் அப்பா வேறு, தனது அப்பா வேறு என்றாலும், உச்சகட்ட உறவு பாராட்டி தன் வாழ்நாளில் இறுதி வரை ஒருவருக்கொருவர் உதவியாக இருந்ததும், வேறுபாடு் காட்டாத சாப்ளினின் தந்தை பாசமும் இன்றைய குடும்ப உறவுகள் கொண்டாட வேண்டிய உன்னதநிலை.
நாடகத்துறையில் வெறும் 3 டாலர் ஊதியத்திற்கு (வாரஊதியம்) சிறு கதாபாத்திரங்களில் நடித்து இங்கிலாந்தில் புகழ்பெற்று, பின்னர் அமெரிக்காவில் அதே நாடக மேடைக்காக சென்று அங்கே தனது தனிப்பட்ட நடிப்பினால் சிலரால் கவரப்பட்டு, பின்னர் மெல்ல 2 ரீல் திரைப்படங்களில் ஒப்பந்த அடிப்படையில் நடித்து, அதன் பிறகு அண்ணன் சிட்னியின் முயற்சியினால் சொந்தமாக ஒரு திரைப்படத்தில் முதல் தர நடிகனாக நடிக்கத் தொடங்கியது வரையிலான அவரது வாழ்க்கை அனுபவங்கள் சிறந்த தன்னம்பிக்கை மற்றும் நேர்மறைக்கான உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இங்கிருந்துதான் அமெரிக்கா மற்றும் அவரது திரைப்பட வாழ்க்கை தொடங்குகிறது.
அதில் ஒரு முக்கியமான உதாரணம் பக்கம் -112ல்
“சார்லி, நீ இப்போது கோடீஸ்வரர்களில் ஒருவனாகிவிட்டாய். ‘
நான் அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்த ஒரு சிறு துண்டை சுற்றிக் கொண்டே வயலின் இசைத்தவாறே நான் சொன்னேன்:” ஹூம்ஹூம் வியப்பாயிருக்கிறது.”
உடனே சிட்னி குபீரென்று சிரித்துக் கொண்டு சொன்னான். “பன்னிரண்டு லட்சத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது உன் எதிர்வினையையும் தோற்றத்தையும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.”
இந்த உரையாடல் நமக்கு சார்லியின் இயல்பை மிக யதார்த்தமாக புரிய வைத்து விடுகிறது.
இதே இயல்புதான் அவரது மணவாழ்க்கையிலும் நிகழ்ந்தது. மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு, மூன்றாவது திருமணம் மட்டுமே அவருக்கு உண்மையான மகிழ்ச்சியை அளித்து இறுதி வரை துணை நின்றது.
முதல் இரண்டு மண முறிவுக்கும் சார்லி எந்த வகையிலும் காரணமில்லை. சினிமா எனும் நிறுவனத் தொழில்முறை அணுகுமுறையால் சுரண்டப்பட்டதே பிரதான காரணம்.
பெருமுதலாளிகள் பக்கம் திரைத்துறை செல்வதைத் தவிர்க்கும் பொருட்டே United Artist Films எனும் தயாரிப்பு நிறுவனத்தை தனது ஆதரவாளர்களுடன் சொந்தமாகத் தொடங்கி, காலத்தால் அழியாத முழு நீளத் திரைப்படங்களைத் தயாரித்து நடித்து வெளியிட்டார்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் இரண்டாம் உலகப் போரும், பேசும் படங்களும் சிக்கல்களை கொண்டு வந்தன.
மௌனப் படங்களுக்கு இனிமேல் எதிர்காலமில்லை என்று பலராலும் ஒதுக்கப்பட்ட சூழலில், “நானொரு சைகை மொழிக்காரன், அந்தக் கலையில் நான் இணையற்றவன்” என்று அசாத்தியத் துணிச்சலில் புகழ்பெற்ற City Lights படத்தைத் தயாரித்து வெளியிட்டு 4 இலட்சம் டாலர் நிகர லாபத்தின் மூலமாக பிரம்மாண்ட வெற்றியை எட்டினார்.
ஆனால், இரண்டாம் உலகப் போரின் போது இவருக்குக் கிடைத்த அடிதான் இவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு மீண்டும் இங்கிலாந்துக்கே செல்ல வைத்தது.
மனித நேயத்திற்காக குரல் கொடுத்தமைக்காக இவர் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சட்ட ரீதியான தாக்குதல்களால் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டு பெரும் உளைச்சலுக்குள்ளானார்.
ரஷ்யப் போருக்கான நிதி சேகரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இப்படிப் பேசியதே விமர்சனத்திற்குக் காரணமாகிப் போனது. கூட்டத்தின் துவக்கத்தில் “தோழர்களே!” என்று நான் அழைத்தபோது சபை சிரித்தது, அமெரிக்கா சிரித்தது. இருப்பினும் நான் தொடர்ந்தேன்.”நான் கம்யூனிஸ்ட் அல்ல. நான் ஒரு மனிதன். மனித உணர்ச்சிகள் எனக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். பொதுவுடைமையாளர். இந்த சுயசரிதமும் அங்கிருந்தே எழுதப்பட்டதும் கூட.
வறுமையால் ஆட்கொண்ட சார்லியின் குழந்தை கால இங்கிலாந்தும், சார்லியின் முதுமை கால இங்கிலாந்தும் வேறு வேறானது.
இதற்கு இடையிலான சார்லியின் போராட்டமும், வாழ்க்கைப் படிநிலைகளும் நமக்கு தைரியத்தினையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லது.
சார்லி – ஐன்ஸ்டீன்
சார்லி – ஐசன்டைன்
சார்லி – சர்ச்சில்
சார்லி – H.G.வெல்ஸ்
சார்லி – காந்தி
சார்லி – சூயென்லாய்
சார்லி – நேரு , இந்திராகாந்தி
சார்லி – பெர்னாட்ஷா
சார்லி – ஜப்பான் கொலை முயற்சி
உள்ளிட்ட பல்வேறு சந்திப்புகள் , பயணங்கள் கூடுதல் சுவாரஸ்யத்தை அளிக்கின்றன.
1972ல் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருது வழங்கிய வீடியோ இன்னும் யூடியூப்பில் காண கிடக்கிறது. 12 நிமிடங்கள் எழுந்து நின்று தொடர்ச்சியாக கரவொலி எழுப்பியதுதான் இதுவரையிலான ஆஸ்கார் வரலாற்றில் சாதனையாக உள்ளது.
1977 டிசம்பரில் இறந்தார் சார்லி. புதைக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே சவப்பெட்டி இரண்டு நபர்களால் திருடப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை 1978 மே வரை நடந்தபிறகே புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகே மீண்டும் பழைய இடத்தில் புதைக்கப்பட்டார்
தனது சுயசரிதத்தின் இறுதியில் சார்லி குறிப்படுவதோடு முடிப்பதே சிறப்பானதாக இருக்கும்.
“மகிழ்ச்சி ஒரு எதிர்மறை நிலை என்று ஷோப்பன்ஹோவர் சொன்னார். ஆனால் நான் முரண்படுகிறேன். கடந்த இருபது வருடங்களாக மகிழ்ச்சியின் அர்த்தம் என்னவென்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு சிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கான அதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட்டது. இதைப் பற்றி அதிகம் எழுத முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நான் விரும்புகிறேன். நேசம் உட்கொள்ளும் ஒன்று அது. களங்கமற்ற அன்பு எல்லா ஏமாற்றங்களையும் மிகைத்த பேரழகு கொண்டது. ஏனென்றால் அது ஒருவரால் வெளிப்படுத்த முடிவதை விட அதிகமானது. நான் ஊனாவுடன் வாழும்போது,அவள் சுபாவத்தின் ஆழமும் அழகும் எனக்கு நிரந்தரமான ஒரு தரிசனம்..
இந்த மகிழ்ச்சியை உட்கொண்டு, சில சமயம் அஸ்தமன நேரத்தில் எங்களின் உப்பரிகையிலிருந்து, விசாலமான புற்பரப்புக்கு மேலாக அங்கே தூரத்திலுள்ள ஏரியைப் பார்க்கிறேன். இந்த மனநிலையில் அவற்றின் அழகான அமைதியை அனுபவிப்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் நான் யோசிக்கவில்லை*
ஆம்! அந்த அமைதி சாதாரண அமைதியல்ல. தொடர்ந்த புறக்கணிப்புகளாலும், ஏதேச்சதிகார அரசியல் நெருக்கடிகளாலும் அலைக்கழிக்கப்பட்ட புயலுக்குப் பின்னான அமைதி அது. அதே அமைதியோடே இன்றும் நூற்றாண்டு கடந்தும் நம்மோடே வாழ்க்கையைக் கொண்டாட இன்னும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார் Dear சார்லி சாப்ளின்.
என் கதை சார்லி சாப்ளின்
தமிழில் : யூமா வாசுகி
வெளியீடு்:NCBH, விலை : ரூ.190/-, 220 பக்கங்கள்.
அறிமுகம் : செ.கார்த்திக்
இதற்கு முன் சார்லி சாப்ளின் அவர்களை தெரியும் இந்த அலவில் நான் அறிந்தது இல்லை, தங்கள் விமர்சனத்துனூடே சாப்லினின் வாழ்வியல் வடுக்களில் வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளரை அறிந்து கொண்டேன்.
நன்றி