யாழ் ராகவன் கவிதைகள்கவிதை 1:

எவராலும் யூகிக்கவியலாத
முடிவுகளோடு நிகழ்ந்துவிடக்கூடுமோ
நிகழும் வன்கனவு

அழைப்பில் கரைந்து கூடும்
ஒற்றுமை உயிரி
பெயரில் மட்டுமே நிலைத்திருக்கிறது.

சேவிகாவின் வயிற்றில்
திணிக்கப்பட்ட சுக்கிலத்தில்
முளைத்தெழுந்த மூர்க்கத்தின் நஞ்சு
வேறு பாத்திரங்கள் தேடி அலைகிறது

விஷமூறிய ராஜ கொடுக்குகள்
நன்கு உரம் பெற்றுவிடும்
ஐந்து ஆண்டு அவகாசத்தில்

எப்போதும் எதனாலும்
தீர்வுக்கு வராத கனவின் இரவு
இறுதிச்சுற்றுக்கு ஆயத்தமாகிவிடும்2 இரவோ பகலோ
************************
இரண்டில் ஒன்று
இன்பம் துன்பம்
அதிலும் அப்படியே

மீட்சியின் பாதையை
தேர்தெடுக்க
யாரும் தயாரில்லை
அதுவே மாறும்
என்பதே தேவ வார்த்தை

கரைகளில் ஒரு பகுதி
மட்டுமே பயணிக்கத் தோதானது
பூனையின் கண்களுக்கு
தப்புவதே தற்போதய சாகசம்

கடல் மீனைச் சமைத்தபோது
உப்பு தேவைப்படுகிறது
எப்பொழுதும் முன்னோக்கியே சிந்திப்பவர்கள் இப்பொழுது எல்லாம் சும்மா இருக்கிறார்கள்

சொர்க்கத்தில் இடம் பிடிக்க மனு போட்டுக் கொண்டிருக்கும்
பஞ்சு தலை மூதாட்டியிடம்
கேட்கதோன்றுகிறது சுவனம் சமதளமான வெளிதானா என…கவிதை 3:

சொற்களை எதிர்பார்த்த
நேரத்தில்
கொட்டியது வானம்

இருள் கடலில் மூழ்கும் பொழுதுகளில்
துயர் வெறுமையை
ஒரு கணமேனும் மடைமாற்றும்
ஒளிச்சாட்டை

கப்பிய மௌன வெளியை
மேலிருந்து உரசியிறங்கும் கற்கள்
வேரின் வெம்மையை
கிளைநீங்கிய இலையென
கூட்டுப்புழுவோடு கடத்தி செல்லும்

உருண்டோடும் வெள்ளப்பெருக்கில்
யாவும் வடிந்தபின்
எதனையும் பாராமல்
இப்போதும் முகை அவிழ்த்திருந்தது
கொல்லையில் செம்பருத்தி.

— யாழ் ராகவன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)