40 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பு காணும் விட்டல்ராவின் செவ்வியல் தன்மை மிகுந்த நாவல் இது.
ஓவியர்களின் வாழ்வை நுண்மையாக அணுகி, மிகையின்றி எழுதியிருக்கிறார் ராவ். நனவோடைக் குறிப்புகளாக, நேர்கோட்டில் அல்லாத கதை சொல்லல் உத்தியுடன் எழுதப்பட்டிருக்கும் சிறப்பான நாவல் இது.
சென்னை நகரின் புரசைவாக்கம், வேப்பேரி, திருவொற்றியூர் பகுதிகளில் காண நேர்ந்த ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் பழைய படத்தின் பாடல் ஒன்றில் அதிவேகமாக நடனமாடிய நடிகரை பார்த்த போது, பெரும் வியப்பாக இருந்தது. அந்த நடிகர் ‘சந்திரலேகா’ ரஞ்சன்.
அன்றைய நாட்களில் அப்படி ஒரு துள்ளலான இசையும், நடனமும் ஒரு தமிழ்ப்பட பாடலில் இடம்பெற்றது மிகவும் ஆச்சரியமான விஷயம். சமகாலத்தில் இருந்து மிகவும் முற்போக்காக சிந்திப்பவர்களை வெற்றி பெற இங்கு யாரும் அனுமதிப்பதில்லை.
நாவலில் நிரஞ்சனாக நடமாடுகிறார் அவர். பெரிய வெற்றிகள் அடையாத மனிதனாக நீடிப்பதற்கு காரணம், தான் ஒரு நடிகன் என்பதால்தான் என்று வருந்துகிறார்.
நால்வர் குழுவிற்கு சிந்தியா அளிக்கும் அரவணைப்பும், சக்கரவர்த்தியுடனான அவளது விலகலும், ஆங்கிலோ இந்திய மனிதர்களின் குணாதிசயங்களுக்கான சான்றாக அமைகிறது. ‘உன்னுடையது விற்கும், என்னுடையது நிற்கும்’ சக்கரவர்த்தியின் மேற்கண்ட வரி எவ்வளவு பொருள் பொதிந்தது என்று விளங்குகிறது.
விமர்சகர் நிலையில் உள்ளவர்கள் பக்கச்சார்பு கொள்வது கலைக்கும், கலைஞர்களுக்கும் பெரும் பின்னடைவாக அமைகிறது.
காகிதக் கப்பல் படையை, காகிதப் படகு என்று குறிப்பிடுகையில் தெறிக்கும் வன்மமும், பிரசன்னனின் நடுநிலை மிகுந்த விமர்சனப் பாங்கும், வராக மூர்த்தியின் செய்தி அறிவிப்புகள் போன்ற விமர்சனங்களும், ‘இந்திரப்பிரஸ்த துரியோதனன் போன்று அவன் அமர்ந்திருந்தான்’ போன்ற வரிகளும் இந்நாவலின் செவ்வியல் தன்மையை உறுதிப்படுத்துபவை.
காலமும், வெளியும் ஓவியக்கலைக்கு உயிர், மெய் போன்றது என்ற விட்டல் ராவின் கூற்றுப்படி ‘காலவெளி’ என்ற தலைப்பு நாவலுடன் வெகுவாக ஒன்றிப்போகிறது.
சிஸ்டர் பால் நடத்தும் மிகை உணர்ச்சி நாடகங்களும், அம்பாபாய் கோபிநாத் நல்ல கலைஞர்களுக்குத் தரும் தார்மீக ஆதரவும் சிறப்பானவை.
பெரும் கலையார்வம் இல்லாதிருந்த போதிலும் முருகேசன், தர்மனின் தந்திரமான வணிகச் செயல்பாடுகள் வாழ்வாதாரம் குறித்த அச்சத்தால் நிகழ்பவை.
உன்னிகிருஷ்ணனை, சக்கரவர்த்தியை மிஞ்சிய கலைஞனாக ருடால்ஃப் வலிய முயன்று கட்டமைக்கிறான்.
‘தொப்புளுக்கு மேல் கஞ்சி தளும்பும் வர்க்கம்’ என்ற வரி சிந்திக்கச் செய்கிறது.
முகம் மலர்ந்தது, முகம் பற்றி எரிந்தது, போன்ற சொல்லாடல்களை புனைவுகளில் வாசித்திருப்போம். ‘முகத்தில் தீ மலர்ந்தது’ என்று எழுதுகிறார் விட்டால்ராவ்.
இலக்கியம், இசை, சினிமா, ஓவியம் உள்ளிட்ட துறைகளில் கலை மேதமையுடன் செவ்வியல் தன்மை மிகுந்த படைப்புகள், தட்டையான புரிதல்களுக்கு எட்டாத நிலையை அடைந்து விடுகின்றன.
அறிவுக்கும், புரிதலுக்கும் அப்பாற்பட்ட படைப்புகளை மனித மனங்கள் கேலியாக எண்ணுகின்றன.
நவீன ஓவியங்களை எளிமையாக புரிய வைக்கும் பணி கலைஞர்களுடையது அல்ல என்ற சக்கரவர்த்தியின் வாதம் நியாயமானது.
இந்தியாவின் உச்சபட்ச இலக்கியப் பரிசை வென்ற எழுத்தாளர், ஓவியப் பின்னணி கொண்டு வெளியிட்ட தட்டையான நூலினால் பெரும் அறச்சீற்றத்துக்கு உள்ளாகி விட்டல் ராவ் இந்நாவலை படைத்திருக்கிறார்.
நல்ல படைப்புகள் காலத்தால் அழிவற்றது என்பதைப் போலவே ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் புறந்தள்ளப்படுவதும் தவிர்க்க இயலாததாகும்.
அவ்வகையில் ‘காலவெளி’ தனக்காண செவ்வியல் தன்மையை நிலை நிறுத்திக் கொள்வதுடன், தவிர்க்கவியலா படைப்பாக நீடிக்கிறது. விட்டல்ராவின் பிற நாவல்களும் விரைவாக மறுபதிப்பு கண்டால் தமிழ் இலக்கியத்திற்கு அது நன்மை அளிக்கும் விஷயமாக அமையும்.
நூலின் தகவல்கள்
நூல் : “காலவெளி”
ஆசிரியர் : விட்டல் ராவ்
பதிப்பகம் : ஜெய்ரிகி பதிப்பகம்
பக்கங்கள் : 214 பக்கங்கள்
விலை : ரூ.250
எழுதியவர்
சரவணன் சுப்பிரமணியன்
கணித ஆசிரியர், மதுராந்தகம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.