நூல் அறிமுகம்: கவிஞர் இந்திரன் அவர்களின் “காற்றுக்கும் திசை இல்லை (கவிதைத் தொகுப்பு ) தொகுப்பும் , தமிழாக்கமும்” – வசந்ததீபன்சோகத்தால் நனைந்து வதைபடும் இந்த மரம் சாக முடியவில்லை.
தொகுப்பின் தொடக்கத்தில் இந்திரன் அவர்கள் ஒரு கவிதை எழுதியுள்ளார்… அற்புதமான கவிதை. மொழிப்பெயர்ப்பின் பாயிரமாய் மனதை கவர்கிறது. அக் கவிதை

” இந்திய இலக்கியக்
கடலோர மணல் வெளியின்
நகத்தளவு கிளிஞ்சலிலும் வானவில்கள் பல தூங்கும்
‌ கண்ணாடி நண்டுகள்
அடிப்புறத்து மணலையெல்லாம்
அள்ளி வந்து மேல் குவிக்கும்
தூரத்துப் பல மொழிகள் திரட்டி வந்து செவி நிறைக்கும்
காற்றினது கையினிலே
திசை காட்டும் கருவியில்லை.
மண்ணுக்குள் வேலியிட
காற்றுக்கு மனசில்லை.”

– இந்திரன்

44 கவிதைகள் , 4 சிறுகதைகள் , 2 கட்டுரைகளென தொகுப்பு நிறைவானதற்கான அறிகுறி முதலிலே திருப்தி கொள்ள வைக்கிறது. கதைகளும் கவிதைகளும் கலந்து கட்டியே இருக்கின்றன.

அவர் முன்னுரையில்…இந்திய இலக்கியத்தின் தன்மையையும் , தனி மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் அதன் பங்கையும் , உலகப் பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் காரணியையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.

அதோடு இன்றைய இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவி இருக்கும் பல் வேறு மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களின் எழுத்துக்கள் பற்றியும் , தமிழன் சந்திக்கும் பிரச்சனைகளின் பல்வேறு முகங்களை.. அவர்கள் எப்படி தரிசிக்கிறார்கள் என்பதையும் , காஷ்மீரிலிருந்து கன்னடம் வரை ஒரியாவிலிருந்து மலையாளம் வரை பிறமொழி படைப்பிலக்கியத்தில் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பி…
அக்கேள்விக்குப் பதில் ஒர் நல்ல இலக்கிய அனுபவம் ஆகும். இந்த இலக்கிய அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும் ஒருமுயற்சி தான் இந்நூல் என்கிறார்.

இந்நூலில் 14 மொழிகளின் இன்றைய பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் , கவிதை , கட்டுரையை தமிழாக்கி தந்து இருப்பதாகச் சொல்கிறார்.

நேஷனல் டிரஸ்ட் , சாகித்ய அகாதமி , இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் போன்ற அரசு அமைப்புகளும் , ஆத்தர்ஸ்டு கிட்டு போன்ற அமைப்புகளும் பணி செய்தாலும் இன்றைய சமுதாயத்தையும் , அதன் இலக்கியத்தையும் வாதுக்கழைக்கும் எதிர்ப்பு __இலக்கியவாதிகளையும் , அதி நவீன
சோதனையாளர்களையும் தள்ளி வைத்து விடுவதாக வேதனைப்படுகிறார் .மற்றும் உண்மையில் ஒதுக்கித் தள்ளப்படும் இவர்கள் தான் மண்ணின் மனசாட்சிகளென்றும் , இவர்களின் இடையறாத முயற்சிகளால் தான் இலக்கியத்தின் எல்லைகளை விரிவுபடுத்த முடியுமென அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஹரித்துவாரில் அள்ளிக் குடித்த நீர்..ஆயிரம் ஆண்டுகளாக இடையறாது பாயும் கங்கையின் பரவசத்தை.. இந்த தொகுப்பைப் படைத்த போது தான் அடைந்ததாக பெருமிதம் கொள்கிறார். ஆனாலும் இது ஒரு கை நீர் தான் எனக் கூறி மேலும் மேலும் மொழிபெயர்ப்புகள் பெருகிட தன் ஆசையை வெளிப்படுத்துகிறார்.

இந்திய இலக்கியம் __ ஓர் வரலாறு பற்றிய கட்டுரையில் இந்தியாவைப் பற்றியும் , இந்திய மொழிகள் பற்றியும், 19 நூற்றாண்டின் வெள்ளை ஏகாதிபத்தியம் முன் வைத்த தேசீய இலக்கியம் பற்றியும் இந்தியக் கவிஞர்களின் அறிமுகத்தையும் , காலந்தோறும் மாறி வந்த நமது இலக்கியம் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு நமக்கு புதிதல்ல என்றும்.. கம்பன் முதல் பலரை நம்முன் இக் கட்டுரை கொண்டுவருகிறது. மேலும் பழைய மொழிபெயர்ப்புகள் யாவும் ஏதோ உள்நோக்கங்களுடன் மத நம்பிக்கைகளை உருவாக்கவும் பயன்பட்டன என்பதையும் , மேலை நாட்டு மொழிபெயர்ப்பாளர்களில் கீழை நாட்டுத்தத்துவத்தினால் கவரப்பட்டவர்களாய் இருப்பினும் , ஒரு காட்டுமிராண்டித்தனமான(Exotic) இந்தியாவைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினால் செய்யப்பட்டவையே அதிகம் என்பதையும் இக் கட்டுரையில் அவர் கூறுகிறார்.

தன் மொழிபெயர்ப்பு மேற்குறித்தவைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதெனவும் , சக மனிதன் மீதுள்ள அன்பின் காரணமாக அவனது ஆன்மாவின் குரலாக இருக்கும் இலக்கியத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசையிலும் , மனிதகுல மேம்பாட்டிற்குத் தொண்டாற்றும் மிக உன்னதமான கருவிதான் இலக்கியம் என்ற வகையில் இது இலக்கிய நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படுகிறது எனவும் அவர் தன் மனசைப் பதிவிடுகிறார்

செரபண்டராஜுவின் கவிதை ஆரம்பக் கவிதையாக..மனிதனுக்கு இயற்கையிடம் நேசமும் அதே சமயத்தில் தன்தேவையையும்.. இந்த வேண்டும் என்ற கவிதையில் கவிஞர்தெரிவிக்கிறார்.

அம்ருதா ப்ரீதம்‌ கவிதையில் காலம் எப்படி நண்பனாகவும் , அந்நியனாகவும் மாறி காயம்பட்டு தன் ஜன்னலில் துடிப்பதை சுட்டியிருகிறார்.

பசியும் நிலவும் எனும் காஷ்மிமீரியக்கவிதை..அப்பமான நிலா வெட்டுக்காயமாகவும் , ஒரு வெள்ளிக் கள்ள நாணயமாக வரும் , அடுப்பாகவும் மாறுகிறது..மலைகள் பசிக்கிடக்கின்றன..என்பதைச் சொல்லி கவிஞர் தன் பசித்த வயிற்றிடம் நிலவொளியைப் பார்த்து நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஜன்னலை வெள்ளைத் தாளாக்கி.. முத்தத்தால் கவிதைப் புத்தகமாக்கி..அபூர்வ வார்த்தைப் பதிவேடாக்கி.. சித்திரத்தை சட்டமிட்டு ..செய்தித்தாளாக்கி மாயம் செய்கிறார் உருதுக்கவிஞர் வா கவிதையில். அதில் காலத்தின் ரத்தம் உன்மேல் பட்டு உறைந்து விடுமெனவும் சிறு பிள்ளைகளின் கிறுக்கல்கள் இடம் பெறுமெனவும் எச்சரிக்கிறார்.

நாவல் என்பது கோணிப்பை அல்ல!- இந்திரன் பேட்டி | நாவல் என்பது கோணிப்பை அல்ல!-  இந்திரன் பேட்டி - hindutamil.in
கவிஞர் இந்திரன்

மழைக் கடவுளும் வானொலிப் பெட்டியும் பஞ்சாபி சிறுகதை..கர்தார் சிங் துக்கல் எழுதியிருக்கிறார். ரசனையான கதை . எளியவர்களின் எளிய ஆசைகள்… கனவுகள்… அவைகள் நிறைவேறுகையில் உண்டாகும் சந்தோஷம் என இக்கதை சொல்கிறது. அவன் நகராட்சிப் பணியாள். விடுமுறை என்பதே அவனுக்குக் கிடையாது.தெருக்களில் குறைந்த தூசிகள் இருக்குமானால் தண்ணீர் தெளிக்க வேண்டும். மழை நாட்களில் அவன் உடம்பு வலிக்கும் அளவுக்கு தூங்குபவன். தெருவில் தண்ணீர் தெளிக்கும் போது காய்ந்த தெருக்களிலிருந்து எழும் மண்வாசனை , பால் குடிக்க தாயின் முலையில் மூக்கைப் புதைக்கும் குழந்தைக்குக் கிடைக்கும்அரிதார வெதுவெதுப்பைப் போல அவனுக்குத் மிகவும் பிடிக்கும். அவனுக்கு கல்யாணகிறது. அவன் மனைவி வீராவின் சின்ன ஆசையான சந்தைக்கு போவது , குருத்தவாராவுக்குப்போவதைக்கூட தன் வேலையால் நிறைவேற்ற முடியவில்லை. அவளும் குழந்தை பிறந்த பிறகு எல்லாம் மாறிவிடும் எனக் காத்திருக்கிறாள். எதுவும் மாறிவிடவில்லை. அவள் வெளியே அழைத்துப் போகக் கேட்டால்..கடவுளிடம் மழையைப் பெய்யச் சொல். குருத்துவாராவுக்கு நாமும் போகலாம் என்பான்.

வீராவும் பல முறை கடவுளிடம் வேண்டுவாள். மழைபெய்யும். சந்தோஷமாக தன் கணவனோடு பூங்கா , குருத்துவாரா , சந்தை என்று போய்வருவாள். பக்கத்து வீட்டிலிருந்து வெளிவரும் வானொலி சத்தம் முதலில் எரிச்சலூட்டி பின்பு ரசிக்க வைக்கும். அதிலிருந்து ஒரு நாள் பாட்டுக்குப் பின் குரல் அறிவித்தது…இன்று மழை வரும் என்று. அதன்படி மழை பெய்தது. இவளுக்கு மழை பெய்தது பற்றி வானொலிக்குத் தெரிந்தது எப்படி என ஆச்சரியப்பட்டாள் எனகதை சுவராஜியமாக போகும். கதையின் முடிவில் கடவுளை ஏன் திட்டினாள் ? என்பதுதான் உச்சகட்டம்.

இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தவர் பிரிட்டிஷ் நந்தி. அவர் மீண்டும் என்ற கவிதை எழுதியுள்ளார். இழந்த காதலைப் பற்றிய நினைவூட்டல் குறிப்பாக இருக்கிறது அக் கவிதை.

விடுதலையின் சூக்சமத்தைத் தன் கவிதையில் அழகாக வெளிப்படுத்துகிறார் ஹிந்திக் கவிஞர் ராஜேஷ் ஜோசி.

தூக்குக் கயிறு என்னும் கவிதையில் புரட்சிகர சிந்தனைகளை கொண்ட தெலுங்குத் கவிஞர் செரபண்ட ராஜு எளிய சொல்லாடல்கள். லாவகமான விவரிப்புகள்மூலம் நம்மை எழுச்சி கொள்ளச் செய்கிறார்

செலவழித்த புன்னகைகள் ஒரு அவலச்சுவை தரும் கவிதை.

இந்த செழிப்பான உலகத்தில் நாம் தவிர்க்க முடியாத விபச்சாரிப் பிள்ளைகள் என அஸ்ஸாமில் கவிஞர் மனக்குறை பட்டுக்
கொள்கிறார்.

கமலதாஸ் கொடி கவிதையில் நம் தேசீயக் கொடியின் மூலம் இந்திய வாழ்வின் கசப்பான நிகழ்வுகளின் குரூரங்களை காட்சிப் படங்களாக நம் முன் கொண்டு வந்து காட்சிப்படுத்துகிறார். அதில் அவர் ,
“உன் பழைமையான
பொருளற்ற கர்வத்துக்கு அசிங்கமான
கெளரவமான காட்சிகளுக்கு
உன் வண்ணங்கள் சொல்லும் பொய்களுக்கு
நீ கொடுக்கும் வீணான நம்பிக்கைகளுக்கு
நீல வானில்
உன் சாவின் நடனத்துக்கு
விடை கொடுக்கும்
நேரம் இது “ என கனல்கிறார்.

முராரி முகோபாத்ய தன் காதலியைப் பார்த்து , ” நிலவாக இருக்காதே.. நம் எளிய குடிசையில்
நமக்குத் தேவைப்படுவதெல்லாம் நெருப்பு , நெருப்பு , நெருப்பு என்கிறார்.

மரணத்தின் பக்கத்து அறை ஒரு சர்ரியலிஸக் கவிதை.

ஊமைச் சதங்கையில் ஒரியக்கவிஞர் பின்னோத் நாயக் தன் காதலியிடம் இறைஞ்சு நிற்கிறார்.

இந்தியாவை ஒரு ஆலமரமாய் உருவகப்படுத்தி… எந்நிலையிலும் அதன் நிலைத் தன்மை குலையாதென அறுதியிடுகிறார் உமாஷங்கர் ஜோஷி.

நீராவி ஒரு தன்னிரக்கக் கவிதை.

இந்தியக் கவிதை _ வரலாற்றுப் பார்வை எனும் கட்டுரை இந்தியக் கவிதையின் ஒரு எக்ஸ்ரே பதிவு. அதில் சில முத்துக்கள் _ “விடுதலைக்குப் பின் வந்த கவிதையின் ஒரு வெளிப்படையான போக்கு என்னவென்றால் , கவிஞர்கள் பழைய இந்தியக் காவியங்களின் பின்னால் போக விரும்பியது தான்.”

“பழமை ஒரு சாய்மானம் , ஒரு உந்து விசை , ஒரு கிரியா ஊக்கிமட்டுமே.”

“முதலாவதாக யாரும் கவிதையை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ முடிவதில்லை.”

Valar.in | Tamil Online Magazine | Page 46

சர்வதேசக் கவிஞர் என அழைக்கப்படும் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். மார்க்ஸீய அழகியலை தன் கவிதைகளில் வெளிப்படுத்துவார். சாகித்ய அகாதமியின் இந்தியன் லிட்டரேஜர் எனும் இரு மாத இதழின் ஆசிரியராக பதவி வகித்தவர். அற்புதமான கவிதைகளை இந்திய கவிதை உலகிற்கு படைத்தளித்தவர். அவர் உழைப்போரின் குரல் எனும் கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் புது உருவகங்களாலும் படிமங்களாலும் கிளர்ச்சியூட்டுகிறார்.

பாரத் பூஷனின் உடலற்ற வாழ்க்கை அந்நியமாதலை நினைவூட்டும் கவிதை.

வீட்டிற்குத் திரும்பவில்லை எனும் கவிதை பேராசையினைச்
சொல்லும் ஒரு பூடகக் கவிதை.

யாருக்குத் தெரியும் மனச்சலனங்களைத் தெரிவிக்கும் கவிதை.

கணவன் எனும் கவிதையில் ஆண்திமிரின் கோரம் தாண்டவமாடுகிறது.

நிழலைத் தொடரும் கிளி ரசனையான ஒரு காதலைச் சொல்வது.

சுனில் கங்கோபாத்யாய் ஒரு வங்க நாவலாசிரியர். அவரின் சிறுகதைகளும் , நாவல்களும் வாழ்வின் கசடுகளை வெளிக்கொணர்பவை. இந்த தொகுப்பில் ஒரு பெண்ணும் சில மலர்களும் என்ற சிறுகதையினை எழுதியிருக்கிறார். மிக அற்புதமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத நுண்ணுணர்வுகளைக் கொண்ட கதை. இது தான் இந்த தொகுப்பின் மகுடமாக இருக்கிறது. இந்திய சிறுகதை வரலாற்றில் தனி முத்திரை மதிக்கக் கூடிய சிறந்த கதை. இதை மொழிபெயர்த்த மதிப்புமிகு ஸார் இந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். கதையின் வெளிக்கோட்டை மட்டும் சொல்வது கூட கதையினை உள்வாங்க வருபவரின் ஆர்வத்தை சிதைத்து விடுமோவென்ற பயத்தில் அதன் பாத்திரங்களை மட்டும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். அந்தக் கதையின் இரு பாத்திரங்களில் ஒரு பெண் சுடுகாட்டு மலர்களைத் திருடி வந்து விற்பவள் மற்றொன்று தெரு ஓரத்தில் தேநீர் கடை வைத்திருப்பவர்.இவர்களைச்சுற்றி சுழலும் கதைப்பின்னலில் நாம் சிக்கித் திணறுவது தான் இக் கதையினை நான் கொண்டாடுவதற்கான காரணம்.

மெளனமான பாறையில் பஞ்சாப் கவிஞர் மோகன்சிங் பெண்ணின் வாழ்வு ஆண் முன் பாறையாய் இறுகிக் கிடப்பதை சுட்டுகிறார்.

ஸ்ரீ ஸ்ரீயின் புரட்சியின் தேர்ப்பாகன் ஒரு ஆயுதப் புரட்சியை முன்னெடுக்கும் கவிதை.

கமலதாஸ் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே எனும் கவிதையில் இந்த பெயரை ஒரு பிணத்தைப் போல ஏன் சுமக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி தன் வாழ்க்கையை வேறெதைக் காட்டிலும் அதிகம் நேசிப்பதாகக் கூறுகிறார்.

உச்சரிக்கப்படாத வார்த்தைகள் என்ற கவிதையில் சில சொல்லாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அவை – ” நெருப்பில் குதிக்கப் போகிற எளிய பூச்சி நெருப்பில் ஏதேனும் சொல்கிறதா ? ”
” ஒரு பொய் போன்ற உண்மையாகத் தங்கிவிட்டாய் கண்ணாடியில் தெரியும் நிலவைப்போல. ”

மழைக்கால ஆறாக மாறினால்… , என் காதலனே ,கல்லுக்குள் சிற்பம் , பார்வை இழக்கும் நேரம் , தாகம் தீர்க்கும்நெருப்பு , சூரியக் குளியல் , ஐயா, கொஞ்சம் சொல்லுங்கள் , தாய்நிலம் , பாதி சொல்லப்பட்டக் கதை, சரியான இடத்தில் வை , தேள் கடித்த இரவு , கொடை , இந்திய அறிவுஜீவிகளின் வாக்குமூலம் , ஓ கனகா , கனகவதி.. ,போர்க்களத்தில் கவிதை ,தன்னைப்போல இல்லாத ஒரு மனிதர் , பேருந்தின் கண்ணாடியில் சூரிய மறைவு , இதயம் எங்கே ? , பாறை , அந்தக் குழந்தை என சொற்பிரயோகங்களிலும் நவீன வடிவமைப்பு பரிசோதனையிலும் கருத்துப்பரிமாறலில் சிறப்பாகவும் இக்கவிதைகள் இந்தியச் சூழலில்.. கவிப்புலத்தில் பெரும் மாற்றங்களையும் அதிர்வுகளையும் உருவாக்கிவைகளாக இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தீண்டத்தகாதவர்கள் எனும் கவிதையில் சித்தலிங்கையா பட்டன ஷெட்டி அமைதி சகிக்க முடியாததாகி விடுகிறபோது மட்டுமே நாங்கள் பேசுகிறோம் என ஆதங்கத்தை உறுதியான திடத்துடன் வெளிப்படுத்துகிறார்.

பேப்பூர் சுல்தான் முகம்மது பஷீரின் ஒரு மனிதன் சிறப்பான கதை.அதில் ஒருவனின் மாலை நேரப் பொழுதின் நிகழ்வு. அவன் 15000மைல்களுக்கு அப்பால் மொழிதெரியாத.. தெரிந்தவர்கள் எவருமில்லாத ஊரில் அழுக்கான தெருவில் இருட்டான அறையில் குடியிருக்கிறான்.அவன் காலையிலிருந்து மாலை 4 மணிவரை வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. ஏனென்றால் பசிக்கும் என்பதால் மாலை4 மணிக்குத்தான் சாப்பிடப் போவான் .அவனிடம் 14ரூபாய் இருக்கின்றன. சிற்றுண்டி விடுதிக்கு போய் சப்பாத்தியும் மாமிசமும் கொண்ட முழுச்சாப்பாடு சாப்பிடுகிறான். தேநீரும் குடிக்கிறான். அதற்கான விலை 11 அணாக்கள் ஆகிறது. அதைக் கொடுப்பதற்காக பாக்கெட்டில் கை விட்டபோது பணப்பை இல்லை. சிற்றுண்டி யின் சொந்தக்காரன்__ “உன் திருட்டுத்தனம் இங்கே செல்லுபடியாகாது..பணத்தை எடுத்து வை..இல்லையேல் உன் இரண்டு கண்களை பிடுங்கி விடுவேன் ” என்கிறான்.

அருகில் இருந்தவர்களைப் பார்க்கிறான். கருணையான ஒரு முகத்தைத் கூடக் காணவில்லை. பசித்த ஓநாய்களின் பார்வை அவர்களிடம் இருந்தது.

கடைசியில் விடுதிக்காரன் அவனின் உடைகளைக் கழற்றச் சொல்கிறான். அவன் ஒவ்வொன்றாய் கழற்றுகிறான்.அப்போது அவன் கவலைப்படவில்லை…உலகைப் படைத்த இறைவனே..என் இறைவனே..நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் முடிந்துவிடும் என மனதுள் நினைக்கிறான்.

அவன் கடைசியாக காற்சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாகத் கழற்றசத் தொடங்கினான். திடீரென்று ஒரு குரலைக் கேட்கிறான். நிறுத்துங்கள். நான் அந்தப்பணத்தைக் கொடுக்கிறேன்.

குரல் வந்த திசைப்பக்கம் எல்லோரும் பார்க்கிறார்கள். ஒரு அற்புதம் நிகழ்கிறது.

கதை மிகவும் இயல்பாகவும் சுவாரஸியமாகவும் நகர்ந்து பட்டென்று முடிந்து விடுகிறது.

அடுத்ததாக தலித் பாந்தர் அமைப்பின் முன்னோடியான
தயாபவரின் ஒரு தலித்தின் கதை. தன் நண்பனின் கதையாகச் சொல்லி… தலித் மக்களின் வேதனையை துயரார்ந்த வாழ்வைப் புலப்படுத்துகிறார்.கதை சட்டென்று‌ ஆரம்பித்து சரளமாக சென்று பல நிகழ்வுகளை நினைவுகளில் பதித்து துயரம் கவ்வும் கவிதையுடன் முடிந்து விடுகிறது.
அந்தக் கவிதையிலிருந்து….
“துயரத்தால் நனைந்த இந்த மரத்தைப் பார்க்கிறேன்
அது சாவைப் போன்ற வதைகளை அனுபவிக்கிறது
ஏனெனில் அதனால் சாக முடியவில்லை
இந்த மரம்
சோகத்தால் நனைந்து கொண்டிருப்பதை
நான் பார்க்கிறேன். “

வசந்ததீபன்