நூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூநூல்: கிறுகிறு வானம்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.35
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/kiru-kiru-vanam-s-ramakrishnan/

ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை… அவனது கோணத்தில் இருந்து விவரிக்கும் ஒரு அழகான உலகத்தை … நமக்குக் கையளித்திருக்கும் எஸ்.ரா.வின் குழந்தைகளுக்கான அருமையானதொரு புத்தகம் இந்த கிறுகிறு வானம்.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஓட்டைப்பல்லு என்ற சிறுவன் கதை சொல்வதாக நகரும் கதையின் களமே… நம்மை வெகுவாகக் கவர்கிறது. அவன் ஒவ்வொன்றையும் விவரிக்க விவரிக்க… அவன் கூறும் கதையாடலின் வழித்தடமெங்கும் … வாசிப்பவர் ஒவ்வொருவரும் தன்னையும் தனது பால்யத்தையும் அடையாளம் கண்டு … ஒரு கணம் அதனைத் தொட்டு வருவது….
இந்தப் புத்தகத்தின் ஆகப்பெரும் பலம். அந்த சிறுவனின் வழியாக…
எஸ்.ரா. தன்னையும் தன் பால்யத்தையும் முன்னிறுத்துவதாகத்தான் பல இடங்களிலும் நம்மால் உணரமுடிகிறது.

ஓட்டைப்பல்லு என்ற தன் பெயர்க் காரணத்தைச் சொல்லத் தொடங்கி.. தன் அக்கம் பக்கத்திலும் வகுப்பிலுமாக சக தோழர்களின் பெயர்களையும் வரிசைப்படுத்தி…
அப்படியே தனது ஊர் எப்படி..தனது வீடு எப்படியென்று அடுத்தடுத்து நகருகையில்…
நம்மையும் அவன் கூடவே மிக அழகாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறான்…அந்த சிறுவன்.

தனக்குப் பிடித்தவர்களைப் பற்றிய வரிசையில் … தன் வீட்டிலிருக்கும் ஆடு, கோழிகளையும் சேர்த்து சொல்லுகின்ற இடம்…. இயற்கையையும்.. பிற உயிரினங்களையும் சக உயிராக பாவிக்கக்கூடிய.. குழந்தைகளுக்கு மட்டுமேயான அந்த மனநிலையை
பளிச்சென்று தொட்டுக் காட்டுகிறது.

சாப்பாடும் கூப்பாடும்
கை நிறைய பொய்
அழுவேன் உருள்வேன்
பயம்னா பயம் …
என்று நீளும் பத்து அத்தியாயங்களிலும் ஒரு கிராமத்துச் சிறுவனின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், ஏக்கங்கள், கனவுகள்,ஆசைகள், தவிப்புகள் என்று… குழந்தைகளுக்கான பிரத்தியேகமான உலகமொன்று
நம் கண்முன்னே அத்தனை அழகாய் விரிகிறது.

மீன்பிடித்தல்.. கோலம் போடுவது… ராஜா ராணியைக் காணச் செல்வது… வானத்தோடு பேசுவது என்றெல்லாம் ஆங்காங்கே கிடைக்கும் அழகியல் அத்தனையும் நாம் கடந்து வந்த…அற்புதக் கணங்களின் துளிகள்.

Image may contain: 1 person, smiling
சாதாரணமாக நம் வீட்டில் குழந்தைகள்… பொம்மையிடமோ… நாய்க்குட்டியிடமோ … சுவரைப் பார்த்தோ… அவர்களே தமக்குத் தாமே எதையோ பேசிக்கொண்டிருப்பார்கள். அது
அவர்களுக்கு மட்டுமேயான ஒரு அற்புதமான உலகம். அங்கே சிங்கத்துக்கும் சிறகு முளைக்கும்.
உயிரில்லாதது அத்தனையும் அவர்களோடு பேசிக் களிக்கும்.
அப்படியானதொரு அற்புதமான
குழந்தைகளுக்கான களம் தான் கிறுகிறு வானம்.

சுடுசோறும் முட்டைப் பொரியலும்
சாப்பிட்ட சக தோழனின் கையை நக்கிப் பார்ப்பது… பக்கத்து வீட்டில் சாப்பிடும்போது இரண்டாவது தோசை கேட்பது என்று எந்தச் சிறுபிள்ளைத் தனத்தையும் விட்டுவைக்கவில்லை எஸ்.ரா.
இவையெல்லாம்..
வாசிக்கும் போதே… நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் தருணங்கள்.

இதில் காட்சிப்படுத்தப்படும் அத்தனை விளையாட்டுகளும்
இன்றைய குழந்தைகளுக்கு ஆச்சரியங்கள் அடங்கிய புத்தம் புதிய
செய்திகள்.

பெரியவர்களுக்கு…
தங்களின் சிறுபிராயத்து மழைக் கணங்களுக்குள் ஒருமுறை சென்று
நனைந்து திரும்புவதற்கும்…
குழந்தைகளுக்கு…
அவர்களுக்கே அவர்களுக்கான
ஒரு அற்புத உலகத்தை
ஒரு புத்தகத்தின் வடிவில்
அறிமுகப் படுத்தவற்குமாய்…
எவருக்கும் பரிசளிக்க மிகச்சிறந்த ஒரு படைப்பு..கிறுகிறு வானம்.