Kal Mulaitha Kanavugal Book By Pavalar Karumalai Thamizhanan Bookreview by Era Ravi நூல் அறிமுகம்: பாவலர் கருமலைத் தமிழாழனின் கால் முளைத்த கனவுகள்! – கவிஞர் இரா. இரவி




மரபுக்கவிதை என்றவுடன் நினைவிற்கு வரும் ஆற்றல் மிக்க பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று வருபவர். மரபுக்கவிதைப் போட்டி என்றால் முதல்பரிசு இவருக்குத்தான் என்பது முடிவான ஒன்று. தித்திக்கும் மரபுக் கவிதைகளைப் பல்வேறு இதழ்களில் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக்கி வருகிறார். வெளியிட்டவுடனேயே மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி விட்டார்.

‘கால் முளைத்த கனவுகள்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. ஆய்வறிஞர் தகடூர் தமிழ்க்கதிர் அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தமிழ்க்கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 38 கவிதைகள் உள்ளன. இனமொழியைக் காத்திடுவோம் என்று தொடங்கி இன்பமான இரவுகள் என்று முடித்துள்ளார். குமுகக் கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 43 கவிதைகள் உள்ளன. கனவுக் கால்கள் என்ற பொதுத் தலைப்பில் 47 கவிதைகள் உள்ளன. ஆக மொத்தம் 128 கவிதைகள் உள்ளன. மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார். மரபுக்கவிதை ஆர்வலர்கள் அனைவரும் வாங்கிப்படிக்க வேண்டிய நூல். வளர்ந்து வரும் கவிஞர்களும் படிக்க வேண்டிய நூல். சொற்களஞ்சியமாக கவிதைகள் உள்ளன.
தமிழை உனைக் காக்கும் !
தாழ்வாக எண்ணும் தமிழா தமிழ்மீது
காழ்ப்பை அகற்றிநீ காத்திடு கண்ணாக
வீழ்த்தும் கலப்பினை வீழ்த்து தமிழ்மொழி
வாழ்ந்திருந்திருந்தால் வாழ்த்திடுவாய் நீ ! ( 1 )

திட்டமிட்டுத் தமிழில் பிறமொழிச் சொற்களை கலந்து பேசி மொழிக்கொலையை ஊடகங்கள் தங்குதடையின்றி நடத்தி வருகின்றன. தட்டிக் கேட்க நாதி இல்லை என்ற துணிச்சலில் தொடர்ந்து செய்கின்றன. அதற்கான கண்டனத்தைக் கவிதைகளில் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்.
தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்.
தமிழ் வீழ்ந்தால் தமிழன் வீழ்வான
என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

அருந்தமிழில் பேச வைப்போம்!

அருந்தமிழில் பேசுவதே குற்றமாக
அடிக்கின்றார் குழந்தைகளைப் பெற்றவர்தாம்
பெருமையுடன் மம்மியென அழைப்ப தற்குப்
பெருந்தொகையைக் கட்டணமாய்ச் செலுத்து கின்றார்!

கருவுதிர்த்த காலத்தே அப்பள் ளிக்குக்
கால்தேய நடந்துஇடம் கேட்கின் றார்கள்
உயர்பெருமை மண்ணுக்குள் புதைத்தோரன்றோ!

மம்மி என்றால் செத்த பிணம் என்ற பொருள் புரியாமலே மம்மி என்று அழைக்க்ச் சொல்லும் மடமை, மண்மூடிப் போக வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகின்றது. அறிவியல் மேதை அப்துல் கலாம் தமிழ்மொழியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றவர் என்பதைத் தமிழன் உணர்ந்திட மறுக்கின்றான். தமிழகத்தின் இழிநிலையை கவிதை வரிகளின் மூலம் இடித்துரைத்து உள்ளார். பாராட்டுக்கள்.

( 2 )
கவிதைகளின் தலைப்புகளே தமிழ்ப்பற்றைச் சித்தரிக்கின்றன. தொழுவோம் போற்றி, நினைக்காத நாளில்லை, தை மகளே வா, தமிழ்ப்பொங்கல் தா, தமிழரின் கட்டடவியல், பாவேந்தரின் தமிழியக்கம், இப்படி தமிழ்ப்பற்று விதைக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
வேட்டை நடத்து
காதலித்தால், குற்றமென்று
கழுத்தறுக்கும் கூட்டமொன்று
சாதலினைத் தெருக்கள் தம்மில்
சாதனையாய் நடத்துகின்றனர்!
ஆதியிலே இல்லா ஒன்றை
அடிமனத்துள் வளர்த்துக் கொண்டு
சாதிகளில் கீழ்மேல் ஆக்கிச்
சரித்திரத்தை மாற்றுகின்றார்.

ஆதியில் இல்லை இந்த கொடிய சாதி, பாதியில் கற்பிக்கப்பட்ட ஒன்று, உயர்ந்தவன், தாழ்ந்தவன் மனிதரில் இல்லை. ஆணவக் கொலைக்கு முடிவு கட்டுவதே பகுத்தறிவு பெற்ற மனிதருக்கு அழகு என்பதையும் சாதிவெறியைச் சாகடித்து மனிதனாக மாறு என அனல்பறக்கும் கவிதை வரிகளால் மனித விலங்குகளுக்கு புத்தி புகட்டி உள்ளார். பாராட்டுக்கள். சாதியை மறந்து சங்கமிக்க வலியுறுத்தியது சிறப்பு.

இன்றைய தாலாட்டு!
அழிக்காமல் இயற்கையினைக் காக்க வேண்டும்
அறிவியலை நன்மைக்காய் ஆக்க வேண்டும்
விழியாக மனித்ததை வளர்க்க வேண்டும்
வீண்பகைமை வேற்றுமையைக் களைய வேண்டும் கண்ணுறங்கு!
( 3 )
இன்றைக்குத் தாலாட்டு பாடுகின்ற பழக்கமே வழக்கொழிந்து விட்டது. பாடவும் தெரிவதில்லை. தாலாட்டுக் கவிதையில் இயற்கையைக் காக்க வேண்டும். அறிவியலைத் தீமைக்குப் பயன்படுத்தாமல் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது சிறப்பு. மனிதம் வளர்க்க வேண்டும், இப்படி அறநெறிக் கருத்துக்களை அழகிய தாலாட்டாக வடித்தது நன்று.

எதுகை, மோனை ,இயைபு ,முரண் என பலவகை இலக்கணங்களுடன் வெண்பா சந்தப் பாடல்கள் என கவிநயத்துடன் பொருள்நயத்துடன் கவிதைகள் வடித்து இருப்பது சிறப்பு.
கொஞ்சம் பொறு கண்ணே!

குடும்பத்தைக் காக்கவொரு தலைவன் இல்லை
குடியினிலே மூழ்கியவன் கிடப்ப தாலே
நடுக்கடலில் துளைவிழுந்த படகு போல
நசுக்குகின்ற வறுமையிலே அமிழ்ந்து போனாள்!

தமிழ்நாடு இன்று தள்ளாடுது என்றால் மிகையன்று, குடும்பத் தலைவன் மட்டுமல்ல, கல்வி பயிலும் மாணவனும் குடித்துவிட்டு வீழ்ந்துகிடக்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. குடியின் கேட்டை அறிந்து மதுக்கடைகளை உடன் மூடிட ஆள்வோர் முயல வேண்டும். ஆனால் இங்கு ஆள்வோரே மது ஆலைகளின் அதிபர்களாக இருப்பது வெட்கக்கேடு. விழிப்புணர்வு விதைத்துள்ளார் கவிதையில்.

பச்சோந்தி!
மரத்திற்கு மரம்தாவும் மந்தி போல
மனம்தாவிக் கட்சிகளை மாற்றிக் கொள்வர்
உரமின்றிக் கொள்கையின்றிப் பதவிக் காக
உருவத்தை ஏற்றார்போல் மாற்றிக் கொள்வர் ( 4 )

இன்றைக்கு அரசியல் நிலை, அவல நிலை, அன்று கொள்கைக்காக கூட்டணி வைத்தனர். இன்று கோடிகளுக்காகக் கூட்டணி வைக்கின்றனர். தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்காவிடில் உடன் கட்சி மாறி வசனம் மாற்றி பேசும் மனிதர்கக்ப் பச்சோந்தியோடு ஒப்பிட்டு வடித்த கவிதை நன்று. இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது.

மனிதம் எங்கே?
வங்கிகளில் கோடிகளைச் சுருட்டி யோர்கள்
வான்வழியில் செல்கின்றார் அயல்நாட் டிற்கே
தங்குவதற்கோ அழகான மாளி கைகள்
தரமான உணவுவகை உல்லா சங்கள்

கோடிகளை கொள்ளையடித்து விட்டு விமானம் ஏறி வெளிநாட்டிற்குத் தப்பி விடுகின்ற்னர். அவர்களைக் கைது செய்து வர துப்பின்றிப் பிடிப்பதற்கு ஆருடம் பார்த்து வரும் அவலம். நாட்டின் நடப்பை அரசியல்வாதிகளின் நடிப்பை கவிதை வரிகளில் சுட்டி விழிப்புணர்வு விதைத்துள்ளார்.
நெஞ்சுவலி கைகால்கள் குடைச்ச லோடு
நேர்நிற்க உட்கார இயன்றி டாமல்
துஞ்சுகட்டில் தனில்படுக்க முடிந்தி டாமல்
துடிதுடித்து நான்கொடுத்த குரலைக் கேட்டே
அஞ்சிவந்த என்மனைவி என்னைக் கண்டே
அடைந்துள்ள நிலையதனைப் புரிந்து கொண்டு
கொஞ்சமுமே கடத்தாமல் தானி தன்னில்
கொண்டுவந்து மருத்துவமாம் மனையில் சேர்த்தாள் !

இறுதியாக மீண்டு வந்தேன் என்ற கவிதையில் நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் நோயுற்று சிகிச்சைப் பெற்று மீண்டு வந்ததையும் மரபுக்கவிதையாக வடித்துள்ளார். தமிழ் போலவே வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். நீங்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும், வளரும்.
( 5 )

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *