நூல் அறிமுகம்: சு.தமிழ்ச்செல்வியின் “கற்றாழை” – ச.ரதிகா

 

பெண்ணின் உணர்வுகள் சார்ந்த படைப்பு.கிராமத்து நடையில் எழுதப்பட்ட இப்புதினம் நம்மையும் கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது.பனம்பழம் பொறுக்குதல் அதை சுடுதல், மாடு மேய்க்கும் போது மீன் சுடுதல்,பில்லு முட்டை தின்றல்,நெல் அவித்தல்,தாமரை அல்லிப் பூக்கள் நிறைந்த குளம்,கிராமத்து சொலவடைகள், விடுகதைகள் என சுவாரசியங்கள் ஏராளம். கதையின் நாயகியான மணிமேகலையின் வாழ்க்கையே கற்றாழை. குடிகாரத் தந்தை,எப்படி இருந்தாலும் கணவனே முக்கியம் என்ற சராசரி தாய்,பொறாமைப்படும் அக்கா,பாசமான தங்கை இதுவே மணிமேகலையின் குடும்பம்.அக்காவிற்கு படிப்பு வராததால் தனியாக தான் மட்டும் வேலை செய்ய முடியாது என அடம்பிடித்து நன்றாக படித்த, தொடர்ந்து படிக்க ஆசைப்பட்ட மணிமைகலையின் படிப்பை ஆறாவதோடு நிறுத்திவிட்டாள். மணிமேகலை எவ்வளவோ முயற்சி செய்தும் படிக்க இயலவில்லை.ஆனால் போராடி தனக்கு கிடைக்காத கல்வியை தங்கைக்கு கிடைக்கச் செய்கிறாள்.

அதற்காக தங்கை அவளோடு எப்போதும் துணை நிற்கிறாள்.ஓய்வு இல்லாமல் உழைக்கும் அவள் ஒரு மகாசக்தி. அவளுக்காக நிச்சயம் செய்த மாப்பிள்ளை சொத்து தகராறில் தற்கொலை செய்து கொள்ள அந்த துக்கத்தை வெளிப்படுத்தாமல் மறுகுகிறாள்.ஒரு தடவை கூட நேரில் பார்க்காத தனது அத்தை பையன் பெண் கேட்டு தாய் அதை மறுத்தபோதும் எப்படியாவது திருமணம் நடக்க கடவுளை வேண்டுவதும் தாய்க்கு அவமானம் என்று வீட்டை விட்டு வெளியேறி விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உடன்படாதது என குடும்பத்துக்காகவே வாழ்கிறாள். சொத்து தேவையில்லை மூத்தவளுக்கு அமைந்த மாதிரி அன்பான மாப்பிள்ளை இவளுக்கு அமைந்தால் போதும் என்று தாய் நினைக்க தந்தையோ சாராயக் கடையில் இன்னொரு குடிகாரனுக்கு சம்பந்தம் பேசி முடிக்கிறார்.பையனைப் பற்றி விசாரித்து கூறிய உண்மையை தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி

அத்திருமணத்தையும் மனம் ஒப்பித் தந்தைக்காக ஏற்றுக் கொள்கிறாள்.கணவன் எவ்வளவு துன்பப் படுத்தினாலும் பிறந்த வீட்டிற்கு வராத வழக்கமான பெண்ணாகவே வாழ்கிறாள். ஐந்து மாத கரு கலைய காரணமாக இருந்த கணவனை விட்டுத் தராத மனைவி மணிமேகலைக்கு இல்லாத துணிச்சல் தாயான மணிமேகலைக்கு வருகிறது. அவள் பெண்ணிற்காக துன்பங்களை எதிர்த்துப் போராடும் போராளி ஆகிறாள்.வேறு பெண்ணுடன் வாழும் அவள் கணவனின் நிழல் கூட தன் மகள் மீது படிய கூடாது என்று வைராக்கியமாக வளர்க்கிறாள்.சுமராக படிக்கும் மகளை பன்னிரண்டாம் வகுப்பு வரை விடாது படிக்க வைக்கிறாள்.மகளும் அவளுக்கு பிடிக்காத பையனையே விரும்பி திருமணம் செய்யும் போது துக்கத்தை தாங்கிக் கொண்டு நம்மை நெகிழ வைக்கிறாள்.

அத்திருமணம் நிலைக்காமல் மகள் திரும்ப வரும்போது ஆதரவு அளித்து தாயாக உயர்ந்து நிற்கிறாள். திக்குத் தெரியாமல் ஆதரவின்றி தவித்த போது அவர்களை வரவேற்று வாழ்வளிக்கிறது திருப்பூர் பனியன் கம்பெனி. அன்றும் இன்றும் பெரிய வேறுபாடின்றியே உள்ளது திருப்பூர்த் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் பெண்ணின் துயரங்கள் ஒன்று போலவே இருக்கின்றன. திருப்பூரில் உடன் பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் உள்ளது. அதை எதிர்த்துப் போராடுவதே வாழ்க்கையாகிறது. கற்றாழை படிக்கும் நெஞ்சங்களில் முள்ளாக தைக்கும்.

நூல்: கற்றாழை 

ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

விலை: ₹318.00 INR

நூல் அறிமுகம்: ச.ரதிகா.