பூக்களற்ற நிலம்
********************
பசித்த வயிறுக்கு பத்து வாய்கள்
யாசிக்கும் உடலுக்குப் பதினாறு கைகள்
புசிக்க வழியற்று அல்லாடும் உலகம்
மெளனத்தை வரையறுத்தேன்
ஒலிக்குள் ஒலி உறைந்து போனது
ணங்கென்ற சம்மட்டிச் சத்தம்
திகைத்து நின்றது
நெருப்பாய் நீராய் உரு மாறுகிறேன்
ஒளியாய் ஒலியாய் உயிர் தரிக்கிறேன்
காற்றாய்க் களிப்பாட்டாய்ப்
புவனத்தில் வலம் வருகிறேன்
பசிக்குது என்றான்
பத்து ரூபாய் கொடுத்தேன்
இருபது வேண்டும் என்கிறான்
விழிக்கத் தொடங்கினான்
துக்கம் உறங்கிப்போனது
இதயத்தில் வண்ண வண்ணப்பூக்கள்.
கூப்பிட்டேன்
பதில் இல்லை
மவுனத்துள் ஒலி ஒடுங்கிப் போனது.
பார்வை பட்டதும் கல்லானேன்
தேகம் பட்டதும் பூவானேன்
அவளின் முத்தங்கள் என்னை குழந்தையாக்கியது.
நடைப் பிணம் கீழ்மையானது
பிணம் மேன்மையானது
வாழ்க்கை மதிப்புமிக்கது.

துக்கம் உதிர்க்கும் தானியங்கள்
**************************************
அணில்கள் மரக்கிளைகளில் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சிட்டுக்குருவிகள்
பறந்து பறந்து சிரிக்கின்றன
நடக்க இயலாத அவன் சிறிது சந்தோஷப்பட்டுக் கொள்கிறான்
வனத்துள் காட்டுக்குதிரை மேய்கிறது
குளம் நீர்த்தூரிகையால்
அதனை வரைகிறது
பனிசூடிய மலையும் ஊசியிலைமரங்களும் வியக்கின்றன
நதியில் மிதந்து வருகின்றன பூக்கள்
நீர்ப் பரப்பில் இசை குமிழியிடுகிறது
மஞ்சள் ஒளியில் காதல் பொழிகிறது
அடிமை வாய்க்குப் பூட்டு

எடுபிடி மூளையை
கட்டியிருக்கிறது சங்கிலி
மொழி திண்டாடுகிறது
வரப்புகளில் கரிசாலையும் நெருஞ்சியும் பூத்திருந்தன
கொறவையும் கெழுறும் நெல் பயிருக்குள் நீந்தித் திரிந்தன
கொக்குகளும் மடையான்களும் கூத்தடித்தன
ஒரு காலம்
இரவு குடிகாரன்
பகல் குடிகாரனை திட்டுகிறான்
பகல் குடிகாரன்
இரவுகுடிகாரனை ஏசுகிறான்
எல்லா குடிகாரன்களையும்
உலகம் வைகிறது.

– வசந்ததீபன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *