கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 14 – நா.வே.அருள்



நுகத்தடி
************

அரசின் ஏவலாளிகள்
ஒரு செங்கோல் செய்து வைத்திருக்கிறார்கள்

கரடு முரடானதும்
முட்டாள்தனமானதும், மூர்க்கத் தனமானதும்
உயிர் எடுக்கும் உன்மத்தம் கொண்டதுமான செங்கோலில்
ராஜதந்திர முலாம்.

அதில் ஒட்டியிருக்கும்
பல உயிர்களின் துள்ளலும் துடிப்பும்
சதைத் துணுக்குகளும் ரத்தக் கறைகளும்

கூசும் பொய்களுக்கு
ஒத்தடம் கொடுப்பதற்காகவே
உடல் முழுதும் வளரும் உதடுகள்

உண்மை
எலும்பும் தோலுமாகப் பரிதாபத்துடன்
காட்சியளிக்கிறது.

பொய் அவ்வளவு சக்தி வாய்ந்தது
அதைப் பிரயோகிக்கையில் பெருந்திரள் கூட்டம்
பின்வாங்கி ஒரு பூனையைப் போல ஒடுங்கிப் போகும்.

மிகச் சமீபகமாகத்தான்
விவசாயிகள் மீது
பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

விவசாயிகளோ
தங்கள் கழுத்தை அழுத்திய நுகத்தடியை
பூட்டாங்கயிறு துணித்து
ஆகாயம் முட்டி
ஆவேசத்துடன் நிற்கிறார்கள்

இப்போதுதான்
முதன் முதலாய்
செங்கோல் நடுங்க ஆரம்பித்திருக்கிறது.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)