குதிர்கள் நிறைவதில்லை
*********************************
அவனுக்கு உணவு செல்லவில்லை.
அவனது விருந்து மேசையில்
மொறு மொறுப்பான உணவில் கலந்திருக்கிற நஞ்சென
விவசாயி
அவனுக்குக் கொடுக்கப்படும்
இராணுவ அணிவகுப்பில்
நட்சத்திரங்களிடையே ஒளி வீசும்
நிலவினைப் போல
விவசாயியின் தலை தட்டுப்படுகிறது.
நண்பர்களின் சேமிப்புக் கிடங்குகளில்
தானியங்களைக் கொட்டுமுன்
பலி கொடுத்தாயிற்று
விவசாயிகளின் சடலங்களை.
குதிர்களுக்குக் குறையொன்றும் நேர்ந்துவிடக்கூடாது.
அவனுக்கு இறந்துபோனவர்களை
மேலும் மேலும் கொல்லுதல்
மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.
ஏற்கெனவே பலமுறை
மரணங்களின் பள்ளத்தாக்குகளில்
துரோகங்களின் கரங்களால்
மனிதர்களைத் தள்ளியிருக்கிறான்.
ஏற்கெனவே பலமுறை
பறவைகளின் சிறகுகளுக்குத்
தீவைத்திருக்கிறான்.
அவனது சமையலறையில்
ஏராளமான சாம்பல் பறவைகள்.
முரட்டுத்தனமான கருஞ்சிவப்புக்
கூம்பு வடிவ
வாழைப் பூத் தோலுக்குள்
வரிசை வரிசையாய் அடுக்கிய
செவ்வரி படர்ந்த வெளிர் பூ நாம்புகள் போல
கார்ப்பரேட் சவத்துணியில் சுற்றிவைக்கப்பட்டிருக்கும்
இறந்துபோன விவசாயிகளின் பிணங்கள்
அவனது காட்சி அலமாரிகளில்
கைக்கொட்டிச் சிரிக்கின்றன!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
Leave a Reply
View Comments