எழுத்தாளர் போப்பு சாப்பாட்டு புராணம் என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது விதவிதமான சாப்பாட்டு வகைகளை நமக்கு அறிமுகம் செய்யும் ஒரு சுவாரசியமான புத்தகம். சமையல் செய்வது எப்படி என்று விளக்கிக் கொண்டே செல்லும் அந்த புத்தகத்தில் நடுநடுவே ஹோட்டலில் வேலை செய்யும் சமையல் கலைஞர்கள் பற்றிய சில சித்திரங்களும் எழுதியிருப்பார். அதிகாலையில் எழுந்து அந்த ஓட்டல் எப்படி தயாராகிறது, இரவுப் பின்நேரம் வரையிலும் அந்த ஊழியர்கள் எப்படி பணியாற்றுகிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பது போன்றவற்றை ஆங்காங்கே விவரித்திருப்பார் . அதுவும் மிகுந்த சுவாரஸ்யமான பகுதிதான். அதை அப்படியே விரிவுபடுத்தி சமையல் கலைஞர்களை பற்றிய ஒரு முழு நாவலாக எழுது என்று நான் சொல்லியிருந்தேன். ஆனால் இதுவரை போப்பு அந்த வேலையை செய்யவில்லை. பதிலாக எழுத்தாளர் ம.காமுத்துரை, சமையல் கலைஞர்கள் பற்றிய ஒரு நாவலை எழுதியிருக்கிறார். அது போப்பிடம் நான் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும்வகையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமையல் கலைஞரின் உலகம் ஒரு தனியான உலகம். ஆயிரம் பேருக்கு சமைத்துப் போடுகிற திருப்தியும் கர்வமும் அந்த கலைஞர்களிடம் எப்போதும் இருக்கும். ஆனால் அதை வெளிக்காட்ட முடியாதவகையில் அமைதியாக இருப்பார்கள். நீங்கள் கொடுக்கும் பணத்தைவிட, சாப்பாடு மிகப் பிரமாதம்.. அதிலும் அந்த வத்த குழம்பு.. ஆஹா ஓஹோ.. என நீங்கள் குறிப்பிட்டு பாராட்டிவிட்டால் உச்சி மகிழ்ந்துவிடுவார்கள். அடுத்த முறை எங்காவது பந்தியில் உங்களைப் பார்த்தால் உங்களுக்கு ஸ்பெஷலாக கவனிப்புகள் இருக்கும். விசேஷ வீடுகளுக்கு முதலில் வரும் ஆளாக அவர்கள்தான் இருப்பார்கள் .
நாம் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே வந்து காய்கறிகளை நறுக்குவது , பருப்புகளை ஊறப்போடுவது என்று வேலைகளை துவங்கிவிடுவார்கள். காலையில் சூரியன் மலர்ந்து வருவதற்குள் மடமடவென எல்லா அயிட்டங்களையும் முடித்து கச்சிதமாய் வைத்திருப்பார்கள். திடீரென பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால் அதனை சமாளிப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். சாப்பிட்டுவிட்டு இரண்டு வார்த்தை பாராட்டினால் போதும்… மிகுந்த உற்சாகமும் திருப்தியும் அடைந்துவிடுவார்கள்.
இதுதான் அவர்களைப் பற்றி அநேகம் பேருக்கு இருக்கும் மதிப்பீடு. ஆனால் இதையும் தாண்டி இருக்கிற அவர்களின் உலகத்தை காமுத்துரை எழுதியிருக்கும் “குதிப்பி” நாவலின் வழியாக அறிகையில் அதிர்ச்சியாக இருக்கிறது.
குதிப்பி என்றால் சமையலுக்கு பயன்படுகிற பெரிய அளவில் உள்ள கரண்டியை குறிக்கும். ஆனால் குதிப்பி நாவலை திறந்தால் நாவலெங்கும் குடியின் வாசம் விரவிக் கிடக்கிறது. அனேகமாக நாவலின் எல்லா பாத்திரங்களும் குடிக்கிறார்கள்.. சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் தவிர. நேரம் காலம் இல்லாமல் கிடைக்கும்போதெல்லாம் எடுத்து வாயில் கவிழ்த்துக் கொள்கிறார்கள். காலையா மாலையா இரவா.. நல்ல இடமா கெட்ட இடமா.. கூட்டம் இருக்கிறதா இல்லையா.. நாலுபேர் பாக்குறாங்களா பாக்கலையா.. என்பதைப்பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாரி வாரி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதைப் பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குடிக்கிறார்கள்.
நாவலின் முதல் காட்சியே சாரதி என்கிற சமையல்காரர் டாஸ்மார்க் கடையில் உட்கார்ந்து சரக்கு பாட்டிலை திறப்பதில் தான் தொடங்குகிறது. சட்டென திறக்காமல் பாட்டிலின் மூடி வழுக்கிக் கொண்டே போகிறது என நாவல் தொடங்குகிறது. கடைசி காட்சியில் சாரதியின் மகன் சரவணன், அவனது கண்ணெதிரே நீட்டப்படும் குவாட்டர் பாட்டிலை வாங்கி தூக்கி வீசுவதுடன் நாவல் முடிகிறது. சமையல்காரர்களின் வாழ்க்கையில் குடி எப்படி பிரிக்க முடியாத அம்சமாக குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்பதை பல்வேறு காட்சிகளின் மூலம் புரட்டிப் புரட்டிப் போடுகிறது குதிப்பி.
நல்ல வேலைக்காரனான சாரதி, அவனது மனைவி வளர்மதி, பிள்ளைகள் சரவணன், ஜீவா ஆகியோரை மையமாக வைத்து சுழலும் கதையில், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் ஒரு கடைக்காரர் கதாபாத்திரமும் வருகிறது. இந்த கடைக்காரர் தான் நாவலை நடத்திச் செல்கிறார். வேலை எதுவும் இல்லாத நேரங்களில் எல்லா சமையல்காரர்களும் அவர் கடையில் தான் கூடுகிறார்கள். சரக்கு வாங்க அவரிடமே பணம் கேட்டு நச்சரிக் கிறார்கள். டீ வாங்கி கொடுக்க சொல்கிறார்கள். பீடி செலவுக்கு காசு கேட்கிறார்கள். குடும்பச் செலவுக்கு அவ்வப்போது கடனாக கேட்டு வாங்குகிறார்கள். வேலை வந்ததும் திருப்பித் தருவதாக சொல்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் திருப்பித் தருவதே இல்லை. அவர் பாடுதான் பெரும்பாடு.
சமையல்காரர்களை பகைத்துக்கொள்ள முடியாது. கடைக்கு வராதீர்கள் என சொல்லவும் முடியாது. அப்படி சொல்லிவிட்டால் தனது கடையில் பாத்திரங்களை வாடகைக்கு எடுக்காமல் போய் விடுவார்கள் என்ற பயம் அவருக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஊரில் நிலவரம் முன்புபோல இல்லை. நிறைய மண்டபங்கள் பெருகிவிட்டன. எல்லா மண்டபங்களிலும் சமையல் பாத்திரங்கள் இருப்பதால் தனக்கு கிராக்கி கிடைக்காது என்ற கவலை அவருக்கு. அதனாலேயே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவர்களோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் குடிக்கே செலவு செய்து அழித்துவிட்டு வெற்று ஆளாகத்தான் வீட்டுக்கு வருகிறான் சாரதி. அவனை திருத்துவதற்கு ஆனமட்டும் போராடி பார்க்கிறாள் அவன் மனைவி வளர்மதி. பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக அருகில் இருக்கும் முறுக்கு கம்பெனி வேலைக்கு போய் சம்பாதித்து குடும்பத்தை சமாளிக்கிறார். மகன் சரவணன், கல்லூரிக்கு விண்ணப்பிக்க காசு கேட்கிறான். அதற்காக பாயம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கும் கந்துவட்டி பணத்தையும் குடித்துவிட்டு மல்லாந்து கிடக்கிறான் சாரதி. போடி வைத்தியரிடம் போய் சிகிச்சை பெற்று வந்து குடியை கைவிட்டு அடுத்த வாழ்க்கையை துவங்குகிறான்.
வளர்மதியும் அவனுடன் சமையல் வேலைக்கு செல்லுகிறார். ஆனாலும் வாழ்க்கை அவனை விட்டபாடில்லை. கடைசியில் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போகிறான். சாவதற்கு சில நாட்களுக்கு முன் அவனுக்குள்ளும் ஈரம் சுரப்பதை சில காட்சிகள் மூலம் நமக்குச் சொல்கிறார் நாவலாசிரியர். போர்த்திக்கொண்டு படுத்துக்கிடக்கும் மகளின் பாதங்களை தொட்டு முத்தமிட்டுவிட்டு செல்லும் காட்சியில் கரைந்து போகிறது மனம். சாரதியின் நண்பனான சேது, அவனுடன் வேலை பார்க்கும் முனியாண்டி , முஜிபூர், ரமேஷ், பாக்கியம், முருகாயி, சரக்கோடு கஞ்சா அடித்து விட்டு சாக்கடையில் விழுந்து அலம்பல் செய்யும் துரைப்பாண்டி, கடைக்காரருக்கு கூடமாட ஒத்தாசையாக இருக்கும் சின்ன காளை என நாவலில் வரும் எல்லா மனிதர்களுமே குடியின் வன்கரங்களில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.
உதிரிகளாக கிடக்கும் இந்த தொழிலாளர்களை ஒன்றாக்கி சங்கம் ஆக்கும் முயற்சியில் தோழர் சண்முகம் என்பவர் இறங்குகிறார் . கடைக்காரர் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தோழரையும் இவர்கள் சுத்தலில் விடுகிறார்கள். ஆனால் தோழர் அசந்த மாதிரி தெரியவில்லை. ஒருவழியாக ஒரு காட்டு கோவிலில் விருந்து வைத்து சங்கத்தை தொடங்குகிறார்கள். சங்கம் தொடங்குவதற்கு முன்பும் கூட ஆளுக்கு ஒரு கட்டிங் போட்டுவிட்டு வந்துதான் உட்காருகிறார்கள் என்பதுதான் உதிரிகளின் வாழ்வியல் எதார்த்தம் . இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டுதான் சங்கமாக்க வேண்டுமென்பதை தோழர் நன்றாகவே புரிந்து கொண்டு சங்கத்தை துவக்குவது கதையின் சிறப்பு. அதுதான் சங்கத்தின் சிறப்பாகவும் இருக்கக்கூடும்.
நாவலில் நம்பிக்கைக்குரிய இரண்டு பேர் பாக்கியமும் அவரது மகள் வசந்தியும். முதலில் கட்டிய கணவனும் அடுத்து சேர்த்துக்கொண்ட கணவனும் விட்டுவிட்டு ஓடியபோதும், பாக்கியம் வாழ்க்கையைக் கண்டு அஞ்சிவிடாமல் குதிப்பியை கையில் எடுக்கிறார். அது அவருக்கு வாழ்க்கையை நடத்துவதற்கான நம்பிக்கை தருகிறது. சாரதியும் சேதுவும் எடுக்கும் சமையல் வேலைகளுக்கு மட்டும் செல்கிறாள். அவர்கள்தான் அவளை சரியாக புரிந்து கொண்டவர்கள். மகளை பெரிதாக படிக்க வைக்க வேண்டும் என்று அடுப்படியில் கிடந்து வேகிறார். வசந்திக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக நீட் தேர்வு எழுதுகிறாள். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியிலேயே முதல் மார்க் வாங்கி தேர்வாகும் வசந்தி, நீட் தேர்வில் தோற்றுப் போகிறார்.
ஆனால் பாக்கியமும் வளர்மதியும் சேதுவும் அவளுக்கு உடனிருந்து ஆறுதல் சொல்கிறார்கள். டாக்டர் படிப்பு வேண்டாம்.. ஐஏஎஸ் படி.. நல்ல கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுகிறேன்.. என்று சொல்லி அணைத்துக் கொள்கிறான் சரவணன். அணைப்பில் ஒரு பூ போல மெல்ல மலர்கிறது அந்த எளிய மனிதர்களின் காதல். மனுஷனுக்கு மனுஷன்தானே துணை.
சாரதியின் மகன் சரவணன் சமையல் தொழில் பக்கமே வந்துவிடக்கூடாது என்பதில் அவனது தாய் வளர்மதி உறுதியாக இருக்கிறார். வெளியூரில் போய் படி என்று கல்லூரியில் சேர்த்து ஹாஸ்டலில் தங்கி படிக்கவைக்கிறார். ஆனால் ஆண்டாள் அக்காவின் கணவரான ஸ்டார் ஹோட்டலில் குக் வேலைபார்க்கும் வாசு அவனை கேட்டரிங் படிக்கவைக்கிறார். அப்பன் தொழிலிருந்து விலகி நவீனமாகி கேட்டரிங் படிக்கிறார் என்று நாவலை முடிக்கிறார் கதாசிரியர்.
தேனி வட்டார பின்புலத்தை வைத்து தேனி வட்டார மொழியில் எழுதப்பட்டிருக்கும் நாவலில் , கதாபாத்திரங்களின் உரையாடலும், நாவலாசிரியரின் கதை நகர்த்தும் முறையும் ஒன்றுபோலவே இருப்பது நாவலைப் படிக்க சுவாரஸ்யத்தை தருகிறது. மனிதர்களின் இயல்பை இயல்பாகவே சித்தரித்திருக்கிறார். இடையில் புகுந்து அவர்களின் இயல்பை குறைத்து புனிதப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது ஒரு ஆறுதலான அம்சம். ஆனால் சதாசர்வகாலமும் குடி, சரக்கு, பீடி , சிகரெட் என்ற சிந்தனையிலேயே அவர்கள் இருப்பதாக சித்தரித்திருப்பது அழற்சியை தருகிறது. இதுபோன்று உதிரி தொழிலாளர்களின் வாழ்க்கையை சீரழிப்பதில் குடி என்பது ஒரு முக்கியமான விஷயம்தான்.
உடல் வலியைப் போக்குவதற்கு என்று துவங்கும் இந்த பழக்கம், மெல்ல மெல்ல அவர்களை அடிமையாக்கிவிடுகிறது என்று சொல்கிறோம். மனிதர்கள் வாழத் தொடங்கிய நாள் முதலே குடிக்கவும் தொடங்கி இருப்பார்கள். குடி என்பது மனிதகுல வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அம்சமாகவே இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது. கடவுள்கள் கூட குடிப்பார்கள் என்று சாராய பாட்டிலை வாங்கி வைத்து படைக்கிற
மனிதர்கள்தான் நாம்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் குடிப்பழக்கம் என்பது எப்படி ஒரு பெரும் பூதம் போல மாறியது என்பது இன்னமும் விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை. சரக்கு வணிகத்தில் புரளும் கோடிகள் , இது போன்ற உதிரி மனிதர்கள் பலியாவதை ஒருபோதும் கண்திறந்து பார்ப்பதில்லை.
இதைப் படித்தாலாவது கண்திறந்து பார்க்க மாட்டார்களா.. என்கின்ற அற உணர்ச்சியிலிருந்துதான் இந்த நாவலை காமுத்துரை எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன். வாசிக்கும் நீங்களும் இதுபோன்ற அற உணர்ச்சிக்கும் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகும் வாய்ப்பை குதிப்பி உங்களுக்கு தரும் என்றேன் நம்புகிறேன்.
வாழ்த்துக்கள் காமுத்துரை!
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *