சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி.வி.க்கு இம்மாதம் (மே 18, 2020) நூறாவது அகவைத் தொடங்குகிறது.

எம்.வி.வெங்கட்ராம், கும்பகோணத்தில் வீரய்யர் – சீதை அம்மாள் தம்பதியருக்குப் பிறந்து, ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம் – சரஸ்வதிக்கு தத்துப் பிள்ளையானார்.  இலக்கியப் பின்புலம் ஏதுமற்ற, பட்டுச் சரிகைத் தொழில் செய்யும் குடும்பச் சூழலில் வளர்ந்த அவர், இந்திப் படிப்பதற்காக இந்தி ஆசிரியர் ஒருவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ‘மணிக்கொடி’ இதழைப் பார்க்கவும், ‘மணிக்கொடி’ கதைகளைப் படிக்கவுமான வாய்ப்பு எம்.வி.வி.க்குக் கிடைத்தது. அந்த கதைவாசிப்பு ஒரு கட்டத்தில் அவரை கதைகள் எழுதத் தூண்டியது. எட்டு வயதிலேயே அவருக்கு எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

‘சிட்டுக்குருவி’ எனும் ஒரு கதையை எழுதி, தனது இந்தி ஆசிரியரிடமே கொடுத்தார். அந்தக் கதையை அப்போது கும்பகோணத்தில் வசித்துக் கொண்டிருந்த ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களான கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி ஆகியோரிடம் இந்தி ஆசிரியர் கொடுத்திருக்கிறார். அந்தக் கதை ‘மணிக்கொடி’ இதழில் வெளியாகி, ‘மணிக்கொடி’ எழுத்தாளரானார். அப்போது அவர் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.ஏ., (பொருளாதாரம்) படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு எம்.வி.வி.யின் கதைகள் ‘மணிக்கொடி’யில் தொடர்ந்து வெளியாகின. பிறகு, பட்டுச் சரிகைத் தொழிலைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.
‘மணிக்கொடி’ இதழ் நின்ற பிறகு, ‘தேனீ’ எனும் இதழைத் தாமே தொடங்கி, மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தார். அவ்விதழை நடத்துவதில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் தனது நிலத்தை விற்கவேண்டியதாகியது. பின்னர், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார். வறுமையின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு தவித்தார். அவரது வாழ்வனுவங்களை அவரது படைப்புகள் பிரதிபலித்தன.

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ...

தன் மகளின் திருமணத்திற்காக, ‘பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்’ தலைப்பிலான 40க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை மிகவும் கஷ்டப்பட்டு எழுதி, கசப்பான அனுபவத்தைப் பெற்றார்.
கிராம ஊழியன், சுதேசமித்திரன், கலாமோகினி, பாலம், கலைமகள், சிவாஜி போன்ற இலக்கிய இதழ்களிலும், குமுதம், ஆனந்த விகடன் போன்ற வெகுமக்களுக்கான இதழ்களிலும் எழுதியுள்ளார். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் மட்டுமன்றி, என் இலக்கிய நண்பர்கள் எனும் இலக்கிய ஆளுமைகளுடனான தனது அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். ரஜினி பாமிதத் உட்பட சிலரின் பிற மொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

எம்.வி. வெங்கட்ராம் | அழியாச் சுடர்கள்

‘பாலம்’ இதழில் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், அவர் தொடராக எழுதிய ‘காதுகள்’ நாவலுக்கு 1993க்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு விருது வழங்கும்போது, கடும் சர்ச்சைக்குள்ளாகும் ‘சாகித்ய அகாதெமி’ எம்.வி.வி.க்கு விருது வழங்குவதன் மூலம் தகுதியான ஒருவருக்கு வழங்கப்படுவதாக சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்ச்சையிலிருந்து முதன் முதலாகத் தப்பித்துக் கொண்டது. எனினும், காலம் கடந்து எம்.வி.வி.க்கு இவ்விருது வழங்கப்படுவதாக வாசகர்கள், எழுத்தாளர் மத்தியில் ஒரு கருத்து நிலவியது.

பிரபஞ்சன் – கடைசி பெஞ்ச்
எழுத்தாளர் பிரபஞ்சன், “எம்.வி.வெங்கட்ராம் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது, மிகமிக மகிழ்ச்சிக்குரியது. அவர் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தி.ஜானகிராமனுக்கும், கு.அழகிரிசாமிக்கும் நிகரானவர். எம்.வி.விக்கு இந்தப் பரிசுகளெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சென்று சேர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்திருந்தால் இன்னும் கூடுதலான படைப்புகள் அவரிடமிருந்து பிறந்திருக்கும். என் மாணவப் பருவத்தில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். என் எழுத்து வளர்ச்சியில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. ‘சாகித்ய அகாதமி’ நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் அசலான எழுத்தாளனைக் கண்டுபிடித்து பரிசளித்திருக்கிறது. அதற்காக நான் பாராட்டுகிறேன்’’ என்று கூறினார். தமிழ் எழுத்தாளர்கள் பலரின் கருத்துகளும் இப்படியானவையே.

சௌந்தர சுகன் மாத இதழ்: January 2011
அப்போது, சென்னையில் ‘சாரதா’ இதழை நடத்திக் கொண்டிருந்த நான், தஞ்சைக்குச் சென்று, தஞ்சை ப்ரகாஷை அழைத்துக்கொண்டு கும்பகோணத்தில் வசித்த எம்.வி.வி.யை அவரது இல்லத்தில் சந்தித்தேன். எப்போதும்போல சவரம் செய்யப்பட்ட முகம், வெள்ளை கதர் வேட்டி சட்டை, வெற்றிலைப் பெட்டி என காணப்பட்டார்.

mv. venkatram – சிலிகான் ஷெல்ஃப்
‘காதுகள்’ புத்தகத்தை அவரிடம் கொடுத்து கையெழுத்து கேட்டேன். பேனாவை மிகவும் சிரமப்பட்டு பிடித்து நடுக்கத்துடன் ஸ்பிரிங் போல கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அந்த சந்திப்பின்போது எம்.வி.வி.யின் துணைவியார் ருக்மணி அம்மாள் உடனிருந்தார். அவருக்கு நான்கு மகன்கள்; மூன்று மகள்கள். பெரிய குடும்பம்.

அந்த சந்திப்பு ‘சாரதா’ (பிப்.2004) இதழில் வெளியானது. உயிரோட்டமான அந்த உரையாடலை இங்கே தருகிறேன். தயவு கூர்ந்து முழுமையாகப் படியுங்கள். இந்நேர்காணலில் எம்.வி.வி. மட்டுமல்ல, எழுத்தையே வாழ்க்கையாக வரித்துக்கொண்ட மூத்த எழுத்தாளர்கள் பலரின் வாழ்வனுபவங்களும் இதற்குள் பேசப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு சாகித்ய அகாதெமி விருது, காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இலக்கிய வட்டாரத்தில் பொதுவான கருத்து இருக்கிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

காலம் கடந்து என்று கூறுவதில் அர்த்தமே இல்லை. பெரும்பாலும் க.நா.சு.வுக்கு எழுபது வயதுக்கு மேல் கொடுத்தார்கள். வல்லிக்கண்ணனுக்குக் கிட்டதட்ட அறுபது வயது ஆகும்போது கொடுத்தார்கள். தி.ஜானகிராமனுக்கு சற்று முன்னதாகவே – அதுவும் அறுபது வயதுக்குப் பிறகுதான் கொடுத்ததாக நினைக்கிறேன். கு.அழகிரிசாமிக்கு அவர் இறந்த பிறகுதான் கொடுத்தார்கள். ஆக, இளம் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரொம்ப கம்மியாகத்தான் தெரிகிறது. எழில்முதல்வன் போன்ற சில இளைஞர்களுக்கும் வழங்கி இருக்கலாம். இந்த நிலையில் ‘கடைசி காலத்திலாவது சந்தோசமாக இருக்கட்டும்’ என்கிற நல்ல எண்ணத்தோடு எனக்கும் கொடுத்திருக்கலாம்.

உங்களுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விருது பெறுவதற்கான தகுதி இருந்த போதிலும் இதுகாலம் வரை நீங்கள் ஒதுக்கப்பட்டிருந்தீர்கள் என்பதை உணர்கிறீர்களா?

நல்ல கேள்விதான்! இதற்கு ‘சாகித்ய அகாதெமி’காரர்களை எப்படி குறை சொல்லமுடியும்? தமிழ் நாட்டில் ஏராளமான இளம் எழுத்தாளர்கள், விருதுக்குத் தகுதியானவர்கள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். அப்படி பார்க்கும்போது, என் பெயர் பழைய பெயராகிவிட்டது. ஓரளவு மறந்து வருகிற தினுசிலும் இருக்கிறது. நான் இப்போது அடிக்கடி எழுதுவதில்லை. இப்போது நடைமுறையில் எழுதுபவர்களின் பெயர்கள்தான் சட்டென்று ஞாபகத்துக்கு வரும். அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று தோன்றியிருக்கலாம் அல்லவா. பரிசும் விருதும் இப்போது எனக்குக் கொடுத்து கௌரவிப்பவர்களை நான் குறை சொல்லி இழிவுபடுத்த விரும்பவில்லை.

ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு, எனக்குச் ‘சாகித்ய அகாதெமி’ விருது கொடுப்பதாக அந்த அமைப்பில் உள்ள ஒருவரே தகவல் அனுப்பினார். நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால், நானாக இதுவரையில் எந்த விருதுக்காகவும், பரிசுக்காகவும் எனது புத்தகங்களை அனுப்பியதே கிடையாது.

அப்போது சென்னையில் இருந்த எனக்கு “இந்த வருட சாகித்ய அகாதமி விருது உங்களுக்குத்தான் – உங்கள் ‘அரும்பு’ நாவலுக்கு’’ என்று ஒரு செய்தி வந்தது. இதைச் சொல்லி அனுப்பியவர் ஒரு நம்பகமான மனிதர். ஆனால், ஒரே வாரத்தில் மாறிவிட்டது. எப்படி மாறியது என்பதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? அதற்காக அவர்களைக் குறை சொல்வதில் என்ன இருக்கிறது? ஏதோ குறை கூறிப் பேசுகிறார்கள். அதிலே நியாயம் இருக்கலாம். சரியான நடைமுறை என்னவென்று எனக்குத் தெரியாது.

இப்போதுகூட விருது கொடுப்பதாக இருந்த விசயமே எனக்குத் தெரியாது. இரவு ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். எதிர் வீட்டுப் பையன் ஓடிவந்து “நீங்கள் காதுகள் என்கிற நாவலை எழுதியிருக்கிறீர்களா?’’ என்று கேட்டான். “ஆமாம், அதற்கு என்ன?’’ என்று கேட்டேன். “அதற்கு விருது கொடுக்கப் போவதாக ரேடியோவில் சொன்னார்கள்’’ என்றான். நான் நம்பவில்லை. ஏனென்றால், ஏற்கனவே நம்பி ஏமாந்த அனுபவம் இருக்கிறது. எட்டரை மணிக்கு டி.வி. செய்தியில் சொன்னார்கள். அப்போதுதான் எனக்குச் ‘சரிதான்; உண்மைதான்’ என்கிற நம்பிக்கை உண்டாயிற்று.

ஆனால், இப்போதுகூட எனக்கு விருது கொடுக்கவேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இல்லையே! எப்போதுமே, அவர்கள் இன்னாருக்குத்தான் கொடுக்கவேண்டும், இன்னாருக்குக் கொடுக்கக்கூடாது என்கிற பாகுபாடு வைத்துக்கொண்டு செயல்படுவதாகச் சொல்ல முடியாது – தெரியாது.

‘அரும்பு’ நாவலுக்குப் பரிசு கிடைத்திருந்தால் நீங்கள் மிகவும் சந்தோசப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால், உங்கள் ‘மாஸ்டர் பீஸ்’ அதுதான் என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். ஆனால், இப்போது ‘காதுகள்’ நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. இது ஒரு மாறுபட்ட விசயம். ‘காதுகள்’ பற்றிகூட புரியவில்லை என்று பொதுவான அபிப்ராயம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ‘இதையெல்லாம் எப்படி நம்புவது’ என்று பலர் கஷ்டப்படுகிறார்கள். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதாவது 25 வருடங்களுக்கு முன்பு ‘அரும்பு’க்கு விருது கொடுப்பதாகக் கூறியதால் அது பற்றி பேசினேன். எனக்கு இப்போதும்கூட ‘அரும்பு’ உத்தியிலும் சரி, மனோவியல் ஆய்விலும் சரி, அதில் ஆழ்ந்து போயிருக்கிறேன் என்கிற எண்ணம் இருக்கிறது. அதை காதுகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று நீங்களே ஏன் அர்த்தம் செய்து கொள்கிறீர்கள்.
‘காதுகள்’ புரியவில்லை, நம்பமுடியவில்லை என்றால், எதற்காக நம்ப வேண்டும்? காக்கா பேசியது என்றால், காக்கா பேசியதாகவே நம்ப வேண்டுமா? அது எழுத்தாளனுடைய கதை. அதை நடந்தது என்று வைத்து, அதைச் சரியாகச் செய்திருக்கிறானா இந்த எழுத்தாளன் என்று பார்க்கலாம். “படிக்கும்போதே காதில் சப்தம் கேட்கிறது – பயமாய் இருக்கிறது’’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது எனக்கு வெற்றிதான். ஆனால், புரியவில்லை என்றால்… என்ன புரியவில்லை!

‘அரும்பு’ நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன. ‘காதுகள்’ நாவலில் ஒரே ஒரு கதாபாத்திரம்தான். மற்ற பாத்திரங்கள் புகை படிந்தாற்போல் இருக்கின்றன. நீங்கள் கொண்டு வந்து காட்டக்கூடிய அபூர்வமான சக்திகள், தீய சக்திகள், நல்ல சக்திகள் எல்லாமே நடப்பு உலகத்தில் எப்படி இருக்கிறதோ, அதேபோல் நிழல் போல் இருக்கின்றன. அதை நீங்கள் ஏன் இன்னும் அழுத்தமாகக் கொண்டு வந்திருக்கக் கூடாது? ஓர் இடத்தில், ‘இப்படி நான் எல்லாவற்றையும் எழுதினால் யாருமே நம்ப மாட்டார்கள். தூக்கிப் போட்டு விடுவார்கள்’ என்று அச்சப்படுவது மாதிரியும் எழுதியிருக்கிறீர்களே…?

முதல் மறுவாசிப்பு நாவலாசிரியர் ...

உங்கள் கேள்விக்கான பதிலை ஆரம்பத்திலிருந்தே சொல்ல வேண்டுமானால், ஒரு நாவல் போல இன்னொரு நாவல், ஒரு சிறுகதை போல இன்னொரு சிறுகதை இருக்கக்கூடாது என நினைப்பவன் நான். முதலில் ‘நித்தியகன்னி’, பிறகு ‘வேள்வித்தீ’, அதன் பிறகு ‘உயிரின் யாத்திரை’, ‘இருட்டு’… இப்படி எடுத்துக் கொண்டால், ஒரு நாவலுக்கும் மற்றொரு நாவலுக்குமான விஷயமே மாறுபட்டிருக்கும். வேண்டுமென்றே தெரிந்தே செய்தது. மற்றவர்களைப் போல, நான் பிறந்த சாதியைப் பற்றியே – அதாவது நெசவாளர்கள் பிரச்னை பற்றியே எழுதிக் கொண்டிருக்கலாம். அதில் எனக்கு விருப்பம் கிடையாது.

Velvith Thi - வேள்வித் தீ » Buy tamil book Velvith Thi ...
உங்களைப் போலவே ஒரு படைப்புக்கும், மற்றொரு படைப்புக்கும் முழுமையாக மாறுபட்டு எழுதக்கூடிய – எழுதிய, எழுதிக் கொண்டிருக்கிற தமிழ்ப் படைப்பாளியாக யாரையாவது சொல்லமுடியுமா?

முதலில், இப்படி புதுமையைச் செய்து காண்பித்தவர் புதுமைப்பித்தன். பிறகு ந.பிச்சமூர்த்தி செய்திருக்கிறார். கு.ப.ரா. அப்படி செய்ய வல்லவர்; செய்திருப்பார் – அதற்குள் காலமாகிவிட்டார். ஆனால், புதுமைப்பித்தன்தான் எல்லோரையும் விட பலவித பிரச்சினைகளைக் கையாண்டு எழுதினார். அவருக்கும் மாறுபட்டு நான் எழுதியிருக்கிறேன் என்கிறேன். புதுமைப்பித்தன் திருநெல்வேலி சைவ வேளாளர் பிரச்சினைகளை எழுதுவது என்று ஒரு வரையறை வைத்திருந்தார். நான் அத்தோடு நிற்காமல், எனக்குத் தெரிந்த பலவித விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உள்ளவன்.

என்னுடைய இலக்கியக் கண்ணோட்டத்தை மூன்று தினுசாகப் பிரித்துக் கொண்டேன்.
ஒன்று: உண்மையான வாழ்க்கையைக் கொஞ்சம்கூட கற்பனையே இல்லாமல் அப்படியே எழுதுவது – நியூஸ் கொடுப்பது போல. ஆனால், அதில் கலைத் தன்மையைக் காண்பிக்க வேண்டும். அந்த வகையில் ‘பெட்கி’, ‘மாய்பாப்’ மாதிரியான கதைகள் இருக்கின்றன. ஒரு மாதிரியான ‘ஆட்டோபையாகிரபி’ கதைகள் இவை.

இரண்டாவது: ஓரளவு கற்பனை கலந்து வாழ்க்கையின் எதார்த்தங்களை எழுதவேண்டும் என்று சில கதைகள்.

Noolulagam » எம்.வி.வெங்கட்ராம் » Page 1
மூன்றாவது: கற்பனையில் எவ்வளவு உயரம் முடியுமோ, அவ்வளவு ‘ஃபென்டாஸ்டிக்’காகவும் விரிவாகவும் உயரமாகவும் பறந்து உலகத்தை எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற தினுசிலும் சில கதைகளை எழுத நினைத்தேன். அதற்காகத்தான் மகாபாரதக் கதைகளை நான் உபயோகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய கண்ணோட்டம் இதுதான்.

‘அரும்பு’ பாத்திரப் படைப்புகளுக்காக எழுதப்பட்ட கதை. பாத்திரப் படைப்பு என்றால் சும்மா கோடு போட்டு எழுதுவது அல்ல. உளவியல் நோக்கோடு எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதை அது. அப்போது எழுதுவதற்கு நிறைய நேரமும் இருந்தது. ‘சுதேசமித்திரன்’ என்னை தாய் வீடு மாதிரி ஆதரித்து நான் எழுதியதை அப்படியே பிரசுரித்தார்கள். அதனால் என் இஷ்டத்துக்கு ஒவ்வொரு பாத்திரத்தையும் உளவியல் நோக்கோடு எழுத முடிந்தது. அந்தக் கட்டமெல்லாம் கடந்து ‘காதுகள்’ முற்றிலும் மாறுபட்ட Subject.

மின்னல் வரிகள்: இன்னும் சிதறுது ...

ஒரு முறை ‘கலைமகள்’ ஆசிரியர் கி.வ.ஜகந்நாதன் என்னை ஓர் ஆந்திர எழுத்தாளரிடம் அறிமுகப்படுத்தியபோது, “வாசகர்கள் என்ன சொல்வார்கள், விமர்சகர்கள் என்ன சொல்வார்கள் என்று கொஞ்சமும் கவலைப்படாத ஓர் எழுத்தாளர்’’ என்று கூறினார். அது உண்மை. அவர் என்னை நன்றாகப் புரிந்துகொண்டுதான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.

ஆனால், ‘காதுகள்’ எழுதும்போது கொஞ்சம் தயங்கினேன். ஓரளவு பிராதத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் போல சில அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அதற்கு என்ன வேண்டுமானாலும் பெயர் சொல்லலாம். ‘இலியூஷனரி’ என்று சொல்லுங்கள், ‘ஸ்ஷோப்ரினிக் டிசிஸ்’ என்று சொல்லுங்கள். ஏதாவது பெயர் சொன்னால் சரி. நடந்ததை நான் சொல்லணும்.

காதுகள் - Kaathugal - Panuval.com - Online Tamil Bookstore
பல விஷயங்களை அதில் நான் சொல்லாமல் விட்டுவிட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, இது புராணம் என்ற அவநம்பிக்கை ஏற்பட்டுவிடுமோ என்பது. இரண்டாவது, உடல் தளர்ந்து விட்டது. கை எழுத முடியாத நிலைக்கு வந்தாகி விட்டது. நடுக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் கலைத் தன்மையோடு அதைப் பூர்த்தி செய்தால் போதும் என்ற எண்ணத்தோடு முடிக்க வேண்டியதாயிற்று. Visual and Ordinry Hallucination – தமிழில் இதை யாரும் அதிகமாக எழுதியதாகத் தெரியவில்லை. அதில் புரியாத விஷயம் எதுவுமே இல்லை. Grimm tales-ல் எல்லாவிதமான கதைகளும் வருகின்றன. அதையெல்லாம் நம்புகிறோமே! அதுபோல இதையும் பாருங்கள்.

“வறுமையை நீங்கள் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறீர்கள். அது பற்றி தொடக்க கால கதைகள் சிலவற்றில் அழுத்தமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், அதற்குப் பிறகு எழுதிய கதைகளில் அந்தத் தாக்கத்தை குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்… சமகால அரசியல் பதிவுகள் குறைவாக இருக்கிறதே?

மஹாபலி - லா.ச.ராமாமிருதம் - La Sa Ra ...

வறுமையைப் பற்றி நான் எழுதவில்லை என்று எப்படி சொல்ல முடியும். ‘காதுகள்’ நாவலைக்கூட “வறுமையின் ஓலமாக இருக்கிறது’’ என்று லா.ச.ரா. எழுதியிருக்கிறார். அதுபோல, என்னைப் பொறுத்தவரையில் வறுமையோடு போராடுவது என்பதுதான் வாழ்க்கையாக இருந்தது. அதில் சந்தேகமே இல்லை. நன்றாக, சௌகர்யமான, சுகத்தின் சிகரத்திலிருந்து வறுமையின் அதள பாதாளத்தில் விழுந்து பட்ட கஷ்டங்களை ஓரளவு ‘காதுகள்’ நாவலில் சொல்லியிருக்கிறேன். ‘வயிறு பேசுகிறது’ , ‘வரவும் செலவும்’ போன்ற சில கதைகளில் – நெசவாளி குழந்தையை விற்க வேண்டிய நிலைமை இருந்தது – அதைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன். அரசியல் பாதிப்பு இல்லை என்று எப்படி சொல்வது!

அப்படி சொல்லவில்லை. நீங்கள் அரசியல் பாதிப்பை பத்திரிகைகளில் தலையங்கமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இலக்கியம் என்று வரும்போது, அதை வடிகட்டி அரசியலுக்கு இடமே கொடுக்காமல் எழுதி இருக்கிறீர்களே?

அரசியல் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கை உங்கள் வாழ்க்கையைப் போல் அமையவில்லை. விநோதமான வாழ்க்கை. பிறரிடம் சொல்வதற்குப் பயப்படும்படியான வாழ்க்கை. வாழ்க்கையில் பெரும்பாலான நாட்கள் இந்தப் போராட்டத்திலேயே போய்விட்டன. எந்தப் போராட்டத்திலேயே! – நான் பைத்தியக்காரன் என்று பேர் வாங்காமல் இருக்கவேண்டுமே என்கிற போராட்டத்திலேயே. அந்தப் போராட்டம் பல ஆண்டுகள் நடந்தது. அந்தச் சமயத்தில்கூட நிறைய புத்தகங்கள் எழுதிவிட்டேன். ‘அரும்பு’, ‘வேள்வித்தீ’ அப்போதுதான் எழுதினேன்.

ஆறு குறுநாவல்களில் பெரும்பாலானவை அப்போதுதான் – அந்தக் குழப்பத்தில் இருந்த நேரத்தில்தான் எழுதியது. குழப்பம் என்றால் எனக்குப் பின்னால் எந்த நேரத்திலும் பைத்தியம் பிடித்துவிடுமோ – அதாவது நான் என்கிற உணர்வு பிசகிவிடுமோ என்கிற நிலை! இந்தப் போராட்டத்திற்கு இடையேதான் என் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தேன்.

இது பற்றி யாரிடமும் நான் சொல்லியதில்லை. இந்த அனுபவம் ஆரம்பிக்கும்போது முதலில் சில நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் என்னை ‘ஒரு மாதிரி’ பார்க்க ஆரம்பித்தார்கள். அப்புறம்தான் அப்படி சொல்வது தப்பு என்று உணர்ந்து திருத்திக்கொண்டு என் நெருக்கடிகளை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன். அந்த அனுபவமே மிகவும் பயங்கரமானது.

அப்படி ஒரு கஷ்டம் இருப்பதாக நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. வறுமையை என்னுடைய சொந்தச் சவாலாக ஏற்று அதை எதிர்த்தும் போராடுகிற விதத்தில்தான் நான் வாழ்க்கையை நடத்தி வந்தேன். குடும்பமோ பெரிதாகிவிட்டது. அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு… இந்தப் போராட்டத்திலேயே நான் வாழ்ந்து விட்டதால் அரசியல் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எழுதுவதற்கு நேரம் இல்லை.

1952-53ல் ஒரு கவுன்சிலர் தேர்தல் நடந்தது. அதில் நான் காங்கிரஸ்காரனாய்ப் போட்டியிட்டுத் தோற்றேன். எனக்குப் போட்ட ஓட்டுகளை எல்லாம் அள்ளி அவர்கள் பெட்டியில் போட்டுக் கொண்டார்கள். நான் சொல்வது பொய் இல்லை. இதற்கு எல்லாரும் உடந்தை. அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு நேரடி அரசியல் வேண்டாம். இனி எந்தக் கட்சியிலும் சேருவதில்லை என்ற முடிவோடு இன்றுவரை ஒதுங்கி இருந்துவிட்டேன். ஒரு வேளை, கை சரியாக இருந்திருந்தால், இது பற்றியும் எழுதியிருப்பேனோ!
(சில வினாடிகள் மௌனம்)

1942ல் முதன் முதலாக நீங்கள் ‘விடிவெள்ளி’ என்றொரு பத்திரிகையை ஆரம்பிக்க இருந்ததாகவும், கு.ப.ரா. கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்முயற்சியை கைவிட்டதாகவும் அறிகிறோம். பிறகு 1948ல் மீண்டும் பத்திரிகை ஆரம்பித்தபோது அதற்கு ‘தேனீ’ என்று பெயர் வைத்திருக்கிறீர்கள். இதற்கு முக்கியமான காரணம் ஏதேனும் உண்டா?

அப்போது இங்கிலாந்திலிருந்து ஜோசப் எடிசன் ‘The Bee’ என்றொரு இதழை நடத்தி வந்தார். அந்த இதழின் பாதிப்பினால்தான் ‘தேனீ’ என்று பெயரிட்டேன். அது மட்டுமல்லாமல், பலவிதமான மலர்களிலிருந்து தேன் சேகரிக்கிற சுறுசுறுப்பான ஓர் உயிரினம் தேனீ என்பதனாலும் அப்பெயரை வைத்தேன்.

வேறு எந்த எழுத்தாளருக்கும் இல்லாத அனுபவங்கள் உள்ள நீங்கள் சுயசரிதை எழுதலாமே…

என்னுடைய அனுபவத்தில் என் சுயசரிதையானது ஓரளவு கதைகளாகவோ குறுநாவல்களாகவோ வந்தாயிற்று. நாவல்களில் ‘உயிர் யாத்திரை’, ‘இருட்டு’, ‘காதுகள்’ இவையெல்லாம் சுயசரிதையின் ஒரு பகுதிதான்.

என் குடும்ப வாழ்க்கையைப் பற்றி குறுநாவல்களில் எழுதி இருக்கிறேன். குழந்தைப் பருவத்தைப் பற்றியும் எழுதியாயிற்று. ‘மாய்பாப்’ குறுநாவலில் என் அம்மா, அப்பா பெயரை அப்படியே போட்டு எழுதியிருக்கிறேன். இனிமேலும் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை இல்லை; ஆத்திரமே இருக்கிறது! ஆனால் முடியவில்லையே!
(மௌனம்).

நீங்கள் சமூக பிரக்ஞை இல்லாமல், மக்கள் பிரச்சினைகளை அணுகாமல் தெய்வீகமான, ஆத்மீகமான உயர்தனமான விசயங்களை மட்டுமே அணுகிக் கொண்டிருப்பதாக சில எழுத்தாளர்கள் கூறுகிறார்களே?

சமூகப் பிரக்ஞை என்பதில் தெய்வீகம் பற்றி பேசுவதும் அடக்கம்தானே. நம்பாதவர்களுக்கு அது பழக்கமில்லை. நம்புகிறவர்களுக்கு சில நியமங்கள் உண்டு. தியானத்தில் உட்காருவது பற்றி சில அனுபவங்களைக் கதையாக எழுதினால் சமூகப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட கதையாகாதா? பசியைப் பற்றியும், உப்பு, பருப்பு விலைஉயர்வு பற்றியும் பேசுவதுதான் சமூகப் பிரக்ஞை என்று எழுதுவதை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

சமூகத்தில் பொருளாதார மேடுபள்ளங்கள் இல்லாமல் இருக்க வேண்டுமென்று நினைக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எழுதுபவர்களும் இருக்கிறார்கள். அதுவும் ஒரு தேவையான எழுத்துதான். ஆனால், அதே மாதிரியாக ஒவ்வொருத்தரும் எழுதவேண்டும் என்று எப்படி சொல்லமுடியும்! எனக்கு உண்மையிலேயே இப்போது உள்ளதுபோல் ஏழை – பணக்காரன் என்கிற ஏற்ற இறக்கம் இல்லாமல் ஓரளவு சமமாக இருந்தால் நல்லது என்கிற எண்ணம் இருக்கிறது.
அதற்காகத்தான் 1972க்கு முன்பிருந்தே “நீங்கள் எந்த மாதிரியான சமூகத்தை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்டால்,“God Oriented Communist Pattern of Society”” என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதற்கான நூல்களை நான் இதுவரை எழுதவில்லை என்பது உண்மைதான். முதலிலேயே சொல்லி விட்டேன், நான் ஏன் எழுதவில்லை என்பதற்கான காரணத்தை. சமூகத்தில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகமாகவும், பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பது மிக தவறு. அதனால் சமூகத்தில் அமைதி இருக்காது என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதைப் பற்றியே நான் எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் எதிர் பார்ப்பது எப்படி?

‘சமூகத்தில் நிலவுகிற அநீதிகளைக் கண்டிக்கிற தீவிரவாதி’ என்று நீங்களே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறீர்களே?

பசியைக் கண்டித்திருக்கிறேன். நானே ஏழையாய் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும்போது ஏழையைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டால், என்ன அர்த்தம். என்னைப் பற்றி எழுதினாலே ஏழையைப் பற்றி எழுதியதாகத்தானே அர்த்தம்.
வறுமை நிச்சயம் மோசம்தான். அதுவும் குடும்பத்தோடு இருப்பவனுக்கு ரொம்ப கொடுமை. அதை ‘காதுகள்’ நாவலில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறேன். இதைவிட அழுத்தம் திருத்தமாக வேறு எந்த கதையிலும் பேசவில்லை. சாமியாருக்கு, சந்நியாசிக்கு, வீட்டைத் துறந்தவனுக்கு வறுமை தேவையாக இருக்கலாம். அவனுக்கு அடுத்த வேளையைப் பற்றி கவலை இல்லை. நம்மால் அப்படி முடியாது. அதோடு இந்த அரசியல் போக்கைப் பார்த்தால் மகா பயங்கரமாக இருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.

எனக்கு 25,000 ரூபாய் விருதுக்காகப் பணம் வருகிறது என்றால், கேட்க சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்? எத்தனை நாட்களுக்கு அதை வைத்துக்கொண்டு உயிரோடு இருக்க முடியும்? காபியிலிருந்து தபால் கார்டு வரை விலை ஏறுகிறது…

எழுத்தாளர்களுக்கு இப்போது கொடுக்கிற Remunaration விவகாரத்தில் உங்களுக்கு அபிப்ராயம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் இலக்கியம் படைத்தே சம்பாதித்து வாழமுடியாது என்பதை பலமுறை தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் கேள்விபட்டபடி ‘விகடன்’தான் அதிகமாக Remunaration கொடுக்கும் பத்திரிகை. அடுத்தபடி ‘குமுதம்’. இப்படி சில பத்திரிகைகள் கொடுக்கின்றன. இவர்கள் ‘இலக்கியப் படைப்பாளிகளை ஆதரிக்கிறோம்’ என்று சொல்லி பத்திரிகை ஆரம்பிக்கவில்லை. ஏதோ ஒரு நோக்கத்தில் பத்திரிகை ஆரம்பித்து, அந்த நோக்கத்தோடு நடத்துகிறார்கள். என் பேரில் ஒரு மரியாதை இருக்கிறது என்றால், என் கதை ஒன்றை பிரசுரித்து மற்றவர்களுக்கு கொடுப்பதைவிட ஐம்பதோ, நூறோ அதிகமாகக் கொடுத்துவிடுகிறார்கள். இது வருடத்தில் ஓரிரு தடவை நடக்கலாம். விகடனிலோ, குமுதத்திலோ வாராவாரம் என் கதையை போடச் சொன்னால் போடுவார்களா! போடமுடியாது.

பி.எஸ்.ராமையாவினுடைய ‘சந்தைப்பேட்டை’த் தொடரை தொடர்ந்து வெளி யிட்டார்களே?

B.S.Ramaiah [Story,Screenplay, Dialogue Writer, Director] | Antru ...

பி.எஸ்.ராமையாவினுடைய ஆளுமை அது. ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு வெளியிட்டார்கள். அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஆசிரியர் அவருக்கு வேண்டியவர். ‘எழுது’ என்று அவரை உற்சாகப்படுத்தினார். உடனுக்குடன் பணமும் கொடுத்தார்கள். அவரைப் போல் என்னால் வாராவாரம் எழுத முடியாது. அப்படி எழுதினாலும் அவர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

இலக்கியத்தை சிறு பத்திரிகையாளர்கள்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே பணத்தைப் பற்றிய பேச்சேக் கிடையாது. நான்கூட வேடிக்கையாகச் சொன்னேன் “57 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். 57 ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறேன்’’ என்று.

மணிக்கொடியில் என்ன பணமா கொடுத்தார்கள்? சிறுபத்திரிகையிலிருந்து பணம் வராது. நம்மைக் கேட்காமல் இருந்தால் போதாதா? அதனால், இலக்கியப் படைப்பைத் தொழிலாகவோ, வருவாய் தரும் ஒரு சாதனமாகவோ நாம் தமிழ்நாட்டில் கருத முடியாது.

நீங்கள் ‘தேனீ’ பத்திரிகையை நடத்தினீர்கள். அப்போது எழுத்தாளர்களுக்கு Remunaration கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்ததா?

நிறைய இருந்தது. நான் கொடுத்திருக்கிறேன். ‘தேனீ’யில் எழுதிய ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் பணம் அனுப்பி வைத்திருக்கிறேன். அப்படி தொடர்ந்து கொடுக்க முடியாது என்கிற சூழ்நிலையில்தான் பத்திரிகை நடத்துவதை நிறுத்தினேன்.
எழுத்தாளர்களுக்கு சமூகத்தில் டாக்டருக்கு, என்ஜீனியருக்கு, வக்கீலுக்கு இருக்கிற மரியாதை கிடையாது. காரணம், அவன் சம்பாதிக்க முடியாதவன் என்கிற அர்த்தம் எல்லாருக்கும் புரிந்துவிட்டது. பெயர் வரும் பத்திரிகையில். “நல்ல பெரிய ஆள்’’ என்று சொல்வார்கள். ஆனால், பைசா வராது என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. பணம் சம்பாதிக்க முடியாதவனை இந்தச் சமுதாயம் கேலி செய்யாமல் வேறு என்ன செய்யும்? எழுத்தாளர்களின் நிலையை உயர்த்தி ஆகவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்த ஆசை எப்போது நிறைவேறும் என்று பார்க்க வேண்டும்.

மணிக்கொடி அளவுக்கு உங்கள் ‘தேனீ’ இதழ் இருக்கவில்லை என்றொரு கருத்து நிலவுகிறதே?

மணிக்கொடி (இதழ்) - தமிழ் ...

(சிரிக்கிறார்) மணிக்கொடி எழுத்தாளர்களில் எஞ்சி இருப்பவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘தேனீ’யை ஆரம்பித்தேன். இது ஒரு நோக்கம். தரமான எழுத்தாளர்களைத் தேடி அவர்களுக்கும் இடம் தரவேண்டும் என்பது இன்னொரு நோக்கம். இந்த இரண்டு நோக்கங்களுமே எனக்குப் பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது. முக்கிய காரணம், இந்த மணிக்கொடி கோஷ்டியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஏதோ ஒருவித மறப்புத்தன்மை வந்து விட்டாற் போன்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

ந. பிச்சமூர்த்தி – 'எழுத்து ...

பிச்சமூர்த்தியை எழுதிக்கொண்டே இருக்கச் சொன்னேன். அவர் இரண்டு கவிதைகள் மட்டுமே எழுதினார். அந்த இரண்டு கவிதைகளும் அவருடைய மற்ற கவிதைகளோடு ஒப்பிடும்போது சாதாரண கவிதைகள்தான்.

க. நா. சுப்ரமண்யம் - தமிழ் ...

க.நா.சு. ‘ஜாதிமுத்து’ என்றொரு தொடர்கதை எழுதினார் – நல்ல தொடர் அது. அதை அவர் நடுவிலேயே விட்டுவிட்டார். அதற்குக் காரணமெல்லாம் இப்போது பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.
சிதம்பர சுப்பிரமணியம் ஒரே ஒரு சிறுகதை மட்டுமே எழுதினார். அவரும் மணிக்கொடி அளவுக்கு எழுதவில்லை.
சிட்டி ஒரே ஒரு கதை எழுதினார்.

கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை ...

கு.ப.ரா. இல்லை. புதுமைப்பித்தன் இறந்து விட்டார். ‘தேனீ’ ஆரம்பித்தபோது எல்லாருக்கும் கடிதம் எழுதினோம். புதுமைப்பித்தன் பாகவதருடைய ஒரு படத்துக்கு வசனம் எழுத புனாவிற்குப் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு தி.ஜானகிராமனும் நானும் பம்பாய்க்குப் போகிற வழியிலே புனாவிலே இறங்கினோம். அங்குதான் ஜானகிராமனின் மாமனார் பட்டாளத்திலே கேப்டனாக இருந்தார். அவர் வீட்டிலே தங்கிக்கொண்டு புதுமைப்பித்தனைத் தேடிப் போனோம். அங்கு, “திருவனந்தபுரத்துக்குப் போய் இரண்டு நாள் ஆகிறது. சேனிடோரியத்திலே சேர்ந்துகொண்டு இருக்கிறார். அவருக்கு முற்றிய டி.பி. நோய்’’ என்று சொன்னார்கள். அந்த முகவரி சரியாகத் தெரியவில்லை.

‘தேனீ’ இரண்டாவது இதழ் வரும்போதே அவர் காலமாகிவிட்டார் என்கிற தகவல் வந்தது. அவருக்கு அவ்வளவு சீரியஸாக வியாதி இருக்குமென்று அப்போது எனக்குத் தெரியாது. ரொம்ப கஷ்டப்பட்டுச் செத்தார் என்று செய்தி வந்தது. விசயம் தெரிந்திருந்தால், நான் பெரிய உதவியாக இல்லாவிட்டாலும் சின்ன உதவியாவது செய்திருப்பேன். இல்லே, முடியலே… இது காலம் கடந்த பேச்சு – பின்நினைவு.

புதுமைப்பித்தனை அவரது கடைசி காலம் வரை நீங்கள் சந்தித்ததே கிடையாதா?

சிறுகதைச் சித்தன்- Dinamani

அந்த வாய்ப்பே இல்லை. அப்போது நான் இளைஞன். அவர்களெல்லாம் என்னைவிட வயதானவர்கள். என்னுடைய சுபாவம், நானே போய் யாரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசுவது இல்லை. பல தடவை நான் மெட்ராஸ் போனபோதுகூட பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன் இப்படி யாரையும் சந்தித்தது கிடையாது. 1960களில்தான் அவர்களைச் சந்தித்தேன். ‘தேனீ’ நடத்தும்போது க.நா.சு. வருவார். தி.ஜானகிராமனும் கரிச்சான் குஞ்சுவும் என்னோடு இருந்தார்கள்.

writermaanee: தி. ஜானகிராமன்

‘தேனீ’யினால் இலக்கியத்துக்கு ஏற்பட்ட பெரிய நன்மை என்னவென்றால், ஜானகிராமனுக்கு இலக்கிய அந்தஸ்து கொடுத்த பல கதைகள் அதிலே வந்திருந்தன. முதல் இதழிலேயே அவர் ‘ரத்தப் பூ’ என்கிற சிறுகதையை எழுதினார். அந்தக் கதை வெளிவந்தவுடனே, இங்கே ஒரு இலக்கியப் படைப்பாளி இருக்கிறார் என்கிற எண்ணத்தை உண்டாக்கியது.

க.நா.சு. அதற்கு முன்பே எழுதிக் கொண்டிருந்தாலும், தேனீயில் எழுதியபோதுதான் இலக்கிய அந்தஸ்து உண்டாயிற்று.
எழுதாமல் இருந்த மௌனியை எழுத வைத்தேன்.

இதெல்லாம், இலக்கிய வளர்ச்சியில் ஒரு பங்கு இல்லை என்று சொல்ல முடியுமா? மணிக்கொடி அளவுக்கு ‘தேனீ’ வரவேண்டும் என்றால், அவர்கள் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும். லா.ச.ரா., சாமிநாத ஆத்ரேயன், வல்லிக்கண்ணன் இவர்கள் எல்லாம் தேனீக்கு நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

வல்லிக்கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா

 

என்னுடைய பங்களிப்பு ரொம்ப குறைவு. என்னிடம் தேனீயின் எல்லா பொறுப்புகளும் இருந்ததால் என்னால் அதிகமாக எழுத முடியவில்லை. தேனீ, மணிக்கொடி அளவுக்குச் செய்தது என்று சொல்ல முடியாவிட்டால்கூட, மணிக்கொடிக்குக் குறைவாக செய்து விட்டாற்போல் எனக்குத் தோன்றவில்லை.

மணிக்கொடியில் வந்த கதைகள் அனைத்தும் ரத்னம் என்று சொல்ல முடியாதல்லவா? அதிலே புதுமைப்பித்தன் போன்றவர்கள் எழுதியிருந்தாலும்கூட சில கதைகள் சோர்வாகத்தான் இருக்கும். அவருடைய ‘துன்பக்கேணி’யில் ஒரு பாத்திரத்தை செத்துப்போன மாதிரி முதலில் எழுதிவிட்டு, பிறகு உயிரோடு நடமாடுவதுபோல தப்பாக எழுதிவிட்டார். இதெல்லாம் நடக்கக் கூடியதுதான்.
தமிழ் நாட்டில் இலக்கியப் பத்திரிகை நடத்துவது அந்தக் காலத்தில் ரொம்ப கடினமான வேலை. இப்பொழுது இளம் எழுத்தாளர்கள் ரொம்பவும் சிறப்பாக எழுதுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர் எழுதிவிடுவார்கள். அப்போது அப்படி இல்லை. அதனால், ஒரே மாதிரியான தரத்தை எதிர்பார்க்க முடியவில்லை. கடைசியில் நானே அலுத்துப் போய் எல்லாருக்கும் இடம் கொடுக்க ஆரம்பித்து விட்டேன். பத்திரிகை நடத்தணும், படைப்பு வரும்போது போடுவோம் என்கிற தினுசுக்கு நான் வந்தாச்சு.

‘பாலம்’ பத்திரிகையில் நீங்கள் கௌரவ ஆசிரியராக இருந்தீர்கள். அந்த இதழில் தான் ‘காதுகள்’ எழுதினீர்கள். அதற்குப் பிறகு பதிமூன்று ஆண்டு காலம் எழுதாமலேயே இருந்தீர்கள்…

நான் எங்கே எழுதாமலே இருந்தேன்? 86-ல் குமுதத்தில் ‘நானும் உன்னோடுதான்’ குறுநாவல் எழுதினேன். 92-ல் ‘என் இலக்கிய நண்பர்கள்’ எழுதினேன்.

இருந்தாலும் அந்த 13 வருடங்களும் அஞ்ஞான வாசம்தானே?

பணம் வருகிற நம்பிக்கை இருந்தால் எழுதலாம். ‘என் இலக்கிய நண்பர்கள்’ தொடரைக்கூட ஆனந்த விகடனுக்குத்தான் அனுப்பினேன். என்றாலும், என்னுடைய தரத்தை நான் குறைத்துக் கொள்ளவில்லை. கஷ்டப்பட்டு எழுதுகிற நமக்-கு தினசரி பணம் தேவைப்படுகிறது என்று குமுதத்துக்கு அனுப்புகிறேன். அவர்கள் வெளியிடுகிறார்கள். பணம் அனுப்புகிறார்கள். இன்னமும் நான் தேவையில்தான் இருக்கிறேன். இது உண்மை. நான் வேஷம் போட விரும்பவில்லை. நிராயுதபாணியாக எழுத மனம் வரவில்லை. இதுதான் காரணம். சிறு பத்திரிகைகளில் வெளியிட்டு கௌரவம் செய்வீர்கள். கௌரவம் உலையேற்றப் பயன்படவில்லை. இது பற்றி நிறைய தமிழ் நாட்டில் பேசியாயிற்று.

புதுமைப்பித்தன் நோய்வாய்ப்பட்டு செத்தார். கு.ப.ரா. செத்ததை நான் கூட இருந்து பார்த்தேன். பிச்சமூர்த்தி “நான் சாவதற்கு மெட்ராஸ் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போனார். இவர்களெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு செத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலைமைக்கு என்னை நான் ஆளாக்கிக் கொள்ள தயாராக இல்லை.

இந்த நிலையில் ஆன்மீகம் உங்களை எந்த வகையில் திடப்படுத்தி இருக்கிறது?

சமீபத்தில் என் உடலை பரிசோதித்த டாக்டர், “இந்த வயதிலும் உங்கள் உடம்பை நன்றாகத்தான் வைத்திருக்கிறீர்கள்’’ என்று கூறினார். இந்த மனோதைரியம் ஆன்மீக தேட்டத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம். இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை நீங்கள் நம்பலாம்; நம்பாமலும் போகலாம்.

க.நா.சு. சாகித்ய அகாதெமி பரிசு வாங்கிய அன்று மேடையில் பேசும்போது, “சாகித்யமும் இல்லை; அகாதெமியும் இல்லை; இந்த சாகித்ய அகாதெமியில்’’ என்று சொன்னார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அவர் அப்படி சொன்னது அவ்வளவு சரி என்று நான் நினைக்கவில்லை. வல்லிக்கண்ணன், பி.எஸ்.ராமையா, தி.ஜானகிராமன் இவர்களுக்கெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். கு.ப.ரா., புதுமைப்பித்தன் காலத்தில் சாகித்ய அகாதெமி கிடையாது. அப்படியிருந்திருந்தால் அவர்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

அதே காலத்தில் சென்னை ராஜதானி இலக்கிய விருதை மலையாள எழுத்தாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கியிருக்கலாமே?

ஏன் அப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. யார் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்களோ, அவர்களைக் கேட்க வேண்டிய கேள்வி இது.

உங்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ‘ராஜராஜன் விருது’ முதல் ஆண்டிலேயே வழங்கப்பட இருந்ததாக கூறப்படுகிறதே?

அதுவும் ‘சாகித்ய அகாதெமி’ போலத்தான்! ஒரு பேராசிரியர் என் வீட்டுக்கு வந்து துணைவேந்தர் கூப்பிட்டதாகச் சொல்லி, என்னை அழைத்துப் போனார்கள். அங்கு எனக்கு விருந்தும் கொடுத்து விட்டார்கள். துணைவேந்தர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் என்னைக் காட்டி, “இவர்தான் விருது வாங்க இருப்பவர். இந்த (தஞ்சை) மாவட்டத்துக்காரர்’’ என்று கூறினார். ஆனால், ஒரு மாதத்தில் விருது வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதைப் பற்றி நான் என்ன சொல்வது? சும்மா இருந்தவனை அழைத்து, “நீங்க பெரிய ஆளுங்க’’ என்று கூறி, தலையில் ஒரு தட்டு தட்டி அனுப்பிய மாதிரிதான் இருந்தது. இதற்கு அரசியல்தான் காரணம் என்கிறார்கள். நான் எப்படி நிரூபிக்க முடியும்!

உங்களுக்கு அடுத்த பிறவி மீது நம்பிக்கை இருந்தால் எப்படி வாழ விரும்புவீர்கள்?

வேண்டாம். இனி எந்தப் பிறவியும் எனக்கு வேண்டாம். இந்தப் பிறவியில் அனுபவித்ததே போதும். இந்தக் கஷ்டத்தையும் வேதனையையும் அனுபவிக்க இன்னும் ஒரு பிறவி எதற்கு? வேண்டவே வேண்டாம்.

நன்றி

வணக்கம்.

சாகித்ய அகாதெமி விருது எம்.வி.வி.க்கு அவரது 73வது வயதில் வழங்கப்பட்டது. இவ்விருது 30 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு வழங்கப்பட்டிருந்தால், ராஜராஜன் விருதும் அளிக்கப்பட்டிருந்தால் எம்.வி.வி இன்னும் அதிகளவில் வாசகர்களிடம் கவனிப்பைப் பெற்றிருப்பார். குறிப்பிட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் மட்டுமே பேசப்படும் சூழலில் எம்.வி.வி.யும் பேசுபொருளாகியிருப்பார். அவருடைய படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டிருக்கும். அவருடைய பொருளாதார நெருக்கடியும் சற்று குறைந்திருக்கலாம். முக்கியமாக, அவரிடமிருந்து இன்னும் இன்னும் பல காத்திரமான படைப்புகள் வெளிவந்திருக்கும்.

எம்.வி.வி. மறைந்து 20 ஆண்டுகளாகிவிட்டன. 2000 ஜனவரி 14 அன்று அவர் இயற்கை எய்திவிட்டார். அவர் வாழ்ந்த பழமைமான வீடு இடிக்கப்பட்டு, புதிய வீட்டினை அவரது குடும்பத்தினர் எழுப்பிவிட்டனர்.

எம்.வி.வி.க்கு குடும்பத்தினர், வாசக அன்பர்கள், இலக்கிய அமைப்புகள் நூற்றாண்டு விழாவெடுக்க விரும்புகிறார்கள். ‘கொரானா’ கோரத்தாண்டவ சூழலில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. எனினும், இணையம் வழி இணைந்து எம்.வி.வி.யின் படைப்புகளை வாசிப்பதும், மறுவாசிப்புக்குட்படுத்துவதும் கருத்துகளை பதிவு செய்வதும் சாத்தியமே.

One thought on “நூற்றாண்டு விழா காணும் எம்.வி.வெங்கட்ராம் : சூரியசந்திரன்”
  1. அன்புடையீர்,
    வணக்கம் கோவையில் தனியார் கல்லூரியில் பேராசிாியராகப் பணியாற்றிவருகிறேன். எனது ஆய்வுமாணவர் ஐயா அவர்களின் (எம்.பவி.வெட்கட்ராமன் ) படைப்புகளில் ஆய்வு செய்கிறார். இருட்டு, அரும்பு, ஒரு பெண் பேராடுகிறாள் ஆகிய நாவல்கள் கிடைக்கப்பெறவில்லை….. எனவே அவற்றை பெறும் வழியாது? தொிவிக்கவும்.. நன்றி

    முனைவர் இரா. அபிமன்யு
    srmv cas, coimbatore-20. [email protected] – 9952374664

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *