2020ஆரம்பத்தில் வெளியிட இருந்த தெலுங்கு திரைப்படம், கொரோனாவினால் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் விடியோ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வினோத் அனந்தோஜூ இயக்கியுள்ளார். அருமையான கருத்துகளும் இனிமையும் கொண்ட  ஐந்து பாடல்கள் ஸ்வீகர் அகஸ்தி எழுதி  ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார். ஆனந்த் தேவரகொண்டா, வர்ஷா போல்லம்மா, சைதன்யா கரிகாபதி, திவ்யா ஸ்ரிபாடா, கோபராஜூ ரமணா, சுரபி பிரபாவதி, பிரேம் சாகர், பிரபாவதி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

                      சற்று பெரிய நகரமான குண்டூரிலிருந்து 17கிமீ தொலைவிலுள்ள கொலகாலரூவில் சிறிய உணவு விடுதி நடத்தி வரும் ஒரு குடும்பம். அவர்கள் மகன் ராகவாவிற்கு குண்டூரில் ஓட்டல் நடத்தவேண்டும் என்று ஆசை. அங்கு வசிக்கும் அவர்கள் உறவினர் மகள் சந்தியாவை  காதலிக்கிறான். சந்தியாவின் தந்தை எந்த வழியாலாவது சொத்து சேர்க்கும் ஆசை உள்ளவர். நகருக்கு சற்று தள்ளி இருக்கும் தன்னுடைய பழைய ஷெட்டை நயமாகப் பேசி ராகவாவிற்கு விற்று விடுகிறார். அந்த ஓட்டல் நடத்துவதில் உள்ள சிரமங்கள், ஜாதகத்தில் நம்பிக்கை உள்ள அவனுடைய நண்பன், அவனுடைய காதல், சீட்டு கம்பனி நடத்தி காண்ட்ராக்டரிடம் பணத்தை ஏமாந்த ஒருவர் என அந்த கிராமம் மற்றும் நகர நடுத்தர வர்க்க குடும்பங்களின் வாழ்க்கையை சுவையாக படமாக்கியுள்ளனர்.

Middle Class Melodies movie review: Anand Devarakonda fits the bill in a tale that's all heft and heart - Entertainment News , Firstpost

                                            படம் இரண்டு மூன்று விசயங்களை சுற்றி வருகிறது. முதலாவது நடுத்தர வாழ்க்கை என்பது கஷ்ட நஷ்டங்கள் கொண்டது. அதை அவரவர்கள்தான்  சமாளித்து வாழவேண்டும். தன் பாம்பே சட்னி சுவையானது;அதனாலேயே தன் ஓட்டலுக்கு கூட்டம் வந்துவிடும் என்று ராகவா நம்புகிறான்.ஏன் கூட்டம் வரவில்லை என்பதை கண்டுபிடித்து ஒவ்வொன்றாக சரி செய்து  ஓட்டல் ஓரளவிற்கு நன்றாக நடக்கத் தொடங்குகிறது. ‘The End’ என்று போடுகிறார்கள். ஆனால் படம் முடியவில்லை. ராகாவின் ஓட்டலுக்கு  எதிரிலேயே இன்னொருவன் ஓட்டல் திறக்கிறான். இதோடு திரைப்படம் முடிகிறது. ராகாவின் குடும்ப நிலத்திற்கு அருகில் நெடுஞ்சாலை வருகிறது என்று தெரிந்து கொண்டு சந்தியாவின் தந்தை அதைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்கிறார். ஆனால் எம்எல்ஏ நெடுஞ்சாலையை  வேறு இடத்திற்கு மாற்றுகிறார். இப்படி அதிர்ஷ்டம் மாறி மாறி அடிக்கிறது.

இரண்டாவது கடவுள், ஜாதகங்கள் போன்றவை  பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  உதவாது என்பது . அதற்காக நேரடியான நாத்திகப் பிரச்சாரம் எல்லாம் படத்தில் இல்லை. ஒரு முழுப் பாடலும் கடவுளின் தேர்த் தெருவிழாவைக் காட்டுகிறது. காலி மனையில் குப்பை கொட்டாமல் இருக்க முதலில் நகராட்சியிடம் சண்டை போடுகிறான் ராகவன். எதுவும் நடக்கவில்லை. பிறகு அங்கு  சிறிய கோயிலை வைப்பது போலவும் ஒரு காட்சி வருகிறது. சாயிபாபாவின் படத்தை பத்து பேருக்கு அனுப்பினால் நல்லது நடக்கும் என்கிற வாட்ஸ் ஆப் பதிவு ராகவனின் தந்தைக்கு வருகிறது. அவரும் அப்படியே  அனுப்புகிறார்;ஆனால் அவருக்கு கெட்ட செய்தியே வருகிறது. சீட்டுக் கம்பனி நடத்துவர் ஜாதகத்தின்படி எம்எல்ஏ ஆவார்;எண்பது வயது வரை வாழ்வார் என்று சொல்கிறான் கோபால். ஆனால் அவர் பணத்தை ஏமாந்து தற்கொலை செய்துகொள்கிறார். ஜாதகப் பொருத்தம் இல்லாததால்  தான் விரும்பிய பெண்ணையே மணம் செய்துகொள்ளாமல் இருக்கும் கோபால் இதனால் மனம் மாறி அவளையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறான்.  இதெல்லாம் பிரச்சாரமாக இல்லாமல் கதையோடு ஒட்டி வருகிறது.

Middle Class Melodies Trailer: Anand Deverakonda and Varsha Bollamma's Upcoming Telugu Drama Will Strike a Chord With Every Common Man (Watch Video) - Report Door

                                      கதாபாத்திரங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு கதாநாயகி பாத்திரங்களும் சுயமாக  சிந்திக்கும் பெண்கள். தன் தந்தை வஞ்சகமாக ராகவனின் நிலத்தை அபகரிப்பதை அறிந்த சந்தியா அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது; ஓட்டல் வெற்றிகரமாக நடந்த பிறகே  அவளை திருமணம் செய்துகொள்வேன் என்று ராகவன் சொல்லும்போது கோபிப்பது; அவனுடைய பாம்பே சட்னி ஒன்றும் விசேஷமானது அல்ல;அதைவிட ருசியான சட்னி தள்ளுவண்டிகளில்கூட கிடைக்கிறது என்று சொல்லி அவனை சுயபரிசோதனை செய்துகொள்ள சொல்லும்போதும் சந்தியாவின் பாத்திரம்   சிறப்பாக இருக்கிறது. அதேபோல் கோபாலிடம் அவனது காதலி கவுதமி ‘ என்னை பிடிக்கவில்லை என்று சொன்னால்கூட தப்பில்லை. நான் பிறந்த நேரம் (ஜாதகம்) சரியில்லை என்று சொல்கிறாய். அதற்கு நான் எப்படி பொறுப்பு?’ என்று கேட்கும் இடம் கூர்மையாக இருக்கிறது.பெரும்பாலான படங்களில் அப்பா என்றால் மகனை திட்டுவது;அம்மா என்றால் அவனுக்கு செல்லம் கொடுப்பது என்று ஒரு ஸ்டிரியோ டைப்பாக காட்டுவார்கள். இதிலும் அப்பா மகன் சண்டை பல முறை நிகழ்கிறது. ஆனால் இதில் இருவர் தரப்பிலும் உள்ள நியாயங்கள் எடுத்துக் காட்டப்படுவதுடன் குடும்பம் என்றால் இப்படி சண்டைகள் நிகழ்வதும் சிக்கலான நேரங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதுவுவதும் நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

சீட்டுக்காரரிடம் பணம் கட்டி ஏமாந்த பால்காரர் ‘உங்களுக்கு இதெல்லாம் பெரிய பணம் இல்லை. எங்களுக்கு ஒரு லட்சம் என்பது பெரிய தொகை என்று சொல்கிறார். ‘கண்டவங்களெல்லாம்  கருத்து சொல்றாங்க  என்று சீட்டுக்காரரின்  மகனால் அவமானப்படுத்தப்படுகிறார். ஆனால் தற்கொலை செய்துகொள்ள ஆற்றில் விழும் சீட்டுக்காரரை அவர்தான் முதலில் பாய்ந்து சென்று காப்பற்ற முயற்சி செய்கிறார்.  இந்த பாத்திரமும் அதில் நடித்திருப்பவரும் சிறப்பாக செய்திருக்கிறார். இதேபோல் தன் மகளை திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்லி ஆட்டோக்காரிடம் பணம் வாங்கி குடிக்கும் தந்தை ‘நான் எப்ப உன்கிட்ட பணம் வாங்கினேன்?’ என்று சொல்லி அவரிடம் சண்டை போடுவது  நகைச்சுவையாக இருக்கிறது. இது  மேலாண்மை பொன்னுசாமியின் ஒரு சிறுகதையை நினைவுபடுத்துகிறது. கோபால் பெண் கீட்டு செல்லும்போது கவுதமியின் தந்தை  கோபால் வேறு ஜாதி தாங்கள் வேறு ஜாதி.ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வது தங்கள் பரம்பரையில் இல்லை என்று கூறும்போது கோபாலும் ராகவனும் அவரை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு போவதாகக் காட்டுவது நல்ல குறியீடு.

                                       எங்குமே மிகைப்படுத்துதல் இல்லை; ஆனால் விறுவிறுப்பாக செல்கிறது. நல்ல ஒளிப்பதிவு, நடிப்பு, இசை, கருத்து ஆகியவற்றுடன் சிறப்பான இயக்கம்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *