பல்வேறு காரணங்களுக்காக நரேந்திர மோடியுடன் 2007ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் கரண் தாப்பரின் மனதில் நிலைத்து நிற்கின்ற ஆயிரக்கணக்கான நேர்காணல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நேர்காணல் இன்னும் முடிவடையாத கதையாகவே தொடர்கிறது. தொடர்ந்து இப்போதும் அது செய்தியாகிக் கொண்டேதான் இருக்கிறது. நேர்காணல் நடந்த நேரத்தில். நேர்காணலுக்கு முன்பாக, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு பகுதி இங்கே:
நரேந்திர மோடி அரசு என்னைப் பற்றி பெரிதாக நினைத்திருக்கவில்லை என்பது ஒன்றும் ரகசியம் இல்லை. நான் நட்புடன் பழகி வந்த வித்தியாசமான அமைச்சர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து எனக்குச் சந்தேகமில்லை என்றாலும் – அருண் ஜேட்லி மிகமுக்கியமான எடுத்துக்காட்டு – நான் அவ்வாறு நன்றாகப் பழகி வந்தவர்களில் பெரும்பாலானோர் மோடி பிரதமரான ஓராண்டிற்குள்ளாகவே என்னைத் தவிர்ப்பதற்கான காரணங்களை, சாக்குப்போக்குகளை கண்டுபிடித்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போதும், 2014க்குப் பிறகு முதல் ஓராண்டு வரையிலும்கூட எனக்கு நேர்காணலை அளித்து வந்த ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், எம்.வெங்கையா நாயுடு போன்றவர்கள் திடீரென்று தங்கள் கதவுகளை மூடிக் கொள்ளத் துவங்கினர். நேர்காணலுக்கு ஒத்துக் கொண்டு நேர்காணலைப் பதிவு செய்வதற்கான நாளை நிர்ணயம் செய்யும் அளவிற்குச் சென்றிருந்த நிர்மலா சீதாராமன் போன்ற சிலரும் கடைசி நேரத்தில் விளக்கம் எதுவும் சொல்லாமலேயே அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டனர்.
பாஜக செய்தித் தொடர்பாளர்கள் என்னுடைய தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புகளை நிராகரிக்கத் தொடங்கியபோது, நான் ஒரு தனிமனிதன் என்பது முதலில் எனக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வேறு வேலைகளில் அவர்கள் மூழ்கியிருப்பதாகவே நான் கருதினேன். இருப்பினும் மீண்டும் மீண்டும் அது தொடர்ந்த போது, சாம்பித் பத்ராவிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டேன். என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கும் முன்பாக மெல்லிய குரலில், தன்னுடைய சங்கடத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில், என்னிடம் ஒரு ரகசியத்தைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் கேட்டார். அவர் கேட்ட உத்தரவாதத்தை அளித்த போது, அனைத்து பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கும் நான் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அடுத்து அமைச்சர்கள்… நேர்காணலுக்கு எப்போதும் தயாராக இருந்தவர்கள், சவாலான உரையாடலை அனுபவித்தவர்கள் இப்போது என்னுடைய அழைப்புகளை ஏற்க மறுக்கின்ற தொலைபேசி எண்களாக மாறி விட்டனர். அவர்களுடைய செயலாளர்களிடமும் ‘மன்னிக்கவும். அவர் பிஸியாக இருக்கிறார்’ என்ற ஒரேயொரு பதில்தான் எஞ்சியிருந்தது
பிரகாஷ் ஜவடேகர் மட்டுமே எனது நிகழ்ச்சியில் தோன்றுவதற்கு என்னால் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்த ஒருவராக இருந்தார். இல்லை என்று மறுப்பதை அல்லது பதில் சொல்லாமல் தவிர்ப்பதை அவருடைய கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சரவைச் சகாக்கள் ஆகியோர் வழக்கமாகக் கொண்ட பிறகும் ஜவடேகர் அதைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்து வந்தார். அவரிடமும் சில நாட்களுக்குப் பிறகு மனமாற்றம் ஏற்பட்டது. எனக்குப் போன் செய்த அவர் ‘உங்களுக்கு நேர்காணல் தரக் கூடாது என்று எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது… என்ன நடந்தது கரண்? ’ என்று கேட்டார்.
முதன்முறையாக அப்போதுதான், எனக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கிறது என்று என்னிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜவடேகர் சத்தியம் எதையும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலால் அவர் ஆச்சரியமடைந்து போயிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிவுரை சொல்வதற்காக தொலைபேசியில் என்னை அழைத்த அவர் ‘தலைவரைச் சந்தித்து பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
எனக்கு நன்கு தெரியும் என்பதால், அருண் ஜெட்லிக்குத்தான் என்னுடைய முதல் அழைப்பை விடுத்தேன். நிதியமைச்சகத்தில் அவரைச் சந்திக்கச் சென்ற போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்று என்னிடம் உறுதியளித்த அவர், நான் கற்பனை செய்து கொள்வதாகக் கூறியதுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.
புறக்கணிப்பு அதற்குப் பிறகும் தொடர்ந்ததால் அருண் மௌனமாக இருந்துவிட்டார் என்று நினைத்த நான் மீண்டும் அவரை – இந்த முறை தொலைபேசியில் – தொடர்பு கொண்டேன். பிரச்சனை இல்லை என்று மறுப்பதை அவர் அப்போது நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றார். நான் ‘ஆனால் அருண்… பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றால், ஊதுவதற்கு யாரோ இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானால் பிரச்சனையும் இருக்கிறது’ என்றேன். அருண் வெறுமனே சிரித்துக் கொண்டார்.
பிரச்சனை எதுவாக இருந்தாலும் அருணால் சமாளிக்க முடியாத அளவிற்கு அது பெரிதாக இருப்பதை உணர்ந்தேன். எனக்கு உதவுதற்கான அவருடைய வாய்ப்பை அல்லது எனக்கு உதவி செய்வதற்கான அவரது விருப்பத்தை நான் இன்னும் சந்தேகிக்கவில்லை என்றாலும் அவ்வாறு செய்யக் கூடிய திறன் அவரிடம் இல்லை என்பதை நான் நம்ப வேண்டியதாயிற்று.
பிரச்சனை குறித்து என்னிடம் இருந்த சந்தேகத்தை பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தீர்த்து வைத்தார். அவரிடம் 2017 ஜனவரி தொடக்கத்தில் நேர்காணல் தருமாறு கேட்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த நேர்காணல் ஜனவரி 16 அன்று பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட பிறகு நான் அவருக்கு நன்றி தெரிவித்த வேளையில் அவர் கூறிய பதில் என்னையும் – என்னுடைய தயாரிப்பாளர் அரவிந்த் குமாரையும் திகைக்க வைத்தது.
கொஞ்சம் சீரியஸாக சிரித்துக் கொண்டே ‘நீங்கள் எனக்கு நன்றி சொல்லலாம்… ஆனாலும் என்னுடனிருப்பவர்கள் [எனக்கு நன்றி] சொல்ல மாட்டார்கள். நான் இந்த நேர்காணலை ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நேர்காணலைக் கொடுத்தது குறித்து அவர்கள் நிச்சயம் சந்தோஷம் கொள்ளவில்லை. ஆனாலும் மக்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்’ என்றார்.
அப்போதுதான் நான் அமித்ஷாவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்தேன். தொடர்ச்சியாக பல கடிதங்களை எழுதி, பலமுறை தொலைபேசியில் அழைத்த பிறகு 2017ஆம் ஆண்டு ஹோலிக்கு மறுநாள் அவர் என்னைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டார். அந்தச் சந்திப்பு அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. நீண்ட நேரம் அந்தச் சந்திப்பு இருக்கவில்லை என்றாலும் என்னுடைய கருத்தைச் சொல்லவும் அவர் அதற்குப் பதிலளிப்பதற்கும் போதுமானதாகவே இருந்தது.
நான் அவரிடம் முதலில் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், அதற்குப் பின்னர் பாஜக அமைச்சர்களும் கடந்த ஓராண்டாக என்னுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்து விட்டதால் அவரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினேன். செய்தித் தொடர்பாளர்கள் சிலர் அவ்வாறு கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரகசியமாக என்னிடம் தெரிவித்திருப்பதாகவும், சமீபத்தில் அதையே மூத்த அமைச்சர்களும் கூறியிருப்பதாகவும் அவரிடம் சொன்னேன். நான் ஜவடேகர், அருண் ஜெட்லியுடன் பேசியதையும் அவரிடம் தெரிவித்தேன். இப்போது என்ன பிரச்சனை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கடைசியாக அவரிடம் வந்திருக்கிறேன் என்றும், அறியாமல் யாரையாவது வருத்தப்பட வைத்திருந்தாலோ அல்லது அவ்வாறு ஏதாவது சொல்லியிருந்தாலோ மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கூறி விட்டு, நான் என்ன செய்து விட்டேன் என்று அவரிடம் கேட்டேன்.
நான் சொன்னதை அமித்ஷா மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அவரிடம் அதை விளக்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அவருடைய வீட்டின் பெரிய வரவேற்பறையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். தோட்டத்தைப் பார்க்கும் வகையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்; அவர் பக்கத்தில் இருந்த சோபாவில் நான் இருந்தேன். அந்த அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.
‘கரண்ஜி’ என்று நட்புடன் அழைத்த அவரது குரலில் குறைந்தபட்சம் தொனியில் அல்லது என்னை அழைத்தவிதத்தில் அதற்கு நேர்மாறான தடயம் எதுவும் இருக்கவில்லை. நிலைமையை நான் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், என்னுடைய நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
இறுதியாக அந்த விஷயத்தை மேலும் விசாரித்த பிறகு இருபத்தி நான்கு மணி நேரத்தில் என்னை அழைப்பதாக அவர் உறுதியளித்தார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்து விட்டது என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் அங்கிருந்து நான் வெளியேறினேன். ஆனால் நான் மிகவும் தவறுதலாகவே அதைப் புரிந்து கொண்டிருந்தேன். அமித் ஷா என்னைத் திரும்ப அழைக்கவே இல்லை. அடுத்த ஆறு வாரங்களில் பல கடிதங்கள், ஐம்பது முறை தொலைபேசி மூலம் செய்திகளை அனுப்பியிருப்பேன் என்றாலும் அவரிடமிருந்து எனக்கு எந்தவொரு பதிலும் வந்து சேரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
அமித் ஷா பதிலளிக்கத் தவறியது என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது. மிகவும் சாதாரணமாகப் பேசக் கூடிய அல்லது தவறான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற மனிதர் என்று அவரை நினைக்கவில்லை. ஏதோவொன்று அல்லது யாரோ அவரைத் தடுத்துள்ளனர். அப்போதுதான் உண்மையான பிரச்சனை நரேந்திர மோடியாக இருக்கலாம் என்று நான் கருத ஆரம்பித்தேன்.
எந்த அளவிற்கு அதைப் பற்றி அதிகமாக சிந்தித்தேனோ, அந்த அளவிற்கு அதை நான் உறுதியாக உணரவும் செய்தேன். என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை – குறைந்த பட்சம் அந்த நேரத்தில் இல்லை – ஆனாலும் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் திடீரென்று என்னுடைய அழைப்பை ஏற்க மறுத்தது, அமைச்சர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நேர்காணல்களை ரத்து செய்தது, ஜவடேகர், ஜெட்லியின் கருத்துக்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றுடன் இறுதியாக இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் மீண்டும் அழைக்கிறேன் என்று உறுதியளித்த அமித் ஷாவின் திடீர் மௌனம் ஆகியவற்றை வேறு எவ்வாறு விளக்குவது?
2007ஆம் ஆண்டு, குஜராத்தில் இரண்டாவது முறையாக மோடி முதலமைச்சராக பதவியேற்பதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த என்னுடைய நேர்காணலின் போது மோடி வெறுமனே மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். 2007இல் மோடியுடன் நடத்தப்பட்ட அந்த நேர்காணல்தான் இப்போது பிரச்சனையாக இருக்கிறதா? ஒருவேளை அவ்வாறு இருக்கலாம் என்றாலும் அதற்கான காரணம் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குள்ளே எழுந்தது. கோத்ரா வன்முறை, அதைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லீம்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 2002 மார்ச் மாதம் நான் எழுதிய ‘ஞாயிறு உணர்வுகள்’ (சன்டே சென்டிமெண்ட்ஸ்) என்ற பத்தியில் அதற்கான ஆரம்பம் இருக்கலாம் என்பதை உணர எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.
எங்களுக்கிடையில் நேர்மையான உரையாடல் இருந்தால் அந்தச் சிக்கலைக் களைந்து விடலாம் என்பதால் மோடியிடம் நேரடியாகப் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்தேன். அது சாத்தியமில்லை என்பதை ஓரளவிற்கு உணர்ந்திருந்தாலும், அதுபோன்ற முயற்சி மிகச்சரியானதாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது. எனவே அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோரைத் தொடர்பு கொண்டேன். தோவலைச் சந்திப்பதற்கு முன்பாக நான் மிஸ்ராவிடம் பேச வேண்டியிருந்தது. அந்த இரண்டு உரையாடல்களும் ஒரே நாளில் அதாவது 2017 மே 1 அன்று நிகழ்ந்தன.
நிருபேந்திர மிஸ்ரா அலுவலகத்திற்கு நான் அனுப்பியிருந்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மோடியின் அமைச்சர்கள், அவரது கட்சியினர் என்னை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக மோடியைச் சந்திக்க நான் விரும்புவதாகக் கூறினேன். மேலும் அறியாமல் பிரதமரை வருத்தப்படுத்தும் வகையில் ஏதாவது செய்திருந்தால் மன்னிப்பு கேட்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன் என்றாலும் முதலில் அதற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2007இல் செய்த அந்த நேர்காணல்தான் காரணம் என்று என்னால் நம்ப முடியவில்லை என்பதையும் அவரிடம் கூறினேன்.
மோடியிடம் பேசிவிட்டு என்னிடம் திரும்பி வருவதாக மிஸ்ரா தெரிவித்தார். சவுத் பிளாக்கில் இருந்த அஜித் தோவலை அன்றைய தினம் மாலையில் அழைத்து அதே செய்தியை திரும்பவும் கூறினேன். அவர் நிருபேந்திர மிஸ்ரா என்னிடம் திரும்ப வரும் வரை காத்திருப்பதாகக் கூறினார். மிஸ்ராவால் விஷயங்களைச் சீர்செய்ய முடியும் என்றே அவர் நம்பினார். ஆனாலும் அவரால் முடியவில்லை என்றால், நரேந்திர மோடியுடன் தான் நேரடியாகப் பேசுவதாக தோவல் கூறினார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, நிருபேந்திர மிஸ்ரா என்னை அழைத்தார். மோடியுடன் பேசியதாகவும், பிரதமரைச் சந்திப்பதில் எந்தப் பலனும் இல்லை என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் அப்போது கூறினார். மோடி குறித்து எனக்கு பாரபட்சமான கருத்துகள் இருப்பதாகவும், எனது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் பிரதமர் கருதுவதாக கூறிய மிஸ்ரா. அதனால்தான் அமித் ஷா என்னைத் திரும்ப அழைக்கவில்லை என்றும் கூறினார். ஒருவேளை மோடியிடம் பேசிய அமித் ஷாவும் அதேபோன்ற பதிலைப் பெற்றிருந்திருக்கலாம்.
இனிமேல் சாத்தியமில்லை என்று தெரிந்த போதிலும் தோவாலை அழைத்தேன். மிஸ்ரா கூறியதை அவரிடம் சொன்னேன். மௌனமாக நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ‘விஷயங்கள் தெளிவடையும் என்று நம்புவோம், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்’ என்பதே அவருடைய ஒரே பதிலாக இருந்தது. ஆக இப்போது அந்தப் பிரச்சனைக்கான காரணம் எனக்குத் தெரிந்து விட்டது. நரேந்திர மோடியை நான் புண்படுத்தியிருக்கிறேன்; அதன் விளைவுதான் அது. ஆனாலும் அவரைப் புண்படுத்திய அந்தக் குற்றம் எப்போது நடந்தது என்பதுதான் எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது 2007இல் நடந்த நேர்காணலினாலா அல்லது 2002 மார்ச் மாதம் வெளியான எனது ‘ஞாயிற்றுக்கிழமை உணர்வுகள்’ என்ற பத்தியினாலா? பல ஆண்டுகளாக அது கட்டமைக்கப்பட்டு வந்திருப்பதாகலாம் என்றும், அதன் தொடக்கம் அந்தப் பத்தியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்றும் நான் சந்தேகித்தேன்.
பிரச்சனை ஆரம்பமானது என்று நான் கருதுகின்ற இடம் சரியாக இருக்குமென்றால், அந்த நேரத்தில் நான் எழுதியதைத் திரும்பச் சொல்வதுதான் நியாயமாகும். அந்தக் கட்டுரைக்கு ‘போய்விடு மிஸ்டர் மோடி, இப்போதே போய்விடு’ என்று நான் தலைப்பு வைத்திருந்தேன். அதில் நான் கூறியிருந்தது இதுதான்:
‘நரேந்திர மோடியை எனக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன். அண்மைக்காலம் வரையிலும் நான் அவரை மதித்தே வந்திருக்கிறேன். அவருடைய ஆலோசனைக்கு நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேன். 2000ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தலைவருடனான (சர்சங்சாலக்) நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அந்த அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு மோடி எனக்கு உதவியதற்கு நன்றிக்கடனுடன் இருந்துள்ளேன். அந்த அமைப்பின் பலவீனங்களை அறிந்து கொள்ளும் வகையில் அவர் என்னுடைய கண்களைத் திறந்து விட்டார். அதன் மோசமான இரண்டாம்தர செயல்பாடுகளை மிகச்சரியான பாரபட்சமற்ற தன்மையுடன் அவர் எனக்கு உணர்த்திக் காட்டினார்.
ஆர்எஸ்எஸ் இப்போது பொருத்தப்பாட்டை இழந்திருப்பது பற்றி சுதர்சன்-ஜியிடம் கேள்வி கேளுங்கள். முன்பு போல அது சிறப்புடன் இருக்கவில்லை. இன்று அனைத்து விஷயங்களிலும் அது இரண்டம்தரத்துடனே இருக்கிறது’ என்று அந்த விவாதத்தை அவர் என்னிடம் ஆரம்பித்தார்.
அவரிடம் ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’ என்று கேட்டேன். அதுவே கடைசியாக நான் கேட்கின்ற வார்த்தையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக மோடி ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர். அந்த அமைப்பின் பாதுகாவலராகவே நான் அவரை எதிர்பார்த்தேனே அல்லாது விமர்சகராக அல்ல.
‘ஆர்எஸ்எஸ் இருபதாயிரம் பள்ளிகளையும், ஐம்பது பேப்பர்களையும் நடத்தி வருகிறது. ஆனால் அவை எதுவும் தேசிய அளவிலான தரத்தில் இல்லை. சமூகப் பணிக்கான அர்ப்பணிப்புடன் ஆர்எஸ்எஸ் உள்ளது என்றாலும் சாய்பாபா, ராதா சோமி பிரிவு, பாண்டுரங் அதவாலேயின் ஸ்வாத்யாயா குழு போன்றவற்றிற்கே அந்தத் துறையில் நல்ல பெயர் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அந்தக் கணக்கில் வராது’ என்றார்.
நான் திகைத்துப் போனேன். மோடி விமர்சித்ததால் மட்டுமே அவ்வாறு இருக்கவில்லை. ஆர்எஸ்எஸ்ஸிற்குள்ளிருந்து வந்த தாக்குதலை அவர் முன்வைத்ததாலேயே நான் திகைத்துப் போனேன். பாரம்பரியமான, தொடர்ந்து வைக்கப்படுகின்ற இடது [சாரி] விமர்சனமாக அது இருக்கவில்லை. மாறாக வலதுசாரிகளின் பெருத்த ஏமாற்றமாக அது இருந்தது. புதிதாக, வித்தியாசமாக இருந்தது.
‘ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் அவர் கலந்து கொண்ட வருகைப்பதிவு குறித்து அவரிடம் கேளுங்கள்’ என்று மோடி தொடர்ந்தார். என்னால் அவருடைய உற்சாகத்தை உணர முடிந்தது. ஒரு பத்திரிக்கையாளரைப் போலவே அவர் நடந்து கொண்டார். அது எனக்குப் பிடித்திருந்தது. மிக முக்கியமாக, நான் அவருடைய நேர்மையைப் பாராட்டினேன். அவருடைய ஆலோசனைக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.
‘கேரளாவைப் பாருங்கள். அங்கே மிகப்பெரிய ஆர்எஸ்எஸ் கிளை உள்ளது ஆனால் அதன் தாக்கம் அங்கே மிகக் குறைவாகவே இருக்கிறது. கம்யூனிஸ்டுகள், சர்ச் மற்றும் சுதேசி நிதி அல்லாமல் வெளிநாட்டு நிதியை சார்ந்து இருக்கும் பொருளாதாரம் என்று ஆர்எஸ்எஸ் விரும்பாத அனைத்தும் அங்கே செழித்து வளர்ந்திருக்கின்றன. அந்த அளவுக்கு அங்கே ஆர்எஸ்எஸ் பொருத்தமற்றதாக இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் சுதர்சன்-ஜியிடம் கேளுங்கள். என்னைப் போன்றவர்களிடம் உள்ள முக்கியமான பிரச்சனைகளைத் தொடுவீர்கள் என்றால் அது அருமையான நேர்காணலாக இருக்கும்’ என்றார்.
அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற நினைத்தேன் என்றாலும் மிகவும் முட்டாள்தனமாக என்னுடைய வழக்கமான முறையிலேயே நான் அந்த நேர்காணலைத் தொடங்கினேன். ஹிந்து ராஷ்டிரத்திற்கான ஆர்எஸ்எஸ்சின் உறுதிப்பாடு, அரசியலமைப்புச் சட்டம், பாஜகவின் கூட்டணிகள், வாஜ்பாய் அரசின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் பேசினோம். மோடியின் கேள்விகளை எழுப்புவதற்கான நேரம் இல்லாமல் போனது.
பலரும் அந்த நேர்காணலைப் பாராட்டினாலும், பத்திரிகைகள் பாராட்டிய போதிலும், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவனாகவே நான் இருந்தேன். அது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். அது அசலாகக்கூட இருந்திருக்கலாம். ஒருவேளை மோடியின் கேள்விகளை ஒருங்கிணைக்கும் வழியை நான் கண்டுபிடித்திருந்தால் அது அவ்வாறாக இருந்திருக்கலாம்.
‘அந்த நேரத்தில் கேள்வி கேட்கின்ற வலிமை, சவால் விடக்கூடிய தைரியம், அரசியல் இடைவெளிகளுக்கு அப்பாலும் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம், பெருந்தன்மை கொண்ட மனிதராகவே நான் நரேந்திர மோடியைக் கருதினேன். அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியும் என்று என்னால் நடிக்க முடியாது. அவரை நிச்சயமாக நன்கு அறிந்திருக்கவில்லை என்றாலும் அது எனக்குத் தேவையில்லை என்றே நான் உணர்ந்தேன். காண்பதை மட்டுமே நான் விரும்பினேன் – உண்மையில் ரசித்தேன். என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக நான் தவறாகப் புரிந்து கொண்டதாகவே தோன்றுகிறது. உண்மையில் அவ்வாறு சொல்வது சரியில்லை. அது நேர்மையுடன் இருக்கவில்லை. ‘தோன்றுகிறது’ என்ற வார்த்தை தவறானது என்ற சந்தேகம் அல்லது தயக்கத்தைக் குறிக்கிறது. ‘தவறு’ என்ற வார்த்தை தவிர்ப்பதை உணர்த்துவதாக இருக்கிறது. உண்மையில் நான் மிகப்பெரிய தவறு செய்திருந்தேன்.
குஜராத்தில் நடந்த வகுப்புவாத படுகொலைகளை நரேந்திர மோடி கையாண்ட விதத்தில் இருந்து வெளிப்பட்ட அவரது பிம்பம் முற்றிலும் வேறாக இருந்தது. குறுகிய மனப்பான்மை கொண்டவராக, மதவெறி கொண்டவராக, கீழ்த்தரமான மனநிலை கொண்டவராக, தன்னுடைய வரம்புகளின் கைதியாக அந்த ‘மற்ற’ மோடி இருந்தார்.
ராணுவத்தை முன்னரே அழைக்காதற்கு அவரது அனுபவமின்மை, ஒருவேளை அவரது முட்டாள்தனமான தனிப்பட்ட பெருமையே காரணம் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்வேன். நிலைமையை இன்னும் திறம்பட வித்தியாசமாகக் கையாள முடியும் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம், கடினத்தன்மையைக் காட்டுகின்ற அதே வேளையில் புரிதலையும் காட்டலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அனைத்திற்கும் மேலாக, உங்களைச் சார்ந்தவர்களை, உங்கள் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களை ஒடுக்குவது என்பது எளிதான காரியமல்ல. துயரத்தை ஏற்படுத்துகின்ற போதிலும், அதுபோன்ற தவறுகள் மனித இயல்பு என்பதால் அவை அடிக்கடி நிகழ்கின்றன.
ஆனால் ‘ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை இருக்கும்’ என்று கூறிய போது, கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் குறிப்பிட்டு ஈசன் ஜாஃப்ரியின் கொலையை விளக்க முயன்ற போது, அகமதாபாத்தில் இறந்தவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு தொகையை கோத்ராவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்த போது, அவர் தன்னை தார்மீகமற்ற மனிதராகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு முஸ்லீமைக் காட்டிலும் கூடுதலாக ஒரு ஹிந்துவின் உயிரை மதிப்பது அல்லது படுகொலைகளைப் பற்றி பேசும் போது அவை தவிர்க்க முடியாதவை என்று பேசுவது போன்ற பேச்சுகள் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கவில்லை – உண்மையில் அவை வெறுக்கத்தக்க பேச்சுகளே…
ஒரு தலைவர் என்றே நான் அவரைப் பற்றி நினைத்திருந்தேன். குறுகிய வரம்புகளுக்கு அப்பால் உயரக் கூடிய, எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளக் கூடிய, பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெறுவதற்கான, பிறருக்கு வழிகாட்ட, பின்பற்ற வைக்கின்ற ஆற்றலும், அறிவும் அவரிடம் இருந்தது. ஆனால் கடந்த வாரம் நான் கண்ட அந்த மனிதர் தவறான எண்ணம், குறுகிய பழிவாங்கும் மனப்பான்மை, இரட்டை நிலை, புன்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகின்ற உயிரினமாக மட்டுமே இருந்தார். முதலாமவர் முதலமைச்சராக இருக்கத் தகுதியானவர். இரண்டாமவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியானவராகவே இருக்கிறார்’.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியவற்றை இன்று வாசித்த போது,நடந்திருப்பவற்றின் வெளிச்சத்தில் அந்தக் கட்டுரை என் மீது குற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் காண முடிந்தது. அப்பட்டமாகவும் கடுமையாகவும் நான் அவரை விமர்சித்திருந்தேன். மிகவும் காயப்படுத்தக்கூடிய இடத்தில் நான் மிகத் தெளிவாக அவரை அடித்திருந்தேன்.
அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2007ஆம் ஆண்டில் நரேந்திர மோடியுடனான எனது நேர்காணல் நடந்தது. என் நினைவுகள் சரியாக இருக்குமென்றால், அந்த நேர்காணலுக்காக அருண் ஜெட்லியிடம் நான் உதவி கேட்டிருந்தேன். அருண் ஜெட்லியின் தலையீடுதான் குஜராத் முதல்வரை நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது என்றே நம்புகிறேன். அக்டோபர் மதியம் அகமதாபாத்தில் நேர்காணலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிகாலை விமானத்தில் நான் அங்கே சென்றேன். பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டிருந்த பெனாசிர் பூட்டோ கராச்சிக்குத் திரும்பிய மறுநாள் காலை அது. பெனாசிரின் ஊர்வலத்தைச் சிதறடித்த பயங்கரமான குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். விமானம் அகமதாபாத்தில் தரையிறங்கியபோது அன்றைய நாளில் திட்டமிடப்பட்டிருந்த மோடியுடனான நேர்காணலைக் காட்டிலும் கராச்சி குண்டுவெடிப்பு நிகழ்வுதான் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
காரில் ஏறியவுடன் எனது தொலைபேசி ஒலித்தது. அப்போது இன்னும் விமான நிலைய எல்லைக்குள்தான் நாங்கள் இருந்தோம். ‘கரண்-ஜி, வந்து சேர்ந்து விட்டீர்களா?’ என்னை வரவேற்கும் வகையில் நரேந்திர மோடியின் குரல் ஒலித்தது. ஊடகங்களைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கான முதல் அறிகுறி அது. ‘நான்கு மணிக்கு நமது நேர்காணல், ஆனாலும் கொஞ்சம் சீக்கிரமே வாருங்கள், பேசிக் கொண்டிருக்கலாம்’ என்றார். அவர் பேசிய விதம் 2002இல் நான் எழுதிய பத்தியை நரேந்திர மோடி படித்திருக்கவில்லை அல்லது மறந்து விட்டார் என்பதையே உறுதிப்படுத்தியது. என்னை அன்புடன் வரவேற்று நான் அவருடைய பழைய நண்பர் என்பதைப் போலவே என்னிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்ரைய நேர்காணலில் இருந்த எந்தவொரு விஷயத்தையும் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. மாறாக எங்களுக்குள் பரிகாசம் செய்து கொண்டு சிரித்தோம், கேலி செய்தோம்.
அந்த உரையாடல்கள் என்னை நிராயுதபாணியாக்குவதற்காகவா என்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் இத்தகைய தந்திரத்தையே புத்திசாலி அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்றாலும் என்னிடமிருந்த அச்சங்கள் விரைவில் மறைந்து விட்டன.
அரை மணி நேரம் கழித்து கேமராக்கள் முன்பு அமர்ந்தோம். வெளிர் மஞ்சள் நிற குர்தா அணிந்திருந்த மோடியின் தலைமுடி அப்போதுதான் வெட்டப்பட்டிருந்தது.
எனது முதல் கேள்விகள் 2002ஆம் ஆண்டைப் பற்றி இருந்தன. முதலில் அந்த சங்கடமான விஷயத்தை முடித்து விட்டு மற்ற விஷயங்களுக்குப் பின்னர் செல்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது. அந்த விஷயத்தை எழுப்பாமல் விட்டிருந்திருந்தால் அது அவருக்கு உடந்தையாக இருந்ததாக அல்லது கோழைத்தனம் என்பதாகவே தோன்றியிருக்கும். அதே சமயம் என்னிடம் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விருப்பமும் இருக்கவில்லை. எனவே முதலிலேயே அவற்றை எழுப்பி அதிலிருந்து விரைவாக வெளியேறுவது என்று முடிவு செய்திருந்தேன்.
‘மிஸ்டர் மோடி, உங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கலாம்’ என்று ஆரம்பித்தேன். ‘குஜராத்தின் முதல்வராக இருந்த ஆறு ஆண்டுகளில், குஜராத்தை சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலமாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை அறிவித்துள்ளது. இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நீங்கள் மிகவும் திறமையான முதல்வர் என்று இந்தியா டுடே அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தும், மக்கள் உங்கள் முகத்திற்கு நேராக இன்னும் உங்களை மாபெரும் கொலைகாரன் என்றே அழைக்கிறார்கள். நீங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தப் பிம்பம் குறித்து உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?’
அவர் சற்றும் கலங்கியதாகத் தெரியவில்லை. அவருடைய முகத்தில் எந்த உணர்ச்சியையும் என்னால் காண முடியவில்லை. அவருடைய முகபாவத்தில்கூட எந்தவொரு மாற்றமும் இல்லை. எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் அது அமைதியாகவே இருந்தது. மேலும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆங்கிலத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தது. அவரது ஆங்கில மொழிப் புலமை இப்போது கிட்டத்தட்ட சரளமாக இருந்தாலும், 2007இல் அதுபோன்று இருக்கவில்லை.
எங்கள் உரையாடல் இவ்வாறு இருந்தது:
‘மக்கள்’ என்று சொல்வது முறையல்ல என்றே நினைக்கிறேன். அதுபோன்ற வார்த்தைகளில் பேசுபவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்றே நான் எப்போதும் சொல்வேன்’.
‘அதை இரண்டு மூன்று பேரின் சதி என்று சொல்கிறீர்களா?’
‘நான் அப்படிச் சொல்லவில்லை’.
‘ஆனால் இரண்டு மூன்று பேர் என்று சொல்கிறீர்கள்’.
‘அதுதான் என்னிடம் உள்ள தகவல். அது மக்களுடைய குரல் அல்ல.’
இரண்டு மூன்று பேர்தான் அப்படிப் பேசியதாக முதலமைச்சர் சொன்னது சரியில்லை என்பதே உண்மை. இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் துல்லியமாக இது குறித்து நீதிபதிகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன்.
‘குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் கூறியதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டலாமா? 2004 ஏப்ரலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதரவற்ற குழந்தைகளும், அப்பாவிப் பெண்களும் எரிக்கப்படும்போது மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் நவீன காலத்து நீரோவைப் போல் இருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் கூறினார். உங்களிடம் உச்சநீதிமன்றம் பிரச்சனை கொண்டிருப்பது போல் தெரிகிறது’ என்றேன்.
‘கரண், என்னிடம் ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. தயவு செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பாருங்கள். நீங்கள் சொல்வது ஏதாவது அந்தத் தீர்ப்பில் இருக்கிறதா? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் சந்தோஷமாக இருப்பேன்’.
‘தீர்ப்பில் எதுவும் இல்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அது ஒரு கருத்து மட்டுமே’.
‘தீர்ப்பில் அவ்வாறு இருந்தால், அதுகுறித்து உங்களுக்குப் பதில் அளிப்பதில் நிச்சயம் சந்தோஷம் அடைவேன்.’
‘அப்படியென்றால் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செய்த விமர்சனம் முக்கியமில்லை என்று சொல்கிறீர்களா?’
‘உங்களுக்கு என்னுடைய எளிய வேண்டுகோள். தயவுசெய்து நீதிமன்றத் தீர்ப்புக்குச் செல்லுங்கள். நீங்கள் மேற்கோள் காட்டிய வாக்கியத்தை அதில் கண்டுபிடியுங்கள். இந்திய மக்கள் அதை அறிந்து கொண்டால் நான் நிச்சயம் சந்தோஷப்படுவேன்’.
‘தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து மட்டும் அவ்வாறு இருக்கவில்லை. 2004 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றம் 4,600க்கும் அதிகமான வழக்குகளில் 2,100-க்கும் மேற்பட்ட – நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான – வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குஜராத்தில் மோடியின் ஆட்சி நீதியுடன் நடக்கவில்லை என்று கருதியதாலேயே அவர்கள் அவ்வாறு செய்தனர்’.
‘நான் சந்தோஷமாக இருக்கிறேன். அந்தத் தீர்ப்பின் காரணமாக மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறேன். ஏனென்றால் நீதிமன்றம்தான் இறுதியில் முடிவை எடுக்கும்’.
நேர்காணலில் இருந்து முறையாக நீதிமன்றத் தீர்ப்பில் எழுதப்பட்டதற்கும், வெறுமனே நீதிமன்றத்தில் பேசப்படுகின்ற கருத்துகளுக்கும் இடையே உள்ள சட்டப்பூர்வமான வேறுபாட்டை மோடி என்னிடம் சுட்டிக்காட்டினார். இருப்பினும், தேர்தலைச் சந்திக்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அது நிச்சயம் உறுதியான தற்காப்பாக இருக்கப் போவதில்லை. தலைமை நீதிபதி உங்களை விமர்சித்திருப்பார் என்றால், அந்த விமர்சனம் தீர்ப்பில் எழுத்து மூலமாகச் செய்யப்பட்டதா அல்லது வாய்மொழியாகச் செய்யப்பட்டதா என்பது இங்கே முக்கியமாக இருக்காது. மிக முக்கியமாக அனைத்து பத்திரிகைகளும் தங்கள் முதல் பக்கங்களில் அந்த நீதிமன்ற விமர்சனத்தைக் கொண்டு சென்றிருந்தன. எனவே மோடி இரண்டாவது முறை தனது மறுதேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யப் போகும்போது தன் மீதான பிம்பம் குறித்து அவர் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனையின் மையமாகவே அந்த விமர்சனம் இருந்தது. வார்த்தை ஜாலங்களால் அதை இல்லாமல் செய்து விட முடியாது. அதைத்தான் அவரிடம் தெரிவிக்க முயன்றேன்.
உண்மையாகச் சொல்வதென்றால் நான் மேற்கோள் காட்டியிருந்த நவீன காலத்து நீரோ என்ற நீதிமன்றத்தின் கருத்து அந்தக் கால செய்தித்தாள்களில் வெளிவந்தவாறு நீதிமன்றத்தில் வாய்மொழியாக மட்டுமே பேசப்படவில்லை என்ற உண்மை அந்த நேரத்தில் எனக்குத் தெரியாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எழுதப்பட்ட ஒரு பகுதியாகவே அது இருந்தது என்ற விவரங்களை மோடியுடனான அந்த மூன்று நிமிட நேர்காணலைப் பார்த்த தீஸ்டா செடல்வாட் என்னிடம் தெரிவித்தார்.
ஜாஹிரா ஹபிபுல்லா ஹெச். ஷேக் எதிர் குஜராத் மாநிலம் வழக்கில், 2004 ஏப்ரல் 12 அன்று நீதிபதிகள் துரைசாமி ராஜு மற்றும் அரிஜித் பசாயத் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ‘பெஸ்ட் பேக்கரி மற்றும் அப்பாவி குழந்தைகளும், ஆதரவற்ற பெண்களும் எரிந்து கொண்டிருந்த போது நவீன காலத்து ’நீரோக்கள்’ வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர். குற்றம் இழைத்த குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என்று அவர்கள் ஒருவேளை ஆலோசித்துக் கொண்டிருந்திருக்கலாம்’ என்றே எழுதப்பட்டிருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் நான் கூறியதை விட தீர்ப்பில் எழுதப்பட்டிருந்தது மிகவும் மோசமாக இருந்தது. ‘குற்றம் செய்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது அல்லது பாதுகாப்பது என்பது குறித்து மோடி ஆலோசித்திருக்கலாம்’ என்றும் தீர்ப்பின் எழுத்துப் பதிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
மோடியை நேர்காணல் செய்த போது அதைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கவில்லை என்பதால் என்னுடைய கேள்வியில் நான் குறிப்பிட்டது அந்த தீர்ப்பில் இருந்ததை விட பலவீனமாகவே இருந்தது. ஆனால் அவ்வாறு நீர்த்திருந்த அந்தக் கேள்வியே அவரைத் தூண்டுவதற்குப் போதுமானதாக இருந்தது.
‘என்ன பிரச்சனை என்று சொல்கிறேன்’ என்று நான் அந்த நேர்காணலைத் தொடர்ந்தேன். ‘2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், கோத்ரா என்ற பேய் இன்னும் உங்களைத் துரத்துகிறது. அந்தப் பேயை அடக்க நீங்கள் ஏன் இன்னும் எதுவும் செய்யவில்லை?’
‘அந்தப் பணியை கரண் தாப்பர் போன்ற ஊடகவியலாளர்களுக்கே நான் வழங்குகிறேன். அவர்கள் அனுபவித்து மகிழட்டும்’.
‘நான் உங்களுக்கு ஏதாவது பரிந்துரை செய்யலாமா?’
‘அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை’.
‘நடந்த கொலைகளுக்கு வருந்துவதாக உங்களால் ஏன் சொல்ல முடியவில்லை? முஸ்லீம்களைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் இன்னும் கூடுதலாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?’
‘சொல்ல வேண்டிய அனைத்தையும் அந்த நேரத்திலேயே சொல்லி விட்டேன். என்னுடைய அறிக்கைகளை நீங்கள் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்கள்’.
‘இப்போது மீண்டும் சொல்லுங்களேன்’.
‘நீங்கள் பேச விரும்புகின்றவற்றை 2007இல் நான் இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை’.
‘ஆனால் அதை மீண்டும் சொல்லாமல், அந்தச் செய்தியை மக்கள் மீண்டும் கேட்க விடாமல், குஜராத்தின் நலனுக்கு முரணானதொரு பிம்பம் தொடர்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது’.
இந்த உரையாடல் நீடித்த அந்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நரேந்திர மோடியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படாமலே இருந்தது. ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதுவும் தெரிந்தது. உணர்வுகளைக் காட்டாமல் அவரது கண்கள் இறுக்கமாக இருந்தன. ஒருவேளை தன்னுடைய முகத்தை அமைதியாக, ஒரேபோன்று வைத்திருக்க அவர் முயற்சி செய்து கொண்டிருந்திருக்கலாம். ஆனாலும் அதற்குப் பிறகு அவரது பொறுமை அல்லது அவரது உறுதி முறிந்தது. போதும் போதும் என்று சொல்லி அந்த நேர்காணலை அவர் முடித்துக் கொண்டார். ‘நான் ஓய்வெடுக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே ஒலிவாங்கியைக் கழற்ற ஆரம்பித்தார்.
உண்மையிலேயே அவருக்குத் தாகம் இருப்பதாகவே முதலில் நான் நினைத்தேன். அவரது பக்கத்தில் இருந்த சிறிய மேஜையில் ஒரு குவளையில் தண்ணீர் இருப்பதை அவருக்குச் சுட்டிக்காட்டினேன். இருப்பினும் அது ஒரு சாக்கு என்பதையும், நிச்சயமாக அந்த நேர்காணல் முடிந்தது என்பதையும் உணர எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.
அப்போதும் கூட மோடி கோபத்தை அல்லது கேவலப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அடுத்த நாள் சிஎன்என் – ஐபிஎன் (CNN-IBN) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய அந்த மூன்று நிமிட டேப்பில் ‘அப்னி தோஸ்தி பானி ரஹே. பாஸ். நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். நான் உங்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன். இந்த நேர்காணலை என்னால் செய்ய முடியாது… ஆப்கே ஐடியாஸ் ஹைன், ஆப் போல்தே ரஹியே, ஆப் கர்தே ரஹியே…தேகோ மே தோஸ்தானா சம்பந்த் பனானா சஹ்தா ஹூன் (அவை உங்கள் கருத்துக்கள், நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்… நான் உங்களுடன் நட்புறவைப் பேணவே விரும்புகிறேன்)’ என்று மோடி கூறியவை திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.
உண்மையில் அந்த நிகழ்வில் வித்தியாசமானதாக இருந்தது என்னவென்றால், அதற்குப் பிறகும் நான் அவருடன் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் செலவழித்திருப்பேன். அவர் தேநீர், இனிப்புகள், குஜராத்தி டோக்லா போன்றவற்றை எனக்கு கொடுத்தார். அந்த கடினமான சூழ்நிலையில் அவரது விருந்தோம்பல் விதிவிலக்காகவே இருந்தது.
நேர்காணலைத் தொடர்வதற்கு அவரைச் சம்மதிக்க வைப்பதற்காக நான் அந்த நேரத்தைச் செலவிட்டேன். நேர்காணலை மீண்டும் செய்ய நான் முன்வந்தேன். 2002ஆம் ஆண்டு பற்றிய கேள்விகளை இறுதியில் வைக்கிறேன் என்று அவருக்கு உறுதியளித்தேன். நேர்காணலில் வேறு பல விஷயங்களை எழுப்பவிருப்பதாகக் கூறினேன். தொடக்கத்திலேயே அந்த விஷயத்திலிருந்து வெளியேறி விடுவது நல்லது என்பதாலும், கோத்ரா, முஸ்லீம் கொலைகளைத் தவிர்ப்பது இருவருக்குமே தவறாக இருந்திருக்கும் என்பதாலேயே அதிலிருந்து நேர்காணலைத் தொடங்கியதாகவும் நான் அவரிடம் கூறினேன்.
ஆனால் அந்த தர்க்கம் எதுவும் நரேந்திர மோடியிடம் வேலை செய்யவில்லை. ‘நேர்காணலை அந்த மூன்று நிமிடங்களிலேயே முடித்து விட்டால், மறுநாள் தொலைக்காட்சி சேனல் அதைத் திரும்பத் திரும்பக் காண்பிக்கும்’ என்று அவரிடம் சொன்னேன். ‘அது செய்தியாக மாறிவிடும். அநேகமாக அது ஒவ்வொரு செய்தித் தொகுப்பிலும் இடம்பெறும். மாறாக முழு நேர்காணலையும் செய்து கொடுத்தால், அது ஒரு முறை மட்டுமே ஒளிபரப்பப்படும். கூடுதலாக மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பப்பட்டு, பின்னர் அது அநேகமாக என்றென்றைக்கும் மறந்து போகும்’ என்றேன். ஆனால் அதுவும் அவரிடம் வேலை செய்யவில்லை.
தன்னுடைய மனநிலை மாறி விட்டது என்று மோடி சொல்லிக் கொண்டே இருந்தார். வேறொரு முறை நேர்காணலை நடத்தித் தருவதாகக் கூறிய அவர் நாம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதை அந்த சமயத்தில் திரும்பத் திரும்பச் சொன்னார். அவர் முன்பு சொன்ன ‘தோஸ்தி பானி ரஹே’ மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லப்பட்டது.
ஒரு மணி நேரம் ஆன பிறகு, ‘நான் கிளம்ப வேண்டும் இல்லையென்றால் தில்லிக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டு விடுவேன்’ என்றேன். அவரிடம் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சேனல் மோடியின் நேர்காணலை ஒளிபரப்பியது. உடனடியாக அது தலைப்புச் செய்தியாக மாறியது. நான் முன்னர் கூறியபடியே ஒவ்வொரு செய்தித் தொகுப்பிலும் அது இடம் பிடித்திருந்தது. நேர்காணலில் இருந்து மோடி வெளிநடப்பு செய்தது மிகப் பெரிய செய்தியாகிப் போனது. குஜராத் பிரச்சாரத்திற்கு நடுவே அது நடந்ததால், காங்கிரஸ் கட்சி மகிழ்ந்து போனது.
திங்கள்கிழமை மதியம் மோடி என்னை அழைத்தார். ‘என் தோளில் துப்பாக்கியை வைத்து நீங்கள் சுட்டிருக்கிறீர்கள்’ என்றார். இதைத்தான் நான் ஏற்கனவே கணித்திருந்தேன். வெளிநடப்பு செய்வதற்குப் பதிலாக அவர் நேர்காணலை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அன்றைய தினமே நான் உணர்ந்திருந்தேன். மோடி சிரித்தார். அவர் அப்போது கூறியதை என்னால் மறக்கவே முடியாது.
‘தம்பி கரண், நான் உன்னை நேசிக்கிறேன். தில்லிக்கு வரும் போது நாம் இருவரும் ஒன்றாகச் சாப்பிடலாம்’ என்றார்.
உண்மையில் அவை வெறுமனே புத்திசாலித்தனமான பிரிவுபச்சார வார்த்தைகளாகவே இருந்தன. அதன் பிறகு நான் மோடியைச் சந்திக்கவே இல்லை. நாங்கள் பேசிக் கொள்ளவுமில்லை. எனவே சேர்ந்து சாப்பிடுவது குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை.
இருப்பினும் அந்த நேர்காணலுக்குப் பிறகு அந்த விஷயம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாஜகவுடனான எனது உறவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது மிகவும் முக்கியமானது. கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கதையை தனிப்பட்ட முறையில் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினர். அவர்களிடம் அதுபற்றி சொல்லி மகிழ்ந்தேன் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். மிக முக்கியமாக அதற்குப் பிறகு அவர்கள் யாரும் நேர்காணல்களை வழங்குவதைத் தள்ளிப் போடப்படவில்லை அல்லது நேர்காணலுக்கு ஒப்புக் கொள்ளத் தயங்கவில்லை.
2007 முதல் 2015 வரை – ஏன் 2016இன் தொடக்கம் வரை அப்படித்தான் இருந்தது. நரேந்திர மோடியின் ஆட்சியின் முதல் ஆண்டு அல்லது பதினெட்டு மாதங்கள் வரையிலும்கூட என் மீதான பாஜகவின் அணுகுமுறை மாறவில்லை. எனது நிகழ்ச்சிகளில் தோன்றுவதற்கு அல்லது நேர்காணல்களை வழங்குவதற்கு கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சர்கள் எப்போதும் ஒப்புக் கொண்டனர். மோடியுடனான அந்த நேர்காணலே நடக்கவில்லை அல்லது மறக்கப்பட்டது என்பது போலவே இருந்தது. ஏனெனில் 2014க்குள் அதற்கு ஏழு வயதாகியிருந்தது.
அதனாலேயே அந்தத் ‘தீண்டாமை’ காலகட்டம் தொடங்கியபோது அந்த நேர்காணல்தான் அதற்கான காரணம் என்று ஏற்றுக் கொள்ள முதலில் விரும்பவில்லை. அது உண்மைதான் என்பதை உணர்ந்து கொள்ள உண்மையில் எனக்குச் சிறிது காலம் ஆனது. அதுகுறித்து எழுத்தாளரும், அரசியல்வாதியுமான பவன் வர்மா 2017 அக்டோபர் 18 அன்று எனக்கு ஆதாரம் அளித்தார். அவர் சொன்னது நிருபேந்திர மிஸ்ரா என்னிடம் ஏற்படுத்திய உணர்வை உறுதிப்படுத்தியது. பவன் சொன்ன அந்தக் கதை ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருந்தது.
எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த பவனின் பார்வை நரேந்திர மோடி புகைப்படத்தின் மீது விழுந்தது. நான் நேர்காணல் கண்டிருந்த முன்னாள் பிரதமர்கள் குழுவில் அந்தப் படமும் பிடித்திருந்தது. இருப்பினும் மோடியின் அந்தப் படம் தொலைக்காட்சித் திரையில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது, தன்னுடைய ஒலிவாங்கியைக் கழற்றி அந்த நேர்காணலை முடிக்கத் தொடங்கும் துல்லியமான தருணத்துடன் அது இருந்தது. திரையில் தெரிந்த CNN-IBN என்ற தலைப்பு அந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதில் ‘இந்த நேர்காணலைச் செய்ய முடியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
‘அந்த நேர்காணல் குறித்து பிரசாந்த் கிஷோர் என்னிடம் என்ன சொன்னார் என்று தெரியுமா?’ என்று திடீரென்று பவன் என்னிடம் கேட்டார். ‘2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு மோடியைத் தயார்படுத்திய போது அவரை முப்பது முறை அந்த வீடியோவைப் பார்க்க வைத்தேன்’ என்று தன்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாகத் தெரிவித்த பவன் கடினமான கேள்விகள் அல்லது மிகவும் சங்கடமான மோசமான தருணங்களை எவ்வாறு கையாள்வது என்பதை மோடிக்கு கற்றுக் கொடுக்க பிரசாந்த் கிஷோரின் குழு அந்த நேர்காணலையே பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பிரசாந்த் கிஷோருடனான தனது உரையாடலின் கூடுதல் விவரங்களை பவன் என்னிடம் சொன்ன போது கூடுதல் ஆச்சரியம் அளிப்பதாகவே அது இருந்தது. நேர்காணல் முடிந்த பிறகு வேண்டுமென்றே ஒரு மணி நேரம் என்னை அங்கே காக்க வைத்திருந்ததாகவும், அதன் மூலம் என் மீது எந்தவொரு மோசமான உணர்வும் மோடிக்கு இல்லை என்று நம்பி நான் அவரது வீட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் பிரசாந்திடம் மோடி கூறியிருந்தார். தேநீர், இனிப்புகள், தோக்லா என்று அனைத்துமே என்னை நிராயுதபாணியாக்கும் உத்தியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றன. மோடி என்னிடம் மிகவும் நட்புடனே இருந்தார் என்றும், நேர்காணலின் முடிவில் எந்தவித வருத்தமும் அவரிடம் இருக்கவில்லை என்றும் நான் பவனிடம் கூறியபோது, அது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று பவன் கூறினார். அது நன்கு தெரிந்தே மோடியால் கடைப்பிடிக்கப்பட்ட உத்தி.
‘இன்னும் வேறு ஏதாவது உங்களுக்குத் தெரிய வேண்டுமா?’ என்று கேட்ட பவன் ‘பிரசாந்திடம் மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் பழிவாங்குவேன் என்றும் கூறியிருக்கிறார். அதை இரண்டு மூன்று முறையாவது பிரசாந்த் திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னார். அதுவொன்றும் அப்போதைக்கு மோடி கூறிய கருத்தாக இருக்கவில்லை. அதுதான் அவரது நோக்கம். உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் என்றே பிரசாந்த் உறுதியாக நம்பினார்’ என்று மேலும் கூறினார்.
பவனை நம்பாமல் இருப்பதற்கு என்னிடம் எந்தக் காரணமும் இருக்கவில்லை. என்னைத் தவறாக வழிநடத்துவதாலோ அல்லது உண்மையைப் பூசி மெழுகுவதாலோ எதுவும் அவருக்குக் கிடைக்கப் போவதில்லை. மிக முக்கியமாக அவர் கூறியது 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பாஜக என்னை நடத்திய விதத்தை விளக்குவதாக இருந்தது. அதனாலேயே கட்சியின் செய்தித் தொடர்பாளர்களை எனது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியது, என்னுடைய நேர்காணல்களை அமைச்சர்கள் நிராகரிக்கத் தொடங்கியது, இறுதியில் அமித் ஷா ஆரம்பத்தில் கொடுத்த உறுதிமொழிக்குப் பிறகு, திரும்ப என்னை அழைக்கவோ அல்லது எனது அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவோ தவறிவிட்டது போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. எனவேதான் நிருபேந்திர மிஸ்ரா பேசிய போது, என்னைச் சந்தித்து பிரச்சனைகளைத் தீர்க்க மோடி மறுத்திருக்கிறார்.
2007ஆம் ஆண்டு நேர்காணலின் போது மோடி வெளிநடப்பு செய்தது ஏன்? – கரண் தாப்பர் எழுதி ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சாத்தானின் வழக்குறைஞர்: சொல்லப்படாத கதை’ (டெவில்ஸ் அட்வகேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி) என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.
https://thewire.in/books/narendra-modi-karan-thapar-interview
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.