இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (நையாண்டி தர்பார் என்று நினைவு), திரை இயக்குனர் பி வாசு பேசிக் கொண்டிருக்கையில், அவரது மன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அருமையான பாடல் பற்றிய கேள்வி வந்தது. கே ஜே யேசுதாஸ் குரலில் இன்றும் அடுத்தடுத்த தலைமுறையினரை ஈர்த்துக் கொண்டிருக்கும் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற பாடலை, அன்று வாசு அவர்களும் மிக அருமையாகப் பாடினார். நகைச்சுவை நடிகர் வடிவேலு, தனது படங்கள் பலவற்றில், இடையே பாடல்களை அனாயாசமாக ரசனையோடு நல்ல குரலில் பாடுவதைக் கேட்கும்போது அத்தனை ருசியாக இருக்கும்.
‘காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயோ’ என்ற பாடல் கம்போசிங் எப்படி நடந்தது, கவிஞர் வாலியும், இசை ஞானியும்  உரையாடியவாறு சொற்களை  எப்படி  மாற்றி மாற்றி ட்யூனுக்கு ஏற்ற பல்லவியை வந்தடைந்தனர் என்பதன்  ஆடியோ பதிவு ஒன்றை நண்பர் ஒருவர் அண்மையில் பகிர்ந்து கொண்டிருந்தார். இடையே ஒரு வரியை வாலி அமர்க்களமாக அவரே பாடிக் காட்டும்போது, ராஜா சொல்கிறார், ‘அண்ணே நீங்க அருமையா பாடுறீங்க’ என்று. ‘சரிதான் நான் பாடினால் யார் கேப்பா?’ என்று வாலி சிரிக்கிறார் என்றாலும் ராக நுட்பங்கள் நுணுக்கமாக அறிந்த அவர் நிச்சயம் உயிராக ரசித்துத் தான் பாடி இருந்தார்.
https://www.thehindu.com/features/friday-review/music/Nothing-but ...
பயண நேரங்களில், ரயில் நிலையம் அல்லது பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் தருணங்களில் அல்லது பொதுவிடங்களில் கூட யாரேனும் ஒருவர் தமக்குப் பிடித்த பாடலை  முணுமுணுத்துக் கொண்டிருப்பதை அதற்கான காதுகள் இருப்போர் நிச்சயம் உற்று கவனிக்கவே செய்வார்கள். ஒரு குழந்தையின் சிரிப்பில் இல்லாத இசையா… எத்தனை இலக்கண சுத்தமாக அமைந்த ஸ்வர வரிசை அது!
வேக ஓட்டத்தில் இருக்கும் ரயிலின் ஹார்ன் சத்தத்தை அப்படியே மடியில் வாங்கிக் கொள்ளும் காற்று, தெருக்கூத்துப் பின்பாட்டுக்காரன் போல அதில் உருப்படிகள் சேர்த்து அப்படியே பறக்க விடுவதைப் பெட்டிகளில் பயணம் செய்யும் குழந்தைகள் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும். அடுத்த ஒலிபரப்பு வரும்போது ஒப்பிட்டுப் பார்க்கும். நீண்ட பாலத்தில் தண்டவாளங்கள் மீது ஓடும் ரயில், சக்கரங்களில் திடீர் என்று சலங்கை கட்டிக்கொண்டு ஆடிச் செல்வதைக் கேட்கத்தானே செய்கிறோம். புயலுக்கு முன் மூச்சு திரட்டிக் கொண்டு வரும் ஆவேசக் காற்று ஒரு மானசீக புல்லாங்குழலில் உதடு வைத்து ஊதிக்கொண்டே வருவதில்லையா…
M. S. Viswanathan | Antru Kanda Mugam
வாழ்க்கையின் இரண்டு முனைகளிலும் இசை எனும் பூண் பொருத்தப்பட்டிருக்கிறது. உற்றுப் பார்த்தால், வாழ்க்கை ஒவ்வோர் இழையாக இசையால் தான் நெய்யப் பட்டிருக்கிறது. அதில் பட்டு இருக்கிறது. இசையின் எல்லா வண்ணங்களும் பட்டு இருக்கிறது. இன்பப்பட்டு, துன்பப்பட்டு, ஆசைப்பட்டு, காயப்பட்டு, கோபப்பட்டு, தாபப்பட்டு, மன்னிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டு, தணிக்கப்பட்டு, கணிக்கப்பட்டு….எல்லாப் பட்டும் பட்ட பாட்டுகளால் நிரம்பி இருக்கிறது வாழ்க்கை.  காதலுக்கு மட்டும் பாட்டு எழுதியவர் அல்ல, காதல் பிரிவுக்கும், கஷ்டத்திற்கும் கூட தத்துவப் பாடல் பாடி இருக்கிறார் கவிஞர் என்று எம் எஸ் விசுவநாதன் ஒரு திரைப்படத்தில் (காதல் மன்னன் படத்தில் அவர் நடத்துவதே கண்ணதாசன் மெஸ் தான்) பெருமையோடு சொல்லிக்காட்டுவார்.  இசையில் வாழ்க்கை அல்லது இல் வாழ்க்கை இசை அல்லது இசை இல்லாததா  வாழ்க்கை என்று எப்படியும் எழுதி வாசித்துக் கொள்ளலாம்.
எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து தனக்குள் பாடிக் கொண்டிருந்தாலும், திரைப் பாடல்கள் ஏதோ அவரவரே எழுதி, அவரவரே இசை அமைத்து, அவரவரே பாடி, அவரவரே நடித்த கம்பீரம் கிடைத்து விடுகிறது, . மனைவி நளினமாக மெல்ல நடந்து வருவதை, கண்ணூஞ்சல் வாசிப்பு மாதிரி இருந்தது என்று தமது சிறுகதையில் எழுதுகிறார் வண்ணதாசன் (நடேசக் கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும்). ரயிலில் யாராவது ரெண்டு காசு போடமாட்டார்களா என்று பாடி வரும் கண்பார்வையற்ற பிச்சைக்காரர்,  ரிக்கார்டிங் தியேட்டரில் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் முன் இருக்கும் உணர்வில் அத்தனை சுருதி சுத்தமாக அசாத்திய ஒழுங்கமைப்போடு பாடலை இசைக்கிறார். சங்கீதக் கனவுகளின் குமிழிகள் சமையலறையில், குளியல் அறைகளில் இப்போதும் உடைபட்டுக் கொண்டிருப்பதை அதற்கான காதுகள் இழந்துவிட்டோர் கேட்க மாட்டார்கள்.
பாடல் வரிகளை இசை எப்படி வாங்கிக் கொள்கிறது, தாங்கிக் கொள்கிறது. சிலபோது பூர்ணம் போல பாடலை உள் ஒளித்துக் கொள்கிறது, சிலபோது தான் உள்புறம் ஓடிக்கொண்டு சொற்களை எப்படி குட்டிக்கரணம் போட வைத்து ரசிக்க வைக்கிறது என்று வகை வகையான பாடல்களை அன்றாடம் கேட்டு ரசிக்கிறோம். இசையும், பாடலும் எங்கு தான் இல்லை… பாடலுக்கு மொழி கூட தேவைப்படுவதில்லை. இசைக்கும் சங்கீத ஞானம் இருக்க வேண்டியதில்லை.
டிஜிட்டல் பரிவர்த்தனையில், மனிதர்கள் தானா அல்லது எந்திரமா என்று கண்டறிய சின்னசிறு கேள்விகள், கூட்டல் கழித்தல் விடைகள்  கேட்கப்படுவதை கேப்ச்சா (Captcha) என்று சொல்வார்கள். இசை அப்படி ஒரு பரிசோதனை என்று கூட வைத்துக் கொள்ளலாம். இசை ஒரு கடவுச்சொல். இசை ஒரு பொக்கிஷத் திறவு கோல். இசை ஒரு பயணச்சீட்டு. இசையை இலேசாக இதழ்களில் இருந்து வழியவிடுங்கள், எத்தனை கண்கள் எதிரே சட்டென்று  வியப்பில் மலர்கின்றன என்பதைக் காண்பீர்கள்.
திரைப்பாடல்களின் பல வண்ணங்களை – அவை நம்மை வந்தடையும் போது கிளர்த்தும் அனுபவங்களை இந்தத் தொடரில் பார்ப்போம். அதற்குமுன், மகாகவி பாரதி, இசையில் தனது உயிரை வைத்திருந்தான் என்பதை எத்தனையோ விதங்களில், எத்தனையோ இடங்களில் தமது எழுத்தில் வெளிப்படுத்தியவர், குயில் பாட்டு எனும் அமுதப் பொழிவில், அவர் வகைமைப்படுத்தி வழங்கி இருக்கும் பட்டியலைத் திரும்பத் திரும்ப ரசித்து வாசியுங்கள்……  அடுத்த வாரம் சந்திப்போம்.
Kuyil Paattu / குயில் பாட்டு
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
(இசைத் தட்டு சுழலும்……)
Image
கட்டுரையாளர்- எஸ் வி வேணுகோபாலன்
மின்னஞ்சல் முகவரி[email protected]
அலைபேசி எண்94452 59691