Na. Periyasamy's Mozhiyin Nizhal Book Review by Writer Kamalalayan. Book Day is Branch of Bharathi Puthakalayam.



நூல்: மொழியின் நிழல்
ஆசிரியர்: ந. பெரியசாமி
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
விலை: ரூ. 80
அட்டை எழுத்துரு & வடிவமைப்பு : சீனிவாசன் நடராஜன்

கவிஞரான பெரியசாமியின் முதல் கட்டுரைத்தொகுதி இது .அவர் வாசித்துச் சுவைத்து அசைபோட்டு மகிழ்ந்த நாற்பது புத்தகங்களின் நயங்களை ஒரு வாசகராக நம் முன் வைத்திருக்கிறார். இயல்பாகவே, இவற்றுள் பெரும்பான்மையானவை -23- கவிதை நூல்கள். சிறுகதைத்தொகுதிகள் -4. நாவல்கள் -3; கடிதங்களின் தொகுதிகள்- 2 ; நாடகங்கள் பற்றியவை -2 ; வாழ்க்கைச்( நடைச் ) சித்திரங்கள்-கட்டுரைகளாக 5 . எண்ணிக்கையில் என்ன இருக்கிறது எனக்கேள்வி எழலாம். எண்ணிக்கையிலும் விஷயம் இருக்கிறது. தோழர் பெரியசாமியின் வாசிப்பு ரசனை, எவ்வளவு விரிந்தும், பரந்தும் இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட பன்முகத் தன்மை வாய்ந்த, வெவ்வேறு வகை சார்ந்த புத்தகங்களின் எண்ணிக்கையும் ஒரு சான்றுதானே ?

எந்தச்சூழலில் இது வெளிவருகிறது ? அவருடைய வார்த்தைகளிலேயே சொன்னால், “ நிலத்தில் உழுது கொண்டிருக்க வேண்டிய கால்கள், மாதக் கணக்கில் தார்ரோடுகளில் நிற்கின்றன.’இது யாருக்கான அரசு ?’ என மனச் சோர்வோடு இருக்கும் சூழலில் இத்தொகுப்பு வெளிவருகிறது என்பதறிவேன்.”
நுண்ணுணர்வு மிக்க ஒரு கவிஞர், பிற கவிஞர்கள், எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்புகள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளையும் தேடித்தேடிப் படிக்கிறார்.அவருக்கு ஓர் உண்மை புலப்படுகிறது : ” நிறைகுடம் தளும்பாதெனும் சொல்லாடல் உண்டு. தெரிந்தும் தளும்பும் குடங்களையே கொண்டாடிக் கொண்டிருப்பது நம் இயல்பாகிப் போனது. தளும்பலின் ஓசை நம்மை மகிழ்விப்பதாக நம்புவதும் ஒரு காரனமாக இருக்கலாம்…”.எனவே, நிறைகுடங்களைத் தேடி மேற்கண்ட படைப்புகளினூடே அவர் நிகழ்த்தும் வாசகப்பயணம் மிக நெடியதாக நீள்கிறது. வாசிப்பின் விளைவாக அவை அவருக்குள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தான் உணர்ந்தவற்றை எழுத்தில் பதிவு செய்வதன் வழி, அந்த நூல்களின் உலகினுள் கொஞ்சகாலம் ஊடாட முடிவதாக, வாழ முடிவதாக அவர் நம்புகிறார். இது பெரியசாமிக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எனக்கும் தான்.
எந்த ஒரு சிறந்த வாசகரும் வாசிப்பின் உலகில் திரிந்து அலைந்து தான் பெறும் அனுபவங்களை சக நண்பர்களிடமோ, படைப்பாளிகளிடமோ, பொதுவெளியில் ஆர்வமுள்ள மனிதர்களிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என முற்படுவது இயல்பு. அவற்றைக் கட்டுரைகளாக்கும் கலை அனைவருக்கும் வசப்படுவதில்லை என்பது உண்மை. பெரியசாமிக்கு அது முழுமையாக வசப்பட்டிருக்கிறது. விளைவு ? ‘மொழியின் நிழல்’ தொகுதி !

கவிதையின் குரல் எது ? ஆக்டேவியோ பாஸ் தன் அனுபவத்தில் சொல்லும் ஒரு கருத்தை மேற்கோளாகக்கொண்டு தொடங்குகிறது முதல் கட்டுரை. னம்மைச் சட்டென தொகுப்பினுள் ஈர்த்துக்கொள்வதாக அது உள்ளது. ‘அரோரா’ என்ற சாகிப்கிரானின் கவிதைத்தொகுதி பற்றியது இது.சக மனிதர்கள் மீதான பிரியத்தைக் காட்டும் சொல்தான் அன்பு. ஆனால், அது பட்டகம் போல் பல்வேறு முகங்கள் கொண்டது. கடும் மழையில் நனையும் மானகர வீதியொன்றில், சாலையில் ஓடும் ஒரு நாய், கொட்டிவழியும் மழையை மீண்டும் மீண்டும் சிலிர்த்து உதறித் தெளித்தபடி ஓடிக்கொண்டி ருக்கிறது. சாலையின் இருமருங்கிலும், மழை நின்றதும் வீடு திரும்புவதைப் பற்றிய தவிப்புடன் காத்திருக்கும் ஆயிரமாயிரம் கண்களின் ஓட்டத்தில், அவர்களின் மனங்களுக்குக் குறியீடாக நாயை மாற்றுகிறார் கவிஞர் இந்தக் காட்சியின் திளைப்பில் பெரியசாமி எழுதுகிறார். நாம் படித்து அதே அனுபவத்தைப் பெறுகிறோம்.



“ செஞ்சொல் கவியின்பம்” வழங்கும் கம்பனின் ”சொல்கலை” என்ற சொல்லாட்சியைப் பொருத்தமாகப் பயன்படுத்தி இளங்கோ கிருஷ்ணனின் ‘பட்சியின் சரிதம்’ தொகுப்பை அறிமுகம் செய்கிறார் பெரியசாமி. மனதை ஓர் இசைக்கருவியாக உவமித்து, அது உணர்தலின் வழியே உருவாக்கியதை வாசக மனங்களில் கடத்தும் அற்புதத்தை வியக்கிறார். தான் எழுதிச்செல்லும் வரிகள்தோறும் இத்தகைய பதிவுகளைத் தேர்ந்து எடுத்துக் காட்டுகிறார். “னிலமாதல், மழைத்துளி விழுதல்,மண்வாசனை, வேர்ப்பிடிப்பு, கிளைவிரிப்பு “ இவற்றையெல்லாம் காட்சியாக மட்டும் காணாமல், உணர்தலின் தடத்தில் கவிதையை னகர்த்திச் செல்லும் இளங்கோ கிருஷ்ணனின் உத்தியைப் பாராட்டும் விதத்தைப் பாருங்கள் : “அவர் லயித்துப் பின்னிய சடையைப் பிசிறில்லாமல் நமது மனதிலும் லயித்துக்கிடக்குமாறு தொங்க விட்டு விடுகிறார்…”

இன்றைய சமகாலச்சூழலில், எங்கும் ஒற்றைத்தன்மையை நிறுவமுயலும் அரசை விமர்சிக்கும் வரிகளிலுள்ள உண்மைத்தன்மை நம் நினைவில் எப்போதும் நிலத்து நிற்கும் : “ கண்ணுக்குத் தெரியாத வைரசின் மாயவலையை,அது பின்னத்தொடங்கிய போதே அறுத்தெறியாது, கெட்டித்த நரம்புகளாக வலையை மாறவிட்டுவிட்டுக் கதறும் நீலிக்கண்ணீரை எப்படித்தான் சகித்துத் தொலைப்பதோ? இவர்கள் உருவாக்கும் தேசத்திற்கு “ஒரு ரதமும்,ஒரு மசூதியும் / கொஞ்சம் காக்கி டவுசர்களுமே போதும் !” இளங்கோ கிருஷ்ணனின் வரிகள் அத்தனை பொருத்தப்பாடு மிக்கவை எனச் சிலாகிக்கிறார் பெரியசாமி.

‘ரொட்டிகளை விளைவிப்பவன்’ தொகுப்பில் ஸ்டாலின் சரவணன் கவிதைகளைப் பற்றிய மூன்றாவது கட்டுரையில், எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்கள் அதிகாரத்திலிருக்கும் ‘அவன்’கள்தாம் என்பதை அம்பலப் படுத்துகிறார். அதிகாரத்தில் இருக்கும் ‘அவன்’களின் கனவுகள்,ஆசைகள் அனைத்தையும் சாத்தியமாக்கிக் கொள்ள அவர்களால் முடியும். ‘செம்புலத்து மாயோன் பொக்லைன் தேர்வில் பவனி’ என வரும் கவிதையில், எளியோனின் ஆசையும்,அதிகாரத்தின் ஆசையும் என்னென்ன விதங்களில் செயல்படுகிறது என்பதன் காட்சியாக்கம் என்கிறார் பெரியசாமி.

‘குருதி வழியும் சக்கரப் பற்கள்’ என்ற கவிதையின் பாடுபொருள்,ஒரு நாவலுக்கானது என மதிப்பிடும் பெரியசாமி, டிராக்டரை முதன்முதலில் பார்த்தபோது தஞ்சையைப் போன்ற, நிலங்களும், வேளாண்மையும் நிறைந்த பகுதி மக்களிடையே உண்டான அச்சம் எத்தகையது என்பதை ஒப்பிட்டுக் கூறும் பகுதி மிக முக்கியமானது. மனித சக்தியின் ஆற்றல் அளவுகடந்து நிறைந்திருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், அந்த ஆற்றலை மட்டுமே நீண்டகாலம் உழைப்புச்சக்தியாக விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த முதலாளிகளுக்கு இயந்திரங்கள் செல்லப்பிள்ளைகளாயின.னிலங்கள் கடந்து இப்போது தொழிற்சாலைகளில் அதன் ‘அமித்ஷா’த்தனத்தை தினமும் எதிர்கொண்டு வாழ்கிறோம் எனக்கூறும் பெரியசாமி, ஸ்டாலின் சரவணன் இக்கவிதையை வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகிறார்.இக்கவிதையின் நீட்சியாக ’ரொட்டிகளை விளைவிப்பவன்’ கவிதையை வைத்திருப்பது, முந்தைய கவிதையின் வாசிப்பு மன நிலையை அப்படியே வைத்திருக்கச் செய்கிறது எனவும் அவர் குறிப்பிடும்போது, இந்தக்கவிதைகள், இன்றைய வாழ்க்கை நிலத்தின் புழுதி மண்ணில் கால்பதித்துச் சிறகு விரித்திருப்பவை என்பது தெளிவாகிறது.

ஸ்ரீனிவாசன் நடராஜனின் ‘விடம்பனம்’ நாவல்,அதன் கொலாஜ் வடிவம், சீரற்ற,ஒழுங்கு குலைந்த அதன் சொல்முறை போன்ற பல்வேறு தன்மைகளுக்காக பெரிதும் விவாதிக்கபட்ட நாவல். வடிவமில்லாத வடிவம்,கதையில்லாத கதை, ஒழுங்கற்ற ஒழுங்கு என்று சொல்லும் பெரியசாமி, ஆசிரியரின் நினைவிலிருக்கும் காலத்தை,சம்பவங்களை நினைவுகளில் தோன்றியவாறே எழுதிச் சென்றிருக்கலாம் என அனுமானிக்கிறார்.

மொழியின் நிழல் (கட்டுரைகள்) - செங்கனி

கு.ஜெயப்பிரகாஷின் ‘சா’ நாவலைப்பற்றிய கட்டுரை,  பெரியசாமியின் மனம் வெறுமை கொள்ளும் நாட்களில் ஓசூரிலிருந்து சில கிலோ மீட்டர் பயணிப்பில் சாமந்திப்பூக்காடுகளை நிறைய்யப் பார்க்க வாய்த்திருப்பது பற்றிய ‘நிலம் மூழ்கும் சாமந்தி’களின் காட்சிப்பதிவுடன் விரிவடைகிறது. நக்கீரனின் காடோடி நாவலை வாசித்த அனுபவத்தையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். காடோடி நாவலிலிருந்து இவர் எடுத்துக்காட்டி யிருக்கும் சில பகுதிகளை வாசித்தாலே மனம் பதறிப்போவோம். “ மரம் என்றால் அது இலைகள் அல்ல,பூக்கள் அல்ல, காய்கள் அல்ல, கனிகளும் அல்ல, ஏன்,அது மரமே அல்ல, மரம் என்றால் அது வெறும் டாலர்,டாலர் மட்டுமே “ எனத்தொடங்கும் நாவலின் ஆரம்பமே நம்மைப் பெரும் அதிர்வுக்குள்ளாக்குகிறது என்கிறார். காடுகளை அழித்தல் என்பது வெறும் மரங்களை வெட்டுவது மட்டுமல்ல;காட்டுயிரிகளையும், தொல்குடிகளையும் சேர்த்தே அழித்தல்.காட்டழிப்பின் பின்னுள்ள நுண்ணரசியலை இந்த நாவல் சித்தரிக்கிறது எனக்கூறும் பெரியசாமி, கட்டுரையின் நிறைவில் நினைவுகூரும் செவ்விந்தியப்பாடல் இது : “ கடைசி மரமும் வெட்டுண்டு / கடைசி நதியும் வறண்டோடி / கடைசி மீனும் பிடிபட்டு / அப்போதுதான் உறைக்கும் / பணத்தைச் சாப்பிட முடியாதென்று.”

பாக்கியம் சங்கரின் ’ நான்காவது சுவர் ‘தொகுப்பு மிகப்பரந்த அளவில் தமிழ் வாசகப்பரப்பைச் சென்றடைந்த ஒரு நூல். யாராலும் கவனிக்கப்படாத எளிய மனிதர்களுக்குள் என்னென்ன கனவுகள், எந்த விதமான காயங்கள்,வலிகள் நிறைந்து கிடக்கின்றன என்பதை காவியச்சோகத்துடன் ஆவணப்படுத்திய கட்டுரைகள் இவை. பிணவறைகளில், கழிப்பறைச் சாக்கடைகளில், கழைக்கூத்தாடிக் கம்பங்களில் அந்த மனிதர்கள் தமது வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டிருக்கும் விதங்களைப் பேசும்போது வாசக மனங்களில் பெரும் குற்ற உணர்வை உருவாக்கியவை. பெரியசாமியும் தனது உணர்வுகளைக் கொந்தளிக்கும் நடையில் பதிவு செய்திருக்கிறார்.

’போராளிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்’ கட்டுரையில் நமக்கு அறிமுகமாகும் ஒரு புத்தகம் இராமனாதபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து,இந்திய விடுதலைப்போராட்டத்தின் போது தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்ற ஜி.இராமச்சந்திரன், அவரது தமக்கை னாராயணம்மாள் ஆகிய தியாகிகள் பற்றியது. என்றோ இராமச்சந்திரனால் எழுதப்பட்டு, சிதைந்து போன நிலையில் இருந்த கையெழுத்துப்பிரதியான சுயசரிதைக்குறிப்புகளைத் தற்செயலாகக் காணும் பெரியசாமி, தன்னார்வத்துடன் அதை மெல்லத் தட்டச்சு செய்து அதை அவ்வளவு காலம் பாதுகாத்து வைத்திருந்த இராமச்சந்திரனின் உறவினர் வசந்தசந்திரன் மூலம் நூலாக வெளிவரக் காரணகர்த்தாவாகிறார். கட்டுரையை இந்த ஆதங்கத்துடன் நிறைவு செய்கிறார் : “ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த ஜி.இராமச்சந்திரனின் சுயசரிதை இப்பொழுதாவது வந்திருக்கென ஆறுதல்கொள்ளும் வேளையில் இவரைப்போன்று எத்தனையோ போராளிகள் எதையுமே எழுத்தில் பதிய வைக்காது வாய்மொழிக்கதையாகவே மட்டுமே சொல்லிவிட்டு மறைந்திருக்கக்கூடும்…எத்தனையோ வரலாறுகள் மண்ணோடு மண்ணாய்க் கலந்திருக்கும் என்ற வருத்தமும் மேலோங்கியது…”



‘ஸ்ரீனிதியான கணங்கள் “ கட்டுரையில்,யாசகன் தனது மகள் ஸ்ரீ நிதிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான ‘கடவுளின் நூறு முத்தம்’ நூலை அறிமுகம் செய்கிறார். கடிதம் உயிர் எனும் வார்த்தைகளை யாசகனின் எழுத்து சொல்கிறது.’ஆம்,உயிர்தான்’ என்று தனது சுய அனுபவத்துடன் குழைத்து எழுதி கடிதங்களை எழுதுவதிலும், பெறுவதிலும் கிடைக்கும் பரவசத்தை வாசகர்களுக்குக் கடத்துகிறார் பெரியசாமி. இதே போல, சொல்லப்படவேண்டிய நன்றிகள் கட்டுரையில் ‘மகனுக்கு மடல்’ என்ற கடிதத்தொகுதி குறித்து இவர் எடுத்துக்காட்டியுள்ள கடிதப்பகுதிகள் அமைந்துள்ளன. புதுக்கோட்டை மருத்துவர் நா.ஜெயராமன், தன் மகன் ஜெயகுமாருக்கு எழுதிய கடிதங்களும்,மகன் தந்தைக்கு எழுதிய ஒரு கடிதமும் அடங்கிய தொகுதி அது. ஒருவரின் தகுதியையும்,திறமையையும் பிறப்பு தீர்மானிப்பதில்லை என மகனுக்கு உணர்த்தும் பொருட்டு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கருத்துகளை ஆங்காங்கே மேற்கோள் காட்டியிருக்கிறார் தந்தை. அம்பேத்கரின் நூல்தொகுதிகள் 37- ஐயும் படித்துவிடு என்று அவர் சொல்லைத் தட்டாமல் வாசித்து வெற்றி பெற்ற மகன் ஜயக்குமாருக்கு, தந்தையின் அறைகூவலைப் பாருங்கள் : “ உன் பெயரைவிடவும் நீளமாக இருக்கும் பட்டங்களெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்குள் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு தலித் சமூகத்து மனிதன் பெற்ற வெற்றியால் உலக அரங்கில் நீ புகழ் பெறுகின்ற இடங்களில், மேடைகளில் இந்தியாவில் மிக மிக மோசமாக ஒடுக்கி வைக்கப்பட்ட சாதியில் பிறந்தவன் என்ற உண்மையையும் பட்டவர்த்தனமாக எவ்வித ஒளிவுமறைவுமின்றி உரத்துச்சொல். சாதிவெறி பிடித்த இந்தியர்கள் உலக அரங்கில் வெட்கித் தலை குனியட்டும் !”

தமிழவன்,கோணங்கி,மயூரா ரத்தினசாமி, பால் சக்கரியா (தமிழில் மொழி பெயர்த்தவர் கே.வி.ஜெயஸ்ரீ) ஆகியோரின் கதைத்தொகுதிகளைப்பற்றிய கட்டுரைகளில், கதைகளும்,பாத்திரங்களும்,உணர்ச்சிகளும் பின்னிப் பிணைந்து நமது கவனத்தில் பதிவாகும் வகையில் அறிமுகம் செய்கிறார்.
எல்லாக்கட்டுரைகளைப்பற்றியும் பேசலாம் என்ற உந்துதல் தள்ளிக் கொண்டிருந்தாலும், மொழியின் நிழல் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதுதான் இதன் நோக்கம் என்ற அளவில் கோடி காட்டுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் சரியானது. நல்ல னூல்களை அறிமுகம் செய்யும் இந்தப்பணி, எப்போதுமே செய்பவருக்கு மகிழ்ச்சியையும், மனனிறைவையும் தரும் காரியம்தான். இதே விஷயத்தைத் தொடர்ந்து முடிந்தவரை செய்துவருபவன் என்றமுறையில் பெரியசாமியின் தொகுப்பு எனக்கு மிகுந்த மன எழுச்சியைத் தந்தது.சொந்த வாழ்க்கையின் சுவடுகளைக் கீற்றுகளாகத் தந்து கொண்டே அந்த அனுபவங்களின் பின்னணியில் பொருத்தமான புத்தகங்களை அறிமுகம் செய்திருக்கிறார் தோழர் பெரியசாமி. வசீகரமான கவித்துவம் மிளிரும் தலைப்புகள்.துள்ளித்துள்ளிப் போகும் நடை. புத்தகங்களை வாசிக்கத்தூண்டும் பெரும் பணி. இதைத் தொடருங்கள், பெரியசாமி.

“எழுதப்பட்ட காலத்தில் ஒரு பொருளில் அர்த்தப்படுத்தப்பட்ட ஒரு கவிதை, பல நூறு வருடங்களுக்குப் பிறகு வேறு விதமாகவும் விளக்கப்படக்கூடும். கவிதையின் சொற்கள் திரி பற்றி எரியும் சுடர் போன்றவை.தமது பிரகாசத்தின் மூலம் சிலவற்றை வெளிச்சப்படுத்தும். அதே சமயத்தில் அச்சொற்கள் தமது நிழலின் மூலம் சிலவற்றைத் திரையிட்டு மறைக்கவும் செய்கின்றன.அதனாலேயே ஒரு கவிதைக்குப் பல்வேறு காலங்களில் பல்வேறு வியாக்கியானங்கள் சாத்தியமாகின்றன.” என்ற க.மோகனரங்கன் மேற்கோளை, தன் கடைசிக்கட்டுரையின் முகப்பில் தந்திருக்கிறார் பெரியசாமி. மொழியின் நிழல் தொகுதியில் கவிதைகளுக்கு மட்டுமன்றி, வேறு பல இலக்கிய வகைமைகளுக்கும் இந்தத் திரி பற்றி எரியும் சுடர்கள் போன்ற மறு விளக்கங்களைத் தந்திருக்கிறார் அவர். அந்த நிழலில் வாசகமனங்கள் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்வார்களாக !

கமலாலயன்,
ஓசூர்
25-05-2021

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *