நூலின் பெயர் : நண்பர்களின் பார்வையில் மார்க்ஸ்
தமிழில்               ; ச.சுப்பாராவ்
வெளியீடு          ; பாரதி புத்தகாலயம், இளங்கோ சாலை, தேனாம்பேட்டை. சென்னை 600 018.
முதற் பதிப்பு   ; டிசம்பர் ;2017
பக்கங்கள்         ;80
விலை                 ;70/-
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/nanbargalin-parvaiyil-marx/

கம்யூனிசத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, தாம் பிறந்த நாடுகளில் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களில் ஈடுபட்டு, லண்டனில் புலம் பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் மார்க்ஸுடன் பழகி, பல்வேறு விஷயங்களைக்கற்றுக்கொண்ட இரு சீடர்களின் மார்க்ஸ் குறித்த நினைவலைகளின் பதிவு இது. ஒருவர் ஜெர்மன் சோஷலிஸ்ட்டும், ஜெர்மன் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியைத் தோற்றுவித்தவருமான கார்ல் வில்ஹெம் லீப்னிஹ்ட் மற்றவர் பிரெஞ்சுப்புரட்சியாளரும், சோஷலிஸ்ட்டும், மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவை மணம் செய்துகொண்டவருமான பால் லாஃபார்கே ஆவார்.

 ’கார்ல் லீப்னிஹ்ட் ’ பகிர்ந்துகொள்வதை  வாசகர்களுக்கு கிழே சுருக்கித்தரப்படுகிறது.

சுதந்திர சுவிட்சர்லாந்தின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய கடவுச்சீட்டின்படி பிரான்ஸ் வழியாக லண்டன் வந்தடைந்த சில நாட்களில் ,விஞ்ஞான மனிதரும், ரைனீஷ் ஜைதுங்கின் ஆசிரியரும், கம்யூனிஸ்ட் அறிக்கையின் சக ஆசிரியரும், மூலதனத்தை எழுதியவருமான மார்க்ஸ் மனித இனத்திற்கே பொதுவானவரான மார்க்ஸையும் அவரது குடும்பத்தினரையும், 1840 ல் லண்டனில்  தொடங்கப்பட்டிருந்த ஜெர்மன் தொழிலாளர் கல்விக்கழகத்தின் கோடை முகாமில்தான் நான் பார்த்தேன். 

மார்க்ஸ் என்னை  மறுநாள் தொழிலாளர் கல்விக்கழகத்திற்கு வரச்சொல்லியிருந்ததின் பேரில் நான் அங்கு சென்றிருந்தேன். மார்க்ஸ் வந்ததும், ஏங்கெல்ஸ் கீழே தனி அறையில் இருப்பதாகக்கூறி எங்களை அங்கு அழைத்துச்சென்றார்.  பிறகு, இயற்கை விஞ்ஞானத்தைப்பற்றி பேச்சு எழுந்தது. ”இயற்கை விஞ்ஞானம் புதிய ஒன்றைத்தயார் செய்து வருவதை அறியாமல், புரட்சியை தாங்கள் நசுக்கிவிட்டதாக வெற்றிக்களிப்பில் இருக்கும் ஐரோப்பாவை மார்க்ஸ் கேலி செய்தது மட்டுமல்லாது, ஒரு நூற்றாண்டிற்கு முன் உலகில் புரட்சியை ஏற்படுத்திய நீராவி என்கிற அரசர் தனது அரியணையை இழந்துவிட்டார். இப்போது அவரைவிட புரட்சிகரமான மற்றொரு விஷயம் வந்துவிட்டது. அதுதான் மின்சார ரயில் எஞ்சின். இதன் விளைவுகளை நம்மால் கணிக்க முடியாது. பொருளாதார புரட்சியைத்தொடர்ந்து ஒரு அரசியல் புரட்சி நிச்சயம் வரும் என்றார்” மார்க்ஸ்.

’மூர்’ என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் மார்க்ஸ் பரந்த புத்தக வாசிப்பு மட்டுமின்றி, அதோடு வியக்கத்தக்க நினைவாற்றல் கொண்டவர். நாங்கள் அவரிடம் அரசியல் பொருளாதாரம் மட்டுமின்றி, அனைத்து துறைகள் பற்றியும் கற்றுக்கொண்டோம். 1850-51 களில் மார்க்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றி தொடர் சொற்பொழிவுகள் செய்தார். அந்தத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்துதான்  மூலதனத்தில் தான் விரிவாகக்கூறிய கொள்கைகளை மார்க்ஸ் படிப்படியாக உருவாக்கினார்.

மார்க்ஸ் ஒரு பாணியைக்கடைபிடித்தார். அதாவது,  அவர் ஒரு கருத்தாக்கத்தை சாத்தியப்பட்ட அளவு சுருக்கமாக உருவாக்கிக்கொள்வார். அதை தொழிலாளர்களால்  புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்று மிகக்கவனத்தோடு சொற்களைத்தேர்ந்தெடுத்து விரிவாக விளக்குவார். எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு தர்க்க ரீதியான சிந்தனை, அதை வெளிப்படுத்துவதில் தெளிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார். அவற்றைப்பழகிக்கொள்ளும்படி நிர்பந்திப்பார். ”ஒருவனது பாணிதான் அவன்” என்று பஃபன் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ மார்க்ஸிக்கு பொருந்தும்.



மார்க்ஸ் அரசியலை விஞ்ஞானமாகக்கருதினார். மனித சிந்தனை, மனித விருப்பம், மனிதத்தேவை என, மனிதனிலும், இயற்கையிலும் உயிர்ப்போடு உள்ள அனைத்து சக்திகளின் விளைவுதான் வரலாறு என்பார். 

மேதமை என்பது கடின உழைப்புத்தான். அதீதமான சக்தியும், அதீதமான கடின உழைப்பும் இல்லாமல் மேதமை சாத்தியமில்லை. மார்க்ஸைப்பொருத்தவரை இது முற்றிலும் உண்மை. அவர் பேய்த்தனமான உழைப்பாளி. களைத்து விழும்வரை வேலைபார்ப்பார். மூலதனத்திற்காக மார்க்ஸ் நாற்பதாண்டு காலம் உழைத்தார். அப்படியான உழைப்பை அவர் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும்.

1850 லிருந்து 1862  ஆரம்பத்தில் நான் ஜெர்மன் திரும்பும் வரை கிட்டத்தட்ட தினமும் நான்  டீன் தெருவில் இருந்த மார்க்ஸ் வீட்டிற்குச்சென்றிருக்கிறேன். நான் அந்தக்குடும்பத்தில் ஒருவன் தான். எனக்கு மூன்று வயதாகும் போது எனது தாயார் காலமாகிவிட்டார். நான் மிகவும் துன்பப்பட்டு வளர்ந்தேன். தேம்ஸ் கரையில் ஒதுங்கிய ,யாருமற்ற அனாதையான இந்த புரட்சிகர ஊழியனுக்கு பாதி அம்மாவாகவும் பாதி அக்காவாகவும்  மார்க்ஸின் மனைவி இருந்தார். வெளிநாட்டில் குடியேறி வசிப்பதன் துயரங்களிலிருந்து ,அழிவிலிருந்து என்னை மார்க்ஸின் குடும்பத்தோடான உறவுதான் காப்பாற்றியது. 

எல்லா வலிமையான,ஆரோக்கியமான மனிதர்களைப்போலவே, மார்க்ஸுக்கும் குழந்தைகள் மீது அதீதமான அன்பு உண்டு. ஏழைகள் வசிக்கும் பகுதிகளுக்கு நாங்கள் செல்லும்போது, ஏதேனும் ஒரு வீட்டுவாசலில் கந்தலாடை உடுத்திய ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தால், உடனே அதனருகே சென்று அதன் தலையைத்தடவி, அதன் கையில் அரைக்காசு, ஒரு காசைத்தந்துவிடுவார். நூற்றுக்கணக்கான முறை இப்படி நடந்திருக்கிறது. இதுபோல, மனைவியை அடிப்பவனை (அக்கால லண்டனில் அது மிகவும் சகஜம்) சவுக்கடி தந்து கொல்ல வேண்டும் என்பார். இதுபோன்ற விவகாரங்களில் தன்னையறியாமல் அவர் தலையிட்டு, எங்களையும் சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டிருக்கிறார்.

மார்க்ஸின் குடித்தனம் ஆரம்பமான காலம் முதல் திருமதி மார்க்ஸுக்கு உதவிக்காக அழைத்துவரப்பட்டவர் தான் பணிப்பெண்னான லென்சென். அவர் அந்த வீட்டின் உயிராக, ஆன்மாவாக இருந்தாள். திருமதி மார்க்ஸுக்கு உடல்நலம் சரியில்லாதபோது, அல்லது எங்காவது வெளியே சென்றிருக்கும்போது லென்சென் அம்மாவாக மாறிவிடுவாள். எப்போதுமே அவள் குழந்தைகளுக்கு இரண்டாவது தாயாகத்தான் இருந்தாள்.



மார்க்ஸுடன் சிறுசிறு குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், புதர்களும் நிறைந்த பகுதியான ஹாம்ஸ்டெட் ஹித்துக்கு நடந்த நடைபயிற்சிகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் அவற்றை மறக்கவே முடியாது. எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மணிநேரம் நடைபயணத்தூரத்தில் இருக்கிறது அந்தப்பகுதி. ஞாயிற்றுக்கிழமை எனில் விஷேசமாக இருக்கும்.  அங்கு சென்றால் மார்க்ஸ் மிகவும் சந்தோஷமாக இருப்பார். தானடைந்த சந்தோஷத்தைவிட, நாங்கள் இரு மடங்கு சந்தோஷமடையும் வகையில் வேடிக்கை செய்வார். ஒரு முறை நன்கு காய்ந்திருந்த செஸ்நட் மரத்தைப்பார்த்தோம். மரத்தை உலுக்கி யார் அதிகமான கொட்டை எடுப்பது என்று பந்தயம் வைத்தோம். அதில்  மார்க்ஸ் மற்றவர்களைப்போலவே களைப்பில்லாமல் மரத்தை உலுக்கினார். கடைசி கொட்டையை உலுக்கி எடுக்கும்வரை அவர் மரத்தை விடவேயில்லை.  அதன்பிறகு ஒரு வாரத்திற்கு அவரால் வலது கையை அசைக்கவே முடியவில்லை. என் நிலைமையும் அப்படித்தான்.

லண்டனில் 1852 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 14 ம் தேதி பல நூறுப்போர்களில் வென்றவரும், இரும்புப்பிரபுவுமான வெலிங்டன் பிரபு இறக்கிறார். நவம்பர் மாதம் 18 ந்தேதி இவருக்கு தேசிய மரியாதையோடு நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில், பங்கேற்பதற்கு என நாடு முழுக்க இருந்து லட்சக்கணக்கானோர் லண்டனுக்கு வந்திருந்தனர். ஊர்வலம் நதிக்கரையோரம்தான் வரப்போகிறது என்பதால், வீட்டிற்கு அருகிலுள்ள இடத்திற்கு மார்க்ஸின் குழந்தைகளான ஜென்னியையும் லாராவையும் அழைத்துக்கொண்டுபோனேன். சவ ஊர்வலம் எங்களை கடந்து சென்றது. அதற்குப் பின்னால் வந்த கூட்டம் எங்களையும் தள்ளிக்கொண்டு போனது. அச்சமயத்தில், எனது இரு கைகளாலும் பிடித்திருந்த ஜென்னியும் லாராவும் கூட்ட நெரிசலால் கையிலிருந்து நழுவி கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டனர். கூட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போய்விடக்கூடுமே என பதட்டமடைந்திருந்தேன். சிறிது நேரத்திற்குப்பிறகு பத்திரமாக என்னைக்கண்டடைந்தனர். இச்சம்பவம்  எனக்கு பேரதிர்ச்சியை யூட்டியது.

மார்க்ஸ் டிராட்ஸ் என்கிற விளையாட்டை அற்புதமாக விளையாடுவார். அவருக்கு செஸ் விளையாட்டும் மிகவும் பிடிக்கும். ஆனால், அதனை விளையாடுவதில் அத்தனை திறமையில்லை. தன் ஆர்வத்தின் மூலமும், திடீர் தாக்குதல்கள் மூலமும் அந்த திறமின்மையை சரி செய்ய முயல்வார்.

வெளிநாட்டில் குடியேறி வாழ நேர்ந்த குடும்பங்கள் அனுபவிக்க நேரும் துன்பங்களை மார்க்ஸ் குடும்பம் எப்போதோ ஒருமுறை மட்டும் அனுபவிக்கவில்லை. அவர்கள் அந்த வாழ்வின் கடுமையான  துயர்களை ஆண்டுக்கணக்கில் அனுபவித்தார்கள். மார்க்ஸ் குடும்பத்தைத்தவிர வேறு எந்த வெளிநாட்டுக்குடும்பமும் இத்தகைய துன்பத்தை அனுபவித்திருக்காது.

1881 ஆண்டு  காலத்தில் திருமதி மார்க்ஸ் மிகவும் நோய்வாய்ப்பட்டு படுக்கையைவிட்டே எழமுடியாமல் இருந்தார். மார்க்ஸும் தனது உடல் நலத்தை சரியாக கவனிக்காததால் அவருக்கும் நுரையீரல் வீக்க நோய் வந்துவிட்டது. திருமதி மார்க்ஸ் அதே வருடம் டிசம்பர் 2 ந் தேதி இறந்துவிட்டார். இவர் இறந்து போனதும் மார்க்ஸும் நோய்வாய்ப்பட்டு 1883 மார்ச் 14 ந்தேதி தனது மெய்ட்லாண்ட் பார்க்கில் இருந்த வீட்டில் தனது படுக்கையறையிலிருந்து படிப்பறைக்கு வந்து தனது கைவைத்த நாற்காலியில் அமர்ந்தவாறு அமைதியாக  இறந்துவிட்டார். 

மார்க்ஸின் கல்லறையானது லண்டன் நகருக்கு வடக்கே இருக்கும் ஒரு மலையிலுள்ள ஹைகேட் கல்லறையில்தான் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அந்த கல்லறையில் உறங்கும் அந்த மனிதரை மரியாதையோடும் நன்றியோடும் நினைத்துக்கொள்கிறார்கள். 



பால் லாஃப்கே பகிர்ந்துகொள்வதை வாசகர்களுக்கு சுருக்கித் தரப்படுகிறது.

1864 செப்டம்பர் 28 அன்று லண்டனின் செயின் மார்டின்ஸ் ஹாலில் நடைபெற்றக்கூட்டத்தில் முதல் அகிலம் தோற்றுவிக்கப்பட்டது. நான் மார்க்ஸுக்கு இளம் பருவத்திலிருந்த அந்த அமைப்பின் முன்னேற்றம் பற்றி தகவல் தெரிவிக்க பாரீஸிலிருந்து லண்டன் சென்று, 1865 பிப்ரவரியில் காரல் மார்க்ஸை முதன்முதலாகச்சந்தித்தேன். அப்போது அவர் உடல் நலம் சரியில்லாத போதிலும், மூலதனத்தின் முதல் பகுதியை எழுதிக்கொண்டிருந்தார். அவர் இளைஞர்கள் தம்மை சந்திக்க வருவதை மிகவும் விரும்பினார்.” எனக்குப்பிறகு கம்யூனிசப்பிரச்சாரத்தைத்தொடர இளைஞர்களை தான் பயிற்றுவிக்க வேண்டும் “ என்பார். ஒரே சமயத்தில் பொதுவாழ்விலும்,விஞ்ஞானத்திலும் தலை சிறந்து விளங்க முடிந்த அபூர்வ மனிதர்களில் மார்க்ஸும் ஒருவர். “ விஞ்ஞானத்தேடல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடிந்த அதிர்ஷ்டசாலிகள் தான், மனித சமூகத்தின் சேவைக்கு தங்கள் அறிவைப் பயன்படுத்துவதில் முன்னிற்க வேண்டும் “ என்பார்.

வரலாற்றையும், அரசியல் பொருளாதாரத்தையும் ஆழ்ந்து படித்ததுதான் அவரை கம்யூனிசக்கருத்துக்களுக்கு இட்டுச்சென்றது.  தனிப்பட்ட கருத்துக்களிலிருந்து விடுபட்ட, வர்க்கப்பேதங்களால் கண்கள் மறைக்கப்படாத , எந்த ஒரு சார்பற்ற மனிதன் எவனும் இந்த முடிவுகளுக்குத்தான் வந்தாக வேண்டும் என்கிறார் மார்க்ஸ். இவர் தனது நடவடிக்கைகளை தான் பிறந்த நாட்டிற்கு மட்டுமாகச் சுருக்கிக்கொள்ளவில்லை. “ நான் இந்த உலகத்தின் குடிமகன் “ என்பார். மார்க்ஸ் எப்போதும் புகைத்துக்கொண்டே இருப்பார். அவர் என்னிடம் ஒருமுறை ,” மூலதனம், அதை எழுதுவதற்காக நான் குடித்த சுருட்டுக்கான தொகையைக்கூட எனக்கு பெற்றுத்தராது” என்று கூறியிருக்கிறார்.

புத்தகங்களைப்படிக்கும் போது மார்ஜினில் வேண்டிய இடத்தில் பென்சிலில் குறிப்புக்கள் எழுதுவார். மொத்த வரிகளுக்கும் அடிக்கோடிடுவார். இப்படி அடிக்கோடிடும் பழக்கத்தால், எந்த புத்தகத்திலும் தனக்கு வேண்டிய எந்தப்பத்தியையும் கண்டுபிடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. அவருக்கு ஹென்ரிக்ஹைன், கதே ஆகியோரின் கவிதைகள் மனப்பாடமாகத்தெரியும். கிரேக்க துன்பியல் நாடக ஆசிரியர் அசிலிஸின், மற்றும் ஷேக்ஸ்பியரைத்தான் அவர் உலகின் மாபெரும் நாடக ஆசிரியர்களாகக்கருதினார். ஷேக்ஸ்பியர் மீதான அவரது மரியாதை அளவற்றது. 

 மார்க்ஸால் அத்தனை ஐரோப்பிய மொழிகளையும் படிக்க முடியும். அவற்றில், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அந்த மொழியின் வல்லுநர்களே வியக்கும் வகையில் எழுதத்தெரியும். ” வாழ்க்கைப்போராட்டத்தில் ஒரு அந்நிய மொழி ஒரு ஆயுதம் என்று அடிக்கடி சொல்லுவார்.

கவிஞர்கள், நாவலாசிரியர்கள் தவிர, மார்க்ஸ் அறிவுப்பூர்வமாக களைப்பாறுதலுக்காக, கணிதத்தின் மீது ஈடுபாடு இருந்தது.” விஞ்ஞானம்,கணிதத்தை பயன்படுத்த அறியாதவரையில், உண்மையான வளர்ச்சி பெறாது என்று அவர் கருதினார். அவருக்கு  தனிச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தில் மட்டுமின்றி, அனைத்து நாடுகளின் வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகிய வற்றிலும் அவருக்கு விரிவான புலமை இருந்தது. 

மார்க்ஸின் மூளையில் நம்ப முடியாத அளவுக்கு வரலாறு, இயற்கை விஞ்ஞானம், தத்துவம் பற்றிய ஏராளமான தகவல்கள் நிரம்பியிருந்தன. ஆண்டுக்கணக்காக இப்படி சேகரித்து வைத்த அந்த அறிவை சரியாகப்பயன்படுத்துவதில்  அபாரமான கெட்டிக்காரர்.



மூலதனம் மிக உன்னதமான ஞானத்தையும், வியப்பூட்டும் வேகத்தையும் கொண்ட அறிவை நமக்குக்காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், அவரது மேதமையின் முழு ஆற்றலை, அவரது ஞானத்தின் முழுப்பரப்பை காட்டவில்லை என்றே கருதுகிறோம்.

ஒரு மேதைக்குரிய இரு குணாம்சங்கள் மார்க்ஸுடம் இருந்தன. ஒரு விஷயத்தை அதன் உட்கூறுகளாகப்பிரித்து ஆராய்வதில் அவருக்கு ஒப்புமையில்லாத திறமையிருந்தது. அப்படி உட்கூறுகளாகப்பிரித்தவற்றின், பல்வேறு வளர்ச்சி வடிவங்களையும் ஆராய்ந்து, அவற்றின் பரஸ்பர உள் உறவுகளைக்கண்டுபிடித்து , பிறகு மீண்டும் இணைப்பதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.

மார்க்ஸ் மிக மென்மையான,அன்பான,அக்கறையான தந்தையாவார். “குழந்தைகள் தம் பெற்றோருக்கு அறிவூட்ட வேண்டும் “ என்பார். அவரது புதல்விகள் மீது அவர் வைத்திருந்த பாசம் அசாதாரமானது. அவரது புதல்விகள் அவரை தம் நண்பனாகக்கருதினார்கள். அவர்கள் மார்க்ஸை ’மூர்’ என்ற பட்டப்பெயரால்தான் அழைப்பார்கள். 

வாழ்க்கைத்துணைவி என்ற சொல்லின் உண்மையான,முழுமையான பொருளுக்கு ஏற்றவாறு இருந்தவர் மார்க்ஸின் மனைவி. அவர்கள் இருவரும்  குழந்தைப்பருவத்திலேயே ஒருவரை ஒருவர் அறிவார்கள். நிச்சயதார்த்தத்தின்போது மார்க்ஸுக்கு வயது 17 தான். மார்க்ஸுக்கு தன் மனைவியின் புத்திசாலித்தனம், அவளது விமர்சனப்பார்வை மீது மிகவும் மரியாதை உண்டு. தான் எழுதும் அத்தனை கைப்பிரதிகளையும் அவளிடம் காட்டுவார். அவளது விமர்சனத்திற்கு முக்கியத்துவம் தருவார். மார்க்ஸ் வீட்டின் மற்றொரு முக்கிய உறுப்பினர் ஹெலன் டிமத் (லென்சென்) இவர்  திருமதி மார்க்ஸின் திருமணத்திற்கு முன்பே, அவர்கள் வீட்டு வேலைக்குச்சேர்ந்தவள், தனது எஜமானிக்குத்திருமணம் ஆனபோது, அவளோடு சேர்ந்து, தானும் எஜமானியின் கணவர் வீட்டிற்கு வந்துவிட்டாள். 

மார்க்ஸிற்கு ஏங்கெல்ஸ் பற்றி மிகவும் பெருமை. அவரது ஒழுக்கம்,அறிவு போன்ற குணாதிசியங்களை எல்லாம் எடுத்துச்சொல்வதில் அவருக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கும். என்னை ஏங்கல்ஸிடம் அறிமுகப்படுத்தி வைப்பதற்காக மட்டுமே அவர் என்னை அழைத்துக்கொண்டு விஷேசமாக ஒருமுறை மான்செஸ்டருக்கு பயணப்பட்டார்.

மார்க்ஸ் எந்த அளவு அன்பான கணவனோ, தகப்பனோ, அதே அளவு அன்பான நண்பன். தன் போன்ற ஆளுமையின் அன்பிற்குத்தகுந்தவர்களாக அவர் தன் மனைவி,குழந்தைகள், ஹெலன், ஏங்கெல்ஸ் ஆகியோரைப்பார்த்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *