நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியுடன் உரையாடியபோது, ​​’செலவு செய்வது பொருளாதாரத்தைப் புதுப்பிக்க எளிதான வழியாகும். செலவழிப்பதற்காக மக்களுக்கு நேரடிப் பணப்பரிமாற்றம் செய்வது, அதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும்’ என்றார். தூண்டுதலுக்கான தொகுப்பின் அவசியம் குறித்து பேசிய பானர்ஜி, ’சிறு வணிகங்களுக்காக தூண்டுதல் தொகுப்பை பல நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை நாம் இன்னும் எடுக்கவில்லை. காலம் தாழ்த்தி கடனைச் செலுத்துவதற்கான உத்தரவு ஒரு நல்ல நடவடிக்கை என்றாலும் நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறிய பானர்ஜி,  ’இப்போது நமக்கு மிகப்பெரிய தேவை குறித்த பிரச்சினை ஏற்படப் போகிறது. இது வழக்கமான பிரச்சினை. எனது கடை மூடப்பட்டதால், என்னிடம் பணம் இல்லை, அதனால் நான் எதையும் வாங்கவில்லை. நான் எதையும் உங்களிடமிருந்து  வாங்காததால், உங்கள் கடை மூடப்பட்டுள்ளது என்ற நிலைமை உள்ளதுஎன்று குறிப்பிட்டார்.

உரையாடலின்  எழுத்தாக்கம்

ராகுல் காந்தி: முதலில், மிக்க நன்றி. உங்கள் நேரத்தை வழங்கியதை நான் பாராட்டுகிறேன். நீங்கள் வேலையில் ஈடுபட்டிருந்திருப்பீர்கள்.

டாக்டர் பானர்ஜி: உங்களை விட இல்லை.

ராகுல் காந்தி:  அனைத்தும் மூடப்பட்டிருப்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது.

டாக்டர் பானர்ஜி: இது ஆச்சரியமளிப்பதோடு, பயமுறுத்தவும் செய்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் உண்மையில் தெரியாது என்றே நான் சொல்வேன்.

ராகுல் காந்தி: உங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இதை எவ்வாறு பார்க்கின்றார்கள்?

டாக்டர் பானர்ஜி: என் மகள்  கொஞ்சம் (தெளிவற்றுள்ளது) பித்து பிடித்தது போல் இருக்கிறாள். அவள் தன் நண்பர்களுடன் இருக்க விரும்புகிறாள். என் மகன் இளையவன். எல்லா நேரங்களிலும் பெற்றோருடன் இருப்பதில் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவனைப் பொறுத்தவரை, இது ஒரு மோசமான விஷயமாக இருக்கவில்லை.

ராகுல் காந்தி: அங்கே முழு ஊரடங்கு இருப்பதால், அவர்களால் வெளியே செல்ல முடியாது இல்லையா?

டாக்டர் பானர்ஜி: ஓ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் வெளியே செல்லலாம். இங்கே வீட்டைச் சுற்றி நடக்க முடியும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், வாகனம் ஓட்டுவது போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. சில எண்ணிக்கையிலான… அது எனக்கு சரியாகத் தெரியாது… நபர்களுடன்  நீங்கள்  ஒன்று சேர்ந்து இருக்கக் கூடாது.

ராகுல் காந்தி: தொடங்குவதற்கு முன்பாக, இதைக் கேட்டு விட வேண்டுமென்ற ஆர்வம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது. நீங்கள் அதை எதிர்பார்த்தீர்களா? அல்லது திடீரென்று எதிர்பாராமல் அது உங்களுக்கு கிடைத்ததா?

டாக்டர் பானர்ஜி: முற்றிலும் எதிர்பாராமலே கிடைத்தது. அதைப் பற்றி கவலைப்படுவதற்கு நீங்கள் நேரத்தை செலவிட்டால், நீங்கள் நிறைய அலைக்கழிய வேண்டியிருக்கும். அது தவிர்க்க முடியாதது என்றே நான் நினைக்கிறேன்… என் வாழ்க்கையில்  உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாத  விஷயங்களைக்  கவனிக்காமல் இருப்பதில் நான் திறமையானவன்…. எனக்கு அது குறித்து எந்த  முன்னுணர்வோ அல்லது எதிர்பார்ப்போ இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்… அது  முற்றிலும் ஆச்சரியமாகவே  இருந்தது.

ராகுல் காந்தி: இந்தியாவில், அது எங்களுக்கு மிகப் பெரிய விஷயம். நீங்கள் எங்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

டாக்டர் பானர்ஜி: நன்றி. அது ஒரு பெரிய விஷயம் என்றே நான் கருதுகிறேன். அது பெரிய விஷயமல்ல என்று நான் கூறவில்லை. அது குறித்து அக்கறை காட்டலாம் என்றாலும், அதற்கென்று இருக்கின்ற செயல்முறை யாராலும் புரிந்து கொள்ளப்படாததாக இருப்பதால், உண்மையில் எதுவும் நடக்கலாம் என்பதால், அவ்வாறு இருக்க முடியாது.

ராகுல் காந்தி:  நான் உங்களுடன் விவாதிக்க விரும்பிய  முக்கிய விஷயங்களாக கோவிட், ஊரடங்கு ஆகியவற்றின் தாக்கம், ஏழை மக்கள் மீதான பொருளாதார பேரழிவு இருக்கின்றன. இவை குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது பற்றியும். இந்தியாவில் சில காலமாக, குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (யூபிஏ) இருந்த போது, ​​ஏழை மக்களுக்கான தளத்தை வழங்குகின்ற வகையில், கொள்கை கட்டமைப்பு ஒன்றை நாங்கள்  கொண்டிருந்தோம். எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம், உணவுக்கான உரிமை போன்றவை. இப்போது  இந்த நோய் வந்திருப்பதால், அந்த வேலைகள்  நடைபெறாமல் போகப் போகின்றன. லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் வறுமையில் விழப் போகிறார்கள். இது குறித்து ஒருவர் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?

டாக்டர் பானர்ஜி: என் பார்வையில் இவற்றை நான் பிரித்துப் பார்க்கக் கூடியவை என்றே நினைக்கிறேன். உண்மையான பிரச்சனையாக இருப்பது என்னவென்றால், யூபிஏ வகுத்து கொடுத்த நல்ல கொள்கைகள் (தற்போது) போதுமானவையாக இருக்கவில்லை.  அரசாங்கம் ஒரு  வகையில் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டது. குறிப்பிடும்படியான பாகுபாடான கருத்து வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. எதை வேண்டுமானாலும் செய்ய யூபிஏ கொள்கைகள் பயன்படுத்தப்படலாம் என்பது மிகவும் தெளிவாக இருந்தது.

பலன் அடையாதவர்களை என்ன  செய்வது என்பதுதான், புரிந்து கொள்வதற்கு சிரமமானதாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏராளமானோர். குறிப்பாக புலம் பெயர்ந்து குடியேறியிருப்பவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடைசி ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்ட, ஆனாலும் தற்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து, ஆதாரை தேசிய அளவில் கொண்டு வருவதாகும். பொது விநியோகம் மற்றும் பிற விஷயங்களுக்கு  அதைப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் இருந்தது. … நீங்கள்  எங்கே இருந்தாலும் உங்களுக்குத் தகுதி உண்டு என்பதாகவே பொது விநியோக முறை மீது ஆதார் அடிப்படையிலான கூற்றுக்கள்  இருக்கின்றன.

Covid-19: India needs a larger stimulus package, says Nobel ...

இப்போது அது கிடைத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். இப்போது திரும்பிப் பார்த்தால், ஒருவிதத்தில் அது துயரங்களிலிருந்து காப்பாற்றியிருக்கும் என்பது தெரிகிறது. அப்போது ஏராளமானோர் எனது குடும்பம்  மால்டா அல்லது  தர்பங்காவில்  அல்லது வேறு எங்கு இருந்தாலும், மும்பையில் பொதுவிநியோகத்திற்கு நான் தகுதியுடையவன். இது எனது உரிமை. என்று உள்ளூர் ரேஷன் கடைக்குச் சென்று, இது எனது ஆதார் என்று கூறியிருப்பார்கள். அவ்வாறு நடக்கவில்லை என்பதற்கு, உண்மையில் அவர்களுக்கான அமைப்பு இல்லாத  ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதே காரணம் ஆகும். அவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள், ஏனெனில் பம்பாயில் அந்த திட்டம் இல்லை. அவர்கள் பொது விநியோகத்திற்குத் தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்கள் அங்கே குடியிருப்பவர்கள் இல்லை.

உண்மையில் தாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாத எவரும், அந்த இடத்தில் வேலை செய்கிறார்கள், வருமானம் ஈட்டுகிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதுதான் மக்கள்நலன் சார்ந்த கட்டமைப்பின் கருத்துருவாக்கம்.  அது தகர்ந்து விட்டது என்பதுதான் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறது.

வறுமையைப் பொறுத்தவரை, பொருளாதாரம் புத்துயிர் பெற்றால், வறுமை மீது நீடித்த விளைவு இருக்குமா என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. குறிப்பாக, காலவோட்டத்தில் இந்த நோயின் சாத்தியமான பாதைகள் எவ்வாறு  இருக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே பொருளாதாரம் புத்துயிர்  பெறும் என்பதே உண்மையான கவலையாக இருக்கின்றது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நல்வாழ்வு பற்றி நாம் நம்பிக்கையுடன் இருக்க முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராகுல் காந்தி: இவர்களில் ஏராளமானோர் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களிடமிருந்து தங்கள் வேலைகளைப் பெறுகிறார்கள். இது  ஒரு வகையான பணப்புழக்கச் சிக்கலையே ஏற்படுத்தும். இந்த அதிர்ச்சியால் அந்த வணிகங்கள் ஏராளமாகத்  திவாலாகப் போகின்றன. எனவே  அந்த வணிகங்களுக்கு ஏற்படவிருக்கும் பொருளாதார சேதத்திற்கும், இந்த நபர்கள் தங்களுடைய வேலையைத்  தக்கவைத்துக் கொள்வதற்கும் இடையே தொடர்பு உள்ளது.

டாக்டர் பானர்ஜி: அதுதான் காரணம்; நமக்கு ஒரு தூண்டுதல் தொகுப்பு தேவை என்று ஏராளமானோர்  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் அமெரிக்கா செய்கிறது, ஜப்பான் செய்கிறது, ஐரோப்பா செய்கிறது. போதுமான அளவிற்கு தூண்டுதல் தொகுப்பை நாம் உண்மையில் முடிவு செய்யவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பற்றி நாம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%க்குச் சென்றுள்ளது. அது போன்ற எண்ணம் நமக்கும் வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்…. சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறையைப் பொறுத்தவரை … நாம் புத்திசாலித்தனமான ஒரு காரியத்தை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டியிருப்பதை, நாம்  செய்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இதை விட அதிகமாகவும் நம்மால் செய்ய முடியும். இந்த காலாண்டிற்கான கடனைத் திரும்பச் செலுத்துதல் ரத்து செய்யப்படும் என்றும், அதை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்றும் கூட நாம் கூறலாம். இதுவரை ஒருபோதும் செய்திராத, காலாண்டிற்கான பணத்தை உண்மையில் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை என்பதால் இதை விட சற்று அதிகமாகவே உங்களால் செய்ய முடியும்.

இது கடனைத் திரும்பச் செலுத்த வெறுமனே மறுஅட்டவணை தருவதற்கான விஷயம் அல்ல, அதை நிரந்தரமாக ரத்து செய்து விடுவதாகும். நம்மால் அதைச் செய்ய முடியும். ஆனால்  அதற்கும் மேலாக, சிறு மற்றும் நடுத்தர வணிக துறையை குறிவைப்பது சரியான வழிதானா என்பது தெளிவாக  இல்லை. அது தேவைக்குப் புத்துயிர் அளிப்பதாக இருக்கிறது.  பணத்தை எல்லோருடைய கைகளிலும் கொடுப்பதால், அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கலாம் அல்லது நுகர்வோர் பொருட்களை வாங்கலாம். சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் மக்கள் விரும்புகின்ற ஒரு சில பொருட்களை தயாரிக்கின்றன. மக்கள் அதை வாங்கவில்லை.

அவர்களிடம் பணம் இருந்தால் அல்லது அவர்களுக்கு பணம் கொடுப்பதாக உறுதியளித்தால், அந்தப் பணம் இப்போதே கிடைக்கும் என்பதில்லை. நீங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால், ஊரடங்கு நீக்கப்படும் போது உங்கள் கணக்கில் பணம் இருக்கும் என்று சொல்லலாம். ரூ 10,000 உங்கள் கணக்கில் உள்ளது, அதை நீங்கள் செலவிடலாம் என்று சொல்லலாம். செலவு என்பது பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கான எளிதான வழி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் பணம் பெற்றால், அவர்கள் அதைச் செலவிடுவார்கள். பின்னர் அது வழக்கமான கெய்னீஷியன் சங்கிலி எதிர்வினைகளைக் கொண்டிருக்கும்.

ராகுல் காந்தி: நாம் நியாய் (NYAY)இன் சில பதிப்பு அல்லது மக்களுக்கு நேரடிப் பண பரிமாற்றம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

Abhijit Banerjee In Conversation With Rahul Gandhi: The Sophist ...

டாக்டர் பானர்ஜி: ஆமாம். ஏழைகளுக்காக இருந்தாலும், அது மிகவும் விவாதத்திற்குரியது. நான் ஒரு பரந்த வாதத்திற்காக… இலக்கு வைப்பது என்பது மிகவும் கடினமானது என்று நான் நினைக்கிறேன். இந்த குழப்பத்தில் 6 வாரங்களுக்கு கடை மூடப்பட்ட பிறகு, ஏழைகளாகி விட்டவர்களைக் குறிவைக்க முயற்சிக்கிறீர்கள். இதை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை, அடிமட்டத்தில் உள்ள 60% மக்களுக்கு கொஞ்சம் பணம் தந்தால்,  மோசமாகி விடாது என்றே நான் சொல்வேன். நாம் அவர்களுக்குப் பணம் கொடுத்தால் – ஒருவேளை அவர்களில் சிலருக்கு அது தேவைப்படாமல் இருக்கலாம் – அவர்கள் அதைச் செலவிடுவார்கள். அவர்கள் அதை செலவு செய்தால், அது ஒரு தூண்டுதல் விளைவை ஏற்படுத்தும். அந்த வாக்கியத்தில் உங்களை விட நான் அதிக தீவிரத்துடன் இருக்கும் ஒரே இடம், நான்  மிகவும் ஏழ்மையான மக்களைத் தாண்டி செல்வேன்.

ராகுல் காந்தி: பெருமளவிற்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது பற்றி நீங்கள் முன்னரே பேசி வந்திருக்கிறீர்கள். எனவே  விரைவில்  நீங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்கிறீர்கள்.

டாக்டர் பானர்ஜி: நிச்சயமாக. நான் அதைத்தான் சொல்லி வந்து கொண்டிருக்கிறேன். இது நடப்பதற்கு முன்பாகவே, நமக்கு தேவை குறித்த பிரச்சினை இருப்பதாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

’தேவை குறித்த மிகப் பெரிய பிரச்சினை நமக்கு வரப் போகிறது. அது வழக்கமான பிரச்சினை. என்னுடைய கடை மூடப்பட்டிருக்கிறது. அதனால் என்னிடம் பணம் இல்லை என்பதால், எதையும் என்னால் வாங்க முடியவில்லை; உங்களிடமிருந்து நான் எதையும் வாங்காததால், உங்களுடைய கடை மூடப்பட்டிருக்கிறது’

இப்போது நமக்கு மிகப்பெரிய தேவை குறித்த பிரச்சினை ஏற்படப் போகிறது. இது வழக்கமான பிரச்சினை. எனது கடை மூடப்பட்டதால், என்னிடம் பணம் இல்லை, அதனால் நான் எதையும் வாங்கவில்லை. நான் எதையும் உங்களிடமிருந்து  வாங்காததால், உங்கள் கடை மூடப்பட்டுள்ளது என்ற நிலைமை உள்ளது.

ராகுல் காந்தி: நீங்கள் சொல்வதை மறைமுகமாக நான் இவ்வாறு நினைக்கிறேன். அதை மெதுவாகச் செய்யாமல் வேகமாகச் செய்ய வேண்டும் என்கிறீர்கள். விரைவாகச் செய்யும் போது, அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இழக்கின்ற ஒவ்வொரு நொடியும் உண்மையில் தீங்கையே விளைவிக்கும்.

India should consider a big stimulus to revive Covid-19-hit ...

டாக்டர் பானர்ஜி: அதை விரைவாகச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்வது சரிதான். அனைவரின் நிலைப்பாட்டையும் நாம் சரிபார்க்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இதற்கு அவர்கள் பொருத்தமானவர்களா இல்லையா என்று தெரியவில்லை. சிவப்பு மண்டலத்தில் அல்லது ஏதோவொன்றில், சில்லறை வணிகங்கள் அனைத்தையும் மூடிவிட்ட இடத்தில், செலவு செய்வதற்கான ஆற்றலை மக்களுக்கு கொடுப்பதன் மூலம் தேவை மற்றும் வழங்கலுக்கிடையே பொருந்தாத தன்மையை நாம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெளியே செல்லும் போது, பணம் கிடைக்கும்,  அதைக் கொண்டு வாங்கலாம் என்று.  அதைவிட சிறப்பாக நாம் திட்டமிட வேண்டும். பணத்தைப் பெறுவீர்கள் என்ற உறுதிமொழியைக் கொடுத்து, இதனால் பீதியடைவதை நிறுத்திவிட்டு, பட்டினி கிடப்பதை நிறுத்துங்கள்; இதனால் உங்களுக்கு கொஞ்சம் சேமிப்பு மிச்சமாகும்.

இரண்டு மாதங்களில் அல்லது ஊரடங்கு நீக்கப்படும் போது, அவர்கள் கையில் கொஞ்சம் பணம் இருக்கும் என்று மக்கள் உறுதியளித்தீர்கள் என்றால், அவர்கள் (அதைப் பற்றி) மிகவும் குறைவாகவே கவலைப்படுவார்கள், அவர்கள் ஏற்கனவே செலவழிக்க அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களில் சிலரிடம் சேமிப்புகள் இருக்கலாம்.  நீங்கள் அவசரப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இப்போது உற்பத்தி இல்லாத இடங்கள் இருக்கலாம், வரத்து எதுவும் இப்போது இல்லை. பணத்தை இப்போது கொடுத்தால், அது வீணாகச் செலவழிக்கப்படும். பணவீக்கம் இருக்கும். நீங்கள் அதற்காக காத்திருக்க விரும்புகிறீர்கள். அந்த எச்சரிக்கையுடன், ஆம், மிகவிரைவில் செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி: ஆக விரைவில் நீங்கள் ஊரடங்கில் இருந்து வெளியே வரும் போது, அது நன்றாக இருக்கும். பொருளாதாரத்தின் ஒரு பகுதியை விரைவாகத் தொடங்குவதற்கான உத்தி உங்களுக்குத் தேவைப்படும். அது இல்லையெனில், நீங்கள் தரும் பணம் பயனற்றதாகி விடும்.

டாக்டர் பானர்ஜி: ஊரடங்கிலிருந்து வெளியே வருவது இந்த நோயைப் பொறுத்தது. ஏராளாமானோர் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது நீங்கள் ஊரடங்கை நீக்க விரும்ப மாட்டீர்கள். எனவே நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. காலப்போக்கிலான நோயின் பாதை குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ராகுல் காந்தி: இந்தியாவில் சற்று வித்தியாசமாக இருக்கும் மற்றொரு விஷயம் உணவு பிரச்சினை. உணவுப் பிரச்சனையின் அளவு. ரேஷன் கார்டுகள் இல்லாத ஏராளமான மக்கள் நம்மிடையே இருக்கின்றனர். சேமிப்புக் கிடங்கில் உள்ளதை மக்களுக்குத் தர வேண்டும் என்றொரு வாதம் உள்ளது. ஏனென்றால் அறுவடை வரும்போது, கிடங்கு மேலும் மேலும் நிரம்பப் போகிறது, எனவே  அதை  நோக்கி தீவிரமாக நகர வேண்டும்.

டாக்டர் பானர்ஜி: ரகுராம் ராஜன், அமர்த்தியா சென் ஆகியோருடன் நானும் சேர்ந்து கட்டுரை  ஒன்றை எழுதினோம். அதில் தற்காலிக ரேஷன் கார்டுகளை விரும்பும் எவருக்கும் அதனைத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தோம். மற்ற  ரேஷன் கார்டுகளை விலக்கி வைத்து விட்டு, தற்காலிக ரேஷன் கார்டுகளை மட்டும் இப்போது வைத்துக் கொள்ளுங்கள். பெற விரும்புகின்ற எவரொருவரும், தற்காலிக ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ளட்டும். இப்போதைக்கு 3 மாதங்களுக்கு அது இருக்கட்டும். தேவைப்பட்டால் மேலும் 3 மாதங்களுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். அதை மதித்து செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் ரேஷன் கார்டைக் கொடுங்கள். யார் யார் வருகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கார்டைக் கொடுக்க வேண்டும். பரிமாற்றங்களைச் செய்து கொள்வதற்கான அடிப்படையாக அதைப் பயன்படுத்தவும் நம்மிடம் போதுமான அளவிற்கு கையிருப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Give cash to bottom 60% of population: Abhijit Banerjee | India ...

நாம் இதை சிறிது காலத்திற்குத் தொடரலாம் என்றே நினைக்கிறேன். குறுவை சாகுபடி இந்த முறை நன்றாக இருந்ததால், நம்மிடம் அதிக டன் கோதுமை மற்றும் அரிசி இருக்கும். எனவே குறைந்த பட்சம் கோதுமை மற்றும் அரிசியையாவது நாம் தொடர்ந்து கொடுக்கலாம். நம்மிடம் போதுமான பருப்பு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அரசாங்கம் பருப்பு வழங்குவதற்கு வாக்குறுதி அளித்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். எனவே நம்மிடம் போதுமான பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்றவையும் இருக்கின்றன.  எனவே, நிச்சயமாக நம்மால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய வேண்டும், அனைவருக்கும் தற்காலிக ரேஷன்  கார்டுகளை  வழங்குங்கள்.

ராகுல் காந்தி: அரசாங்கம் தர வேண்டிய தொகுப்பின் ஒரு பகுதியாக எது இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், உணவு பிரச்சினை பற்றி பேசியுள்ளோம். அந்த பட்டியலில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் வேறு ஏதாவது இருக்கிறதா?

டாக்டர் பானர்ஜி: இயந்திரங்கள் தேவைப்படுகின்றவர்களுக்கு பணத்தைத் தருவதே இதன் கடைசி பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் மக்களுக்கு பணத்தைத் தர  முடியாது. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்தைப் பெற முடியும். ஆனால் பலரிடம் அந்த கணக்கு இல்லை. குறிப்பாக, புலம்பெயர்ந்தோருக்கு அதற்கான வசதி இருக்காது. இதனைப் பெற முடியாதிருக்கின்ற, மக்கள் தொகையில் கணிசமான பகுதியினருக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அநேகமாக சரியான நடவடிக்கை என்னவாக இருக்குமென்றால், மாநில அரசுகளுக்கு, அவர்களின் சொந்த திட்டங்களுக்காகவும், தன்னார்வ  தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி விலக்கி வைக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடையும் வகையில் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்படுவதற்காகவும், தேவையான பணத்தை நாம் கொடுக்க வேண்டும்… சிறிய அளவிலான தவறுகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் பணம் திருடப்படும். ஆனால், தவறு எதையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை என்று சொல்லி எதுவும் செய்யாமல் இருந்தால், அது  இறுதியில் தவறாகவே சென்று முடிவதை நாம் உறுதி செய்வோம்.

ராகுல் காந்தி: அதிகாரங்களைக் குவிப்பதற்கும், பரவலாக்குவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனித்த அணுகுமுறைகள் உள்ளன. கேரளா முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்கிறது. அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை உத்தரப் பிரதேசம் செய்கிறது. ஆனால் மத்திய அரசிற்கும் இதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது. இந்த இரண்டு கருத்தாக்கங்களுக்கு இடையில் நம்பிக்கையின்மை இருப்பதை நான் காண்கின்றேன்.

டாக்டர் பானர்ஜி: இந்த நம்பிக்கையின்மை என்று நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. புலம்பெயர்ந்தவர்கள் பிரச்சனையை மாநில அரசால் கையாள முடியாது இது. இருதரப்பு முறையில் கையாளப்படுவது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது. ஒரு விதத்தில் அது பிரச்சினை என்றே நான் உணர்கிறேன். இது அதிகாரத்தைப் பரவலாக்க விரும்பாத இடமாகும். ஏனெனில் இதன் மூலம் உண்மையில் தகவல்களை ஒருங்கிணைக்க விரும்புகிறீர்கள். இவர்கள் நோயால்  பாதிக்கப்பட்ட மக்கள் என்றால், அவர்கள் நாடு முழுவதற்கும் செல்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இந்த இடத்தில், நாம் அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி, ரயிலில் அல்லது வேறு ஏதேனும் வழியில் அவர்கள் செல்ல அனுமதித்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

Need immediate stimulus package to counter COVID-19: Economist ...

இது நாடு முழுவதற்குமான பிரச்சனை என்பதால், மத்திய அரசால் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும்.  உங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை அவர்களுடைய வீட்டிற்கு நீங்கள் அழைத்து வர முடியாது என்று உத்தரப்பிரதேச அரசிடம் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, பம்பாய் நகரத்தில் குடியேறியிருப்பவர்களுக்கு சேவை அளிப்பது மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் பிரச்சினை அல்லது பம்பாய் மாநகராட்சியின் பிரச்சினையாக இருக்கிறது. மத்திய அரசால் அதை தீர்க்க முடியவில்லை. அது குறித்து நீங்கள் சொல்வது சரிதான் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்போது அது குறித்த உங்கள் எண்ணம் என்ன? இது ஏதோ தீர்க்கப்பட முடியாத பிரச்சனை போல் தெரிகிறது. ஆனால் நீண்ட நோக்கில், நாம் வலுவான நிறுவனங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால்  அதைப் பற்றி  நாம் இப்போது என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

ராகுல் காந்தி: தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முடிந்தவரை அதிகாரத்தைப் பரவலாக்குவது, பிரச்சனைகளை உள்ளூர் மட்டத்தில் கையாளுவது என் பார்வையில் நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே  மாவட்ட அளவில், மாநில அளவில் நிர்வகிக்கக்கூடிய விஷயங்களை அவ்வாறு வரிசைப்படுத்துகின்ற முறையே தேவை. ஆனாலும் சில விஷயங்கள் இருக்கின்றன. நிச்சயமாக, விமானங்கள் அல்லது ரயில்வே போன்ற விஷயங்களை மாவட்ட ஆட்சியரால் தீர்மானிக்க முடியாது. எனவே  பெரிய அளவில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் தேச அளவில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ஊரடங்கைப் பொறுத்தவரை, மாநிலங்களுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும், அதாவது ஊரடங்கை அமப்ல்படுத்த விரும்பினால், தயவுசெய்து ஊரடங்கின் தன்மையைப் புரிந்து கொண்டு, ஊரடங்கை அமல்படுத்துங்கள். அந்த தேர்வு உரிமையை மாநிலத்திற்கு கொடுங்கள். இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது என்பதை மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளட்டும். பிரச்சனைகள் வரும் போது அவர்கள் அதை சிறப்பாக நிர்வகிப்பார்கள். தற்போதைய அரசாங்கம் சற்று மாறுபட்ட பார்வையைக் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். நிர்வாகம் செய்வதற்கும், இந்த விஷயத்தைக் கவனிக்கவும், அதிகாரத்தை தங்களிடம் குவிக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். இவை  இரண்டு மாறுபட்ட கருத்துக்கள். இதில் ஒன்று தவறு அல்லது ஒன்று சரி என்று நான் நினைக்கவில்லை. நான் அதிகாரப் பரவலாக்கலை நோக்கிச் செல்கிறேன்.

டாக்டர் பானர்ஜி: ஏழைகளைச் சென்றடையும் வகையில் நல்ல திட்டங்களை முன்மொழிவதற்கான பணத்திற்காக நான் என்ன செய்திருப்பேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். சில சோதனைகளைச் செய்து, புதுமைகளைக் காண முயற்சிக்கலாம். பெரும்பாலான மாநிலங்களில் நல்ல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சொன்னது போல் மாவட்ட ஆட்சியாளர்கள் பெரும்பாலும் சிறந்த சிந்தனைகளைக் கொண்டுள்ளனர். இவை அனைத்திலிருந்தும் நாம் பயனடைய முடியும்.

ராகுல் காந்தி: மற்ற நாடுகளில் உங்களுக்கு கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்கள் ஏதும் உள்ளனவா?

டாக்டர் பானர்ஜி: இந்தோனேசியா இப்போது செய்து வருகிற ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்தோனேசியா பணப் பரிமாற்றங்களை ஏற்படுத்தித் தரப் போவதாக முடிவு செய்துள்ளது. முழுவதுமாக சமூக முடிவெடுக்கும் செயல்முறையின் மூலமாக அதை வழங்கப் போகிறது. எனவே, யாருக்கு பணம் தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு பணப் பரிமாற்ரம் செய்வதை சமூகமே தீர்மானிக்கப் போகிறது,. இது குறித்து நாங்கள் இந்தோனேசிய அரசாங்கத்துடன்  இணைந்து பணியாற்றியுள்ளோம்.

இவ்வாறு செய்வது மையப்படுத்தப்பட்ட இலக்கை விட மோசமான செயல்களைச் செய்து விடாது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். கூடுதலான சிறப்பு ஆர்வம் அல்லது வேறு எதுவும் உங்களைக் கட்டுப்படுத்தாது. உள்ளூரில்  என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து மக்கள் மிகவும் நுணுக்கமான முறையில் முடிவெடுப்பார்கள். இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய அனுபவம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே கொஞ்சம் பணம் இருக்கிறது, மிகவும் தேவைப்படுபவர்களுக்கு அதைக் கொடுங்கள் என்று சமூகத்திடம் சொல்லுகின்ற திசையில் அவர்கள் சென்றிருக்கிறார்கள். நெருக்கடியான காலத்தில் இது ஒரு நல்ல கொள்கையாகும். ஏனெனில்  உங்களால்  மையப்படுத்த  முடியாத சில தகவல்கள் சமூகத்திடம் இருக்கின்றன. .

Q&As With Abhijit Banerjee and Raghuram Rajan: Rahul Gandhi Has ...

ராகுல் காந்தி: இந்தியாவைப் பொறுத்த வரை, ஆதிக்க சாதி பிரச்சினையில் சிக்கிக் கொள்வீர்கள். இங்கே ஆதிக்க சாதி அந்த பணத்தை  த்ங்களுக்காக எடுத்துக் கொள்ள முயற்சிக்கும்.

டாக்டர் பானர்ஜி: இருக்கலாம். மறுபுறத்தில் அதைத் தடுக்க முயற்சிக்கும் செயலில், நீங்கள் கவலைப்படுகிறீர்கள் …. கிராமத்தில் தகுதியானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதோடு, அதையும் அனுமதிக்கும் வகையில் கூடுதல்  பணத்தை வைத்திருக்கவே நான்  முயற்சிப்பேன். நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் திசையில் இது உங்களைச் செலுத்துகிறது, மேலும் அரசாங்கமும் இதையே கூறி வருகிறது. (அது) பொது விநியோக முறையின் வரம்பை விரிவுபடுத்தவும், அடிப்படையில் அதை ஓரளவிற்கு அனைவருக்குமானதாகவும் மாற்றவும் முயற்சிக்கிறது. எனவே  அதைத் தவிர்ப்பதற்கு இது ஒரு வழியாக இருக்கின்றது.

மக்கள் பணம் பெறுவதற்கும் மேலாக, அதிகமாகச் செய்வதற்கு விரும்புகிறீர்கள். சிலருக்கு ஜன்தன் கணக்கு உள்ளது. சிலரிடம் அது இல்லை. சிலர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பட்டியலில் உள்ளனர்.  இது பணத்தைப் பெறுவதற்கான மற்றொரு வழியாகும். சிலர்  உஜ்வாலா பட்டியல்களில் உள்ளனர். சிலர் இல்லை. நீங்கள் அந்தப் பட்டியலைப் பார்த்தால், பல லட்சக்கணக்கான மக்கள் அதிலிருந்து விடுபட்டிருப்பது தெரிய வரும். அந்த மக்களுக்கு நீங்கள் என்ன சேவை செய்யப் போகிறீர்கள்?  அந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குச் சேவை அளிக்கக் கூடிய சில நேர்மையான உள்ளூர் அதிகாரிகளுக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.

உயரடுக்கில் இருப்பவர்கள் பணத்தைக்  கைப்பற்றக்கூடும் என்பதில் நான் உங்களுடன் உடன்படவில்லை. அதைப் பற்றி இந்தோனேசியாவில் நாங்கள் அதிகம்  கவலைப்பட்டோம் என்றாலும், அதற்கான ஆதாரங்களை அதிக அளவில் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் சில தவறுகள் நடக்கும் என்றாலும், நாம் ஒரு வாய்ப்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அந்த  வாய்ப்பைப் பெறாவிட்டால், நாம் நிச்சயம் சிக்கலில் சிக்குவோம்.

ராகுல் காந்தி: எனவே  தைரியமாக இருக்க வேண்டும். மோசமான சூழ்நிலையில் இருப்பதால், வரவிருக்கும் இடர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா…

டாக்டர் பானர்ஜி: நீங்கள் கடும் நெருக்கடியில் இருக்கும்போது, ​​தைரியமாக இருப்பதுதான் ஒரே வழி.

ராகுல் காந்தி: இப்போதிலிருந்து ஆறு மாதங்களில், இந்த நோய் நீங்கியதும், வறுமை  குறித்த பார்வையில் இதை எவ்வாறு கையாள வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? பொருளாதார பின்னடைவு, திவால் நிலைகள் இருக்கப் போகின்றன. உடனடியாக குறுகிய காலம் என்பதற்கு  மாறாக, இடைக்காலத்திற்காக எவ்வாறு நாம் அதைக் கருத வேண்டும்?

டாக்டர் பானர்ஜி: தேவை பற்றாக்குறை  இதுதான் நாம் பேசிக் கொண்டிருந்தது. நாம் அக்கறை கொள்ள வேண்டிய இரண்டு  விஷயங்கள் இருக்கின்றன. திவால் நிலைகளின் சங்கிலியை எவ்வாறு தவிர்ப்பது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு, ஏராளமான  கடன்களைத் தள்ளுபடி செய்வது ஒரு வழி. மற்றொன்று தேவை பற்றாக்குறை. மக்களின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுப்பதே,  பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். அமெரிக்கா மிகவும் தீவிரமாக  அதைச் செய்து வருகிறது. அங்கே இருப்பது நிதியாளர்களால் நடத்தப்படுகின்ற குடியரசுக் கட்சி நிர்வாகமாகும். அதைச் செய்ய அவர்கள் தயாராக இருக்கும் போது, நாமும் அதைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். சமூக எண்ணம் கொண்ட தாராளவாதிகளால் இயக்கப்படுவதாக இல்லாமல், நிதித்துறையில் இருப்பவர்களாலேயே அங்கே இயக்கப்படுகிறது. பொருளாதாரம் பிழைத்தெழுவதற்காக, மக்களின் கைகளில் பணத்தைத் தர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.  அதிலிருந்து நாம் ஒரு குறிப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Give Money Directly to People to Revive Economy: Nobel Laureate ...

ராகுல் காந்தி: உலகின் அதிகார சமநிலையை இது ஓரளவிற்கு மாற்றுகிறது. அதுவும் மிகவும் தெளிவாக உள்ளது.  அதைப்  பற்றி  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

டாக்டர் பானர்ஜி: பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். குறிப்பாக இத்தாலி  – அது பேரழிவான விளைவுகளைக் கண்டிருக்கிறது. அது ஓரளவிற்கு அரசால் ஏற்பட்ட விளைவே ஆகும் …… இத்தாலிய அரசு தற்போது அவ்வளவாகப் புகழ்பெற்ற நபர்களால் நடத்தப்படவில்லை.  இதன் விளைவாக, சுகாதார அமைப்பு  அங்கே தோல்வியடைந்திருக்கிறது. மிகுந்த தேசியவாதம் கொண்ட  திசை நோக்கி, அமெரிக்கா நகர்வது உலகை மிகவும் அச்சுறுத்துகிறது. சீனாவின் எழுச்சியை அச்சுறுத்தலாக எண்ணி அமெரிக்கா அதற்கு எதிர்வினையாற்றத் தொடங்கினால், அது ஸ்திரமின்மைக்கு எதிரான அச்சுறுத்தலாகவே இருக்கும். இது நாம் அதிகம் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.

ராகுல் காந்தி: வலுவான தலைவர்களால் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியும் என்பதே இதன் அடிப்படை. வைரஸுக்கு எதிராக நிற்கிற ஒருவர் இப்போது தேவைப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.

டாக்டர் பானர்ஜி: அது பேரழிவையே தரும். அமெரிக்காவும் பிரேசிலும் வலது மற்றும் இடது என்று குழப்பம் விளைவிக்கும் இரண்டு நாடுகள். இவர்கள் இருவரும் ‘வலிமையானவர்கள்’ போல நடந்து கொள்கிறார்கள்.. அனைத்தையும் புரிந்து கொண்டதைப் போல நடித்து வருகிறார்கள்.. ஆனால் அவர்கள் தினமும் சொல்லி வருவது  சிரிப்பையே வரவழைக்கிறது. வலுவான மனிதர் தேவை என்ற கோட்பாட்டை யாராவது நம்ப விரும்பினால், இது உண்மையில் அவர்கள் தங்கள் தவறுகளை ஒத்துக் கொள்வதற்கான நேரம்.

ராகுல் காந்தி: நன்றி. மிக்க நன்றி. தயவுசெய்து நீங்கள் இந்தியாவில் இருக்கும்போது, ​​ஒரு கோப்பை தேநீர் அல்லது ஏதாவது சாப்பிடலாம் வீட்டில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

டாக்டர் பானர்ஜி: அவ்வாறே உங்களுக்கு. உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

2020 மே 05

https://www.youtube.com/watch?v=kS2L7mHvcgs

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *