டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கைப்பட எழுதிய நினைவலைகளில் இருந்து சில பகுதிகள் மட்டும் தொகுக்கப்பட்டு மக்கள் கல்விக் கழகத்தால் 1990ல் ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது இந்நூல். அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 25லும் இவை இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு குறிப்பு உள்ளது.

தீண்டாமை வழக்கத்திலிருப்பதை பற்றி வெளிநாட்டவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அது எவ்வளவு கொடூரமானது என்பதை அவர்களால் உணரமுடிவதில்லை. இந்து மக்கள் அதிகம் வாழும் தனது கிராமத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து, அறுவறுக்கத்தக்க அத்தனை கழிவுகளையும் அகற்றி, வாசலில் நின்று உணவு பெற்று, கடைகளிலும் கூட எட்ட நின்று பொருட்களை வாங்கி, அந்த ஊரில் யாரையும் தீண்டாமலும் யாராலும் தீண்டப்படாமலும் இருக்கும் மக்கள் அதனைத் தன் சொந்த ஊராகக் கருதுகிற அவலத்தை எப்படி வெளிநாட்டவர்களுக்கு உணர்த்துவது என்கிற முன்னுரையுடன் அம்பேத்கர் தன் வாழ்விலும் பிறர் வாழ்விலும் தீண்டாமை காரணமாக நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1901, அப்போது அம்பேத்கருக்கு ஒன்பது வயது. அவருடைய அப்பா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கொரேகானில் காசாளராகப் பணிக்குச் சேர்கிறார். மனைவி இறந்துவிட்டதால் மகன்களை தன் சகோதரி ஒருவரின் பராமரிப்பில் சதோராவில் விட்டுவிட்டுச் செல்கிறார். ஒரு விடுமுறைக் காலத்தில் தன்னுடன் வந்து தங்கிச் செல்லுமாறு கடிதம் எழுதுகிறார். தங்களைப் பார்த்தால் தீண்டப்படாதவர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி மிக விலை உயர்ந்த ஆடைகளை (நகைகளும் கூட) அணிந்து கொண்டு இரயில் பயணம் செய்கிறார்கள். கொரேகானுக்கு அருகில் உள்ள நிலையத்தில் இறங்கி விட்டனர். இறங்கிய அனைவரும் சென்றுவிட்டார்கள். இவர்கள் மட்டும் காத்திருக்கிறார்கள். அழைத்துச் செல்ல வருவதாகச் சொல்லியிருந்த தந்தையின் உதவியாளர் வரவில்லை.

இவர்கள் மட்டும் நிற்பதைப் பார்த்து சிரித்த முகத்துடன் வந்த இரயில் நிலைய அதிகாரி விசயத்தை அறிந்து கொண்டு உதவ நினைக்கிறார். உடனே நீங்கள் யார்? என்று கேட்க, மஹர் என்று சொல்கிறார் அம்பேத்கர். அதிகாரியின் முகம் மாறிவிட்டது. வெளியில் நிற்கும் டோங்கா வாலாக்களிடம் பேசிப் பார்க்கிறார் அந்த அதிகாரி. ஒருவரும் தயாரில்லை. கூடுதல் பணம் தந்தாலும் மறுக்கிறார்கள்.

Life and times of Dr B.R. Ambedkar | Forward Press

அப்புறம் ஒரு வண்டிக்காரர் மட்டும் சரி என்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம். அவருக்கு இரண்டு மடங்கு பணம் தந்து விடுவது, அவர் வண்டியைத் தந்து விடுவது, சிறுவர்களுள் ஒருவர் வண்டியை ஓட்டிச் செல்வது, வண்டிக்காரர் வண்டிக்குப் பின்னாடியே நடந்து வருவது என்று ஒப்பந்தம். இதனால் ஒரு தீண்டத்தகாவனுக்கு வண்டி ஓட்டிய பழியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்கிறாராம்.. இந்தச் சிறுவர்களுக்கு வண்டியோட்டவும் தெரியாது, அந்த ஊர்களைப் பற்றியும் தெரியாது. வேறு வழியின்றி ஒப்புக் கொள்கின்றனர். இடையில் உணவுக்காக ஒரு இடத்தில் நிறுத்துகிறார் வண்டிக்காரர். சிறுவர்கள் மகிழ்ச்சியாக இறங்கிப் போகின்றனர். அந்த நீர்நிலை, அது நீர்நிலையே அல்ல, கழிவுநீர்க் குட்டை. வண்டிக்காரர் அருகிலுள்ள ஊருக்குள் சென்று சாப்பிடப் போய்விட்டார்.

என்ன செய்வது, பிடித்தும் பிடிக்காமலும் சாப்பிட்டு முடித்து விட்டு கிளம்புகின்றனர். சிறுவர்களுக்கு அச்சம்வேறு. இவர் தங்களை சரியான பாதையில் தான் அழைத்துச் செல்கிறாரா இல்லை ஆளரவமற்ற பகுதியில் கொலைசெய்து விடுவாரா என்று. நீண்ட பயணத்திற்கு பிறகு ஒரு செக்போஸ்ட் வருகிறது. இரவு அங்கு தங்கிச் செல்லலாம் என வண்டிக்காரர் சொல்கிறார். அங்குள்ள அதிகாரியிடம் தண்ணீர் கேட்கிறார்கள். கிடையாது என மறுக்க, பசித்தாலும், உணவு கையில் இருந்தபோதும் பட்டினியோடு தூங்கி விடிந்த பிறகு கிளம்பி தந்தையிடம் சென்று சேர்கிறார்கள். அங்கு வந்த பிறகு தான் தெரிகிறது அப்பாவின் உதவியாளர் இவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தையே மறைத்து விட்டார் என்று. இந்த நிகழ்வு அம்பேத்கரின் மனதில் ஆறா வடுவாகப் பதிகிறது.

பள்ளியில் அம்பேத்கர் அமர்வதற்கென தனி சாக்குத் துணி, ஒவ்வொரு நாளும் கொண்டு வந்து பள்ளி முடிந்ததும் அந்தச் சாக்குத் துணியைக் கையோடு வீட்டுக்கு எடுத்து சென்றுவிட வேண்டும். பள்ளியின் பணியாளர் அதைத் தொடக்கூட மாட்டார். தாகம் எடுத்தால் விரும்பிய நேரத்தில் குழாய்த் தண்ணீரைக் குடித்துக் கொள்ள முடியாது. அதைத் திறந்து விடுவதற்கு யாரேனும் ஒரு உயர்சாதியினர் இருக்க வேண்டும். சில நேரங்களில் அப்படி யாரும் இல்லையென்றால் தாகத்தோடு வீடு திரும்ப வேண்டியது தான்.

சதாராவில் சலவைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் தான். அவர்களுக்கு வேண்டிய பணத்தைக் கொடுக்கவும் முடியும் தான். ஆனாலும் வரமாட்டார்கள். சதாராவில் சவரம் செய்பவர்கள் இருக்கிறார்கள் தான். அவர்களுக்கு வேண்டிய பணம் கொடுக்க முடியும் தான். ஆனாலும் ஆனாலும் நாங்கள் தீண்டத் தகாதவர்கள் என்பதால் அவர்கள் வரமாட்டார்கள். எங்களின் மூத்த சகோதரியே எங்களுக்கு முடிவெட்டி வெட்டி அதில் கைதேர்ந்தவர் ஆகிவிட்டார் எனப் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

1918, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் படித்துவிட்டு, பரோடாவில் கடமையாற்ற வேண்டுமென விரும்பி நாடு திரும்புகிறார் அம்பேத்கார். பரோடாவில் மிகப் பெரும் கேள்வி அவர் முன் நிற்கிறது. எங்கு தங்குவது? அருகில் உள்ளவர்களிடம் விசாரித்து பார்சி பயணிகள் விடுதிக்குச் செல்கிறார். யாருமில்லாமல் வெறிச்சோடித் தான் கிடக்கிறது. அங்கும் மேலாளர் கேட்கிறார், நீங்கள் யார்? அப்புறம், அவரைச் சமாதானப் படுத்தி, கூடுதல் பணம் தந்து பொய்யான பார்சி பெயரில் அங்கு தங்குகிறார். தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தில் அம்பேத்கருக்கு பயிற்சியாளராக பணி வழங்கப்படுகிறது. எப்படியாவது அரசின் மூலம் தங்குவதற்கு ஒரு வீடு பெற்று விட வேண்டும் என கடும் முயற்சி செய்கிறார்.

PDF] Dr Ambedkar Books in Tamil | Velivada

அதற்குள் விசயம் வெளியில் தெரிந்து ஒரு நாள் காலையில் பத்துப் பதினைந்து பேர் உருட்டைக் கட்டைகளுடன் வந்து மிரட்டுகின்றனர். இன்று மாலைக்குள் காலி செய்துவிட வேண்டும் என எச்சரித்து செல்கின்றனர். நல்ல வேளையாக அம்பேத்கர் உள்ளுக்குள் பயந்த அளவிற்கு ஒன்றும் நடந்து விடவில்லை.. இந்து மதத்தில் ஒருவன் தீண்டப்படாதவன் என்றால் பார்சிகளுக்கும் அவன் தீண்டப்படாதவன் தான் என்பதை அன்று தான் உணர்ந்தேன் என்று எழுதுகிறார் அம்பேத்கர்.

1929, தீண்டத் தகாதவர்களின் குறைகளைக் குறித்து விசாரிக்க பம்பாய் அரசு ஒரு குழு அமைக்கிறது. அந்தக் குழுவில் அம்பேத்கரும் இடம் பெறுகிறார். குழுவில் உள்ளவர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்கின்றனர். சாலிஸ்காவுனைச் சேர்ந்த தீண்டத்தகாதர்களாக கருதப்படும் மக்கள் ஒரு இரவு மட்டும் தங்களுடன் தங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அருகில் உள்ள இரயில் நிலையத்தில் இறங்குகிறார் அம்பேத்கர். அவரை வரவேற்ற மக்கள் அங்கிருந்து டோங்கா வாலாக்களிடம் கேட்கிறார்கள்.

ஒருவரும் சவாரிக்கு வரவில்லை. ஆனால் ஒருவன் மட்டும் வேண்டுமானால் வண்டியை உங்களில் யாராவது ஓட்டிச் செல்லுங்கள் என்றதும் அந்த மக்கள் அம்பேத்கரை வண்டியில் வரச் சொல்லிவிட்டு குறுக்குப் பாதையில் நடந்தும் ஓடியும் முன்னால் செல்கிறார்கள். முன்னபின்ன வண்டி ஓட்டிப் பழக்கமில்லாத ஒருவன் வண்டியை ஓட்டிச் செல்கிறான்.. வண்டி ஒரு பாலத்தைக் கடக்கும் வேளையில் நிலைதடுமாறி விழுகிறது. குதிரையும் வண்டியும் ஆற்றுக்குள் விழுக, அம்பேத்கர் பாலத்தில் கற்குவியலில் விழுந்து, பின் அந்த மக்கள் அழுகையும் புலம்பலுமாக அவரைத் தூக்கிச் செல்கின்றனர். அவர்களுடன் சிறிது தூரம் நடப்பதால் எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் என்னுடைய உயிர்ப் பாதுகாப்பை விட என்னுடைய கௌரவத்தை அந்த மக்கள் பெரிதாக நினைத்து விட்டார்கள் என்று பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

B. R. Ambedkar Age, Death, Wife, Children, Family, Biography ...

1934 ல் தன் நண்பர்களுடன் ஒரு சுற்றுலாவிற்குச் செல்கிறார். ஹைதராபாத் சமஸ்தானத்தின் அவுரங்காபாத் செல்லும் வழியில் உள்ள தவுலாபாத் கோட்டையைக் காணச் செல்கிறார்கள். பயணக்களைப்புடன் உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் குளத்தைக் கண்டதும் தங்களைக் கொஞ்சம் கழுவி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். பின்னாடியே ஒருவர் சத்தமிட்டுக் கொண்டு வருகிறார். அவரும் கேட்கிறார் நீங்கள் யார்? விசாரணைக் குற்றவாளிகளைப் போல நிற்கவைக்கப்பட்டோம். இந்து மதத்தில் ஒருவன் தீண்டப்படாதவன் என்றால் முஸ்லீம்களுக்கும் அவன் தீண்டப்படாதவன் தான் என்பதை அன்று தான் உணர்ந்தேன் என்று எழுதுகிறார் அம்பேத்கர்.

இப்படி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்தும் பல அனுபவங்களைக் கொடுத்து இந்தியாவின் தீண்டாமை முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்துகிறார் அம்பேத்கர். ஆனால் இந்நூலின் தலைப்பு ஏன் ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் என்று இருக்கிறது என்று புரியவில்லை.

ஓரிடத்தில் சொல்கிறார், “அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஐந்தாண்டு காலம் தங்கியிருந்தேன். நான் தீண்டத்தகாதவன் என்பதையும் இந்தியாவில் ஒரு தீண்டத்தகாதவன் எங்கு சென்றாலும் அது அவனுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கும் என்ற உணர்வு இந்த ஐந்தாண்டு காலத்தில் என் மனத்திலிருந்து முற்றிலும் மறைந்திருந்தது.”

இந்நூல் இணையத்திலும் கிடைக்கிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசியுங்கள்.

One thought on “நூலறிமுகம்: ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல்: டாக்டர் அம்பேத்கர் – தேனி சுந்தர்”
  1. நன்றி சுந்தர்.அம்பேத்கர் தனது கல்வியை கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் தொடர நினைத்தார்.ஆனால் பரோடா மன்னர் திரும்ப அழைத்ததால் இந்தியா வந்தார்.சில ஆண்டுகள் கழித்து பரோடா மன்னரின் அனுமதியுடன் இலண்டன் சென்று பாரிஸ்டராகத் திரும்பினார்.எனவே இத்தலைப்பை வைத்திருக்கலாம் என நினைக்கிறேன்.அம்பேத்கரின் வாழ்க்கை திரைப்படம் youtubeல் இலவசமாகக் கிடைக்கிறது.முடிந்தால் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *