Poems | கவிதைகள் - Thendral

தென்றல் கவிதைகள்

1.

உச்சி வெயிலில்
அறுந்த செருப்பாய்
நிழலைத் தொட்டு
சாலையில்
இழுத்துக் கொண்டே
நடக்கிறது அப்பறவை.
‌பறத்தலில்
சூரியப் பார்வையில்
கண் காணாமல்
இழுத்துக் கொண்டே
போகும் பறவையைப் பார்த்தபடியே
வீட்டு வாசலின்
இரவுக்குள்
என் காலணியைத்
தொலையவிட்டேன்.

2.

பகலைத் தூக்கி
அந்தப்பக்கம் வைக்கிறது
இரவைத் தூக்கி இந்தப்
பக்கம் வைக்கிறது
தன்னைத் தூக்கி
எந்தப் பக்கமும் வைக்கத் தெரியாத
கலங்கரை விளக்கம்

3.

கண்ணுச்சூட்டுக்கு
நடுவால
வெய்க்குற பொட்ட
கொஞ்சம் தள்ளி
மேலாப்புல
மார்ஜின்ல வெச்சுருக்கற

4.

சமயத்தில்
உன் சந்தோஷமும்
இப்படித்தான்
நகர்ந்திருக்கிறது என்று
கேட்காமலேயே
சந்தோஷமாக சரிசெய்யும்
சந்தோஷமற்ற உன் மனசும்
எனக்குள்தான்
சந்தோஷமாக இருக்கிறது

வான் இயல்பி
அலைப் பறவையின்
கடல் கூடு
கலங்கரை ஒளிப் பாதையில்
துள்ளும் மீனின் சுபாவம்
மணல் வீட்டில்
நீ தூங்க வைத்த பொம்மையின்
கவிதைக் கனவு
தேநீர் துவர்ப்பின் தவிப்பு
நுனி உப்பின் இனிப்பு
பிரிய நுரை ததும்பும் காபி
பிடித்த பக்கத்தின் முனை மடிப்புச் சொல்
இவையுதிர்த்த
பாதரச பிரியத்தின்
வெப்ப மானியின்
சக டிகிரி வாசகி

5.

போதும் பூவிதழ்
முகக் கொழுந்தின்
நாசி முனை
சொற் கனிகளுக்கு
வாக்கப்பட்ட
உயிரியல் சூலகம்
சரியாக பிரிக்கத்
தவறிய
பின்னிரவுக் கனவில்

மென் துகில்
காற்றுக்கோர் ரகசியம்
மார்பு எத்தும் மனசைப்
பறந்து கொத்தும்
நினைவுக் கூடு
விழுந்தும்
விழாமலும் மிதிபடும்
முத்தம்

 

Show 1 Comment

1 Comment

  1. ச. பாரதிபிரகாஷ்

    எதார்த்தமான அழகிய வரிகள்…
    கவிதைப் பூக்கள் விரைவில் கவிதை மாலையாய் புத்தகமாக வெளிவர வாழ்த்துகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *