கனத்த சங்கிலிகளால் கட்டி
எம் மூதாதையரை
ஒருவரோடு ஒருவராய்ப் பிணைத்து
மரக்கட்டைகளாய்
அவர் பிறந்து வளர்ந்த காடுகளூடே
உம் முன்னோர் இழுத்துச் சென்றார்கள்.

துர் நாற்றம் வீசும் கப்பல்களின்
கீழறைகளில்
குவிக்கப்பட்ட
தட்டு முட்டுச் சாமான்களாய்
எம்மை
குவித்தார்கள்.

விவசாய நிலங்களிலும்
வீடுகளிலும்
கடிகாரங்களற்ற காலங்களாய்..
எம் வாழ்வை
சிதைத்தீர்கள்.

உமது வீடும்
உமது வாழ்வும்
எமது குருதியாலும்
எமது கண்ணீராலும்
ஒளிர்ந்தன.

எமது உயிர்கள்
புற்களைப் போல…
எமது சந்ததிகள்
விறகுகளைப் போல..
எமது கனவுகள்
மலந்துடைக்கும் காகிதம் போல..
உமது அதிகாரம்
ஆளுகை செய்தது.

உமது கொலைக் கைகள்
எமது குரல்வளைகளை..
உமது பூட்ஸ்அணிந்த கால்கள்
எமது விரைகளை..
காலம் காலமாக
நசுக்கிக் கொண்டிருக்கின்றன.

நூறு..நூற்றாண்டுகளாய்

காற்றில் மரணவலிகளின்
பாடல்கள்
தீண்டாமை எழுதுகோலால்
ஈரமான குருதியினால்
நொடி தோறும்
எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
வசந்ததீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *