1

உதிரும் இலைகளின்
நிறமாற்றத்தை ஏந்திக் கொண்ட மண்ணுக்குள் உருமாறியபடி
உருளத் தெடங்கியது சருகு
குத்திக்கிழிக்கும் கல்லோடும் மேனியெலாம் மூடும்
மண்ணோடும் கட்டிப்புரண்டு வெப்பச் சூட்டையும்
அழுத்தச்சுமையையும் உள்வாங்கி
ஒளிரக் காத்திருக்கிறது.
சருகென மாறிப்போன
உழவனின் முயற்சியில்
வைரங்களை விதைக்காத
வானமும் அதிகாரமும்
காத்திருக்கின்றன
வாழ்வை அறுவடை செய்ய.

2

இழுத்துச் சாத்திய கதவின் இடுக்கில்
எட்டிப் பார்க்கும்
தூறலின் அசைவை
நடனமென நினைத்தாவது
ரசிக்கப் பாருங்கள்
இழுத்தோடும் கார்களும்
இடிந்துவிழும் மாடிகளுமென
பேரிரைச்சலில் விரைந்தபின்
மழையை மரணமெனச்
சொல்லி விடுவீர்கள்.

3

உதிர்ந்து கிடக்கும் கற்றைப் பூக்களில்

ஒற்றைப்பூவையும் கையிலேந்தாது நடக்கப் பார்க்கிறேன்
ஒன்றையாவது ஏந்திக்கொள் என அதிகாலைக் காற்று சுமந்து வந்து காலடியில் தள்ள
வாசத்தை இழுத்தபடி நடக்கின்றன நடைபயிற்சிக் கால்கள்

 

எழுதியவர்: 

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *