1

இந்த முறை தேன் சிட்டுவின் கூர்மையான அலகுகளுக்குள்
சிக்கித் தவிக்கும் செம்பருத்தி
உனக்கொரு நிழற்குடையாகிறது
இலக்கற்ற பயணியே!

கொள்ளைப் பூக்கள் பூத்த
அந்தி வானம்
உனக்கொரு பயணியர் விடுதியாய்
இருந்ததை நீ மறந்து விடு

வழிப்போக்கர்கள் தான் யாவருமே என்றாலும்
ஒற்றைப் பாதைக்குள் உள்ளன
ஓராயிரம் வழிகள்

2

துரோகத்தின் முட்கள்
ஒரு சிறிய கூட்டை
குத்திக் கிழிக்கும் போது
பால்யம் மாறாத
குருவிக் குஞ்சு ஒன்று
உட்பக்கம்
அங்குமிங்குமாய்ப்
பட படத்து அலைகிறது

மரணத்தின் கூர்முனையை
தன் அலகுகளால்
கொத்திப் பார்த்து
கொத்திப் பார்த்து
அது கனவில்லையென்று
கண்ட கணம்
அது இந்த உலகத்திடம்
தோற்றுப் போகிறது

பாறாங்கல்லாய்க் கிடக்கும்
தனிமையைப் புரட்டி
வாசலை அடைத்து
முடிக்கும் போது
அதன் நெஞ்சில் ஒரு ஈட்டி
செருகப்பட்டிருக்கும்

பறவையாய் வாழ்ந்ததின்
பூரணத்துவத்தை
எய்திட
கடைசிச் சிறகடிப்பை
முயலுகையில்

நெஞ்சில் உறவாக
நிறுத்தியிருந்த
முகங்கள் ஒவ்வொன்றும்
ஒரு கோணல் புன்னகையுடன்
முன்னால் வந்து
தரிசனம் தர

முகங்கள் முட்களாகவும்
முட்கள் முகங்களாகவும்
மாறும் அதிசயம் கண்டு
ஆச்சரியப்பட்டு

தன் ஒவ்வொரு இறகையும்
பேரமைதிக்கு நிவேதனமாக
உதிர்த்து விட்டு

கூர்முனை இருக்கும் திசை நோக்கி
மார்பை செலுத்துகின்றது அது

தங்கேஸ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *