இந்தி இலக்கியத்தின்  மாபெரும் பிதாமகனான பிரேம் சந்த் மாபெரும் 1917 அக்டோபர் புரட்சியினால் புரட்சிகரமான உத்வேகத்தைப் பெற்றவராவார். 1919இல் காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகள் மாண்ட்போர்ட் சீர்திருத்தங்களை ஆதரித்த சமயத்தில், பிரேம்சந்த் அதனை எதிர்த்து 1919 டிசம்பர் 21 அன்று கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கடிதத்தில் அவர், “இப்போது நான் கிட்டத்தட்ட போல்ஷ்விக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு முன்பு, 1919 பிப்ரவரியில் அவர் “புரானா ஜமானா:நயா ஜமானா” (“புதிய யுகம்:பழைய யுகம்”) என்று  தலைப்பிட்டு அவர் எழுதிய ஒரு கட்டுரையில், வரும் யுகம் என்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் யுகமாகும் என்றும், இவ்வாறு மாறிவரும் யுகப்புரட்சிக் காற்றினால் இந்தியா பாதிப்புக்கு உள்ளாகாமல் இருந்திடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஏனெனில், அக்டோபர் புரட்சிக்கு முன்பு அங்கு போராடி வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடம் இந்த அளவிற்கு வல்லமை இருந்தது என்று எவர்தான் அறிந்திருந்தார் என்றும் அக்கட்டுரையில் பிரேம் சந்த் குறிப்பிட்டிருந்தார். அந்த சமயத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும், ஸ்டாலினுக்கு எதிராகவும் முதலாளித்துவ நாடுகள் ஏராளமான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தன. அவற்றையெல்லாம் மறுதலித்து பிரேம் சந்த் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 1936 ஆகஸ்ட்டில் அவர் “வணிக நாகரிகம்” (“A Mercantile Civilization”) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையில், அவர் முதலாளித்துவம், வணிகமயம், பாரம்பர்ய செல்வங்கள், தனிச் சொத்துரிமை ஆகியவற்றைக் கண்டித்த அதே சமயத்தில், தனிநபர் தகுதி மற்றும் முயற்சியை அங்கீகரிப்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ள சோவியத் அமைப்புமுறைமீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த சமயத்தில் இந்தியாவை ஆண்டுவந்த பிரிட்டிஷார்  ரஷ்யப் புரட்சி குறித்து மிகவும் பயந்து போயிருந்தார்கள். சோவியத் யூனியனை ஆதரித்து யார் எது கூறினாலும், அவர்கள் சோவியத் ஏஜண்டுகளாக இருப்பார்களோ என்று பயந்தனர். எனவே அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மகாத்மா காந்தி மற்றும் சி.ஆர். தாஸ் போன்றவர்களைக் கூட சந்தேகக் கண்கொண்டே பார்த்தனர்.

 பிரேம்சந்தின் முக்கியமான  நாவல்களில் ஒன்றான ரங்க்பூமி (விளையாட்டு மைதானம்) என்னும் நாவல், கம்யூனிசத்தையும், போல்ஷ்விசத்தையும் பரப்பும் நாவலாக இருக்கக்கூடுமோ என்று பிரிட்டிஷார் பயந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் பிறந்த பிரேம்சந்த் (1880-1936) உத்தரப்பிரதேசம் பனாரஸ் அருகில் லமாஹி என்னும் கிராமத்தில் பிறந்த தன்பத்ராய் அன்றைய காலத்திலிருந்த சமூகக் கொடுமைகளை மிகத் துல்லியமாக தன்னுடைய எழுத்துக்களில் பிரதிபலித்ததன் காரணமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு ஆளானார். 1909இல் அவர் எழுதிய Soz-e-Vatan என்னும் கதை அரசுக்கு எதிராக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அரசாங்கத்தால்  பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக பிரேம் சந்த் என்று அவர் தன் பெயரை மாற்றிக் கொண்டார்.

रंगभूमि उपन्यास | हिन्दीकुंज,Hindi Website ...

பிரேம்சந்த்தின், ‘ரங்க்பூமி’ நாவலில் பல்வேறு சிந்தனாவாதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் கண்தெரியாத இளைஞனான கதாநாயகன் காந்திய சிந்தனையுடன் செதுக்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், ஜான் சேவக் மற்றும் சோபியா என்னும் கதாபாத்திரங்கள் போல்ஷ்விக் ஆதரவாளர் களாக  செதுக்கப்பட்டிருக்கிறார்கள். பிரேம் சந்த் நாவல்கள் மற்றும் சிறுகதைகளை ஆய்வு நோக்குடன் படித்தோமானால்  அவர் தீண்டாமைக்கு எதிராகவும், வகுப்புவாதத்திற்கு எதிராகவும்,  இந்து – முஸ்லீம் ஒற்றுமை மற்றும் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தியும் எழுதியிருப்பதைக் காண முடியும்.

‘ரங்க்பூமி’யிலிருந்து சில வரிகள்:

டாக்டர் கங்குலி: நாம்  தர்பாருடன் சண்டை போட முடியும்.

பரத் சிங்: இதன் விளைவு கலகத்தில் கொண்டுபோய்விடுவதைவிட வேறென்னவாக இருக்க முடியும்? தர்பார், அதனை நசுக்கிட அரசாங்கத்தின் ஆதரவினைக் கோரும். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்.

பிரபு: இவ்வாறு ரத்தம் சிந்த நாம் பயந்துகொண்டிருக்கும்வரைக்கும், நமது உரிமைகளும் நம்மை வந்து சேர்வதற்குப் பயந்துகொண்டுதான் இருக்கும். நாம் நம் ரத்தத்தைச் சிந்துவதன் மூலமாகத்தான் நம் உரிமைகளைப் பாதுகாத்திட முடியும். போர்க்களத்தைவிட  அரசியல் களம் எந்தவிதத்திலும் ஆபத்திற்குக் குறைந்ததில்லை.  அரசியல் களத்திற்குள் நுழைந்தபின்பு, ரத்தம்சிந்த அஞ்சினோமானால்  அது கோழைத்தனமாகும்.

ஜான் சேவக்: அரசுக்கு எதிராகக் கலகம் செய்வது அதனைப் பலவீனப்படுத்திடும். மக்கள் மத்தியில்  அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்திடும். இதனைத் தொடர்ந்து சூழ்நிலையைச் சமாளித்திடவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றிடவும்  அரசு முன்வரவேண்டும். இல்லையேல் இங்கேயும் கம்யூனிசம் மலரும். உலகம் ஜனநாயகப் பாதையை,  கடந்த முன்னூறு ஆண்டுகளாக சோதித்து வந்திருக்கிறது. இப்போது அதனுடன் அதற்கு விரக்தி ஏற்பட்டுவிட்டது. கம்யூனிசத்தின் தீக்கதிர்கள் இன்னமும் நம் நாட்டை எட்டவில்லை. அதனை நம் நாட்டிற்குள் ஏற்படுத்திட நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிட வேண்டும்.  நாம் அதனைக் கண்டு எதிர்காலத்தில் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *