ச. அர்ஜுன் ராஜ் கவிதைகள்

இளந்தகப்பன்

=============

குளிகுளித்து ஈரெட்டு வாரம் கழிந்த

ஒரு மந்தகாச குளிரிரவது

கண் துஞ்சா பனியிருட்டு

ஒரு மோக உச்சாடனம்

போர்வையை வெயிலாக்கிக்கொண்டிருந்தது

குட்டிக் கொலுசின்

குனுகும் சிணுங்கல்கள்

ஒரு. சிறு…

மூக்குத்தி வெளிச்சம்

முலை ருசி கண்ட

பசியின் ஓசை

தொண்டைப்  பூக்காம்பு தணிந்து

மலருதடு கசிந்த பால்வாசனை

ஜூவாலை ஊறிய தேகம்

நெருப்பணைத்து மீண்டதுபோல்

சுவாதீனம் திரும்ப

சிங்கம் மிரட்டியதில்

சிரித்துக்கொண்டிருந்தாள்

குட்டிச் சின்ரெல்லா

சன்னமாக சுண்டிப்போனது

இளந்தகப்பனவனது

காமத்துப்பாலின் கொதிநிலை.

◆◆◆◆

மின்சாரதத் துண்டிப்பிழந்த வீடு

=====

மழையிரவில்

தெரு ஒன்றில்

யாரோ ஒருவர் வீடு

முற்றாக அணைந்திருக்கும்

மின்சாரம்

துண்டிக்கப்பட்டு

இருள்மை

பிரகாசித்துக் கொண்டிருக்கும்

நுண்ணறிவு  செல்பேசியில்

மின்னூட்டம்

ரத்தம் சுண்டிப்போயிருக்கும்

கூட்டிணைவு தொய்ந்திருக்கும்

தொடர்புகள் நைந்து

அறுபடும் விளிம்பில்

பிசுபிசுத்திருக்கும்

யாருமற்ற தனிமையில்

மனம் வியாக்கியானித்திருக்கும்

சிறு…  தீபம்

திரியோடு தன் தேகம் கரிந்திட

ஒத்துழைத்துக்கொண்டிருக்கும்

குழந்தை

இது இரவு பகல்

இருள் வெளிச்சமென

ஏதுமறியாது அது அதுவாக

மையலில் மசமசத்திருக்கும்

இரவின் சுவாசம்

பூச்சிகளின் மூச்சுகளில் அல்லது

நாசிகளில்

கர்ஜித்துக் கொண்டிருக்கும்

வீட்டு வாசலில்

நாயொன்று

கருவறை சாயலில்

குளிரில் கவிந்திருக்கும்

நூலாம்படை அத்துவானக் காடாக

சுவரை வியாபித்திருக்கும்

குடைக்கம்பிகளின் நுனியிலிருந்து

கடைசி மழைத்துளிகள் உடைந்துகொண்டிருக்கும்.

விழிப்பு அலைக்கழிந்து

விழிகளுக்கு கழிவிரக்கம் செய்துகொண்டிருக்கும்.

காலை உதயத்திற்கும் முன்

விடிந்திருக்கும்

அந்த வீடு .

◆◆◆◆◆

மயங்கும் வெயில் சுழிகள்

======  =======   ======

கிளைகளும் இலைகளுமாய்

அடர்ந்த மரத்தின் கீழ்

கொழுத்த நிழலில் புள்ளி வைத்துவிட்டு

கோலம் போட மயங்குகின்றன

வெயில் சுழிகள்

அதற்குள் மேய்ந்துவிட்டன

பொழுது சாய்ந்து

பட்டிக்குத் திரும்பும்

அரைப் பட்டினி ஆடுகள்

மழைத்தூவிகள் மரக்கிளைகளிலும்

மரக்கிளைகள் மரத்தடியிலும்

வாசல் தெளித்து காத்திருக்கிறது

இன்று கூடவே காத்திருக்கிறது

மரப்பட்டையிலிருந்து

மண்ணிறங்கிய எறும்புகளும்.

◆◆◆◆◆◆

                                     //ச. அர்ஜுன் ராஜ்/