இந்திய பெருங்கடல் கழிவுகளும்! ஈடில்லா பொருளாதார இழப்புகளும்!
முனைவர். பா. ராம் மனோகர்.

கடல் என்பது நம்மில் பெரும்பான்மை மக்கள் பார்வையில் ஒரு நீல வண்ண அழகான இயற்கை நீரமைப்பு, ரசிக்கிறோம்! அரிய மீன்கள் தரும் அற்புத அட்சய பாத்திரம், மீனவர்கள் வாழ்வாதாரம், உண்மைதான்! ஆனால் இந்த இன்றியமையா இயற்கை சூழல் சமீபகாலமாக, உலகின் குப்பை தொட்டி போல் மாறுவது பற்றி அறிவோமா!? இயல்பான பெருங்கடல், எவ்வளவு மனித வாழ்வின் கழிவுகள் சுமந்து வருகிறது என்பதும், அதனால் பெருங்கடலில் உள்ள மீன்கள் மற்ற உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும்.

இந்திய பெருங்கடல் என்பது, புவியியல் மற்றும் புவி அமைப்பு ரீதியாக உலகின் மூன்றாம் மிக புகழ் பெற்ற 70 மில்லியன் சதுர கி. மீ பரப்பளவு உள்ள கடல் ஆகும். பல உலக நகரங்களை இணைக்கும் அதிக தாது உப்புகள் கொண்டு விளங்கும் இக்கடல் நம் நாட்டில் 7517கி. மீ கடற்கரை, மற்றும் 1382 தீவுகள் கொண்டுள்ளது. கடற்கரை நகரங்களில் அதிக பட்சத்தில் 250 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் கடலிலிருந்து 50கி. மீ தூரத்தில், தங்கள் வாழ்விற்கு கடலின் பொருளாதார நிலை நம்பியுள்ளனர் என்பது உண்மை. “நீல பொருளாதாரம்” என்ற அத்தியாவசிய பொருளாதார உயர்வு இந்தியாவிற்கு மிக முக்கியம் ஆகும்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 486 கடற்கரை நகரங்களில், 100000 மக்கள் தொகை கொண்ட 36 முதல் நிலை நகரங்களில் 12 பெரு துறை முகங்கள், 239 சிறு துறை முகங்கள் உட்பட ஆண்டுக்கு 100000 கப்பல்கள், இந்திய பெருங்கடல் ஒட்டி பயணிக்கின்றன. நீல பொருளாதார நிலை மேம்பட பல்வேறு நிலையில், நீடித்த நிலையான வளம், ஆறுகள் தொடர்பு, உணவு பாதுகாப்பு, ஏழ்மை ஒழிப்பு, வணிகம், நவீன தொழில் நுட்பம், கண்டுபிடிப்பு, வேலை வாய்ப்பு, என பல்வேறு காரணிகள் பெருங்கடல் சூழல் உடன் தொடர்ந்து உலகம் உருவாகிய காலம் முதல், நம் சமூக பொருளாதார வளர்ச்சி பெற ஆரோக்கியமாக இருந்து வருகிறது. மேலும் கோவிட் -19 காலத்தில் கூட ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை உள்ள காலத்தில் 7.2 பில்லியன் டாலர் ஏற்றுமதி வணிகம் பெருகியுள்ளது.

இந்திய கடற்கரை பகுதியில் 4லட்சம் மீனவர்கள், தான் நம் கடலில் நீல பொருளாதார நிலை உயர காரணம் ஆகும். இந்தியா உலகின் 2 வது அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடு என கருதப்படுகிறது. இங்கு 2,50000 படகுகள் இந்த பெரும் பணியில் கடலில் பயணங்கள் செய்கின்றன. தொன்மையான இந்த கடல் வணிகம், உலக அளவில் தற்போது உள்ள 6% சதவீதம், 33%ஆக உயர வாய்ப்பு உள்ளது.

பெரும் கடல் வணிக பொருளாதாரம் கடலில் வெளியேற்றப்படும் கழிவுகளால் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது உணரப்படுகிறது. சாதாரண மாக கப்பல் வெளியேற்றும் எண்ணெய் மாசு, கப்பல் பயணிகள் கழிவு, நிலப்பகுதியிலிருந்து ஆறுகள், மூலம் அடைகின்ற பல்வேறு வகை மாசு பொருட்கள் அதிகம். பிளாஸ்டிக், வேதி, உரக்கழிவுகள்,, மக்காத வெவ்வேறு

வகை குப்பைகளை நீர் ஆதாரங்கள் அருகில் வெளியேற்றம் செய்யும் போது இறுதியில் கடலில் சென்று சேரும் நிலை, வருந்ததக்கது. குறிப்பாக, கடலில் மீனவர்கள் விட்டுவிடும் மீன் வலைகள், மீன் பிடி சாதனங்கள், படகு விபத்து ஏற்படும் போது உருவாகும் கழிவுகள் போன்றவை கடல் உயிரினங்களுக்கு மிகவும் அபாயம் தர கூடியது. ஐக்கிய நாடுகள் சுற்று சூழல் திட்ட (UNEP) அறிக்கையின் படி கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் 20%மீன் பிடிக்கும் வலைகள், வீண் ஆகிய கருவிகள் ஆகும். இந்தியாவில் மட்டும் 154,0008 மீன்பிடி வலை அமைப்பு,7285 எண்ணிக்கையில் சிறு பிடிப்பான் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் உலக அளவில் 6,40000 டன் மீன் பிடி வலைகள் கழிவுகளாக கடலில் விடப்படுகின்றன. மற்ற கழிவுகள் நிலப்பகுதியில் முறையாக மேலாண்மை செய்யும் போதுதான் அவை கடலுக்குள் வராமல் தவிர்க்க இயலும்.

இந்தியா புவியியல் ரீதியாக ஹர் முஸ் ஜலசந்தி மற்றும் மலாக்கா ஜல சந்தி இடையில் உள்ளதால், அதிக வணிக கப்பல் போக்குவரத்து இப்பகுதியில் தொடர்கிறது. நீல பொருளாதார முன்னேற்றத்திற்கு “சாகர் மாலா “திட்டம், பிரதமரின் (PMMSY)மத்ஸ்யசமாதா திட்டம், போன்றவை 20050 கோடி ரூபாய் மூலம் மீன் வளம் பெருகுதல், துறைமுகம் வளர்ச்சி, இவ்வாண்டு ஒன்றிய அரசு வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பு உள்ளது. ரூபாய் 6000கோடி திட்டம் மீனவர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் நீல பொருளாதார வளர்ச்சி பெருக முயற்சி எடுப்பினும், கடலில் குப்பை எனும் நிலை மாற்றம் செய்ய பன்னாட்டு கடற்கரை தூய்மை தினம், விழிப்புணர்வு ஆண்டு தோறும் உள்ளூர், (கடல்பகுதியிலுள்ள கிராம, நகரங்களில்)அரசு துறை மூலம் அனுசரிக்கப்படுகிறது. (MOES) ஒன்றிய நில அறிவியல் அமைச்சக துறை, (NCCR)தேசிய கடல் ஆய்வு மையம், (NCSCM)தேசிய கடற்கரை நீடித்த நிலை மேலாண்மை ஆய்வு மையம்,(MOEF)ஒன்றிய சுற்றுசூழல், வனம், பருவ கால மாற்ற அமைச்சகம், தேசிய கடல் கல்வி மையம் (NIO)போன்றவை தொடர்ந்து கடல் குப்பை குறைப்பு, உயிரின வேற்றுமை, கடல் அலை, காற்று, புயல்,, மீன் பிடிக்கும் பகுதி,, பற்றிய ஆய்வுகள் மேற்கொள்கின்றன. மேலும் அரசு தேசிய அளவில் “தேசிய பெருங்கடல் கழிவு கொள்கை “உருவாக்க உள்ளது.

பொருளாதார பெருக்கத்திற்காக, சுற்றுலா, வணிகம் ஆகியவை மேம்படும் திட்டங்கள் ஏற்படுத்தினாலும், அரிய பெருங்கடல் இயற்கை சூழல் உலகின் மிக பெரிய “கார்பன் உறிஞ்சு தொட்டி “, மற்றும் பல்வேறு அரிய உயிரினங்கள் வாழும் வேறுபட்ட சூழல் ஆகும்.கடற்கரை மக்கள் வாழ்க்கை, பொருளாதார நிலை, இயற்கை சமநிலை அனைத்தும் நீடித்த நிலை தொடர்ந்து சீராக இருக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் ஆகும். சிந்தித்து பார்ப்போம்!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *