Sebastian & Sons | செபாஸ்டியன் & சன்ஸ் - டி.எம்.கிருஷ்ணா

இசையின்மீது கட்டமைக்கப்பட்ட சாதியச்சமூக அரசியல் பற்றி டி.எம்.கிருஷ்ணா ‘செபாஸ்டியன் அண்டு சன்ஸ்’ நூலில் விரிவாக அலசியிருக்கிறார். தமிழர் இசைக்கருவியான பறை, இன்று வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் இசைக்கருவியாகவும், இறப்புக்காக மட்டுமே பார்க்கப்படுகிறது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் இசைக்கப்படும் மிருதங்கத்தின் உருவாக்கம் மற்றும் வரலாறு, அதற்காகப் பதனிடப்படும் மாட்டுத்தோல், இதை உருவாக்கும் அடித்தட்டு மக்கள் இதன் பின்னால் இருக்கும் சாதி அரசியலை இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா தோலுரித்து காட்டியுள்ளார்.

மிருதங்கம் தயாரிப்பவர்களின் பின்புலம் அவர்கள் செலுத்தும் உழைப்பு அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் சொற்ப ஊதியம் போன்ற வரலாற்றை இந்நூலில் பதிவு செய்து அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் இந்த சமூகம் வழங்கவில்லை என்பதையும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் முதன்மையான பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம். இரு முகம் கொண்ட தாளக்கருவியான மிருதங்கத்தின் உடல் கூடு பலா மரத்தினால் செய்யப்பட்டது. இரு புறமும் சரிந்து இறங்கும் அதன் முனைகளான வலமும் இடமும், பசுத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் ஆகியவற்றால் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் ஒளிந்திருக்கும் சாதி அரசியலை இந்நூலில் டி.எம்.கிருஷ்ணா அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்நூலில் ஒரு அத்தியாயம் வருகிறது. மிருதங்கத்தை தயாரிக்க பசுமாடு தோல் தேவை. (இதிலும் பலியாவது பெண்). அதுவும் இரண்டு குட்டிகளை ஈன்ற பசுமாடுதான் தேவை. ஏனெனில் தோல் நெகிழ்ச்சியாக இருக்கும். இயற்கையாக மரணமடைந்த பசுமாட்டு தோலை உரிக்கமுடியாது. ஏனெனில் ரத்தம் மாட்டு உடலில் உறைந்து தோல் விறைப்புத்தன்மை எட்டிவிடும். ஆக பசுமாட்டை முதலில் தொண்டையில் வெட்டி ரத்தம் முழுவதையும் வெளியேற்றுகிறார்கள்.(இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஹலால் முறைப் படி). இப்போது உடலில் ரத்தம் இல்லாததால் தோல் நெகிழ்வுடன் மென்மையாகவும் இருக்கும். பிறகு தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பை சுரண்டி எடுக்கிறார்கள்.

கர்நாடக இசையைப் பாடுபவர்கள், கேட்பவர்கள் பசுவை வணங்கும் பிரிவைச் சேர்ந்தவர்கள். மாடு புனிதமானது. மாட்டுக்கறி உண்ணக்கூடாது என வலியுத்துகிறவர்கள். ஆனால் மாட்டுத்தோலால் செய்யப்படும் மிருதங்கம் மட்டும் புனிதமானது. பூஜையறையில் வைத்து கும்பிடலாம். தங்கள் வசதிக்கும் வாத்தியத்திற்கும் பசுமாட்டை கொல்லலாம். கர்நாடக சங்கீதத்தை ஆக்கிரமித்துள்ள பிராமணர்களின் போலித்தனம் இதுதான்.
பிராமணர்களால் இயற்றப்பட்டு/அவர்களால் பாடப்பட்டு/அவர்களால் மட்டுமே கேட்கப்படும் புனித இசை வகைமையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். மிருதங்கம் தயாரிக்கும் கலைஞர்கள் ஏழைகள்/அடித்தட்டு பட்டியலின மக்கள். வித்துவான்கள் பகட்டாக செழுமையாக தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டார்கள். ஆனால் இதற்கு பின்புலத்தில் உருவாக்கிய கலைஞர்கள் யார் எனத்தெரியாது. அவர்களின் வாழ்வும் அவலமானது. இந்த நூலில் டி.எம்.கிருஷ்ணா மாட்டுத்தோலை மட்டும் உரிக்கவில்லை…பிராமணர்களின் தோலையும் உரித்துள்ளார்….

இந்நூல் உருவாக்கத்திற்கு ஏறத்தாழ 4 வருடங்களுக்கு மேலாக உழைத்துள்ளார். 50க்கும் மேற்பட்ட கலைஞர்களை நேரடியாக சந்தித்துள்ளார். இதில் 12 பேர் பிராமண மிருதங்க வித்வான்கள். மீதி 38 பேர் மாட்டுத்தோலால் மிருதங்கம் தயாரிக்கும் அடித்தட்டு மக்கள். பிராமணர்களால் புனிதமாகவும் மங்கலகரமாகவும் கருதப்படும் மிருதங்கம், அதை தயாரிக்கும் கலைஞர்கள் மேல் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதை இந்நூலில் நிறுவியுள்ளார். இந்த நூலில் தான் எதையும் எழுதவில்லை என்றும் கலைஞர்கள் சொன்னதை மட்டும் பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டார். பல தலித் அறிஞர்கள் எழுதிய புனைவு / அ-புனைவு நூல்களையும் வாசித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் மிருதங்கம் தயாரிக்கப்படும் கேரளா/ஆந்திராவுக்கும் சென்று பல நாட்கள் தங்கி ஆவணப்படுத்தியுள்ளார்.

ஏழு-எட்டு தலைமுறையாக இந்த மிருதங்கம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் செபாஸ்டினுடைய குடும்பத்தினர். செபாஸ்டினுடைய அப்பாவின் பெயர் ஆரோக்கியம். செபாஸ்டியன்தான் முதன்முதலில் முழுமையாக மிருதங்கம் செய்யும் வேலையில் இறங்கியவர். செபாஸ்டியன் குடும்பத்தினர் தலித் கிறிஸ்தவர்கள். இந்த மொத்த தலைமுறையினரின் வாழ்க்கையை அபாரமாக அலசியுள்ளார்.

அவருடைய உழைப்பு பிரமிக்க வைக்கிறது. மிருதங்கம் தயாரிக்கப்படும் இடங்களில் பல நாட்கள் தங்கியுள்ளார். சூளையில் மாடு வெட்டப்பட்டும் இடத்திற்கு சென்று தன் கையால் தோலை உரித்துள்ளார் கிருஷ்ணா என்ற பிராமணர்….. மிருதங்கம் தயாரிக்க இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடுதான் சிறந்தது. பசுமாட்டையும் புதிய கோணத்தில் வெட்டவேண்டும். செத்த மாடு மிருதங்கம் தயாரிக்க உதவாது என்பதையெல்லாம் விரிவாக அலசியுள்ளார்.. கர்நாடக சங்கீதம் ஒரு பிரிவினர் மத்தியில் சிறைபட்டுள்ளதை மீட்டு ஜனநாயகப்படுத்த போராடி வருகிறார். கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்ல பறை இசையையும் முன்னெடுத்து செல்கிறார்…இசையை பொறுத்தமட்டில் மேல்/கீழ் என்ற படிநிலையை முற்றாக மறுத்து அனவருக்கும் இசை என்பது பொதுவானது என எடுத்து செல்கிறார்,,,

இந்த நூலில் கர்நாடக சங்கீதத்தின் உச்சிக் குடுமியை பிடித்து உலுக்கி இருக்கிறார்…

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : செபாஸ்டியன் & சன்ஸ்

நூலாசிரியர் : டி.எம்.கிருஷ்ணா

வெளியீடு : வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.₹383/-

நூலறிமுகம் எழுதியவர்:- 

நவனிகண்ணன்

 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *