மலையேற்றம் |Malaiyetram - வளவ. துரையன்

காமம் வெல்வது எளிதோ?

சங்க இலக்கியம், மரபிலக்கியம், நவீன இலக்கியம் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும், சிறுகதை, கவிதை, நாவல், மரபுக்கவிதை, புதுக் கவிதை, கட்டுரை என பல தளங்களிலும் தடம் பதிக்கும் வளவ. துரையன் அவர்களின் புதிய நூல், (34 ஆம் நூல்) “ மலையேற்றம் “ எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

தொகுப்பு 17 சிறுகதைகளை உள்ளடக்கியது. அனைத்துமே நல்ல வாசக அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது. எளிய, அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையே இவர் கதைக் களமாக்குகிறார். அதனாலேயெ எளியம் வாசகர்களைக் கவரும் விதமாக இவருடைய கதைகள் விளங்குகின்றன.

அண்ணன், தம்பிகளுக்கிடையே நிகழும் சின்னச் சின்ன மன விலக்குகள் யாரோ ஒரு நல்ல உள்ளம் படைத்த ஒரு பெரியவரின் மூலம் தீர்க்கப்படுவது, சிறிய நகரம், அல்லது கிராமத்தில் பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த பெரியவர்கள் நகர வாழ்க்கையின் மனிதர்களோடு ஒட்டாத வாழ்க்கை வாழ கஷ்டப்படுவது போன்றவை அநேகமாக பலருடைய வாழ்க்கையில் சந்தித்திருக்கக் கூடிய நிகழ்வாக இருக்கும். பெற்றோர், பிள்ளைகள் உரசல், வயதான காலத்தில் அவர்களைப் பார்த்துக் கொள்வதில் வரும் போட்டி இதெல்லாம் அநேக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வு. ஆனால், இந்த நூலாசிரியரோ இந்தக் கதைகளில் எல்லாம், பெற்றோர் பிள்ளைகளைப் புரிந்து கொள்வது போல முடிக்கிறார். அது வயதில் பெரியவர்களின் பக்குவப்பட்ட மனதைக் காட்டுவதாக இருக்கிறது.

பழகுவதில் வித்தியாசமாக, இரு பாலரோடும் சகஜமாகப் பழகும் பெண்களை இந்தச் சமுதாயம் எப்படி பார்க்கிறது, குலத்தால் தாழ்ந்தவர்கள் என இந்தச் சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கும் மனிதர்களை, உயர்ந்தவர்கள் என வரையறுத்து வைத்திருக்கும் மனிதர்கள் எப்படி ,வஞ்சகமாக ஏமாற்றுகிறார்கள் என்பன போன்ற சிறுகதைகளை சாதாரணமாக எழுதிக் காட்டுகிறார் வளவ. துரையன்.

தொகுப்பின் பல கதைகள் மனிதனால் வெல்ல முடியாத காமம் என்ற புள்ளியில் மையம் கொள்கிறது. காமம் என்பது உடல் சார்ந்த காமம் மட்டுமல்ல. பொன், பொருள், சொத்து, அடுத்தவர் உழைப்பு என எதன் மீதும் மனிதருக்கு உள்ள தீராத ஆசை எல்லாமே காமம்தானே? “ காமம் “ என்ற தலைப்பிடப்பட்ட கதையை கதாசிரியர் ராமாயணத்தின் சூர்ப்பனகையை எடுத்துக் கொண்டு புனைவாக எழுதியிருக்கிறார். அது கதை சொல்லும் உத்தியிலும், கதையின் சாரத்திலும் சற்றே வித்தியாசமாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. புதிய கோணத்தில் வாசகனைச் சிந்திக்க வைக்கிறது. தர்மம்தான் இராம காதைக்கே என்ற அடிப்படையை அசைத்துப் பார்க்கிறது. சற்றே விவாதத்தைக் கிளறக் கூடியதாகவும் இருக்கிறது.

ஆனாலும், தர்ம நிலையிலிருந்து பிறழ்ந்து வாழும் ஒரு அரக்கியின் பார்வையில், தர்மம் என்பது மறைந்தும், காமம் என்பது மட்டுமே தூக்கலாகவும் தோன்றும் என்பதால், இது அரக்கர் பார்வையில் என்று வேண்டுமானால் சமாதானம் கொள்ளலாம். “ தாசி மரம் ” என்ற கதையும் சற்றே வித்தியாசமான மனிதர்களைக் காட்டுகிறது. நிறைய பணம், உயர்ந்த பதவி எல்லாம் இருந்தும், அவற்றையெல்லாம் வேண்டாம் எனத் துறந்து விட்டு பண்டாரங்களாக அலைபவர்களைத் துரத்தும் காமம் பற்றிப் பேசுகிறது.

பணம், பதவி, சொத்து என எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு வெளியில் வர முடிந்தவர்களுக்கு, பெண் மேலான காமத்தை மட்டும் உதறித் தள்ள முடியவில்லை. பெண் உறவே வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் மீண்டும் அதையே விரும்புகிறார்கள். புத்தனாய் வாழத்தான் எல்லோரும்
ஆசைப்படுகிறார்கள். ஆனால், காமத்தைத் துய்க்கவே மனம் அலைகிறது.. தலைப்புக் கதை, “ மலையேற்றம் :” ஒரு அமானுஷ்யக் கதை போல இருக்கிறது. வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானது. இதிலும், காமமே மையம். ஜமீந்தார் மகளை இளைக்க வைப்பதாக சாமியார் ஒருவர் மலைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்ன என்பதை வாசகனால் ஊகிக்க முடிகிறது என்றாலும், கதையின் சுவாரசியம் குன்றாமல் கதையை வளர்த்திச் சென்றிருப்பதுதான் கதாசிரியரின் வெற்றி. மறைமுகமாக, போலிச் சாமியார்களின் முகத்திரையையும் லேசாகக் கிழிக்கிறார்.

“ விக்ரகம் “ என்ற கதையும் சற்றே வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள கதை. மலையேற்றம் கதை போலவே இந்தக் கதையும், தொகுப்பில் சுவாரசியமான
ஒன்று. திட்டமிட்டுத் திருடும் ஒரு கள்வனின் கதை. ”என் உள்ளம் கவர் கள்வன்” என்று நாயன்மார்களால் பாடப்பெற்ற இறைவனன்றோ கள்வன்?

அந்த இறைவனது விக்கிரகத்தையே திருட நினைப்பவன் கள்வனாக முடியுமா? என்று வாசகன் முகத்தில் குறுநகை பூக்க வைக்கும் கதை. காத்தவராயனின் மரணம் “ கதை, பிள்ளைகள் பெற்றோர் வைத்திருக்கும் சொத்தின் மீது தீராத காமம் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. “ முடிவு “ என்ற சிறுகதை, ஒரு மகளின் மாத வருமானத்தின் மீது ஆசை வைத்திருக்கும் ஒரு தகப்பனின் நிலையைக் காட்டுகிறது நொண்டி வாத்தியார், வழக்குரை காதை போன்ற கதைகள் பள்ளியைக்
களமாகக் கொண்டவை. ஆசிரிய, மாணவ உறவுகளை மிகவும் அருமையானதாகக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. நொண்டி வாத்தியார் கதையில் வரும் வாத்தியார், உடலால் ஊனமுற்ற போதிலும் உள்ளத்தால் உயர்ந்த மனிதராக இருப்பது, அரிதான மனிதர்களில் ஒருவர்.

வழக்குரை காதை இன்றைய சூழலில் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியைகளுக்கு இப்படி ஒரு மாணவன் இருக்க மாட்டானா என்ற ஏக்கத்தைத் தரக் கூடியது. சமீபத்தில் ஒரு அரசுப் பள்ளியிலிருந்து ஓர் ஆசிரியர் மாறுதலில் வேறு பள்ளிக்கு அனுப்பபடும்போது, அந்தப் பள்ளியின் அந்த ஆசிரியரை அந்தப் பள்ளியை விட்டுச் செல்லக் கூடாது என்று கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியை எல்லாம் காண முடிந்தது. அந்த அளவுக்கு அந்த ஆசிரியர் மாணவர்கள் உள்ளம் கவர்ந்தவராக செயல்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட இந்த்க் கதை காட்டுகிறது. தம் மனம் கவர்ந்த ஆசிரியையை, கல்வி அதிகாரி தேவையில்லாமல் கண்டிக்கும்போது, அந்த ஆசிரியரைக் காக்க வேண்டிய பொறுப்பு தங்களுடையது என போராடும் மாணவர்களைப் பார்க்கும்போது ஆனந்தமும், ஆச்சரியமும் பெருகுகிறது.

மொத்தத்தில் எளிய வாசகனைக் கவரும் கதைகளைக் கொண்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டுள்ளதால், சலிப்பின்றி வாசிக்க முடிகிறது நூலாசிரியர் வளவ. துரையன் அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர். , சிறப்பான முறையில், அழகான அட்டைப் படத்தோடு இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

நூலின் தகவல்கள்:- 

நூல் : மலையேற்றம்

நூலாசிரியர் : வளவ. துரையன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

நூலைப் பெற44 2433 2924

விலை : ரூ.₹160/-

நூலறிமுகம் எழுதியவர்:- 

எஸ்.ஜெயஸ்ரீ

 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *