அந்த சுற்று வட்டார கிராமங்களுக்கு எங்க ஊரு தான் பெரிய ஊரு.
பாண்டியர் நில வந்தனமா? சோழர் கால நில வந்தனமா? என தெரியாது. சுற்றி சுற்றி விளைகள். இன்னைக்கு பெரிய ஊராகிற்று.
கோயில்கள்ல பாண்டிய மீன் கொடி இலட்சினையாய் இருக்கும். அதனால பாண்டிய கால நில வந்தனமாய் மனதுக்கு தெரிந்தது.
ஆனால், வந்தயிடம் சோழர் இடம். நகர்ந்து இருந்த  இடம்…. பாண்டிய இடம். அதே காலக் கட்டத்தில் இராச இராசன் பல குடிகளை குமரி மாவட்டத்தில குடியமர்த்தி இருக்கான்.
இதுல நாங்க கொஞ்சம் வித்தியாச படுகோம். எட்டிய தூரத்தில் எந்த ஊரும் கிடையாது. இது மட்டுந்தான் ஊரு. மீதியெல்லாம் விளை தான்.
அகன்ற தெருக்கள், ராஜ வீதிகள், நடுவில ஊரம்மன், குளம், குளம் என பல.
ஒரு தெருவில நாலு கார் போகலாம். யார் நிர்மாணித்தார்கள்…. யார் உருவாக்கினார்கள் என சிந்தனை ஓடிட்டே இருக்கும்.
சுற்றி பல விளைகள். பல தென்னைமரங்கள் நடுநடுவே வீடு.
குட்டி கேரளா மாதிரியே …
அந்த விளைகளுக்கும், தோப்புகளுக்கும்
ஏதோவொரு தேவைக்கு போயிருப்போம்.
அப்பா நிலங்கள் இழந்த கடைசி காலம்.
இப்பொழுதும் ஞாபகம் ….
ஒரு தடவை தான் மனது சொல்கிறது.
ஆனால், அந்த விளைகளில் உள்ளவங்களுக்கு என்னைத் தெரியும்.
அந்த அப்பா மட்டுமே ….. ஊரறிந்த பண்ணையார். ஊர்ல இரண்டு விதத்தில மனிதர்களை அறிவாங்க.
ஒன்று அனைத்தையும் வைத்திருப்பவர். மற்றொன்று அனைத்தையும் இழந்தவர்.
அப்பா, அந்த கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருப்பர்.
அப்பா…. வெள்ளந்தி . யாரைப் பார்த்தாலும், என்னப்பே என்பார். ஆனால் கோவக்காரர்.
அந்த பாசத்திற்கு அடங்காதவர் எவரும் இலர்.
அதுனால , எல்லாருக்கும் தெரியும்.
இன்னைக்கு ஊருக்கு போனாலும்,
‘எப்பம் வந்து…..’
என்னைக்கு போகு….’
என சில பேர் கேட்பார்கள்.
என பழைய மணம் அடிச்சிட்டே இருக்கும்.
அப்படியொரு அண்ணன்.
அந்த அண்ணனை அந்த விளையில ஒரு தடவை பார்த்து இருக்கேன்.
கட்டை உருவம், கால் மேல் கட்டிய கைலி, நெற்றியில் சிகப்புக்குறி, வெள்ளை நிறம்.
எப்போதும் அந்த நாலு முக்கு சந்திப்பில்
பார்த்தால் சிரிப்பான்.
நானும் சிரிப்பேன். அதுவொரு மரியாதை சிரிப்பு. அது அப்பாவின் பின் புலம்.
‘தெருவுக்க உள்ள புள்ள’ என்கிற கனிவு,
அந்த மரியாதையை பெற்றுக்கொள்வது
சாதாரண விசயமல்ல.
அதற்கென தனிப்பாடம் வேண்டும்.
எப்பவும் சிரிப்பு.
என் மனம் கேட்கும். அப்பாக் கூட இந்த அண்ணன் ஒரு தடவை தானே பார்த்தான்.
இப்படி சிரிக்கான் என கேள்வி கேட்பேன்.
அந்த சிரிப்பு தொடர்ந்து.
அவனின் வெள்ளந்தியும் இணைந்தது.
எப்படியோ என்னைப் பார்த்து ஒரு மேல் மட்டவுணர்வு.
ஒரு நாள் ….
‘புள்ளோ சர்பத் குடிக்கியா’ என கேட்டது போன்ற ஞாபகம்’
‘வேண்டாம் அண்ணே’ என சிலிர்த்துப் போயிருக்கேன்.
அப்படியே ….
அந்த உறவுகள் இரு ஆண்டுகள் கடந்தது.
ஒரு நாள்….
காலை,
செய்தி தாள் வாசிப்பதற்காக ஊரைச் சுற்றி வந்து கொண்டிருந்தேன்.
ஜே….. ஜே…. என ஒரு கூட்டம்.
மேலிருந்து கீழ் நோக்கி நடந்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட பதினைந்து பேர் சூழ்ந்த கூட்டம்.
நடுவில் ஒரு பெரியவர் ….. வழி நடுத்துகிறார்.
நடுவில் ஒருவன்.
அவன் பின் கை கட்டப்பட்டும்,
முகம் சுண்டியும் ,
தலை கலைந்த நிலையில்.
கழுத்தில் ….
சிலேட்டில்,
இவன்
திருடன் ….. என எழுதப்பட்டு இருந்தது.
கூட்டம்,
மக்கா, புள்ளோ கேட்டய, இந்த பய ….
நடுச்சாமத்தில் நம்ம புஷ்பக்கா வீட்டு காமோண்டக்குள்ள சாடி குதிச்சு, குத்துப் பேணியை தூக்கிட்டான் இந்த சவத்து பய …. நடு சாமத்தில எல்லாரும் கூடி எல்லாரும் பிடிச்சு, நம்ம …. ஊர் தலைவரு, வந்து …. பிடிச்சு கேட்டா, அந்த ஊரு…. போலீசு ஸ்டேசன் போறோம் என கடந்துக் கொண்டே இருந்தது.
அப்படியே பார்த்தேன்.
அவன்….
நான் பார்த்த
‘அந்த அண்ணன்’
என்னைப் பார்த்தேன்.
‘புள்ளே, நல்லாயிருக்கியா?’
என அவன் வாய் முணு முணுக்கவேயில்லை.
தலைக் கவிழ்ந்து போய்க் கொண்டிருந்தான்.
இப்போதும், அந்த அண்ணனின் முகம் தேடிக்கொண்டிருக்கிறேன்.
‘புள்ளே நல்லாயிருக்கியா’
என்கிற கனிந்த அன்பிற்காய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *