தலைக்கு ஒரு வேலை. இவனுக்கு ஃப்ளக்ஸ் போர்டு கட்டுதல். “நா உள்ளருந்து பாக்குறே சிவா… நாகராஜ அனுப்பு…” என்றான்.

சிவா கால் மாற்றி நின்றான். “அதுக்குன்னு ஒரு கூர்ம வேணும்டா… சொன்னதச் செய்யி..”

கல்யாண ஆசை கைகூடி நிற்கிறது. கலக்கமுற்று அவன் நிற்பதைக் காண விரும்பவில்லை. துண்டுத்தாளை வாங்கினான். இருபது. மலைப்பாக இருந்தது. “இருபதா!.. என்ன சிவா?…” என்றான்.

“எரநூறு கட்டலாம்… அம்புட்டு வளந்திருக்கு ஊரு…” திகைப்பில்லை சிவாவிடம்.

வெளீர் ஒளியில் மினுங்கியது மகால். பிரம்மாண்டங்களைத் தேடும் சிவா. அ.ஆ விலிருந்து அரசியல் புள்ளி விபரம் வரை நட்பு. அதிகம் பேசிப் பயனில்லை.

எல்லாம் பெரிதுதான். சாதாரணத்திலிருந்து அசாதாரணம். விளக்கைத் தேய்த்ததும் பூதம் வந்து விட்டது. அப்படி என்ன பெரிதான வருமானம். தம்பிகள் இருவர். ஐந்தாயிரம், ஆறாயிரம் அளவில் சம்பளம். ஆயிரம் கூடுதல் சிவாவுக்கு. அவ்வளவுதான். தீவனக் கடையில் பில் எழுதும் அய்யா. கூடினால் தினம் நூறு. அம்மா சத்துணவு ஆயா. அதிகம் சொல்வதற்கில்லை.

இவன் வீட்டில் தம்பிகள் சம்பாதிக்கவில்லை. கடைசித் தம்பி மேல்நிலைப் பள்ளியில். நடுவுலவன் கல்லூரியில்.  அண்ணன் எனக் கை குறையச் சம்பளம் இவனுக்கு கதிர்வேல் ஸ்டோரில். பைக் ஷோரூமில் படுத்து எழுந்து வரும் அப்பா. போனால் போகிறதென்று காபி செலவுக்குக் காசு. நொண்ட வேலை நொடி வேலைகளில் திண்டாடி வீட்டோடு கிடக்கும் அம்மா. தங்கை என ஒருத்தி மணமாகி நான்கு ஆண்டுகளில் மூன்று பிள்ளைகள். வசந்த விழா, செவிப் பொன் சேர்ப்பு விழா, சுருக்கி அடித்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா. தேடி எடுத்து மொய் வசூலிக்கும் அவளது புருஷன்.

செட்டிங்ஸ் பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. தோட்டா தரணிகள் கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உறவுக்காரர்கள் குழுக் குழுவாய் அமர்ந்து பேசினர். விரிப்புக்களையும் சரி செய்தனர். விளிம்பு கட்டிப் போன மாடி அறைகளுக்கு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டும் சிலர் நடந்தனர்.

ஐநூறு ரூபாய்த் தாளை நீட்டினான் சிவா. “தனதாளுகளுக்குச் சாப்பாடு கீழ இருக்கு… போயிச் சாப்பிடு” என்றான்.

“இப்பப் பசி ஒன்னுமில்ல… நீ கூப்பிடும் போது வீட்ல சாப்பிட்டுக்கிட்டுத்தா இருந்தே…” இவன் கிளம்ப ஆயத்தமானான்.

“முழிச்சுக் கிடந்தா பசிக்கும்…” என்றபடி பாக்கெட்டில் கைவிட்டான். இன்னொரு ஐநூறை நினைத்திருக்கலாம். ஆனால் இரண்டாயிரம் வந்தது. இன்னும் விட்டான். இரண்டாயிரம். எடுக்க எடுக்க இரண்டாயிரம். கட்டிலிருந்து உருவுகிறான் போலும். கட்டு என்றால் நூறு. பாக்கெட் மணியே இரண்டு லட்சம். பிழைத்துக் கொள்வான்.

பணமதிப்பு நீக்கம் யாருக்காக ...

பணமதிப்பு நீக்கத்தின் பலன். பதுக்கி வைப்பவர்களுக்கு வசதி. செதுக்கிச் செலவு செய்பவர்களுக்குச் சிக்கல். ஒரு விதத்தில் ஐநூறே போதுமென்றிருந்தது. பகற் பொழுதுகளிலேயே இரண்டாயிரத்திற்குச் சில்லரை கிடைப்பது குதிரைக் கொம்பு. வேலை முடிந்து கூட்டாக வருவோர் படும் அவதி சொல்லி மாளாது. அலைந்து திரிந்து வாங்கிப் பகிர்வதற்குள் அடுத்த நாள் வந்து விடும்.  டாஸ்மாக் கடைகளெனில் ஒரு குவார்ட்டராவது வாங்க வேண்டும். பலசரக்கு மளிகைகளில் நூறு இருநூறுக்குப் பார்சல். ஹோட்டல்களில் வெயிட்டாக ஒரு பார்சல். தலை பிய்ந்த கருவாடுதான்.

ஐநூறை வாங்கி இரண்டாயிரம் தந்தான் சிவா. “வச்சுக்க… வேறெதுவும் செலவு வரும்… வேலையாளுக நல்லா சாப்பிடணும்ல… அவக வாய் ஒண்ணு திய்ங்கும்… இல்ல பேசும்… எதுக்கும் மூடாது…”

அளவு கோலில் மாறுபட்டான் சிவா. ஆருயிர் நண்பனுடன் பேசுவது போல் தோன்றவில்லை. உழைப்பைக் கொச்சைப்படுத்தும் இடத்தில் வந்து நிற்கிறான்..

ப்ளக்ஸ் ஏற்றிய டெம்போ ஆயத்தமானது. “காத்துக்கு ஆடாம கணக்கா கட்டணும்…” ஏவல் தொனியில் சொன்னான் சிவா. முதலாளி மாப்பிள்ளை. பணம் பத்தும் செய்யும்..

செண்டை மேளக்காரர்கள் கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்கள். கல்யாணக் கூட்டம் எதிர் கொண்டது. சிவாவின் அப்பா தோள் தொட்டார். “ராஜேஷ் டிபன் முடிஞ்சுதா?…” அம்மா பின் வந்தாள். “என்னப்பா ஓ பிரண்ட் என்ன சொல்றான்?…” இவனது கை பிடித்தாள். “அவனுக்கென்னம்மா ராசா…” என்றபடி இவன் கீழிறங்கினான்.

ஒரு மண்டபத்திற்கு ஐயப்பன் படிக்கட்டுகள் தேவையில்லை. அதுவே அழகு என்று வைத்திருக்கலாம். அது கோவிலுக்குப் பொருந்தும். நோய் நொடிக்காரர்கள் பாடு திண்டாட்டம். அதிகம் சதை வைத்தவர்கள் ஆள் துணையின்றி தாலிகட்டைக் காண முடியாது. ஏதுவானது பிள்ளைகளுக்குத்தான். ஏறி இறங்கி ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்.

முதல் ஃப்ளக்ஸ் வைக்கும் இடத்தில் வண்டி நின்றது. நெடுந்தாள் எடுத்தான். வரிசையாய் சென்டர்கள். அரசியல் கட்சியில் இருந்தால் தலைவர் ரேஞ்சில் வருவான் சிவா. பந்தல் காண்ட்ராக்டர் ஓட்டுனர் சீட்டிலிருந்து நீங்கினான். வேலையாட்கள் அரிவாள் கயிறு சகிதம் குதித்தார்கள்.

துவங்கும் போதே களைப்பு வந்தது இவனுக்கு.  பட்டியல் தாளுடன் ஒரு தாளாகவே வந்தது இரண்டாயிரம். ஆகாலத்தில் மாற்றும் வரை அது மற்றொரு காகிதம்தான். புழக்கத்திற்கு வந்த நாள் முதலே அதன் மீது ஈர்ப்பு இல்லை. அட்டையில் பிய்த்து பொடுசுகள் விளையாடும் நோட்டு போலவே இருந்தது.

சந்தை கேட்டுகளில் டீக்கடைகள் மூடும் வேளை. இருபதும் முடிக்க இளைப்பு வந்து விடும். மூன்றுதான் முடிந்திருக்கிறது. நான்காவதற்குள் ஒரு தேனீர் விழ வேண்டும். பங்களா மேடு, பாரஸ்ட்ரோடு கடைகள் மூடியிருப்பார்கள். நள்ளிரவு தாண்டி கடைகள் கூடாது என்கிற உத்தரவு இருந்தது. நடுச்சந்தை கடை கேட் சிவதாசன் மட்டும் அடையா நெடுங் கதவம் வைத்திருப்பான். உத்தரவுகள் அவனுக்கு அல்வா கிண்டுவது போல். பாரா போலீஸ், ஊர்க்காவல் படை ஒன்றுக்கு நாளு என ஊற்றிக் கொள்வார்கள். யூனிபாமிலும் பாக்கெட் வைத்துத் தைத்திருப்பதை அவர்கள் உணர்ந்ததில்லை.

வாணி சில்க்ஸ் எதிரில் ஏழாவது ஃப்ளக்ஸ் இறக்கினார்கன். புதினைந்துக்குப் பத்து, இருபதுக்குப் பதினைந்து என அளவுகள் மீறின. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இவன் நொந்து போயிருந்தான். ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.’ சிவாவும் செல்வரதியும் பிணைந்திருந்தார்கள். திரைக் கலைஞர்கள் தோற்றார்கள். திருமணத்திற்கு முன் இத்தனை தேவையா? யாருக்குக் காட்டுகிறார்கள், ஏனிந்த அவலங்கள்? புனிதமானதில்லையா? ‘இச்சையோடு பார்த்தால் விபச்சாரம் செய்தாயிற்று’ விவிலிய வாசகங்கள் ஓடின.

Meghalaya govt allows wedding ceremonies in religious places ...

கடைசிவரை கண்ணுக்குக் கண் பார்த்துக் கொள்ளாமல் தாலி கட்டும், முதலிரவும் முடிந்த காலையில் முகங்கள் விழுந்து கொண்ட காலங்கள் நினைவில் நின்றன. ஏழைத் திருமணம் ஒன்றை ஒரு ஃப்ளக்ஸ் முடித்து விடும். இருபதுக்கு இருபது ஜோடி. மெகா திருமணம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஸ்பான்சர். வாவரக் காய்ச்சி மரத்திற்கும், மின் கம்பத்திற்குமாக நின்ற தட்டியில் ‘நாகலோகதவம்’ இருந்தான். ‘அன்றலர்ந்த மலர் ஒன்று இன்று முதல் உன்னுரிமை’ கவிப்பேரரசைக் கதற வைத்தான். தவமணி என்கிற நாகலோகதவத்தின் கவிதை ஒன்று முல்லை மலரில் முன்பு வந்திருக்கிறது.

பத்தைத் தொட்டார்கள். இன்னும் பாதி. தர்மர் எடுத்து மூடுவதற்குள் செல்ல வேண்டும். தூங்கிக் கிடந்தால் தெரியாது. விழித்து நடந்தால் வயிறு பிய்த்துப் பிடுங்கும். எண்ணெய்க் குளியலில் கோழிக்கறி போல் வறுத்தெடுத்துப் போடுவான் புரோட்டாவை. கொதிக்க கொதிக்க ஊற்றுவான் சால்னாவை. நிச்சயம் நான்கைந்து எலும்புகள் அதில் விழும். நொருங்கி விழுந்து பதமாகும் புரோட்டாவின் ருசி சேர்த்து இரண்டு கேட்க வைக்கும். தேவையோ இல்லையோ,  தேங்காய்ச்சட்னி, தக்காளிச்சட்னி, காரச்சட்னி, வெங்காயச்சட்னி, மல்லிச்சட்னி, புதினாத்துவையல் என இலை நோக வைப்பான். அறுசட்னி அரசன். முட்டையைப் பலவிதங்களில் பண்ணித் தருவான். பணியாரம் போல் கும்மென்று வரும் கரண்டி ஆம்லேட்டிற்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். குறுகிய காலத்தில் பைபாஸ் ரோட்டில் இருபது சென்ட் தேற்றினான் தர்மர். புது பஸ் ஸ்டாண்ட் வந்த பிறகு ஒரு கோடியில் மதிப்பு எகிறியது.

இறுதிப் பரிமாறல்களில் இருந்தான் தர்மர். வேலையாட்கள் அவன் எடுத்துத் தருவதை இலைகலில் சேர்த்துக் கொண்டிருந்தனர். கடை கண்ணிகள் ஒர்க்ஷாப்புகள் முடித்து வந்தவர்கள் விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன ராஜேஷ் ரெண்டாங் கெட்ட நேரம்”? கல்லாவுக்கும் கல்லுக்குமாக இருந்த தர்மர் கேட்டான். தெருத்திருப்பத்தில் இவன் வீடு. கடைசியில் அவன் இருந்தான். நுழைந்தாலும் வெளியேறினாலும் கண்ணுக்குக் கண். ஒரு புன்னகை., ஒரு சொல் எதுவாவது இருக்கும்.

“சிவாவுக்குக் கல்யாணம்…” இழுத்தான்.

“அதே உத்திக்கு உத்தி வாரயான்னு காளவாச மொதலாளியக் கூப்பிடுறானாமே… அவெ எம்புட்டுப் பெரிய ஆளு… சாரட் வண்டியில கல்யாணம் பண்ணுனவெ… ர~;யாவுல தொழில் நுட்பம் கத்துக் கிட்டவெ…” தர்மர் ஊர்ப்புள்ளி விபரங்களில் வல்லவன்.

“ஒங்களுக்கப் பத்திரிக்க குடுத்தானா அண்ணாச்சி…”

பந்தல் காண்ட்ராக்டர் கடைக்குள் நுழைந்தான். தட்டி கட்டும் ஆட்கள் மேஜைகளைப் பிடித்தார்கள்.

“குடுக்காம என்னா… எனக்கென்னா அவெ விரோதியா? ஏங் கஸ்டமர்தான… நாள் தவறுனாலும் பார்சல் தவறாது…” என்றவன் வியப்பு மேலிடச் சொன்னான். “விரிச்சுப் படுக்கலாம் போல … அம்புட்டுப் பெரிய பத்திரிக்க… ஒன்னுக்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி எடுத்திரலாம் போல… இம்புட்டுக் காசு எங்குட்டுய்யா சேந்துச்சு…”

அனைவரும் அமர்ந்தார்கள். இலைகள் விழுந்தன. இத்தனைக்குப் பின் சில்லரைத்தட்டுப்பாடு வருவதற்கில்லை. எனினும் கை கழுவும் வரை கமுக்கமாக இருக்க வேண்டும்.

அதில் கொஞ்சம் இதில் நிறைய என்று மீந்த மாவுகளில் முழு விருந்தையும் படைத்து முடித்தான் தர்மர். எழுநூற்றிப் பத்து பில். நல்ல வேளை இரண்டாயிரம் தந்தான். எடுக்க எடுக்க ஐநூறு வந்திருந்தால் இன்னொரு ஐநூறுதான் கிடைத்திருக்கும். ஆயிரத்திற்குள் அனைத்தையும் நடத்த வேண்டும். வண்ண மயமாய் வெளிப்பட்ட தாளை வாங்கிக் கொண்டான் தர்மர். “ரெண்டாயிரமா?” என்றான் முதல் தடவை பார்ப்பதைப் போல்.

‘ஏ… பாத்ததேயில்லியா… பொழக்கத்துக்கு வந்து எம்புட்டுப் பேர சாக வச்சிருக்கு…’ கேட்கத் தோன்றியது. மாற்றும் வரை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இழுப்பறையில் நோட்டுக்கள் பிதுங்கின. எம்பி வருவதை இரு கைகளால் அமுக்கினான். முக்கால்வாசி மூடினான். எடுப்புக் கடை போல்தான். மாலை மூணு மணி. நள்ளிரவு பண்ணிரன்டு. அதற்குள் இவ்வளவு. கல்லா திமுறுகிறது. ‘இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு…’ என்று நினைத்துக் கொண்டான்.

தர்மர் நிதானித்தான். வாங்கிய மாத்திரத்தில் உள்ளே போட்டு விடவுமில்லை. நாள் தோறும் பார்க்கும் ஆள். தேங்குகிறான். இருப்பது அது ஒன்றுதான். பிதுக்கி எடுத்தாலும் வேறு வருவதற்கில்லை.

“இத எங்க வாங்குன?…” நோட்டை டியூப் லைட்டுக்கு நேரே தூக்கிப் பிடித்தான்.

“என்ன அண்ணாச்சி… என்னவாம்…? நம்ம சிவாதான் குடுத்தான்…”

“அவெஞ் சேப்புலயே போயி வச்சு விடு…” மீந்து வரும் மாவை வழித்து வட்டக்கல் முழுக்க இழுகினான்.

‘அவெஞ் சேப்புலயே வய்க்கிறதுக்கா இம்புட்டுத் தூரம் வாங்கியாந்தே…?’ உள்ளுக்குள் எழும் எரிச்சலை அமிழ்த்திக் கொண்டான்.

“பட்டப் பகல்ல எங்கியாச்சும் குடுத்திருந்தீங்கன்னா கதையே வேற… இது கள்ள நோட்டு… எப்பயுமே பெரிய பெரிய நோட்டுக்கள ஒரு தடவைக்குப் பத்துத் தடவ கவனிச்சு வாங்கனும்… நம்பர் எப்படி விழுந்திருக்கு… கம்பி இருக்கா… ஒரிஜினலா… ஜெராக்ஸா… ஆயிரத் தெட்டப் பாக்கணும்… விசுக்குன்னு வாங்கி சேப்புல வச்சுக்கக் கூடாது…” முகம் துவங்கி முழுசும் வேர்த்திருந்தான் தர்மர். நிறம் விளங்காத கைலி பணியனுடன் குதிர் போல் தெரிந்தான்.

“சிவா அப்படியாப்பட்ட ஆள் இல்ல… அவன்ட்டருந்து எப்படிக் கள்ள நோட்டு வரும்?…” பதட்டத்தை மறைக்க முயன்றபடி இவன் கேட்டான்.

“வெளுத்ததெல்லாம் பால்னு பேசுறே… கூடுதல் மதிப்பு நோட்டுக… இப்பல்லாம் பிக்பாக்கெட்காரய்ங்களப் பெரிய கோடீஸ்வரனாக்கிடுச்சு… நூத்தக் கெடுக்குமாங் குறுணிங்கிற மாதிரி… நல்ல காட்டுல கள்ளத் தாளு சேந்து யோக்கியங்கள அயோக்கியங்களாக்கிடுச்சு… குறுக்கு வழீல சம்பாதிக்கணும்ங்கிற உணர்வு ஒருத்தருக்குச் சொந்தமா என்ன?…” பரமசிவன் கழுத்துப் பாம்பு கருடனை விசாரிக்கிறது. மாவு பிசைகிறவன் மனசைப் பிசைகிறான்.

இந்த இரவில் ஏன் வந்தோம் என்றிருந்தது. ஒரு வேலையாகப் போய்விட்டேன் என்று நழுவியிருக்கலாம். முகூர்த்த வேளையில் வந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்கலாம். எவன் தாலி கட்டினால் என்ன, எக்கேடு கெட்டுப் போனால் என்ன? இப்படியா எதற்கும் வசதியாய் இரண்டாயிரம் இருக்கும். அதிகாரம் இருக்கிறது ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்கிற மதிப்பில் முழு நோட்டுக்களாக அடிக்காமல் விட்டு விட்டார்கள். பதுக்கிச் சேர்க்க இன்னும் வசதியாக இருந்திருக்கும். உலகக்  கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கூடியிருக்கும். பணம் வீங்கினால் என்ன, இளைத்தால் என்ன?

தர்மர் என்பதால் தலைப் பாகையோடு போயிற்று. வேறொருவன் என்றால் ‘கள்ள நோட்டுக் கொண்டாந்து ஒரு கட்டு கட்டிட்டியா?’ என்று பிடித்துக் கொள்வான். போலீஸ் வந்து நிற்கும். துருவி விசாரித்து கடைசியில் புது மாப்பிள்ளை கரங்களில் மாலைக்குப் பதில் விலங்கு பூட்டி விடுவார்கள்.

தொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பந்தல் காண்ட்ராக்டர் இவனிடம் வந்தான்.

“இன்னும் பாதி கட்டணுந் தம்பி… லிஸ்டக் குடுத்துட்டு நீங்க போறதுன்னா போங்க… கொஞ்சமாச்சும் தூங்கி எந்திரிச்சாத்தான மாப்ளத் தோழனா மணவறையில நீங்க நிய்க்க முடியும்…” என்றவன் ஈரக் கைகளை அழுந்தத் துடைத்தவாறே இன்னும் நெருக்கினான்.

“வேல முடிய பளபளன்னு விடிஞ்சுரும் தம்பி… டீத்தண்ணி ஊத்தனும்… டீசல் போடணும்… மிஞ்சுனதக் குடுங்க… சிவாத் தம்பிகிட்ட கணக்குச் சொல்லிக்கிறலாம்…”

 

அல்லிஉதயன்

2 thoughts on “சிறுகதை: இழப்பின் அதிர்வுகள்..! – அல்லிஉதயன்”
  1. எளிய உழைப்பாளிகளையும் குறுக்கு வழிகளில் இறங்கத் தூண்டும் பொருளாதார/சமூக/ அரசியல் நிலைமைகளை, கையில் பிடித்த நீரில் தெரியும் வானம் போல இந்தக் கதை காட்டுகிறது.

    அப்படி ஒருவன் தவறான வழியில் இறங்குவதால் அவன் மீதான மதிப்பு சரிவதுதான் இழப்பு. அதனால் நட்பு மனதில் செயற்படுவது அதிர்வு.

    “கை குறைய சம்பளம்”, “…மாற்றும் வரையில் வெறும் காகிதம்தான்” இன்று எல்லாம் வருகிற சொல்லாடல்கள் நல்ல செதுக்கல்.

    அன்றாடம் பார்க்கிற மனிதர்களில் சிலரின் பார்க்க முடியாத பக்கங்களைப் பார்க்க வைக்கிற இப்படியான எழுத்தாக்கங்கள் சமூகத்தை வெளிச்சத்திற்கு இட்டுச் செல்ல உதவும்.

  2. நல்ல அழுத்தமான. நேர்த்தியான கதை சொல்லல். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை அல்லிஉதயன் உணர்த்துகிறார். தவளை நடை அருமை. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *