C. Subba Rao's Sila Idangal Sila Puthagangal Book Review by Karthi DaVinci. Book Day is Branch of Bharathi Puthakalayam.



நூல்                                 :  “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”
ஆசிரியர்                     :    ச. சுப்பாராவ்
வெளியீடு                    :    பாரதி புத்தகாலயம்,
                                                7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
                                                சென்னை 600 018

விலை                           :     ரூபாய்  140.00

புத்தகம் வாங்க       : https://thamizhbooks.com/

முதலில் ஒரு விசயம், இதுவரை நான் எந்த ஒரு பயணக் கட்டுரைத் தொகுப்பையும் வாசித்ததில்லை. முதன்முதலாக நான் வாசித்த முழுத் தொகுப்பு, சில இடங்கள் சி புத்தகங்கள் தான். முதலில் இதைக் கண்டபோது என்னவிதமான நூலாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் பின் அட்டையையும் உள்ளடக்கத்தையும் படித்து பார்த்தபோதுதான் பயணக்கட்டுரை என்று தெரிந்து கொண்டேன். அதிலும் இந்த நூலுக்கும் எனக்கும் நெருக்கம் மிக அதிகம். மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு ஒரு படி மேலே ஆகத்தான் இருக்கும். பல இடங்களில் பல நூல்களில் ஐரோப்பாவைப் பற்றிப் படித்திருக்கிறேன். பல திரைப்படங்களில் கண்டு ரசித்திருக்கிறேன்.
ஐரோப்பிய கண்டத்தின் இலக்கிய உலகம் எந்தெந்த இடங்களை தனக்குள் பதிவு செய்து வைத்திருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு வாசிப்பு நூலகம் சுற்றித் திரிந்து, தன்னுள் கரைந்த இலக்கியத்தின் இன்னொரு பரிமாணத்தில், கண்டு ரசித்துவிட்டு வந்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டேன் அந்த வாசிப்பு நூலகம் தோழர் சுப்பாராவ்தான். அவரை பலமுறைக் கண்டு பேசிய அனுபவங்கள் உண்டு. முதல்முறை கோவையில் இளம் படைப்பாளர்கள் படைப்பூக்க முகாமில் மொழிபெயர்ப்பையும் அதன் அவசியத்தையும் அவர் அன்று கூறினார். அப்போது நான் மொழிப்பெயர்ப்பில் மூலத்தின் வார்த்தைக்கும் பெருமொழியில் வார்த்தைக்கும் உள்ள வேறுபாடுகள் தத்ரூபங்கள் பற்றிய உரையாடல் நிகழ்த்தியிருக்கிறேன். சேலத்தில் ஒருமுறை தனது வாசிப்பு அனுபவங்கள் எவ்வாறு தொடங்கின என்று உரையாடிய இடத்திலும் அவருடன் இருந்திருக்கிறேன்.

நல்ல வாசிப்பாளர் என்ற முகம் மட்டுமின்றி, சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பலவிதமான வாசகங்களை கொண்டிருக்கும் ஆளுமை.முகநூல் வழியாக சுப்பாராவ் ஐரோப்பிய சுற்று பயணத்தில் இருந்ததை அறிந்திருந்தேன். எப்பொழுது நாம் இதுபோல பயணம் மேற்கொள்வது என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

கலிலியோவின் வாழ்க்கை வரலாற்றை படித்த அனுபவம் இருப்பதனால் அவருக்கு நடந்த அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் எந்தளவுக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்தார் என்பதை நன்கு அறிவேன். அறிவியல் கருத்துக்களை அவர் நேர்மையாக வெளியில் சொன்னபோது அறிவியலை வளர்க்காத திருச்சபை, அவர் கண்ட உண்மைகளை முழுமையாக மறைத்து அது முழுக்க முழுக்க பொய் என்று ஒரு வெறும் பிரச்சாரம் என்றும் அவர் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.
இவன் சாக்ரட்டீசைப்போல இவன் பலரையும் மயக்கிவிடுவான் ஆகையால் செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்று அவனது வாழ்நாள் இறுதியில் வீட்டுச்சிறையில்வைக்கப்பட்டு, பைத்தியம் பிடித்து இறந்து போனார். அவரது வலிக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது ஆய்வுகள் இல்லையேல் அறிவியல் வளர்ச்சியே அன்றைய காலகட்டத்தில்இருந்திருக்காது.

சாக்ரடீசின் சீடர் ப்ளேட்டோ குகை மனிதர்கள் கதையை உருவாக்கினார். ஒரு குகையில் மனிதர்கள், கைகள் கால்கள் எல்லாம் கட்டப்பட்டு குகையின் ஒரு சுவரை எதிரில் பார்த்தபடியே இருக்க, அவர்களுக்கு பின்பு நெருப்பு எரிந்து கொண்டிருக்க, அதனால் எழும் ஒளி வெளிச்சமும் அதனூடாக வரும் இவர்களின் நிழல்களும்தான், இவர்களுக்கு வாழ்நாள் முழுக்க தெரிந்தது. அவர்களிலிருந்து ஒருவன் மட்டும் வெளியேச் சென்று உலகைக்காண்கிறான். அதிசயித்த அவன் இவர்களிடம் வந்து சொன்னால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று குகைச் சுவற்றின் வெளிச்ச நிழல்களையே கடைசிவரைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் போலத்தான் இன்றைய மனிதர்களும் என்று ப்ளேட்டோ கூறுகிறார்.



டான் பிரவுன் எழுதிய ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் என்ற நாவலில் ஒரு இடத்தில் வரும் கருத்து, ‘கலிலியோ வாழ்ந்த காலகட்டத்தில் அச்சடிக்கப்பட்ட நூலாக இருப்பின் அதை தண்ணீரில் தூக்கி வீசினால் போதும், அதற்குள் இருக்கும் எழுத்துக்கள் அனைத்தும் கரைந்து விடும்.’ அப்படியிருக்கும் அந்த காலகட்டத்தில் அவரது கட்டுரைகளை ஆய்வுகளை திருச்சபை நிறுத்தி வைத்திருந்தது. அவற்றில் ஒன்றை எடுத்து கையாள்வதாகத்தான் அந்த கதை நடக்கும். அறிவியலா மதமா..? இந்த இரண்டில் எது மக்களின் தேவை என்று விவாதிக்கப்படும். இறுதியில் ஒரு பாதிரியார்தான், மக்களுக்கு இரண்டுமே தேவையானதுதான் என்று சொல்லி, கலிலியோவின் தடைசெய்யப்பட்ட ஒரு ஆய்வுக்குறிப்பை பரிசாகக் கொடுத்து இனி மேல் திருச்சபையைப் பற்றி கொஞ்சம் மென்மையாக எழுதுங்கள் என்று வேண்டுகோள் வைப்பார். லேங்டன் முயற்சிக்கிறேன் என்று மட்டும் சொல்வதையும் அதனால் நானும் இந்த கட்டுரையை மென்மையாகவே முடிக்கிறேன் என்று சுப்பாராவ் ஓரிடத்தில் முடித்திருக்கிறார்.

லூவர் மியூசியத்தைச் சுற்றிப் பார்த்து அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதை உள்ளடக்கத்தில் கண்டபோது ஏற்கனவே சொன்னதுபோல ஆர்வம் தொற்றிக் கொண்டது. ராபர்ட் லேங்டனாகவும் டேன் பிரவுனாகவும் என்னை நானே நினைத்து உருவகித்து சிலாகித்து இருக்கிறேன். டேன் பிரவுனின் முக்கியமான படைப்பான டாவின்சி கோட் நாவலை மொழி பெயர்க்க முயற்சித்த காலமும் உண்டு.

லூவரின் ஊடாக எவர் நடந்து செல்லும்போதும் டாவின்சி கோட் நாவலை நினைக்காமல் இருக்க முடியாது. மூன்று கிலோ மீட்டர் அளவுக்கு மொத்த கட்டிடத்தின் தூரம். லட்சக்கணக்கான கலைப் பொருட்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. முழுமையாகக் காண்பதற்கு ஆண்டுகள் ஆகும்.

அங்குதான் மர்மப்புன்னகைக்கு பெயர்போன மோனாலிசா காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் மட்டுமே அங்கு முக்கியமானவள் அல்ல அதைத்தாண்டி 40000 கலைப்பொருட்கள் உள்ளன என்பதும் பார்வைக்கின்றி மட்டுமே இதைவிட பத்து மடங்கு பொருட்கள் உள்ளன என்றால் பாருங்களேன்.. லூவரின் பிரம்மாண்டம் அத்தகையது. இந்த இடம் குறித்த சில நூல்களை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஆனால் எனக்கு லூவர் என்றதுமே டாவின்சி கோட் படமும் ஃபேன்டம் இன் த லூவர் என்ற படமும்தான் மனதில் தோன்றின. ஏனெனில் பின்னதில்தான் படம் முழுக்க லூவரிலேயே எடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அது லூவரின் பிரம்மாண்டத்தில் ஒரு சதவீதம்தான்.

ஆனால் இந்நூலில் லேங்டனின் பாதை வாட்டிகன்வரை சென்றிருக்கிறது. நாட்டுக்குள் ஒரு நாடு என்று வாட்டிகனைப் பற்றியும் அங்குள்ள பிரபலமான தேவாலயங்களையும் பார்த்துவிட்டு எழுதியிருக்கிறார். குறிப்பாக. புனித பீட்டர் தேவாலயம் பற்றியும் அதன் மீதான தனது எண்ண ஓட்டங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

அதேப்போல சிஸ்டைன் சேப்பல். அதன் நீண்ட ஓவியங்களை கண்டு வியப்பதோடில்லாமல் அதனையொட்டி, இர்விங் ஸ்டோன் எழுதிய ‘அகனி அன்டு எக்ஸ்டசி’ நாவலில் மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கைமுறைப் பற்றி அத்தனை விரிவாக இருக்கிறது என்றும் அதல் சில இடங்களையும் எடுத்து காட்டியுள்ளார். அதிலும் மைக்கேல் ஏஞ்சலோவை அதிகார மனதில் மேற்கூறை முழுக்கஓவியங்கள் வரைந்து நிரப்புஎன்று ஆணையிடுகிறார். அடிக்கடி முடிந்ததா என்று கேட்டுக்கொண்டேயிருப்பாராம் போப்.

ஓவியம் எப்போது முடியுமோ அப்போதுதான் என இவரும் பதில் சொல்வாராம். ஒரு கட்டத்தில் போப் கோபமாகி பிரம்பால் அடிக்கிறார். போப்பிடம் வான்கா மன்னிப்பு கேட்கிறார். போப்பும் மனதில் வைத்துக்கொள்ளதே என்று கூறி பொன்னை பரிசளிக்கிறார். இப்படியான ரசிக்கும்படியான காட்சிகளைக் கொண்ட அகனி அன்டு எக்ஸ்டசி நாவலை எடுத்து காட்டுகிறார். அதிகாரத்திலிருப்பவர்களுக்கும் கலைஞர்களைக் கண்டு சிறிது பயம் இருக்கும்போல. மைக்கேல் ஏஞ்சலோவின் பியேட்டா சிலையையும் நூலில் காட்டியிருக்கிறார். இறந்த ஏசுநாதரின் உடலை மடியில் ஏந்திய கன்னி மேரியின் சிலைக்கு பியேட்டா என்று பெயர். இந்த பெயரைக் கேட்டதுமே கிம் கி-டுக் படமான் பியேட்டாதான் மனதில் தோன்றியது. இப்படி இன்னும் நிறைய சிலைகள், ஓவியங்கள்..!

ஹிட்லரினுடைய நாஜிப்படையின் கொலைக்குற்றம் கொஞ்ச நஞ்சமல்ல. கொத்து கொத்தாக கொன்றனர். தேடித்தேடி கொன்றனர். அந்த கொடூரங்களைபலபேர் பதிவு செய்து வைத்தனர். அவர்களில் ஒருவர்தான் ஆனி ஃப்ராங்க். அது மிக நேரடி சாட்சியமாக அமைந்துவிட்டது. இதையெல்லாம் கடந்து ஒரு திரைப்படம்கூட அந்த கொடூரங்களை திரையில் காட்ட திணறுகிறது. உதாரணமாக ‘சன் ஆஃப் சால்’ என்ற படத்தில் ஒரு காட்சி, நாயகன் பலரையும் கூட்டிக்கொண்டு வதைமுகாமில் ஒரு அறைக்குள் செல்கிறான். அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வெளியே வருகையில் தீப்பற்றி எரியும் அவர்களின் ஓலங்கள் காதில் கேட்க கேட்க வெளியே வருவான். அதேப்போல, ஒரு ஆற்றின் கரையில் வண்டி வண்டியாக கொட்டிக்கிடக்கும். அதை அள்ளி அள்ளி ஆற்றில் போடவேண்டும். அதை செய்ய நாயகன் வந்தபோது அதைக்கண்டு மனம் நொந்து அப்படியே உரைந்து விடுவான்.



இப்படியான காட்சிகள் கொண்ட ஏராளமான படங்கள் உள்ளன. நாஜிக்களில் சிலர் மட்டும் சில விசயங்களை செய்யாமல் நிறுத்தி விடுவர். அப்படித்தான் நாஜிக்களின் தளபதி வான் கோல்டிட்ஸ் பாரிஸ் நகரின் அழகை காக்க வேண்டி அங்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொண்டாராம். ஆனால் அவர் கைதாகிப் போகும்போது பாரிஸ் மக்கள் அவர்மீது காரி உமிழ்ந்தார்களாம். கோல்டிட்ஸ் என்ன.? ஹிட்லரே பாரிஸை மிக மிக அழகான நகரம். இதை நான் கைப்பற்றியப் பின்புதான் பார்க்கிறேன் என்று சொன்னாராம். எது எப்படியாயினும் பாரிஸ் நகரம் என்றுமே அதன் அழகை மக்களுக்கு பகிர்வதில் பாரபட்சம் காட்டுவதேயில்லை. அதேப்போல விக்டர் ஹியூகோவின் வீட்டிற்கு போனாலும் நோட்ரி டேம் தேவாலயம் போனாலும் அங்கே மராமத்து பணிகள் நடப்பதாகவும் சொல்லியிருக்கிறார். பாரிஸிலும் அதனருகிலும் உள்ள இடங்களில் எனக்கு முதல் தேர்வே இந்த இரண்டு இடங்கள்தான். பிறகுதான் ஐஃபில் டவர்.
தமிழகத்தில் அரசு அருங்காட்சியகங்கள் எப்படி ஆளரவமின்றி தனியாகவே கிடக்கின்றனவோ, அதேப்போல நெதர்லாந்தின் தனித்த ஒரு ஊரில் காட்டுக்கு நடுவில் ஒரு நாஜி வதை முகாம் இருப்பதை கதைகளில் படித்துவிட்டு அறிந்திருந்தவர் அந்த நாட்டிலேயே இருக்கையில் பார்க்காமல் இருப்பாரா.? பஸ் கூட செல்லாத இடம் அதற்கு நடந்தே சென்று பார்த்துவிட்டு மனம் கனத்து வந்திருக்கிறார். அங்கிருக்கும் அருங்காட்சியகப் பணியாளர்கள், இப்மடி ஒருவர் இந்த இடத்தைத் தேடி வந்திருப்பதை ஆச்சர்யமாக கண்டதையும் ஆங்கிலம் தெரியாமல் வேறொரு பெண்ணை அழைத்து வதை முகாமை சுற்றிக்காட்ட அனுப்பியிருக்கிறார். நம்ம ஊர் அருங்காட்சியங்களில்கூட இப்படிதான் இருக்கிறது. இந்த கட்டுரையைப் படிக்கையில் எனக்கு இப்படித்தான் தோன்றியது.
பல உயிர்கள் பலியான அந்த இடத்தில் அந்த ஆங்கிலம் தெரிந்த பெண்ணுடன் சுற்றிப் பார்த்துவிட்டு பலியானவர்களைப்புதைத்த இடத்தில் பூட்ஸ் கால்களுடன் நிற்கவே கால் கூசியிருக்கிறார். ஒரு மனிதனின் உள்ளே சக மனிதர்கள் மட்டுமின்றி இறந்தவர்களுக்கும் மரியாதை உண்டு என காட்டிய இடமாக நான் பார்க்கிறேன். நமது ஊரிலும் முள்ளிவாய்க்கால் இருக்கிறது. அதுவும் பார்ப்பாரற்று கேட்பாரற்றுதான் கிடக்கிறது.

வான்காவின் வாழ்க்கை வரலாற்றை படித்து விட்டு இப்படி ஒரு கலைஞனா என்று உருகி இருக்கிறேன். பிரஸும் வண்ணக் கலவையும் வாங்க கூட காசு இல்லாமல் சுற்றித் திரிந்த அந்த கலைஞனின் ‘பொட்டேடோ ஈட்டர்ஸ்’ என்ற படைப்பு உலகப் பெரும் கலை பொக்கிஷங்களில் ஒன்று. வறுமை வாட்டி எடுத்த போதும் கலைக்காகவே தன்னை உருவகித்து கொண்டவன். ஏனெனில் பொட்டேட்டோ ஈட்டர்ஸ் ஓவியத்தில்தான் வான்காவின் கலைத் திறமை முழுக்க முழுக்க வெளிப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு முகத்திலும் தெரியும் முகபாவனைகளிலிருந்து கை அசைவில் இருந்து விரல் நுனிவரை இருப்பது அந்த வலி மட்டும்தான்.

வான்காவிடம் நாம் கற்றுக்கொள்ள ஒரு விஷயம் உண்டு. தன் வாழ்வில் தனக்கு எது இயல்பாக வந்ததோ அதை மட்டுமே இறுதிவரை விடாப்பிடியாக பிடித்திருந்து அதில் தன்னைப் பதித்துக் கொண்டவன். அது காதலானாலும் சரி, ஓவியக்கலை ஆயினும் சரி, அல்லது அவனை வாட்டி எடுத்த வறுமையானாலும் சரி.
இர்விங் ஸ்டோன் பற்றி சிறிதேனும் அறிந்திருந்திருக்கிறேன். வரலாற்று ஆவணங்களை நுணுக்கமாக ஆராய்ந்து எடுத்து அதன் அடிப்படையில் தனது புனைவைக் கட்டமைத்து எழுதக்கூடியவர். ‘அழியாத காதல்’ என்று ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதியதன் தமிழ் மொழிபெயர்ப்பில் இரண்டாம் பாகம் மட்டும் என்னிடம் உள்ளது. முதல் தேடிக் கொண்டிருக்கிறேன்.அப்படி வான்காவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து நாவலாக எழுதியதுதான் ‘எ லஸ்ட் ஃபார் லைஃப்.’

நாவலில் வான்கா தங்கி இருந்ததாக குறிப்பிடும் வீடுதான்,‘138 சென்விக் வீதி’ என்பது. அவனது வாழ்வின் மிக முக்கியமான இடம், தன் காதலுக்காக அல்லலுற்று கிடந்த இடம். அதையே சுப்பாராவ் தனது கட்டுரையில் தலைப்பாக வைத்திருக்கிறார். வான்கா அலைந்த அந்த நகரத்து வீதியில் சென்றிருக்கிறேன். வான்கா பயணித்த அதே ரயில் தடத்தில் பயணித்திருக்கிறேன் என்று வான்காவுக்கும் தனக்குமான நூற்றான்டு இடைவெளியை உடைக்கும் பாலத்தை உண்டாக்குகிறார்.
உண்மையில் வான்காவின் வாழ்க்கையை ஆழ்ந்து யோசித்துவிட்டால் எப்படியாயினும் கண்கள் கலங்கும். அந்த கலக்கத்துடனே அங்கிருந்து வந்திருப்பார் என்று தோன்றுகிறது. நூலின் கடைசி கட்டுரையில், ‘துயரத்திற்கென்று தனியே ஒரு மொழி இல்லை, எல்லா மொழியிலும் அது ஒன்று போலத்தானே.! புரியாவிட்டாலும் மனம் கனத்தது’ என்று உலகின் பொதுமொழியைக் கூறுகிறார். இந்த இடத்தில் அவருக்கு ஒரு வேண்டுகோளாய் அமைவது ‘ வான்காவின் கடிதங்களை’ தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் அதை நேரடியாக தமிழில் படித்து, அடக்கிய கண்களை அழ விடலாம். கனமேனும் குறையுமல்லவா.!

ட்ராம் வண்டிகள், போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட், கடல்மட்டத்தில் மூழ்கும் புத்தகக்கடை, தங்கி தின்று தூங்கி படிப்பதற்குறிய புத்தகக்கடை, எங்கெங்கும் இருக்கும் விலையில்லாத குடிநீர், டியூப் லைட்டே இல்லாத ஊர், க்யூப் வடிவ வீடுகள் என நிறைய ஆச்சர்யங்கள் பரவி கிடக்கின்றன நூலில். அதையெல்லாம் வாசித்து பார்ப்பதே சுவை. ஆக ஒரு நல்ல பயணக்கட்டுரை நூலைப் படித்த அனுபவம் முதன்முதலில் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்நூலை வாசித்து ஐரோப்பாவின் இலக்கிய பரிமாணத்தில் பயணிக்கலாம்.!

– கார்த்தி டாவின்சி
மார்ச், 2021.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “நூல் அறிமுகம்: சில இடங்கள் சில புத்தகங்கள் – கார்த்தி டாவின்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *