“சார்..சார்…அந்த தேன்சிட்டு கூட்டை காக்கா என்னவோ பண்ணுது” பாட இடைவேளையின்போது பதறியடித்து வந்து சொன்னான் மாணவனொருவன்.
வெளியில் ஓடி வருவதற்குள் எல்லாம் முடிந்து போனது..அப்படியென்ன கோபம் அந்த காகத்திற்கு..?
அழகாய் பார்த்து பார்த்து தேன்சிட்டு கட்டிய வீட்டை..ஏன் இப்படி செய்தது?
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவிக்கூட்டை, தனது அலகாலும் கால் விரல்களாலும் பிய்த்துப் போட்டது..எல்லாம் சில வினாடிகளில் நடந்து விட்டது.
காகத்தால் சிதைக்கப்பட்ட தேன்சிட்டு கூடு -படம் – வை. கலைச்செல்வன்
காகத்தால் சிதைக்கப்பட்ட தேன்சிட்டு கூடு -படம் – வை. கலைச்செல்வன்
பாவம்..அந்த தேன்சிட்டு இணை..”குய்யோ முறையோ ” என கத்தியபடி கூச்சலிட்டு சுற்றி வருகிறது..காலை 11 மணியளவில் இது நடந்தாலும்,நம் வீடு நமக்கு திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோ தெரியவில்லை…மாலை வரை அவை அங்கேயே கத்தித் திரிந்தன…
இனி மாற்று வழி/வீடு கட்டும்வரை இரண்டு மூன்று நாட்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்தாக வேண்டும்..அது கூட பரவாயில்லை..மீண்டும் இதுபோல நடந்து விடக்கூடாது என்பதில் இவை கவனமாய் இருக்கும்..
தரையிலிருந்து கைக்கெட்டும் தூரம்தான் கூடு..அத்தனை பள்ளி மாணவர்களிடமும் கவனமாய் பார்த்துத் கொள்ளுங்கள் எனக் கூறியதனால் கண்ணுங்கருத்துமாய் பார்த்து வந்தார்கள்..
தேன்சிட்டின் முட்டைக்காக நடந்த தாக்குதல்தான் இது என்பது பின்னர் தெரிய வந்தது..காகங்கள் செய்யும் இரக்கமற்ற செயல்களில் இதுவும் ஒன்று..அதாவது பிற பறவைகளின் முட்டைகளை தின்பது..
வலியோன் அடித்தால் எளியோன் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும்தான் போலிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் எனது கண்காணிப்பில் இருந்த ஒரு தேன்சிட்டு இணை குறித்த பதிவுதான் மேலே இருப்பது.
இப்படிபட்ட ஒரு எதிர்த்துப் போராட முடியாத, அழகிய பறவைதான் தேன்சிட்டு..
நம்மைச் சுற்றி நீங்களும் பார்க்க முடிகின்ற தேன்சிட்டுகளாய் கீழ்க்கண்டவற்றைக் கூறலாம்..
1.ஊதா தேன்சிட்டு (Purple Sunbird – விலங்கியல் பெயர் Cinnyris asiaticus)
2.ஊதாப் பிட்டத் தேன்சிட்டு/ ஊர்த்தேன்சிட்டு (Purple-rumped Sunbird – விலங்கியல் பெயர் Leptocoma zeylonica)
3.லோடென் தேன்சிட்டு (Loten’s Sunbird – விலங்கியல் பெயர் Cinnyris lotenia)
4.சின்னத் தேன்சிட்டு ( Crimson – backed Sunbird – விலங்கியல் பெயர் Leptocoma minima)
முதல் இரண்டு தேன்சிட்டுகளும் சாதாரணமாக அனைத்து இடங்களிலும் காணக்கிடைக்கிறது..மூன்றாவது எப்பொழுதாகவும், நான்காவது மலைப்பகுதிகளிலும் காணக்கிடைக்கிறது.
ஊதாத் தேன்சிட்டு, ஊதாப்பிட்ட தேன்சிட்டு இரண்டிலும் ஆண்பறவைகளை எளிதில் இனங்காணலாம்…ஊதாத் தேன்சிட்டு ஆண்பறவை முழு உடலும் கரு ஊதா நிறம்..இறக்கைகள் கருப்பு நிறம்…தலை, கழுத்துப் பகுதிகள் வெயில் படும்போது எதிரொளிப்பால் ஒரு அழகிய மினுக்கும் நீலம்,பச்சை கலந்த கலவையில் நிறம் தெரிகிறது..
ஊதாத் தேன்சிட்டு (சேவல்) படம்- வை.கலைச்செல்வன்
ஊதாபிட்டத் தேன்சிட்டு ஆண்பறவை பளிச்சென தெரியும் இரண்டுவிதமான நிறக்கலவை..தலை, இறக்கைகள் செம்பழுப்பு (maroon) நிறம்..பிட்டப்பகுதி ஊதா…(Rump- பிட்டம்) நெஞ்சுப் பகுதி மஞ்சளில் தொடங்கி வாலடியில் வெளிர் நிறமாய் முடிகிறது..
ஊதாபிட்டத் தேன்சிட்டு (சேவல்) படம்- வை.கலைச்செல்வன்
பெட்டை (பெண்) பறவைகளில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்..ஏனெனில் பெண்பறவைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோற்றம் கொண்டவை..குட்டிப்பறவையாய் இருப்பதால் நீங்கள் நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும்..முதலில் இரண்டு பறவைகளையும் தொடர்ந்தபடியாய் பதிவு செய்துவிட்டு உங்களுக்குச் சொல்லலாம் என்றிருக்கிறேன்…
ஊதாத் தேன்சிட்டு (பெட்டை) படம்- வை.கலைச்செல்வன்
ஊதாபிட்டத் தேன்சிட்டு (பெட்டை) படம்- வை.கலைச்செல்வன்
இரண்டு படங்களையும் பாருங்கள்..பெட்டை ஊதா தேன்சிட்டிற்கு கண்ணுக்கு மேல் மெல்லிய வெளிர் மஞ்சள் புருவமொன்று இருப்பது தெரிகிறதா? கண்கள் கருப்பு நிறம்..கழுத்து, மார்பு, வயிறு எல்லாமே வெளுத்த மஞ்சள் நிறம்..முதுகுப்பகுதி ஆலிவ் பச்சை நிறமாயிருக்கும்..
பெட்டை ஊதா பிட்ட தேன்சிட்டு கொஞ்சம் வித்தியாசமானது.கண்ணுக்கு மேலுள்ள வெள்ளைப்புருவம் தெளிவாக இருக்காது..இருந்தாலும் மங்கலாக நீளம் குறைவாக இருக்கும்..கண்கள் சிவப்பு நிறமாயும் அதற்குள் கருப்பு நிற கண்மணியும் இருக்கும்..தொண்டைப்பகுதியில் சாம்பல் நிறம் வந்து, அதற்குக்கீழ் உள்ள மார்பு வயிற்றுப்பகுதிகள் மஞ்சள் நிறம் கலந்து காணப்படும்..
லோடென் தேன்சிட்டுகள் மற்ற தேன்சிட்டுகள் அனைத்தைக் காட்டிலும் உருவத்தில் பெரியவை.பளபளக்கும் ஊதா நிறத்தோடு ஆணும், பளபளப்பற்ற ஆலிவ் நிறத்தில் ஊதா தேன்சிட்டை ஒத்த உருவத்திலும் இந்த தேன்சிட்டுகள் இருக்கின்றன..மற்ற தேன்சிட்டுகளைக் காட்டிலும் அலகு நீண்டுள்ளது..இதுவே இதன் தனித்த அடையாளம்.
லோடென் தேன்சிட்டு (பெட்டை) படம்- வை.கலைச்செல்வன்
சின்ன தேன்சிட்டு என்றழைக்கப்படும் Crimson- backed sunbird அளவில் சிறியது என்பதைக் கொண்டும், மலைப்பகுதியில் வசிப்பதைக்கொண்டும் வேறுபடுத்தி அறியலாம்..ஊதாப் பிட்ட தேன்சிட்டைப் போலவே உருவ ஒற்றுமையுடையது..
தேன்சிட்டுகளை இணைகளாகவே பார்க்க முடியும்.தேன்சிட்டுகள் முள்செடிகள், குறுமரங்கள் இவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் பை போன்ற வடிவில் கூடமைப்பன..கூட்டின் உள்ளே நன்கு ‘மெது மெது’ வென பஞ்சால் ஆக்கப்பட்டிருக்கும்..முழு உடலையும் கூட்டுக்குள் வைத்து தலையை மட்டும் வெளியே நீட்டி வேடிக்கை பார்க்கும்.. கீழே உள்ளபடி…
ஊதாபிட்டத் தேன்சிட்டு (பெட்டை) படம்- வை.கலைச்செல்வன்
தேன்சிட்டுகளை உங்கள் வீடுகளுக்கே வரவழைத்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்றால் முருங்கை, செம்பருத்தி, தங்க அரளி, அவ்வளவு ஏன் வாழை மரம் இருந்தால் கூட அதிலுள்ள தேனை எடுக்க வரும்போது நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.
முருங்கையில் தேனெடுக்க வந்திருக்கும் ஊதாபிட்டத் தேன்சிட்டு (சேவல்) படம் வை.கலைச்செல்வன்
வாழைப்பூவில் தேனெடுக்கும் ஊதாபிட்டத் தேன்சிட்டு (சேவல்) படம்- வை.கலைச்செல்வன்
தங்க அரளிப்பூவில் தேனெடுக்கும் ஊதாத் தேன்சிட்டு (சேவல்) படம்- வை.கலைச்செல்வன்
தேன்சிட்டுகள் நீங்கள் நினைப்பதுபோல் தேனைமட்டும் சாதுவாய்க் குடித்து பறந்துவிடும் என நினைத்து விடக்கூடாது.அவை சமயத்தில் சிறு பூச்சிகள், புழுக்கள், சமயத்தில் சிலந்திகளைக் கூட உண்ணும்.குறிப்பாய் இளம் பருவத்தில் பறக்கவியலா நிலையில் கூட்டில் உள்ள குஞ்சுகளுக்கு அதிகளவு புரதச் சத்தினை அளிக்க சிலந்திகளை கொண்டு வந்து இரையாய் ஊட்டுகின்றன..நேரிலும் அப்படி சிலந்தியை பிடிப்பது போன்ற காட்சியை சில மாதங்கள் முன்பு கண்டேன்..
சிலந்தியை பிடிக்கும் ஊதாபிட்டத் தேன்சிட்டு (பெட்டை) படம்- வை.கலைச்செல்வன்
இனி சமூகச் சிலந்திகளுக்கும், தேன்சிட்டுகளுக்கும் உள்ள உறவென்பதைப் பார்ப்போம்
சமூகச் சிலந்திகள் படம்- வை.கலைச்செல்வன்
உண்ணிமுள் மற்றும் சில புதர்ச்செடிகளில் அமைந்துள்ள இந்த சிக்கலான கூடுகள் முதலில் சிலந்தியின் கூடுகள் என்பதில் நாம் தெளிவுற வேண்டும்…
இவை சமூகச் சிலந்திகள் (social spiders) எனப்படும் காலனி வாழ்க்கை வாழும் சிலந்திகூட்டத்தால் ஏற்படுத்தப்படுபவை ஆகும்…இவற்றின் சிறப்பம்சமே மற்ற சிலந்திகள் போல இவை ஒன்றை ஒன்று கொன்று தின்னாதவை ஆகும்..கூட்டாக சேர்ந்து கூடு கட்டுகின்றன..வலிமையான கூட்டின் பின்னலில் விழும் ஈ, வண்ணத்துப்பூச்சி இவற்றை பகிர்ந்து உணவாக்கிக் கொள்கின்றன…இவை எரிசிடே குடும்பத்தைச் சார்ந்தவை..
சமூகச் சிலந்திகள் கூட்டிற்குள் அமைந்த தேன்சிட்டு கூடு படம்- வை.கலைச்செல்வன்
கைவிடப்பட்ட தேன்சிட்டு கூடு படம்- வை.கலைச்செல்வன்
சிறு வயதில் இவற்றைக் கடந்து செல்லும்போது என்னவோ பூச்சிக்கூடு இது என்றெண்ணியவாறு சென்றது நினைவிருக்கிறது…ஆனால் சிலந்தி என்பது தெரியவில்லை…
இதில் பல இடங்களில் தேன்சிட்டு கூடும் உள்ளது.தேன்சிட்டு கூடு எப்படி இந்த சிலந்திக் கூட்டிற்குள் வந்தது?
கூட்டம் கூட்டமாய் இப்படி நிறைய கூடுகளைப் பார்த்து ஒரு வேளை தேன்சிட்டு இந்த இடம் நமக்கு எதிரிகளிடமிருந்து பாதுக்காக்கும் இடமாய் அமையலாம் என யூகித்து கூடமைக்கின்றனவோ என்னவோ?
ஏனெனில் முழு வேலைப்பாடும் முடிந்த ஒரு சிலந்திக்கூட்டை துளையிட்டு அதை தனது வீடாக்கிக் கொள்ள வாய்ப்பு குறைவு…சிலந்திக் கூட்டின் நரம்புகள் அத்தனை வலிமையானவை…தப்பித்தவறி தேன்சிட்டு சிக்கினாலும் பறந்து வெளியேறுவது சிரமமமே…எனவே அத்தகைய விஷப்பரீட்சையில் அது ஈடுபட வாய்ப்பு குறைவு..
சில இடங்களில் தேன்சிட்டு கூட்டில் பஞ்சுகள், நார்கள் இருப்பதைக் காண்கிறேன்..சிலந்திக் கூட்டில் அவை இருக்க வாய்ப்பு குறைவு..
எனவே பாதுகாப்பு கருதி தேன்சிட்டுகள் எதிரிகளை குழப்பும் வகையில் அமைந்துள்ள இடமாக இது இருப்பதால் இது போன்ற இடத்தை தெரிவு செய்து கூடு கட்டலாம், பின்னாளில் அதன் மேலேயே இவ்வகை சமூக சிலந்திகள் கூடு கட்டி மூடி இருக்கலாம் என்பது எனது அனுமானம்..
அல்லது தேன்சிட்டு கூடு அமைந்துள்ள இடத்தையொட்டி பின்னாளில் இந்த சிலந்திகள் கூடமைத்திருக்கலாம்… இது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவருவதால் முழுமையாக தொடர்பை விளக்க முடியவில்லை எப்படியோ இந்த பிணைப்பும் வியக்கத்தக்கதே..!
அன்புடன்,
வை.கலைச்செல்வன்,
Mobile: 96553 00204,
E.Mail: [email protected]