அடச்சீ !நாமும் மனிதர்களா?

நூல்: சோளகர் தொட்டி

ஆசிரியர்: ச.பாலமுருகன்.

உலகில்வாழ தகுதியற்ற ஒரே உயிரினம் மனித இனமே என்ற உணர்வே நூல் வாசிப்பின் முடிவில் மேலோங்கியிருந்த ஒரே எண்ணம். சக மனிதர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படும் போது நாமும் மௌன சாட்சியாக அதற்குப் பின்னால் நிற்கிறோம் என்பதை ஒரு பொழுதும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இதயம் பலவீனமானவர்கள் கூட அவசியம் வாசிக்கவேண்டிய நாவல் இது.

ஆண்டாண்டு காலமாக காட்டை ஆண்ட மக்களின் காட்டு கதறல்களை காட்டுக்கு வெளியே பேசும் நூல்.தொட்டி என்ற ஊரில் வாழும் சோளகர் என்ற பழங்குடி இனத்தவரின் வாழ்வியலும் அவர்கள் மீது வன்மையாக நிகழ்த்தப்பட்ட உச்சம் கடந்த வன்கொடுமைகளின் பதிவே சோளகர் தொட்டி .இப்புதினத்தின் முதல் பாகத்தில் நமக்கு பழக்கமில்லாத கூட்டத் தலைவரான கொத்தல்லி ,முக்கிய பிரமுகரான கோல்காரன் ,முதிர்ந்த பெண்மணியான ஜோகம்மாள்,கதையின் முதன்மை மாந்தரான சிவண்ணா ,அவன் மனைவி மாதி, அம்மக்களால் மறக்க இயலாத பேதன், சிக்குமாதா ,அவன் மனைவி கெம்பம்மாள்  இவர்களோடு ஜடையன், கரியன் , தம்மய்யா, புட்டன், ரதி என்று தொட்டியில் வாழும் மக்களுடன் நாமும் ஒருவராக வாழும் உணர்வை தவிர்க்க இயலாது. வனத்தை தவிர வேறு எதுவும் தெரியாத மக்கள் ஏராளமான பண்பாடுகளை போற போக்கில் கற்றுக்கொடுத்து செல்கின்றனர். காடுகளை தாயாக கருதுவதை,    ” ஒரு சமயம் நாம ஆண்ட பூமியடா இந்த காடு. இந்த காட்டு தாயின் குழந்தைகள் நாம்” என்று கொத்தல்லி தன் மக்களிடம் கூறுவதில் வெளிப்படுகிறது .பெண்கள் வனத்தையே கடவுளாக நம்பியதை “வனம் எல்லா நேரமும் வேட்டைக்காரனுக்கு சாதகமாக இருக்காது அதனை வெறுமே வேட்டைக்களமாக்கி  கோபமூட்டக் கூடாது.

தேவையற்ற எதையும் கொன்றால் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று கெம்பம்மா கூறுவதில் அறியலாம். வேட்டையே முதன்மையாக இருந்ததை மாற்றி விவசாயத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்ந்தனர்.    ” சோளகனுக்கு சுதந்திரத்தை தவிர வேறு என்னடா பெரிய சொத்து”  என்று கோல்காரன் உரைப்பதில் அவர்களுடைய சொத்தை புரிந்துகொள்ளலாம். போலியான நாகரிகத்திற்கு இடமளிக்காமல் மனித உணர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சம வாழ்க்கையை வாழ்ந்தனர். இதை” எனக்கு இன்னமும் காலம் இருக்கிறது.

எனக்கு இன்னமும் பல பிள்ளைகளை பெறக்கூடிய தெம்பும் சக்தியும் இருக்கிறது. அது எனக்கு தேவையும் படுகிறது. என் கணவன் சிக்குமாதா இறந்த பின்னால் என் வாழ்க்கைக்கு ஒரு வழி செய்து வைக்க வேண்டும் “என்று கெம்பம்மாவின் நியாயத்திற்கு அவள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துத் தரும் கொத்தல்லியின் மூலம் உணரலாம். தொட்டிப்பெண்கள் இயற்கை அழகை மட்டுமே விரும்பினர்.சமவெளி மனிதன் துரையனின் நகை ஆசையில் தூண்டப்பட்ட சிக்குமாதா கெம்பம்மாவிற்கு தங்கத்தோடு வாங்கித் தருவதாக கூறிய போது எதற்காக அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் கெம்பம்மாவும் அப்பகுதிப் பெண்களும்  விழிப்பது ஆச்சரியம் என பல பண்புகள் இருந்தாலும் நாம் எக்காலத்தில் இப்படிப்பட்ட பண்புகளோடு வாழ்வோம் என்று ஏங்க வைக்கும் இரண்டு பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது மனித நாகரிகம் எனலாம். முதலாவது குழந்தை வளர்ப்புப் பண்பு.

தங்கள் குழந்தைகளை ஒருபோதும் அவர்கள் அடிப்பதே இல்லை. ஒரு குழந்தைக்கு தகப்பனான சிக்குமாதாவை காவலர்கள் அடிக்கும் பொழுது இதுவரை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அடிக்காத மகன் தன் கண் முன்னாலே வேற்று மனிதர்களிடம் அடி வாங்குவதை கண்டு அவமானம் மட்டுமே கோல்காரனால் பட முடிந்தது. சிவண்ணாவும் தம்மய்யா காவலரிடம் சிக்கி அடிபடும்போது எங்க இனத்தில் யாருமே சிறுவர்களை அடிக்கும் வழக்கம் இல்லை என கெஞ்சுகிறான்.

நாவலில் தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பு, தாய் மகள் உறவு, குழந்தைகளுக்கு இயற்கையும் வாழ்க்கையும் போதிக்கும் மாண்பு நமக்கு கட்டாயப் பாடமே. இரண்டாவது பண்பு தாங்கள் பாடுபட்டு செழிப்பாக்கிய பூமியை வேறொருவன் ஏமாற்றி பிடுங்கியதை எதிர்த்து பேதன் துரையனை  கொல்லத் துணிந்த போது தொட்டி மக்கள் துரையனை காப்பாற்றி தப்பவைத்து பின்னர் அவனால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவன் இறந்த போதும் கூட அவனைப் பற்றி பழி கூறாமல் கடந்து சென்றது நம்மிடம் இல்லாத நாகரிக மாண்பு. இத்தகைய மேன்மையான வாழ்க்கை வாழ்வதை  உணராமல் இயற்கையோடு இயைந்து வாழும் அம்மக்களை காட்டில் வாழ்ந்த வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடிப்படையினர் என்ன கதிக்கு ஆளாக்கினர் என்பதை இரண்டாம் பாகம் கூறுகிறது. அடிக்காதீங்க, எங்களுக்கு எதுவும் தெரியாது , வலிக்குதுங்க, விட்டுவிடுங்க என்ற மக்களின் வலிஓலங்களை  கண்ணீரின்றி படிக்கும் எவராலும் கடக்க இயலாது.ஒரு காலத்தில் வேட்டையை விருப்பமாக கொண்டிருந்த மக்களிடமும் அம்மக்கள் வேட்டையாடிய விலங்குகளிடமும் இல்லாத மூர்க்க ரண வேட்டைப் பண்புகளின் ஒட்டு மொத்த உருவமாகவே வருகிறார்கள் காவலாளிகள். தங்களுடைய மன வக்கிரங்களை வீரப்பனின் பெயரைச் சொல்லி தீர்த்துக்கொள்ளும் ஆட்கொல்லிகள்.

விசாரணை என்ற பெயரில் கணவன் கண் முன்னாலே மனைவி மீது கூட்டுக் கலவையில் தங்கள் வெறியை தணிப்பது, பெண்களாக இருந்தாலும் அவர்களின் குறிகளிலும், மார்புகளிலும் கிளிப்புகளை மாட்டி மின்சாரம் பாய்ச்சுவது, ஆறு மாத கர்ப்பிணியின் மீது கூட பரிவு பார்க்காமல் நான்குபேர் வன்புணர்வு  செய்து கருவைச் சிதைப்பது, ஆண் பெண் வேறுபாடின்றி அவர்களை நிர்வாணப்படுத்துவது, மின்சாரம் செலுத்தப்படும் பொழுது பயத்தால் மலம் கழிப்பவர்களை அம்மலத்தை உண்ண வைப்பது, “என்னை என்ன வேணும்னாலும்  செஞ்சுக்கோங்க என் மகளை விட்டுறுங்க” என கதறும் மாதியின் மகளை எல்லோரும் இருக்கும் அறையில் நிர்வாணமாக கட்டி வைத்து அங்கு உள்ளோரைப் பார்க்கச் சொல்வது, அதே நிலையில் வன்புணர்ச்சி, தந்தை, மகனை மாற்றி மாற்றி செருப்பால அடிக்க வைப்பது , ஒருவனை கொல்ல முடிவு எடுத்தவுடன் தையல் அளவெடுத்து வீரப்பனின் ஆட்கள் அணியும் சீருடையை அணிவித்து காட்டுக்குள் கூட்டிப்போய் சுடுவது என இரண்டாம் பாகம் முழுவதும் வன்முறையின் கோரத் தாண்டவம். அடேய் ஒருவனாவது மனிதனாக நடங்கடா என்ற நமது கூக்குரலுக்கு மிகக் சற்றே ஆறுதல் தருகிறார் சுபாஷ் அதிகாரி .அவனது மனித பண்பு மக்கள் மீது காட்டும் பரிதாபமும், சிறு உதவியும், இயலாமையின் அழுகையே. இம்மக்களைப் பார்த்து பிரம்மிக்க கூடிய ஒன்று மரணத்தைவிட கொடுமையான இன்னல்களை அனுபவித்தாலும் இவர்களில் எவருமே தற்கொலைக்கு துணியாமையே.

குடும்பமே சிதைந்து போனாலும் தனிமனிதராக அவர்கள் வாழவே முயற்சித்தனர் .சாவின் விளிம்பு நிலையையும் தாண்டி அவர்கள் வாழ்வது தன்னம்பிக்கையின் சிகரம். மனித மாண்புகளை அற்புதமாக கற்றுத்தரும் இந்நூல் சோளகர்களின் இனத்திற்கு மட்டுமன்றி மனித குலத்திற்கே ஒரு ஆவணம்.

One thought on “அடச்சீ !நாமும் மனிதர்களா? – தோழர் ரதிகா | புத்தக விமர்சனம்”
  1. அருமை. வாசிப்பாளராக, நீங்கள் எந்த எல்லையை அடைந்து இருக்கிறீர்கள் என்பது உணரமுடிகிறது.உங்கள் வாசிப்பனுபவம் கூடிக்கொண்டே போகிறது.விரைவில் உங்கள் புத்தகங்களுக்கு விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.உங்கள் சிந்தனைகளுக்கு நீங்கள் அடைய வேண்டிய இலக்கு மிகப்பெரியது.வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *