சாமர்செட்டின் (Somerset Maugham) சிறுகதை 'எட்வர்ட் பர்னார்டின் வீழ்ச்சி' (Fall of Edward Bernard)

 

இந்த சிறுகதை இரு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிப்பது அதில் ஒருவன் நட்பிற்காக தன் காதலை மறைத்து தியாகம் செய்வது என்று நமக்கு பழக்கமான கருவில் செல்கிறது. ‘கல்யாணப்பரிசு’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘ஷாஜஹான்’, போன்ற படங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் சாமர்செட் மாமின் கதை திருப்பம் புதுமையானது. கதாபாத்திரங்கள் வசிக்கும் அமெரிக்க பெரு நகரமான சிக்காகோவை விட்டு காதலன் எட்வர்ட் தகிதி தீவிற்கு பணிக்காக செல்கிறான்.

காதலியிடம் இரண்டு வருடங்கள் காத்திருக்க சொல்கிறான். ஆரம்பத்தில் மாதம் ஒரு கடிதம் எழுதும் அவன் பிறகு கடிதம் அனுப்புவதை குறைத்து கொள்கிறான்.

The Fall of Edward Barnardகடிதத்திலும் உணர்வுகள் மாறுபடுவதை காதலி பார்க்கிறாள். இருவருக்கும் நண்பனான பேட்மேன் என்ன பிரச்சினை என்று தெரிந்து கொள்ள தகிதி செல்கிறான். உண்மையில் அவனும் இசபெல்லாவை உள்ளூர காதலிக்கிறான். ஆனால் நண்பனுக்காக அதை மறைத்துக் கொள்கிறான்.

தகிதி தீவிற்கு செல்லும் பேட்மென் அங்கு ஒரு சாதாரண கடையில் பணியாளாக இருக்கும் எட்வர்டை கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

இசபெல்லாவின் மாமா அர்னால்ட் ஜாக்சன் சிகாகோவில் பண மோசடியில் ஈடுபட்டு சிறை தண்டனை அடைந்தவர். அவரும் அந்த தீவில் வசிக்கிறார். அவருடன் எட்வர்ட் நெருக்கமாக இருப்பதையும் பேட்மென் காண்கிறான்.

எட்வர்ட் எப்போது சிக்காகோ திரும்புவான்;இசபெல்லா அவனுக்காக காத்திருக்கிறாள் என்று கேட்கும்போது தான் இங்குள்ள இயற்கை மற்றும் எளிமையான சூழலிலேயே வாழ விரும்புவதாக கூறுகிறான். இசபெல்லாவை பேட்மேன் மணந்து கொள்ளலாம் என்கிறான்.

சிக்காகோ திரும்பும் பேட்மேன் இசபெல்லாவிடம் நடந்தவற்றை கூறுகிறான். அவன் தன் மேல் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் உணர்ந்த இசபெல்லா அவனையே ஏற்றுக்கொள்கிறாள்.

சாதாரண கதைதான். ஆனால் நகர வாழ்க்கை, எளிய தீவு வாழ்க்கை என இரண்டு வேறுபட்ட வாழக்கைகள் மற்றும் நல்லவன், கெட்டவன் குறித்த விவாதம் கதைப் போக்கில் வருகின்றன. முதலாளித்துவ அமைப்புக்குள்ளே தனிப்பட்ட ஒருவர் மோசடி செய்வது பெரும் ஒழுங்கீனமாக இந்தக் கதையில் காட்டப்படுகிறது.

ஆனால் அந்த அமைப்பே பெரும்பான்மை மக்கள் மீதான மோசடி என்பதே நமது கருத்து. செல்வம் சேர்ப்பது, நவநாகரீக ஆடைகள் அணிவது, பெரு நகரங்களில் வாழ்வது போன்ற அமெரிக்க கனவுகளை எளிய வாழ்வுடன் ஒப்பிட்டு முடிவை நம்மிடம் விட்டுவிடுகிறார் கதாசிரியர்.

 TV Theatre" The Fall of Edward Bernard (TV Episode 1951) -  IMDb
Somerset Maugham

தீவில் வசிக்கும் பூர்வ குடிகளை தாழ்ந்த ஜாதி என்றும் அதை சேர்ந்த ஒரு பெண்ணை போய் எட்வர்ட் மணந்து கொள்வது;அவர்கள் உடுத்தும் ஆடைகளை விரும்புவது; என எல்லாவற்றையும் பேட்மேன் அருவருப்பாக பார்க்கிறான்.

ஆனால் அதுவே தனக்கு பிடித்த வாழ்க்கை என்று எட்வர்ட் கூறுகிறான். இவை முக்கியமான இடங்கள்.

இசபெல்லாவிற்காக நண்பனிடம் பேட்மேன் வாதிடுவது ஒரு நேர்மையான நண்பனைக் காட்டுகிறது. அவர்களுக்கு திருமணம் ஆவதாகவும் அவர்களுக்கு பிறகு அவர்கள் குழந்தைகளை தான் வளர்ப்பதாகவும் அவர்களிடம் தான் இசபெல்லாவை நேசித்ததை சொல்வதாகவும் பேட்மேன் கற்பனை செய்வது நம் தமிழ் திரைப்படங்களில் வரும் சென்டிமென்ட் காட்சிகளை நினைவுபடுத்துகிறது.

ஒரு தீவில் கதை நடப்பதாக எழுதும்போது அந்தக் காலத்தில் அங்கே இருந்த வாகனங்கள், அவர்கள் அணியும் ஆடைகள், அதன் பொருளாதாரம் என ஒட்டு மொத்த சூழலையும் சுவையாக சொல்லும்போது சாமர்செட் மாம் ஏன் கதை மன்னன் எனப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

 

எழுதியவர் 

இரா.இரமணன்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *