எனக்கு சூரரைப் போற்று பிடித்தது. 90 களுக்குப் பின் வந்த நாயகர்களில் பிரமாதமான நடிகர் சூர்யா என்பது என் கணிப்பு. சூர்யா நடிப்பில் ஆச்சரியம் இல்லை.
இயக்குனர் சுதா இயக்கத்தில் இறுதிச் சுற்று பார்த்து விட்டு இவர் ரொம்ப முக்கியமான இடத்திற்குப் போவார் எனச் சொன்னேன்.அதனால் அதுவும் எனக்கு ஆச்சரியமில்லை.
தமிழில் sensible scripts தான் பஞ்சம். இப்படி ஒரு கதையை ,main stream சினிமாவாக எடுக்கத் துணிந்த இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும். மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அருகே ஒரு குக்கிராமத்திலிருந்து ஒருவன் அனைவரும் பயணிக்கும்படியான விலையில் விமான சேவை கொடுக்க முடியுமா என்பதுதான் கதை.
வழக்கமான கதா நாயகியாக இல்லாமல் சுதந்திரமான,தன்னம்பிக்கையான,சம்பாதிக்கிற, தொழிலில் அடி வாங்கும் கணவனுக்கு சோறு போடுகிற நாயகி ரொம்பவே அரிது.அந்த வகையில் இந்தப் படம் அரிதுதான்.இந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்ட சூர்யாவையும் பாராட்டத்தான் வேண்டும்.No gender stereotypes,No dumb ,dancing damsels.
இன்னார்தான் இதைச் செய்ய முடியும்.அடைய முடியும் என்கிற தகுதி சங்கப் பலகையைத்தான் இந்தப் படம் உடைக்கிறது.என் வயதுக்காரர்களால்தான் இந்தப் படத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.1960 ல் என் தந்தையிடம் கார் இருந்தது. அப்போது கார் இருக்கும் வீடுகள் ஒன்றோ,இரண்டோதான் இருக்கும். அது கொடுக்கும் அந்தஸ்து, அதன் கூட வரும் இன்ன பிற இத்தியாதிகள் வேறு.இப்போது என் எதிர் வீட்டிற்கு முறை வாசல் செய்யும் பெண்மணியின் மகன் 21 வயதில் லைசென்ஸ் எடுத்தார். ஒரு நல்ல கார் வாங்கினார்.இப்போது ஒரு டிராவல்சோடு இணைந்து வண்டி ஓட்டுகிறார்.கடன் கட்டுகிறார். அந்தப் பெண்மணி ஏசி இல்லாத வண்டியில் என்னால் போக முடியாதம்மா எனச் சொல்கிறார். மகிழ்ச்சி.
Soorarai Pottru' review: Suriya-starrer is bound for a colourful take-off
அதே மாதிரி குடிசைப் பகுதியாக இருந்த ஒரு இடம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு அடுக்கமாக மாறிய ஒரு கால கட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். இன்று அந்தக் குடியிருப்பெங்கும் ஜன்னலில் ஏசி. சென்னை போன்ற நகரத்தில் உழைக்கும் மக்களுக்கும் ஏசி பெரிய லக்சுரி இல்லை.
பல்வேறு எஸ் டி டி ரேட்டைப் பார்த்தவர்கள் நாங்கள்.இரவு 9 மணி வரை காத்திருந்து எஸ்.டி.டி செய்வொம். 96,97 வாக்கில் 15 ஆயிரம் கொடுத்து ஒரு ஏர் செல் போன் வாங்கி வைத்திருந்தேன். வரும் அழைப்பிற்கு 15 ரூபாய். நாம் அழைத்தால் 30 ரூபாய். இன்று கூலித் தொழிலாளர்கள் கையிலும் செல் போன். அது கொடுத்திருக்கும் வாய்ப்பு சொல்லில் அடங்காதது.
முன்பு கல்லூரிகளுக்கு guest faculty ஆகப் போனால் எந்தக் கல்லூரியில் எந்த மாதிரி வசதி உள்ள மாணவர்கள் இருப்பார்கள் எனத் தெரியும்.அந்த நிறம் பெருவாரியாக மாறி விட்டது. அதனால்தான் இளங்கலைக்கே தேவையில்லாமல் கல்விக்கடன் எடுத்து வெளி நாட்டிற்கு ஓடுகிறது இன்னொரு தட்டு. இவர்களும் நாமும் ஒன்றா என்ற உணர்வும் காரணம்.
என் தந்தை அவர்கள் ஊரின் முதல் பொறியாளர்.அது கொடுத்த வாய்ப்புகள் மிகப் பல.இப்போது எனக்கு பூ விற்கும், என் தெரு முனையில் ஆட்டோ ஓட்டும், என் தெருவில் வீட்டு வேலை செய்யும், என் அடுத்த தெருவில் அயர்ன் செய்யும் அனைவரின் பிள்ளைகளும் பொறியாளர்களே. இந்த மாற்றம் இந்த நகரத்தை என்ன செய்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்களால் இந்தப் படத்தை விளங்க முடியும். அது பல்வேறு கற்கோட்டைகளை அசைத்துதான் இருக்கிறது.
அடுத்து இந்த 80 களிலிருந்து விமான சேவைகளைக் கவனித்தவர்களுக்கு அந்த நிற மாற்றமும் விளங்கும். அன்று ground staff ஆக இருப்பதற்குக் கூட கறுப்புத் தோல் கிடையாது. இன்று அப்படி அல்ல. இன்றும் கறுப்பாக air hostess கிடையாது. விலை குறைந்த விமான சேவை மக்கள் வாழ்வில், தொழிலில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்தது. வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து, கையில் கட்டைப் பையோடு முதன்முறையாக பிளேனில் பறக்க ஒரு பெரிய கூட்டம் வந்தது.விமானத்தில் பறப்பது ஆடம்பரம் அல்ல. அத்தியாவசியம். convenience.
Aakasam Nee Haddu Raa Review | Soorarai Pottru Movie Review
அடுத்து ஒரு பிராண்டிற்காகக் காசு கொடுக்கும் நோய். கொஞ்சம் பாருங்கள். 600 ரூபாய் பீட்சாவை டொமினோஸ் விற்றாலும் 35 ரூபாய் பிட்சாவிற்கு மார்க்கெட் உண்டு.அதை விற்கும் பேக்கரி உண்டு. பிராண்டிற்கு ஏன் காசு கொடுக்க வேண்டும் நிறையப் பேர் கேட்பதை நான் பார்க்கிறேன். படமும் அதைத்தான் சொல்கிறது.
அரசாங்கம் கார்ப்பரேட்டுகளால் கார்ப்பரேட் நலனுக்காக இயங்குகிறது எனச் சொல்வதாலும் எனக்குப் படம் பிடித்தது.படத்தில் இருக்கும் சில மிகை உணர்ச்சி,செயற்கைத்தனம் எதையும் நான் பொருட்படுத்தவில்லை. watch it folks!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *