அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்
சுகுணா திவாகர்
எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
மின்னஞ்சல்: [email protected]
www.ethirveliyedu.in
செல்லிடப்பேசி: 9942511302
விலை: ரூ.180/-
வெகுசன ரசனை குறித்த ஒரு எள்ளல் கலந்த ‘கீழான’ மனோபாவம் ‘கலை’ விற்பன்னர்களுக்கு எப்போதும் உண்டு. வெகுசன ரசனை – கருத்தியல் – பற்றிய மாறுபட்ட பார்வையும் வாசிப்பும் பின்நவீனம் சார்ந்து தமிழ்ச்சூழலில் உருவாகி வந்தது. கட்டுடைப்பு, நுண்ணரசியல் சார்ந்த வாசிப்பு, விமர்சனப் போக்குகள் எழுந்து அது வரை ‘புனிதமாக்கப்’பட்டவை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கின. அது வரை ‘கீழானவை’யாகக் கருதப்பட்டவற்றின் சமூகப் பங்களிப்பு – பொதுக் கருத்துருவாக்கம் குறித்த ஆய்வுகளும் தொடர்ச்சியாக மேலெழும்பின. இயல்பாகவே, தமிழ்ச் சூழலில் பெரியார் என்ற பெரும் கட்டுடைப்பு கதாநாயகன் ஏற்படுத்தி வைத்திருந்த சிந்தனாமுறை இவற்றுக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் சினிமா அரசியல் குறித்த சுகுணா திவாகரின் இப்பிரதியையும் நாம் காணலாம்.
குறிப்பான திரைப்படங்களை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள் முதல் பகுதியாகவும், தமிழ்ச் சினிமாவுக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமான பரஸ்பர தொடர்பும், தாக்கமும் அதனால் உண்டான விளைவுகள் குறித்ததுமான கட்டுரைகள் இரண்டாம் பகுதியாகவும், தமிழ்த்திரை ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் இறுதிப் பகுதியாகவும் நூலைத் தொகுத்திருப்பது வாசிப்பு ஒருங்கிணைவுக்கு உதவுகிறது.

ஆளுமைகள் குறித்த கட்டுரைகளில் ‘எம்.ஆர்.ராதா’ மற்றும் ‘வடிவேலு – அர்த்தங்களைக் கலைக்கும் மொழி விளையாட்டும் சிவாஜி கணேசனின் தலைகீழாக்கமும்’ ஆகியவை மிக முக்கியமான கட்டுரைகளாகக் கருதுகிறேன். எம்.ஆர்.ராதா குறித்த தகவல் சேகரிப்புக்கான முயற்சி ஏற்படுத்தும் வியப்பு அதில் என்றால், மொழி – குறியீடு – குறிப்பான் – நவீன கவிதை – அர்த்தம் – அனர்த்தம் குறித்த விளக்கங்கள் மூலம் வடிவேலு பின்நவீன கலைஞனாக முன்னெழுகிறார் பிந்தைய கட்டுரையில்..! எம்.ஆர்.ராதா நம் காலத்திய பெரும் கலகக் கலைஞன்தான் என்பதை நிறுவிச் செல்கிறது முந்தைய கட்டுரை. குஷ்பு குறித்த கட்டுரையில் பேசியவற்றில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ‘தன்னை ஒரு பெரியாரிஸ்டாக’க் கூறிக்கொண்ட – அல்லது உள்ளபடியே ஒரு பெரியாரிஸ்ட் – நிச்சயமாக அடிப்படைவாத அமைப்புக்குள் சென்றிருக்க மாட்டார். இது குறித்து சுகுணா திவாகர் இப்போது என்ன கருதுகிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்த கட்டுரையில் இதனை ஓர் ஈழ ஆதரவுப் பிரதியாகப் பார்ப்பதில் இருந்து விடுபட விரும்புவதாகக் கூறியபடியே, போர் வன்முறை – பழி வன்ம வன்முறை – அதிகாரப்பற்று வன்முறை – ராணுவ வல்லாதிக்க வன்முறைகளைப் பற்றிப் பேசி ஈழம் உள்ளிட்ட அனைத்துப் போர் வன்முறைகளையும் விமர்சித்துச் செல்வது ஆசிரியரின் சிறப்பானதொரு உத்தி. இப்படத்தில், தவிர்க்க முடியாமல் செல்வராகவன் ஈழம் குறித்த நினைவலைகளை படத்தின் இரண்டாம் பாதியில் ஏற்படுத்தியுள்ளதை மறுக்கவியலாது. ஆசிரியர் சொன்னது போல, சோழர் x பாண்டியர் என்ற இருமை எதிர்வுகளை முன்வைத்து அதனைப் பேசியிருக்கத் தேவையில்லை.

‘பெரியார்’ திரைப்படத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அவரது முழக்கம் தவிர்த்திருப்பதை சுட்டிக்காட்டியது முக்கியம். இந்த முழக்கத்தை பலரும் (குறிப்பாக தூய தமிழ்தேசியவாதிகள்) உள்நோக்கத்துடனே தவிர்ப்பதை இதனுடன் ஒப்பு நோக்கலாம்.
உடன் பணிபுரியும் அலுவலக நண்பர் ஒருவர் (தலித் நண்பர் என்பது கூடுதல் தகவல்) ‘பேராண்மை’ படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சிலாகித்தார். இந்நூலில் சுகுணா திவாகர் குறிப்பிட்டுள்ளவாறு, ஒரு வேளை இப்படத்தில் எஸ்.பி.ஜனநாதனின் இந்திய தேச பக்தி, வல்லரசு பெருங்கதையாடலே இத்தகைய வெகுசன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்குமோ?
‘பாகுபலி’ பார்த்தபோதே, அதன் பிரமாண்டம் தவிர்த்து குறிப்பிட்டு சொல்லும்படியான எதுவும் எனக்குத் தோன்றவில்லை. மாறாக, அப்படம் விளிம்பை, அரச குடும்பம் தவிர்த்த ‘பிறரை’, வெகுமக்களை புறக்கணித்தது என்றே எனக்குத் தோன்றியது. பாகுபலி குறித்த ஆசிரியரின் பதிவும் இதனை உறுதிப்படுத்துவதோடு – ‘சத்திரிய தர்ம’ மீட்டுருவாக்கம் குறித்துப் பேசியதும் சிறப்பு.

‘அசுரன்’ குறித்த கட்டுரையும் கூர்நோக்கத்தக்கதே..! பூமணியின் ‘வெக்கை’ நாவலை பூமணியே தலித் பிரதி என்று வகைப்படுத்தாத நிலையில் – அந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அசுரன் தலித் பிரதியாக உருமாறியது வெற்றிமாறனின் படைப்பூக்கச் செயல்பாடே! தான் சினிமாவாக்க முயலும் நூல்கள் விரிக்கும் களத்தோடும் பார்வையோடும் மட்டும் நின்றுவிடாமல், களத்தின் சாத்தியத்தை தன் படைப்புச் செயல்பாட்டால் நீட்டித்து திரைமொழியில் கூடுதல் விரிவோடிய கருத்துருவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவது வெற்றிமாறனின் தனித்துவமும் பலமும் ஆகும். அசுரன் மட்டுமின்றி, ஏற்கனவே இதனை விசாரணையில் கூடுதல் அழகியலோடும் கலைநேர்த்தியோடும் வெற்றிமாறன் கையாண்டிருப்பார்.
வெக்கை பிரதி முழுக்க ஊடாடியபடி இருக்கும் ‘குழந்தைமைக்கு எதிரான வன்முறை சூழல் – வன்முறையால் இழந்த குழந்தைமை’ உணர்வு அசுரனில் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘நில உரிமை’ என்பது முதன்மையான பிரச்சினையாக இருக்கும் ஊரகப் பகுதிகளில் – ‘அசுரன்’ முன்வைக்கும் ‘கல்வி அதிகாரம்’ குறித்தும் கட்டுரை பேசியிருக்கலாம். ஒரு சிறந்த கட்டுரையானது – அக்கட்டுரை பேசப்போந்த விசயம் தொடர்பான வாசகரின் பல்வேறு நினைவோட்டங்களை எழுப்பி பகிர வல்லது என்ற அடிப்படையில் அசுரன் குறித்த எனது எண்ணங்களை இங்கு நூல் மதிப்புரையில் குறிப்பிட வைத்தது இக்கட்டுரையே.

தமிழ் சினிமாவில் சாதி, பெண்கள், வில்லன்கள் குறித்தும் விரிவாகவும் நுட்பமாகவும் பேசுகின்றன இரண்டாம் பகுதி கட்டுரைகள். உச்ச நட்சத்திர நடிகர்களான எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் ஆகியோர் பிற மாநிலத்தவர்களாகவும், தமிழ் சாதி அடையாளமற்றிருப்பதும் தற்செயலானதல்ல – தமிழ் ரசிகர்களின் சாதிய உளவியலின் பாற்பட்டதே என்று நுட்பமாக விவரிக்கிறார் ஆசிரியர். நூல் தலைப்பை கொண்ட கட்டுரையானது தொகுப்பில் சிறந்த ஒன்றாக இருப்பினும் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளது போல் தன்னளவில் மேலும் விரிவாக எழுதப்பட வேண்டிய கட்டுரையாகும்.
தமிழ் சினிமா குறித்த மாற்று சிந்தனை விமர்சன நூல்களில் நிச்சயமாக இடம்பிடிக்கத்தக்க இந்நூல் – வெகுமக்கள் ரசனை வழியே – அதனை இழிவு நோக்காமல்/புறந்தள்ளாமல் – அதனை ஆய்வுக்குட்படுத்தி – வெகுசன திரையாடல்களில் நிலவும் அனைத்து வகை அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தொகுப்பினை நேர்த்தியாகக் கொண்டு வந்திருக்கும் ‘எதிர் வெளியீடு’ கட்டுரைகள் வெளியான தேதி மற்றும் இதழ் உள்ளிட்ட விபரங்களையும் பதிவிட்டிருப்பின் பகுப்பாய்வுக்கு உதவியிருக்கும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.