ஆசிரியர் எனும் “பாடசாலை”
நூல் அறிமுகம்: தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை – வே.சங்கர்
நூல் அறிமுகம்: லட்சுமி பாலகிருஷ்ணனின் ’எழுத்துப் பிழை’ – MJ பிரபாகர்
கற்றல் குறைபாடு
( Learning Disability ) உள்ள குழந்தைகளுக்கான கதை அம்சம் உள்ள அருமையான நூலைப் படைத்துள்ளார் எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன்.
பள்ளியில் பயிலும் மாணவர் மதிப்பெண் குறைவாக பெறுவதும் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையும் உள்ளது.
குறிப்பாக எழுத்து பிழையின்றி அம் மாணவரால் எழுத முடியாத சூழல்.
மாணவரின் தந்தை கடுமையாக தனது மகனை திட்டுகிறார்.
மாணவரின் நிலையை அறிந்து தாய் பள்ளிக்குச் சென்று தனது மகன் குறித்து வகுப்பு ஆசிரியர்களும் விசாரிக்கிறார்.
தனது மகன் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுப்பதும் எதைப் பற்றியும் கவலை இல்லாது ஆடி, பாடி சுற்றித் திரிகிறான் என தெரிவிக்கிறார்.
குழந்தைகள் மனதில் எப்போதும் நிறைய மதிப்பெண்கள் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்காதீர்கள் என்று தாயை கண்டிக்கிறார் வகுப்பு ஆசிரியர்.
அத்தோடு எழுத்துப் பிள்ளைகள் நிறைய உள்ளது என்பதோடு கற்றல் குறைபாடு உங்கள் மகனிடம் தெரிகிறது என விளக்குகிறார்.
உங்கள் குழந்தைக்கு தான் இப்படி வந்து விட்டது என கருதாதீர்கள்.
உலகில் மிகப்பெரிய அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் கூட இது மாதிரி கற்றல் குறைபாடு உள்ளவர்கள் தான்.
கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு அறிவில் எந்த குறைபாடும் இருக்காது. கற்றுத்தரும் முறையில் தான் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மாணவரின் தாயை புரிய வைக்கிறார்.
மாணவரை மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்து கற்றல் குறைபாடு தான் என்ற காரணத்தை கண்டறிகிறார்கள்.
அதன் பின் மாணவர் புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பு ஆசிரியர் பாடம் கற்பித்ததன் விளைவாக மாணவர் நல்ல மதிப்பெண் எடுப்பதோடு பல திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார் என்பதை விவரிக்கும் நூல்தான் இது.
பொதுவாக மூன்று விதமான கற்றல் குறைபாடு உள்ளது.
அதற்கான தீர்வு மற்றும் சிகிச்சை முறைகள் சென்னையில் உள்ள NIEPMD – National Institute of Empowerment with Multiple Disabilities மத்திய அரசு நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது.
தொடர்புக்கு :
மின்னஞ்சல் niepmd@gmail.com
இணையதளம்:
www.niepmd.tn.nic.in
இதுபோன்ற நூல்களை சிறந்த முறையில் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு மிக்க நன்றிகள்.
இந்நூலை மிகவும் அழகாக வடிவமைத்த ஓவியர் சூர்யா ராஜ் மற்றும் மாணவர்களுக்கான எளிய கதையாக படைத்த எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
MJ. பிரபாகர்
நூல் : எழுத்துப் பிழை
ஆசிரியர் : லட்சுமி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹40/-
பக்கம் : 16
வெளியீடு : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
நூல் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராசனின் வன்முறையில்லா வகுப்பறை – மு.ஜெயராஜ்
நூல் : வன்முறையில்லா வகுப்பறை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹110/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
இந்த நூலை வாங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன, வாசிக்காமல் தேங்கிப் போய் இருந்தது. வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழும வாசிப்பு மாரத்தானில் கூட சென்ற ஆண்டு என்னுடைய இலக்கை எட்ட இயலவில்லை. இந்த நிலையில் வாசிப்பை நேசிப்போம் குழு சந்திப்புக்கு சென்ற போது பல்லவனில் அமர்ந்து வாசித்து முடிக்கவும் மாம்பலம் வரவும் சரியாக இருந்தது.
நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை நூலின் தலைப்பே சொல்லி விடுகிறது. மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைக்கு காரணம் என்ன, வன்முறை இன்றி வகுப்பறையை கையாளும் முறைகள் என்ன என்பது குறித்தெல்லாம் அறிவியல், உளவியல் மற்றும் நடைமுறைகள் ஆகிய விஷயங்களை முன்வைத்து ஆய்வு செய்து எழுதியுள்ளார் நூலாசிரியர்.
என்னைப் பொறுத்தவரை “என் சிவப்பு பால்பாய்ண்ட் பேனா“ வுக்கு பிறகு கற்றல் கற்பித்தல் குறித்த மிக முக்கியமான நூல் என்று இதனைக் கூறுவேன்.
“ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்கு பிடிக்கும் என்பதைப் போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதையெல்லாம் செய்தால் தனக்கு பிடிக்கும் என்று கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது. – கரோலின் டிவிக், குழந்தை உளவியலாளர்.
இவ்வாறு துவங்கும் நூலில் உள்ள முதல் புள்ளிவிவரமே நமது பள்ளி அமைப்பின் தோல்வியை பறைசாற்றுகிறது. ஆமாம், 99.1 விழுக்காடு குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்களாம். மத்தியக் கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பள்ளிக் கூட அதிகார சூழலால் பாதியில் படிப்பை துறக்கும் குழந்தைகள் 4 மடங்கு அதிகம் என்கிறார்.
Parents are the teachers in Home; where as Teachers are the parents in School என்று அலங்காரமாக சொல்லிவிடுகிறோம். “ஹலோ பாஸ் கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடாதீங்க, அப்படி எல்லாம் இரண்டு உறவுகளும் ஒன்றல்ல” என்கிறார் ரஷ்ய கல்வியாளர் ஆண்டன் மக்கெரென்கோ. ஆதாரமாக ஒரு வேறுபாட்டு பட்டியலையே தருகிறார்.
இவர அவ்வளவு லேசுபட்டவராக நினைத்து விடாதீர்கள். “குழந்தைகளுக்கு முதல் உரிமை” என்று முழங்கிய இவரது கல்வி முறையினால் தான் 1927 ல் விளையாட்டு பாடவேளை பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ளது.
ஒழுக்க நெறி என்கிற பெயரில் தங்கள் கட்டளைகளுக்கு தலையாட்டும் பிரஜைகளை உருவாக்கும் ஆங்கிலேய கல்வி முறையில் இருந்து இந்த விஷயத்தை மட்டும் உடும்பு பிடியாக கெட்டியாக பிடித்துக் கொண்டு விட மறுக்கிறோம்.
மூன்றாவது அத்தியாயத்தில் மாணவர்களை நாம் தண்டிக்கும் முறைகளைப் பற்றிய பட்டியலை தந்துள்ளார். யுனிசெஃப் அமைப்பின் பட்டியலில் உள்ள அந்த தண்டனை முறைகளை பார்த்தால் நமக்கே பதறுகிறது.
அதே வேளையில் நாங்கல்லாம் பிள்ளைகளை அடிப்பதே கிடையாது என்பவர்கள் கையாளும் நூதன தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். அதை வாசித்தால் “இதற்கு நீங்க அடிப்பதே பரவாயில்லை“ என்கிற அளவில் உள்ளது.
“அந்த காலத்துல எல்லாம் குருகுலத்தில்…“
“நம்மை உள்ளயே உட்ருக்க மாட்டாங்க அதானே?”
“நீங்க குருவா ஆசிரியரா? என்கிற அத்தியாயத்தில் “அந்த காலத்துல எல்லாம் …“ என்று துவங்கும் பழம் பெருமை ஃபர்னிச்சரை உடைக்கிறார். என்னதான் கட்டுப்பாடுகளை திணிக்கும் கல்விமுறை என்றாலும் பிரிட்டிஷ் கல்விமுறைகள் பாகுபாடுகளை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்தன என்று உதாரணங்களோடு நிறுவியுள்ளார்.
வகுப்பறை ஜனநாயகம் பற்றி பேசும் அத்தியாயத்தில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள “தண்டனைகளின் பின் விளைவுகள்“ பற்றி ஆசிரியர்கள் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். இந்த பகுதி எனக்கே பல விஷயங்களில் அறிவுக் கண்களை அகலமாக திறந்தது எனலாம்.
சென்னையில் DPI வளாகம் தான் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலவலகங்களும் உள்ள இடம் என்பது ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனா, DPI என்றால் என்ன? Department of Public Instruction. இது ஆங்கிலேயர்கள் ஆதிக்க மனப்பான்மையுடன் நமது கல்வித்துறைக்கு வைத்த பெயர். இதுவே இங்கிலாந்தில் BCE- Board of control of Education இவ்வாறு செல்லும் அத்தியாயத்தில் நமது கல்விமுறையில் உள்ள ஆசிரியர்களின் தண்டனை வழங்கும் மனோபாவத்தின் நதி மூலத்தை ஆங்கிலேயர் காலம் முதலாக ஆய்வு செய்துள்ளார்.
“எனக்கு பனிரெண்டு வயது ஆகும் வரை எனது பெயர் “ஷட் அப்“ என்று நினைத்திருந்தேன்“ – சார்லி சாப்ளின்
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்வரை நாம் எந்த அளவுக்கு அவர்களை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்பதைத் தான் சாப்ளின் நையாண்டியாக தெரிவித்துள்ளார்.
ஒரு தவறை ஏன் செய்யக்கூடாது என விளக்குவதோடு, எது சரியான செயல் என்பதையும் பதமாக எடுத்துக் கூறுவதன் மூலமும் சரியான செயலை உடனுக்குடன் அங்கீகரிப்பதன் மூலமும் தக்கவைத்தலும் தாத்தா பாட்டிகளின் பரிவும் பாசமும் தோழமையும் மிக்க நெறிபடுத்துதலின் உள்ளடக்கமாக இருப்பதை காணமுடியும் என சரியான உதாரணம் கொண்டு கூறியுள்ளார். மேலும் தற்போதைய குடும்ப அமைப்பில் இது தவிர்க்கப் பட்டு ப்ரீ-ஸ்கூல் கலாச்சாரத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் கூறியுள்ளார்.
மாணவர்களின் ஒழுங்கீனமான நடத்தைக்கான காரணம், அவர்களை புரிந்து கொள்வது எப்படி என்பன பற்றி இரண்டு அத்தியாயங்களில் பள்ளி அளவில் நடந்த சம்பவங்களைக் கொண்டு தெளிவாக விளக்கி கூறியுள்ளார்.
குமரப்பருவ மாணவர்களின் நடத்தை சிக்கல்களை அவர்களின் மூளை வளர்ச்சி குறித்த அறிவியல் ஆய்வுகளின்பால் நின்று ஆசிரியர் தக்க உதாரணங்களுடன் விளக்கி உள்ள இந்த அத்தியாயம் மிகவும் இன்றியமையாத ஒன்று. அறிவியல் மற்றும் உளவியல் வழி நின்று பேசும் இந்த அத்தியாயங்களில் உள்ள பொருட்கள் பி.எட் பாட வகுப்புகளில் வைக்கப் பட வேண்டும்.
மாநிலத்திற்கான புதியக் கல்விக் கொள்கை கருத்துரு உருவாக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்த போது பி.எட் குறித்து பேசவில்லை. பிரிதொரு வேளையில் நண்பர் ஒருவர் கேட்ட போது எழுதிய அனுப்பியவற்றில் பி.எட் வகுப்புகளுக்கான பாடங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் பற்றி கூறி இருந்தேன். முக்கியமாக பி.எட் படிப்பில் Irregular mode என்கிற ஒரு சட்டத்திற்கு புறம்பான தவறான முறை முற்றிலும் இல்லவே இல்லை என்பதை கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். வகுப்பறைக்கு செல்லாத ஒருவர் எவ்வாறு நல்ல ஆசிரியராக பயிற்சி எடுக்க இயலும்?
இதை வாசிக்கும் எனது மாணவர்கள் MJ sir கொடுக்காத தண்டனையா அவரா இப்போது இப்படி பேசுவது என்று நினைக்க கூடும். என்ன செய்வது தலை வழுக்கை ஆன பின்பு தான் என் கையில் சீப்பு கிடைத்தது. நிச்சயமாக வாசிப்புகள் “அடச்சே நாம இப்படி எல்லாம் தவறாக நடந்து கொண்டு இருந்திருக்கிறோமே” என்று வருந்தச் செய்து எனது செயல்பாடுகளை திருத்தி அமைத்தவண்ணம் உள்ளன.
ஆசிரியப் பெருமக்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.
நன்றி: முகநூல் கட்டுரை – மு.ஜெயராஜ்,
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
நாகமங்கலம்.
நூல் அறிமுகம்: ஆயிஷா இரா.நடராசனின் “சர்க்யூட் தமிழன்” – இரா.சண்முகசாமி
நூல் : சர்க்யூட் தமிழன்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
விலை : ரூ.₹100
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
‘கடவுளே… இன்றைக்கு ஒருநாள் மட்டும் ரெஜி இறந்துவிடக்கூடாது’
(கேன்சர் பீடித்த மாணவியைப் பற்றி தலைமை ஆசிரியர் புலம்பல் தான் மேற்கண்ட வரிகள் )
பாரதி புத்தகாலயம் வெளியீட்டில் ஆயிஷா இரா.நடராசன் அவர்கள் எழுதிய ‘சர்க்யூட் தமிழன்’ அறிவியல் கதைகள் நூலில் ‘ரெஜி’ என்கிற தலைப்பிலான கதையை வாசிக்கும் ஒருவர் கண்ணீரை தாரை தாரையாய் வரவழைக்காமல் வாசிக்க முடியாது. அற்புதமான மாணவிக்கும், தலைமை ஆசிரியருக்கும், சக மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் பிணைப்பில் நெஞ்சை உருக வைத்த கதையாக வடித்திருப்பார். ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் எப்போதும் எழுத்துலகின் அரசன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். எந்த நூலை எழுதினாலும் அதில் சமூக தாக்கங்கள் இல்லாமல் நூல் இருக்காது. இன்னும் இந்நூலை முடிக்கவில்லை. அதற்குள் வடித்த கண்ணீர் காயும் முன் எழுதவேண்டும் என்கிற உணர்வில் உங்களோடு பகிர்கிறேன். இன்னும் முடிக்கும் முன்பு என்னென்ன உருவங்களை உள்ளே உலாவ விட்டிருக்கிறாரோ…
2018ல் வெளியான நூல் 2022 செப்டம்பரில் தான் கண்ணில் பட்டது. வாசிக்காத நண்பர்கள் தோழர் Mohammed Sirajudeen அவர்களிடம் அல்லது thamizbooks.com இணையத்தில் பதிந்து வாங்கி வாசியுங்கள் நண்பர்களே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூல் அறிமுகம்: பிருந்தா சீனிவாசனின் “பதறும் பதினாறு” – இரா.இயேசுதாஸ்
நூலின் பெயர் “பதறும் பதினாறு” என்பதால் …பதினாறு…அதையொட்டிய பதின்பருவ குழந்தைகளின் பெற்றோராக உள்ள உறவினர்…தோழர்களுக்கு வாங்கிய விலைக்கு கொடுப்பதே நோக்கம், ஆனால் நூலின் உள்ளடக்கம் பதறுவது பதினாறல்ல… பதினாறின் அம்மாவாக…அப்பாவாக….உள்ள பரிதாபத்துக்குரிய பெற்றோர்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் .
நாமும் பதின்பருவத்தைத் தாண்டித்தான் பெற்றோராக…தாத்தா…பாட்டியாக வந்திருக்கிறோம்.. ஆனால் இன்றுள்ள பதின்பருவத்தினரும்… அவர்களின் பெற்றோரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கவில்லை… அப்படி என்ன பிரச்சினைகள் என பொறுப்புணர்வோடு ஆய்வு புள்ளிவிவரங்கள் துணையுடன்… கண்ட…கேட்ட… உண்மைச்சம்பவங்கள் அடிப்படையில் பிருந்தா சீனிவாசன் இந்நூலை நமக்கொரு எச்சரிக்கை நூலாக எழுதியுள்ளார்.
30 கட்டுரைகள் வழியாக 50 சம்பவங்கள்.. 50 வித்தியாசமான, தனித்தனியான பிரச்சினைகள்…அவற்றை எதிர்கொண்டு.. தீர்வு கண்டு..குழந்தைகளைத் தடம் பிறழ்ந்து விடாமல் காப்பாற்றியதை, பெற்றோருக்குப்
பயமுறுத்தலாக இல்லாமல் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது..5-6 மணிநேரத்தில் சராசரி வாசகரால் வாசித்து விடலாம்.
50 சம்பவங்களை விவரிக்க வேண்டியதில்லை… ஏனெனில் அதுவே நூலாகிவிடும். இப்படி அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கற பொண்ணா இப்பிடி பண்றா..என்று பெற்றோரை பதற வைக்கும் பதினாறு வயது பெண் தொடங்கி… பத்தாம் வகுப்பில் ஸ்கூல் ஃபஸ்ட் வந்த மகன் ..12ம் வகுப்பில் மயிரிழையில் தேர்வில் பாஸ் பண்ண என்ன நிகழ்ந்தது அவனுக்கு..என நாம் தினசரி வீட்டிலும்..வெளியிலும்..சந்திக்கும் பல பதற வைக்கும் பதினாறுகளை இந்நூல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
தற்கொலை செய்வதாக கூறும் பதினாறுகளில் அதிகம் அதை செய்து கொள்வது ஆண்பிள்ளையா? பெண் பிள்ளையா?..ஏன் அப்படி….என நூல் விவரிக்கிறது..
பெண் வயதுக்கு வருவது.. மாதவிடாய், பற்றியெல்லாம் ஓரளவாவது அறிந்துள்ள நாம் ஆண்பிள்ளைகளுக்கும் வயதுக்கு வரும் சம்பவம் பற்றி கவனம் செலுத்தி அந்த வயதில் அவனுக்கு உடலில் (குரல்.. உயரம்…பிற) ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவனிடம்.. விவாதிக்கிறோமா…என்ற கேள்வியை இந்நூல் நம்முன் எழுப்புகிறது.
தன்னை அழகு படுத்திக் கொள்வது…முடியலங்கார கவனம்…முடி கொட்டுவது பற்றி கவலை.. நட்புவட்டத்தின் கேலி…கிண்டலால் மனமுடைந்து போதல்…தன்னைவிட மூத்த மாணவன்-மாணவி மீது ஈர்ப்பு…கூடா நட்பால் மது, புகையிலை, போதைப்பொடி பயன்பாடு, கூடுதல் செலவுக்காக வீட்டில் பொய்சொல்லி பணம் வாங்கல் அல்லது திருடுதல், வகுப்பை கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு செல்லல், என்று பெற்றோரின் கவனத்திற்கு வராமல் “பதினாறுகள்”பல சேட்டைகளில் ஈடுபடுவதும்….இவற்றில் இருந்து இவர்களை பக்குவமாக மீட்பது….மீட்டது பற்றி நூல் எடுத்துக்கூறுகிறது. தேவைப்படின் மனநல மருத்துவரின் கலந்தாலோசனை அவசியம் என நூல் வழிகாட்டுகிறது.
பதின்பருவ குழந்தைகள் உடல்ரீதியாக…மனரீதியாக..எவற்றை எதிர்கொள்ளவேண்டும் என்பதற்கு ஆறாம் வகுப்பு முதலே பள்ளிபாடத்தில் பாலியல் கல்வி படிப்படியாக அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பது மிகச்சரியான ஆலோசனை.. வீட்டில் பெற்றோர்களை எதிர்க்கும் மனப்பான்மை பதின்மவயதில் பருவக்கோளாறாக பரிணமித்து விடுவதால்… ஆசிரியர் வழி அதற்கான உளவியல் பாடம் கல்வியில் படிப்பில் சேர்க்கப்பட்டு பாடமாக
நடத்தப்படும்போது… மாணாக்கரின் உணர்ச்சிபூர்வமான நிலையை… உணர்வுபூர்வமானதாக…மாற்றிப் பண்படுத்த முடியும்..
பெரும்பாலும் பெண்குழந்தைகளைவிட ,ஆண்குழந்தைகளை இந்த பதின்ம வயதைக்கடக்க வைப்பது அம்மாக்களுக்கு பெரும் சவால்…ஏனெனில் அப்பாக்களை குழந்தைகள் திடீரென வில்லன்களாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்ளாம். (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்)
அண்மைக்காலத்தில் மாபெரும் சவாலான பிரச்சினை ஸ்மார்ட் போன்…பெண் குழந்தைகள் கூட முகநூல் நட்பால் கருகலைக்கும் நிலைவரை வந்து சிக்கவைக்கப்படுகிறார்கள்.
63%பேர் 4-7மணிநேரமும்….23%பேர் எட்டுமணி நேரத்திற்கு மேலாகவும்….14%பேர் 3மணிநேரமும் ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போனில்…சமூகவலைதளங்களில் புதைந்துகிடப்பதாக ஓர் ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.
கணிசமான தொகையில் இருசக்கர வாகனம்…. ஆண்ட்ராய்ட் செல் வாங்கி கொடுத்து குழந்தைகளை
அழகுபார்ப்பதாகக் கருதி நுகர்வுக் கலாச்சாரத்தில் அமிழ்த்திவிடும் படாடோப பெற்றோரை என்னவென்பது? மதிப்பெண்ணே வாழ்க்கை என வதைக்கும் ஜென்மங்களால் நிரம்பியுள்ளது தேசம்!
ஒரு குழந்தையை ஒரு பொறுப்புமிக்க குடிமகனாக வளர்க்கும் பொறுப்பு குடும்பம்,பள்ளி,சமூகம்,அரசு ஆகிய நால்வருக்கும் உள்ளது.
குடும்பத்தில் அம்மா, அப்பா ரோல் மாடலாக இருக்கவேண்டும்…குடி,புகை,வன்முறை குடும்பத்திலிருந்து குழந்தைக்கு தொற்றும் வியாதிதானே…எத்தனை பெற்றோர் தன் குழந்தை பற்றி பள்ளி ஆசிரியரிடம் சென்று பேசுகிறார்கள்? எத்தனை ஆசிரியர்களுக்கு திடீரென முரண்டுபிடிக்கும் மாணவனை அடையாளம் கண்டு அவனை தனியே அழைத்து பேசிட நேரமுள்ளது? “அதற்கான”வயசு இதுவல்ல என எடுத்துப்பக்குவமாய் சொல்ல எத்தனை பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் உள்ளார்?.. எல்லாம் போகட்டும்… எத்தனை அப்பா..அம்மாவுக்கு குழந்தையுடன் உட்கார்ந்து பேச நேரம் இருக்கிறது? யாருக்காக வாழ்கிறோம்…. எதற்காக வாழ்கிறோம்…என்பதை தெரியாமல்… வாழ்க்கை முடிந்தபின் வருந்தி என்ன பயன்?
எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை…என எடுத்துச்சொல்ல அறிவியல் ஆசிரியர்கள் முடிவு செய்தால்… குழந்தைகளை இனிமையுடன் கடக்க வேண்டிய பதினாறு வயசு…. பதறும் பதினாறு ஆக பரிதவிக்க விடுமா? பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையையும் மீட்டெடுக்கும் முதல் பொறுப்பு ஆசிரியருக்கு…அடுத்து பெற்றோருக்கு…. இதற்கான அறிவை சமூகத்திற்கு வழங்கவேண்டியது அரசுக்கு!..
“பதறும் பதினாறு”. ஒவ்வொரு ஆசிரியரும்…..அம்மாவும்…. அப்பாவும் படிக்க
வேண்டிய நூல்..
நூல் : பதறும் பதினாறு
ஆசிரியர் : பிருந்தா சீனிவாசன்
விலை : ரூ.₹180
வெளியீடு : தமிழ் திசை
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
– இரா.யேசுதாஸ்
நூல் அறிமுகம்: திருக்குமரன் கணேசனின் ’கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ – பாவண்ணன்
உரையாடலுக்கான வாசல்
கடந்த நூற்றாண்டில் நிலவிய சாதியப்பார்வைக்கும் இந்த நூற்றாண்டில் இப்போது நிலவும் சாதியப்பார்வைக்கும் நுட்பமான அளவில் சில வேறுபாடுகள் உள்ளன. கொரானா வைரஸ் போல அதுவும் தன்னை காலந்தோறும் உருமாற்றிக்கொண்டே இருக்கிறது. தீண்டாமையின் பெயரால் முன்னொரு காலத்தில் சொன்னதுபோல யாரும் யாரையும் தெருவுக்குள் வராதே, கோவிலுக்குள் வராதே, குளத்துக்குள் இறங்காதே என இன்று தடுத்துவிட முடியாது. அனைவரும் கலந்து நடமாடுவது இன்று இயல்பாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்துக்குத் தகுந்தபடி தம்மைத் தகவமைத்துக்கொண்டு தம் சாதியப்பற்றை உதறியும் சாதியக்கோட்டைக் கடந்தும் வந்தவர்கள் நம்மிடையே பலருண்டு. அதே சமயத்தில் தம்மை அறியாமலேயே ஆழ்மனத்தில் இன்னும் சாதியப்பார்வையைச் சுமந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். சாதியப்பார்வையை முற்றிலுமாகக் கடந்து அனைவரும் நல்லிணக்கப்பார்வையுடன் இணைந்திருக்கும் ஒரு வாழ்க்கைமுறை எதிர்காலத்தில் சாத்தியமாக வேண்டும். அதற்கு, சாதியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் இடையில் ஓர் உரையாடல் நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். அந்தப் புள்ளியை நோக்கி அனைவரும் நகர்ந்துவர வேண்டும்.
அந்த உரையாடலுக்கான ஒரு வாசலை இளம் எழுத்தாளரான திருக்குமரன் கணேசன் தன் சுயசரிதைக்குறிப்புகள் வழியே திறந்துவைத்திருக்கிறார். கசப்புகள் மண்டிய பல கணங்களை அவர் தம் இளம்பருவத்தில் கடந்துவந்திருக்கிறார். சாதி என்னும் நெருப்பு அவரை தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அத்தகு பல தருணங்களை அவர் தேர்ந்தெடுத்த சிற்சில நிகழ்ச்சிகள் வழியாக இத்தொகுதியின் மூலம் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். சாதியினால் சுட்ட வடு எத்தகைய வலி மிகுந்தது என்பதை நம்மை உணர்ந்துகொள்ள வைத்திருக்கிறார்.
வடுக்களை ஏற்படுத்தியவர்கள் யாரும் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்லர். ஒவ்வொரு நாளும் அவரைச் சுற்றி வாழ்ந்தவர்களே. பெரும்பாலும் ஆசிரியர்கள். கூடப் படித்த நண்பர்கள். நண்பர்களின் குடும்பத்தார்கள். தெருவில் வசிப்பவர்கள். அன்பொழுகப் பழகுகிறவர்களின் நெஞ்சத்தில் கூட சாதியத்தின் நஞ்சுக்கொடி சுற்றியிருக்கிறது. தன்னிரக்கம், குற்ற உணர்ச்சி ஆகிய இரு உணர்வுகளும் கலந்துவிடாதபடி கச்சிதமான மொழியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் முன்வைத்திருக்கும் திருக்குமரனின் எழுத்தாற்றல் பாராட்டுக்குரியது.
எதிர்காலத் தலைமுறையினரான மாணவ மாணவிகளின் நெஞ்சிலிருந்து சாதியப்பார்வையை அழிக்கவேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஆசிரியர் பெருமக்களே சாதியத்தை விதைப்பவர்களாக இருக்கிறார்கள் என்னும் எதார்த்தம் நெருப்பெனச் சுடுகிறது. தம் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களே அத்தகு பார்வையுடன் நடந்துகொண்டதை சொந்த அனுபவங்களை முன்வைத்து வெளிப்படுத்தியுள்ளார் திருக்குமரன். சாதி இரண்டொழிய வேறில்லை என வகுப்பறையில் சொல்லிக்கொடுக்கும் பாடத்தின் வரிகள் அந்த ஆசிரியர்களுடைய நெஞ்சில் பதியாமலேயே போய்விட்டதை காலக்கொடுமை என்றே சொல்லவேண்டும்.
அந்நிகழ்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தைப் படிக்கும்போது அந்த ஆசிரியர்மீது அருவருப்புணர்வே எழுகிறது. பள்ளிக்கூடத்தில் ஒரு சுற்றுலாவுக்கு ஏற்பாடு நடக்கிறது. மாணவ மாணவிகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை ஆசிரியரொருவர் ஏற்றிருக்கிறார். முதன்முதலாகப் பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுலாவில் கலந்துகொள்ளும் ஆவலோடு அப்பாவிடமிருந்து பணத்தை வாங்கிச் சென்று செலுத்திவிட்டு, பயணம் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறான் ஒரு சிறுவன். குறிப்பிட்ட நாளில் ஒரு பகல் வேளையில் சுற்றுலாவுக்கு பேர் கொடுத்த அனைவரையும் பள்ளி வளாகத்துக்கு வருமாறு அறிவிக்கிறார் ஆசிரியர். ஆவலின் காரணமாக, சொன்ன நேரத்துக்கு முன்பாகவே பள்ளிக்குச் சென்று காத்திருக்கிறான் சிறுவன். பதிவு செய்திருந்த மற்ற மாணவர்களும் மாணவிகளும் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த இரண்டு வாகனங்கள் வந்து சேர்கின்றன.
மாணவ மாணவிகளின் பெயர்ப்பட்டியலை கையில் வைத்திருக்கும் ஆசிரியர் அவர்களை வாகனங்களில் அமரவைக்கும் விதத்தில் அவர் கையாளும் தந்திரம் அவருடைய உள்ளப்போக்கைப் புலப்படுத்திவிடுகிறது. முதலில் சன்னதித் தெருவிலிருந்து வரும் பிள்ளைகளின் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்லி அழைத்து அவர்களை இரு வாகனங்களிலும் முதல் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதன் பிறகு நடுத்தெருப் பிள்ளைகள். அடுத்து மேலத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகள். அவர்களை அடுத்திருக்கும் இரு வரிசைகளில் அமரும்படி சொல்கிறார். அதற்குப் பிறகு மாரியம்மன் கோயில் தெரு பிள்ளைகளின் பெயர்களைப் படிக்கிறார். இறுதியாக வடக்குத்தெரு, தெற்குத்தெருவைச் சேர்ந்த பிள்ளைகளை அழைத்து இறுதி வரிசைகளில் அமர்ந்துகொள்ளும்படி அறிவிக்கிறார். வகுப்பறை வருகைப்பதிவேட்டில் கடைபிடிக்க முடியாத சாதிப் பிரிவினையை சுற்றுலா வாகன இருக்கை வரிசைகளில் கடைபிடித்து நிறைவேற்றுகிறார் அந்த ஆசிரியர். சுற்றுலா முடிந்து திரும்பும்வரை ஒருவரும் இடம் மாறி அமரக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அந்த ஆசிரியரிடம் வெளிப்படும் சாதிவெறி நோக்கும் தன் சாதி மேட்டிமைப்பார்வை வெளிப்படையாக வெளிப்பட்டுவிடாதபடி செயல்படும் தந்திரமும் அருவருப்பூட்டுகின்றன. இன்று சமூக ஊடகங்களில் வெளிப்படுவதும் கூட இத்தகைய மனநிலைதான்.
வகுப்பறையிலேயே ஓர் ஆசிரியரிடம் வெளிப்பட்ட சாதியப்பார்வையை இன்னொரு அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன். ஒருநாள் தேசத்தலைவர்களின் படங்களை வகுப்பறையில் மாட்டுவதற்காக சுவரில் நேர்க்கோட்டில் ஆணியடிக்கச் சொல்கிறார் ஓர் ஆசிரியர். காந்தி, நேரு, திலகர் என மூன்று படங்களை ஒரே நேர்க்கோட்டில் தொங்க வைத்துவிட்டு, நான்காவதாக அம்பேத்கர் படத்துக்கான ஆணியை படவரிசையிலிருந்து சற்றே கீழே தாழ்த்தி அடிக்கச் சொல்கிறார். விவரம் புரியாமல் “அந்த படத்தையும் நேரா மாட்டியிருந்தா அழகா இருக்கும் சார்” என்கிறான் சிறுவன். அப்படி சுட்டிக்காட்டியதற்காக கோபம் கொண்ட ஆசிரியர் அச்சிறுவனை கையை நீட்டச் சொல்லி குச்சியால் அடிக்கத் தொடங்குகிறார்.
இன்னொரு அத்தியாயத்தில் மற்றோர் ஆசிரியரின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார் திருக்குமரன். வகுப்பில் படிக்கும் மாணவியை தொட்டுப் பேசும் மகிழ்ச்சிக்காக பக்கத்தில் அழைத்து நிற்கவைத்துக்கொள்ளும் அற்பமனம் கொண்டவர் அந்த ஆசிரியர். ஒருநாள் அம்மாணவியை அழவைத்து, பிறகு அமைதிப்படுத்திப பேசுவதுபோல தொடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறார் அவர். அதற்காகவே திருத்தப்பட்ட தேர்வுத்தாளைக் கொடுக்கும் தினமன்று பதினைந்தாவது ரேங்க் வாங்கிய மாணவனை முதல் ரேங்க் என்று அறிவித்துவிட்டு, முதல் ரேங்க் வாங்கிய அம்மாணவியை பதினைந்தாவது ரேங்க் என அறிவிக்கிறார். அவர் எதிர்பார்த்ததுபோல தேர்வுத்தாளை கைநீட்டி வாங்கும் அவள் அழத் தொடங்குகிறாள். உடனே அவள் தோளைத் தொட்டுத் திருப்பி காதைப் பிடித்தித் திருகி “பறையன் கூட பர்ஸ்ட் ரேங்க் வந்துட்டான். உனக்கு என்னடி ஆச்சு?” என்று அவளை மேலும் கலங்கவைத்து அழவைக்கிறார். பிறகு மெல்ல மெல்ல அமைதிப்படுத்திவிட்டு அவளே முதல் ரேங்க் வாங்கியிருப்பதாக அறிவிக்கிறார்.
ஆசிரியர் தொடர்பாக இன்னொரு காட்சி. பள்ளிப்படிப்பை முடித்து பட்டப்படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம். புதிய ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வந்து மாணவ மாணவிகளிடம் ஒவ்வொருவராக எழுந்து நின்று தன் பெயர், ஊர், படித்த பள்ளிக்கூடம், இலட்சியம், குலதெய்வத்தின் பெயர் எல்லாவற்றையும் வரிசையாகச் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். பெயர், ஊர், பள்ளி, இலட்சியம் எல்லாம் சரி.
குலதெய்வத்தின் பெயர் எதற்காக என்று புரியாமல் குழம்புகிறான் அவன். அதற்கான விடை அடுத்த நொடியே அவனுக்குப் புரிந்துவிடுகிறது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு மாணவி எழுந்து நின்று தன் குலதெய்வத்தின் பெயரைச் சொன்னதுமே, அவள் சாதியை ஊகித்து அறிந்துகொள்ளும் அவருடைய அற்பமனத்தை அவன் எளிதாகப் புரிந்துகொண்டான். அதனால் வரிசைப்படி தன் முறை வந்த போது, தன் குலதெய்வம் பகுத்தறிவுப்பகலவன் பெரியார் என்று தெரிவிக்கிறான். அவரால் மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் போய்விடுகிறது. கடுகடுப்புடன் அடுத்த மாணவனிடம் தம் கேள்விகளை முன்வைக்கச் சென்றுவிடுகிறார் அவர்.
மற்றொரு காட்சி. மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருக்கிறான் திருக்குமரன். வீட்டிலிருந்து தொலைவான ஊரில் பள்ளிக்கூடம் இருந்தது என்பதுதான் காரணம். அப்போது பாரதி என்பவன் அவனுக்கு நண்பனாக அமைகிறான். அவனோடு சேர்ந்து பாரதியின் வீட்டில் மதிய உணவு உண்பது எப்படியோ பழகிவிட்டது. பாரதியின் அம்மாவும் அவனிடம் பாசமாகவே இருக்கிறார். தினமும் இருவரையும் ஒன்றாக உட்காரவைத்து உணவு பரிமாறுகிறார் அவர். ஒருநாள் அவன் வரவில்லையென்றாலும் அதற்காக ஆதங்கப்படுகிறார் அந்த அம்மா. ஒருமுறை இருவருக்கும் வழக்கம்போல கறிக்குழம்பு ஊற்றி சாப்பாடு பரிமாறுகிறார் அவர். அப்போது எதிர்பாராத விதமாக ஏதோ ஒரு வேலையாக பாதி சாப்பாட்டில் எழுந்து போகிறான் பாரதி. அவன் இல்லாத தருணத்தில் தன் மகனைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் சில கேள்விகளை திருக்குமரனிடம் கேட்கிறார் அந்த அம்மா. அவள் மனம் நிறைவு கொள்ளும் வகையில் அவனைப்பற்றி பெருமையாகவே சொல்கிறான் திருக்குமரன். இறுதியில் அந்த அம்மா அங்கலாய்ப்புடன் ”எல்லாம் சரிதான் தம்பி. ஆனா திடீர்திடீர்னு இந்த பறப்பசங்கள வீட்டுக்குள்ள அழச்சிட்டு வந்துடறான். அத நினைச்சாதான் வருத்தமா இருக்குது” என்று சொல்கிறார். அதற்குப் பிறகு அவனால் தொடர்ந்து சாப்பிடமுடியாமல் எழுந்துவிடுகிறான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனால் பாரதியின் வீட்டுக்குச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் தாயார் சொன்ன சொற்களை நண்பனிடம் சொல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. நல்ல அம்மாவின் மனத்திலும் இந்த மேட்டிமைப் பார்வை பதுங்கியிருப்பதை வேதனையுடன் தாங்கிக்கொள்கிறான். உண்மையை வெளிப்படுத்தாமலேயே அந்த நட்பைத் துண்டித்துக்கொள்கிறான்.
அன்பின் ஈரத்துடன் தொடங்கி பாதியிலேயே முறிந்துபோன மற்றொரு நட்பு பற்றிய காட்சியும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இணைபிரியாத தோழனாக இருக்கிறான் ஒரு சிறுவன் அவன் பெயர் கார்த்திகேயன். உயர்சாதியைச் சேர்ந்தவன். ஆனால் அதுசார்ந்த எவ்விதமான வேறுபாடான பார்வைகளும் இல்லாதவன். ஒருநாள் தன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் கொய்யாமரத்தில் பழுத்திருக்கும் பழங்களைப் பறிக்க திருக்குமரனையும் அழைத்துச் செல்கிறான் அவன். மரம் வீட்டுக்குப் பின்னால் இருக்கிறது. வீட்டின் எல்லா அறைகளையும் கடந்துதான் பின்கட்டுக்குச் செல்லவேண்டும். வழியில் அமர்ந்திருந்த அவன் தாத்தா “அவாள்லாம் நம்ம ஆத்துக்குள்ள வரக்கூடாதுன்னு நோக்கு தெரியாதா என்ன? போகச் சொல்லுடா வெளியில” என்று தாத்தா சத்தம் போடுகிறார். அதைப் பொருட்படுத்தாத நண்பனை மரம் வரைக்கும் அழைத்துச் சென்று பழங்களைப் பறிக்கவைக்கிறான். இருவரும் ஓடோடி பள்ளிக்குத் திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிக்குப் பிறகு இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக ஒரு பேருந்தில் இருவரும் இளைஞர்களாக சந்தித்துக்கொள்கிறார்கள். பழைய நண்பனைப் பார்த்த மகிழ்ச்சியில் “டேய், கார்த்தி, எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ வருஷமாச்சி?” என்று ஆவலோடு பேசுவதற்கு நெருங்கிச் செல்கிறான். ஆனால் கோவில் பூசாரி கோலத்தில் இருந்த அவன் பேருந்து இருக்கையில் ஜன்னலோரமாக உடல் நசுங்க நகர்ந்து உட்கார்ந்தபடி ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமைதியாகிவிடுகிறான்.
நட்பை மட்டுமல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்த காதலையும் ஒருநாள் துறந்துவிட நேர்ந்ததை மற்றொரு அத்தியாயம் வழியாக உணர்ந்துகொள்ள முடிகிறது. காதல் காலம் முடிவடைந்து திருமணம் செய்துகொள்ள வேண்டிய காலம் வந்தபோது அந்தப் பெண் தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி தன் பெற்றோரிடம் பேசி ஏற்றுக்கொள்ள வைத்துவிடமுடியும் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். தொடர்ந்து, அடுத்த கணமே காதலனைத்தான் ஏற்றுக்கொள்ள வைக்கமுடியுமே தவிர, காதலனுடைய பெற்றோரையோ, அவர்கள் வாழும் சூழலையோ ஏற்றுக்கொள்ள வைக்கமுடியாது என்றும் அதனால் திருமணமானதும் தனியாக வந்துவிடவேண்டும் என்றும் அவள் ஒரு வேண்டுகோளை வைக்கிறாள். அந்தக் காதல் தோல்வியடைய அதுவே காரணமாகிவிடுகிறது. இப்படி சாதிவெறுப்பு நோக்கினை எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறு தருணங்களை சின்னச்சின்ன கட்டுரைகள் வழியாக பதிவு செய்திருக்கிறார் திருக்குமரன்
திருக்குமரன் தன் தாத்தா மொட்டையன் பற்றியும் தந்தை கணேசன் பற்றியும் தீட்டியிருக்கும் சொற்சித்திரங்கள் இத்தொகுதியின் மிகமுக்கியமான பகுதிகள். இரு பகுதிகளுமே காவியத்தன்மையுடன் உள்ளன. இருவரும் இருவேறு தன்மை கொண்டவர்கள். அமைதியாக இருக்கவேண்டிய தருணங்களில் அமைதி காத்தும் எதிர்ப்பைப் புலப்படுத்தவேண்டிய தருணங்களில் துணிவுடன் எதிர்த்தும் சாதியத்தைக் கடந்த தன் சுயத்தை வெளிப்படுத்துகிறார் தாத்தா மொட்டையன். ஆனால், ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் கூட, கட்சி மேலிடம் தன்னை தொடர்ச்சியாக மூன்றுமுறை ஒதுக்கிவைக்கும் நிலையில் கூட அமைதி காத்து தன் எல்லையை தானே சுருக்கிக்கொள்கிறார் தந்தை கணேசன். எந்த நிலையிலும கட்சித்தலைமையை எதிர்த்து கசப்புடன் ஒரு சொல் கூட சொல்ல அவர் மனம் துணியவில்லை. அவருக்கு இருந்த ஒரே ஆசை தலைவர் உயிர்துறப்பதற்கு முன்னால் தன் உயிர் பிரிந்துவிடவேண்டும் என்பதுதான். வியப்பூட்டும் வகையில், அவர் விரும்பிய விதமாகவே அவருடைய மரணம் அமைந்துவிட்டது. தன் இறுதிமூச்சு வரைக்கும் தன்னை தன் கட்சி ஓர் அடியாளாகவே நடத்தியது என்பதை அறியாமலேயே அவர் மறைந்துவிட்டார்.
கணேசனின் நெஞ்சில் நிறைந்திருந்த உணர்வை ஆழமும் உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த கட்சிப்பற்று என்று குறிப்பிடலாம். ஆனால், காலமெல்லாம் அவரை தவறான வழியில் பயன்படுத்திக்கொண்டு, ஒரே ஒரு அங்குலம் கூட வாழ்வின் ஏணிப்படியில் ஏறிவிடாதபடி என்றென்றைக்குமாக அவரைத் தரையிலேயே தடுத்து நிறுத்திவைத்திருந்த கட்சிக்காரர்களின் நயவஞ்சகத்தையும் நம்பிக்கை துரோகத்தையும் அப்பட்டமான சுயநலத்தையும் குறிப்பிட தமிழில் சொல்லே இல்லை.
இந்நூலில் உள்ள பெரும்பாலான நினைவுச்சித்திரங்களில் சாதிப்பெயர் சாதி அடையாளத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இழிவுக்குறிப்பு, அழகின்மை, முரட்டுத்தனம், கரிய உடல் என வெவ்வேறு பண்புகளோடு இணைத்துப் பயன்படுத்தப்படுகிறது. நெஞ்சின் ஆழம் வரைக்கும் சென்று படிந்துவிட்ட சாதியப்பார்வைதான் இதற்குக் காரணம். இது நெருக்கமான நண்பர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பே இல்லாத மனிதர்களிடமும் வெளிப்படுகிறது. நட்புச்சக்திகளுக்கு அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி நட்பைத் தக்கவைத்துக்கொள்வது மிகமுக்கியம். நட்புச்சக்திகளின் வட்டம் விரிவடையும் தோறும் நல்லிணக்கச் சமூகத்தின் எல்லைகளும் விரிவடையும்.
– பாவண்ணன்
நூல்: கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – தன்வரலாறு
ஆசிரியர்: திருக்குமரன் கணேசன்
விலை: ரூ. 175/-
வெளியீடு: காலச்சுவடு,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் -629001.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
நூல் அறிமுகம்: கலகல வகுப்பறை சிவாவின் ‘ஆசிரிய வாழ்வினிது’ – இரா.சண்முகசாமி
நூல் : ஆசிரிய வாழ்வினிது
ஆசிரியர் : கலகல வகுப்பறை சிவா
விலை : ரூ.60/-
ஆண்டு : அக்டோபர்-2021.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
பள்ளிகளில் ஆசிரியராய் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் மகிழ்வான வாழ்க்கை வேறு யாருக்கும் அப்படி அமையுமா என்பதில் சற்று சந்தேகமே.
ஆம் ஆசிரிய வாழ்வை வாழ்ந்து பார்த்தவர்கள் உலகையே புரட்டி போட்ட வரலாறுகள் எல்லாம் இப்போது உலகெங்கும் பரவிக் கிடக்கிறது.
டோட்டோ-சான் தலைமையாசிரியர் கோபயாஷி வாழ்வை வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்.
அமெரிக்க ஆசிரியர் மக்கோர்ட் வாழ்வை வாழ்ந்து ஆசிரிய முகமூடியை அகற்றியவர்கள் எத்தனை பேர்.
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? என்று குழந்தைகளின் மனதளவிலும் கேள்விய எதிர்கொள்ளாத ஆசிரியர்கள் எத்தனை பேர்.
இப்போதும் நெஞ்சினில் தன்னுடைய முதல் ஆசிரியரை சுமந்து வாழும் மாணவர்களின் ஆசிரியராய் எத்தனை பேர் உள்ளோம்.
மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்களின் உள்ளத்தை தொட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளோம்.
குழந்தைகளின் உள்ளத்தில் சிவப்பு பால்பாயின்ட் பேனா முள் குத்தாத ஆசிரியர்கள் எவ்வளவு பேர் உள்ளோம்.
குழந்தைகளின் மொழிகளை உள்வாங்கி அவர்களின் கற்றலுக்கு துணைபுரியும் ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளோம்.
ஆசிரியர்களை உள்ளன்போடு போயிட்டு வாங்க சார் என்று உருகிய மாணவர்களின் நெஞ்சில் இருக்கும் ஆசிரியர்கள் எவ்வளவு பேர்.
குழந்தைகளுக்கான உரிமைகள் பறிபோகாமல் பார்க்கும் இடத்தில், அவர்களுக்கான உரிய இடத்தினை வழங்கும் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்.
குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்? என்று உற்றுநோக்கி ஆராய்ந்து விடை கண்ட ஆசிரியர்கள் எவ்வளவு எண்ணிக்கை உள்ளது.
இப்படி நாம் ஆசிரியர் – மாணவர் உறவை தேடிச் சென்றால் ஆசிரியர் மனதில் எப்படியேனும் ஒருதுளி ‘ஆளுக்கொரு கிணறு’ இருப்பது உறுதியாகி விடும்.
அந்தக் கிணற்றை ஆசிரியர்களின் மனதில் இல்லாமல் செய்யவேண்டும் என்றால் அதற்கு மேற்சொன்ன ஒவ்வொரு பத்தியிலும் மறைந்திருக்கும் நூலோடு ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா அவர்கள் எழுதிய ஆசிரிய வாழ் அனுபவமும் நமக்கு பெரிதும் பயன்படும்.
எங்கெல்லாம் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஆசிரிய முகமூடி அண்டவே அண்டாது.
அப்படி அண்டாமல் இருந்த உரையாடல்களைத்தான் தோழர் சிவா அவர்கள் நம்மோடு நூலாக பகிர்ந்துள்ளார்கள்.
இப்போதும் ஆசிரியர்கள் சிலர் ஆசிரியர்களோடு நெருங்கி பேசினால்’ ஆமாம் இப்படித்தான் ஒட்டிகிட்டு பேசுவியோ இதுதான் நீ ஆசிரியருக்கு கொடுக்கும் மரியாதையா’ என்று கேட்கும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாணவன் ஆசிரியர் சிவா அவர்களிடம் நெருங்கி கையை கட்டிக்கொண்டு பேசியபோது எதிரில் இருந்த ஆசிரியர் அந்த மாணவரை கண்டித்துள்ளார். சிவா அவர்கள் அம்மாணவனின் தலையை வாஞ்சையோடு தடவி என்ன என்று கேட்டபோது அந்த மாணவர் சொன்னது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆம் ‘என்னுடைய அப்பா செத்துபோயிட்டார் சார்’ என்று அம்மாணவன் கூறியவுடன் சிவா அவர்கள் அதிர்ச்சியாவார். மாணவர்களின் மனதில் எந்த ஆசிரியர் இருக்கிறாரோ அந்த ஆசிரியரிடம் தான் எவ்வளவு துரத்தினாலும் கிட்டேயே வருவார்கள். அனுபவ பூர்வமாக உணர்ந்த ஆசிரியர்களுக்கு இது நன்கு தெரியும்.
ஆசிரியர் சிவா அவர்கள் தன்னுடைய ஆசிரிய பணியில் மாணவர்களோடு வகுப்பிலும், வெளியிலும், போனிலும் நடைபெற்ற உரையாடலை மிக யதார்த்தமாக பதிவிட்டிருப்பார்.
அதில் ஒன்றேயொன்றிற்கு மட்டும் தோழர் சிவா அவர்களிடம் என்னுடைய சந்தேகத்தையும், அவருக்கே முடியாமல் போன காரணத்தையும் கேட்க விரும்புகிறேன். ஆம் அவரிடம் படித்த ஆணாக இருந்த மாணவன் ஒருவன் தன்னுடைய உடல் அணுக்களின் செயலால் பெண்ணாக மாறியபோது 12ஆம் வகுப்பு படித்திருந்தார். தேர்வு நெருங்கும் நேரத்தில் பள்ளிக்கு வராமல் சிலருடன் இணைந்து கடை கடையாக கைதட்டி காசு கேட்டிருக்கிறான். இதை கேள்விபட்ட சிவா அவர்கள் எவ்வளவோ முயன்றும் அம்மாணவரை பள்ளிக்கு வரவழைக்க முடியவில்லை. ‘உனக்கு தனியாக தேர்வறை ஒதுக்கச் சொல்கிறேன் வாப்பா’ என்று அம்மாணவனுடன் புதிய செல் எண்ணை கண்டுபிடித்து பேசியிருக்கிறார். உடன் அம்மாணவன் போனை துண்டித்துவிட்டு அதன்பிறகு போனை எடுக்கவில்லை. அவனுடைய வாழ்க்கை தேர்வாக அது இருக்கும் என்று அந்த உரையாடலை முடிப்பார்.
இந்த உரையாடலை படிக்கும்போது தோழர் #முஆனந்தன் அவர்கள் எழுதிய ‘கைரதி 377’ நூல் நினைவுக்கு வந்தது.
தோழர் சிவா அவர்களிடம் கேட்க விரும்புவது எப்படியாவது அந்த மாணவரை அணுகி நம்பிக்கை அளிக்கும் விதமாக ‘யாரையும் கேளி செய்ய விடமாட்டோம், மாணவர்களை ஒருங்கிணைத்து அம்மாணவருடன் உரையாட வைத்திருந்தால் அம்மாணவரின் வாழ்வில் ஒளி ஏற்பட்டிருக்காதா அதற்கான சாத்தியம் துளிகூட இல்லையா என்பதை தோழர் சிவா அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். சமூகத்தில் இது மிகப்பெரிய சவால் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஓர் ஆதங்கம்.
மாணவர்களோடு உள்ளன்போடு தோழர் சிவா அவர்கள் உரையாடிய உரையாடல்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அனைவரும் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.
– இரா.சண்முகசாமி








