கவிதை 1
இந்த மஞ்சள் காகிதம் முழுவதும்
நனைந்து முடிந்திருக்கும்போது
நீ அருகில் வந்து விடுவாய்
இந்த இரவு சிறிய கரும்புள்ளியாய் தேய்ந்திருக்கும் போது
நீ அண்மையில் வந்து விடுவாய்
தூரத்தில் கேட்கும்
உன் காலடி ஓசைக்கு லயமாக
என் இதயத்தின் துடிப்போசைகள்   தன்னை  தகவமைத்துக் கொண்டிருக்கும் நேரம்
நீ என் கண் முன் வந்து நிற்பாய்
 நான் ஒரு மலர் மாலை ஆகி
 உன் காலடியில்  வீழ்வேன்
 நீ சூடிக்கொண்ட பின்
 உன்மார்பில் புரளும்
இதழ்களிலிருந்து கசியும் வாசமாகி
உன் காதிற்குள் வந்து  முனுமுனுப்பேன்  “என்னை மறந்து விடு”
 நீ எதிர்பார்ப்பதும் இது தானே?
நீ அண்ணாந்து பார்ப்பாய்
அவ்வளவு அதிகாலையில்
 வானில் விடைபெற்றுப் போகும்
ஒரு நுண்ணிய பறவை
வேறு யார் கண்களுக்கும்புலப்படாது
கவிதை 2
பனிப்பாறையாய் கெட்டித்திருக்கும்
உடையாத மௌனத்தை
நொடியில் கரைத்து விடும்
நீ சிந்தும் சூடான ஒரு கண்ணீர் துளி
எனக்கானதாய் இருக்க கூடாதா
 என் அன்பே ?
கவிதை 3
நதியாகும் கணம்
மாயச்சிலந்தி பின்னும்
மெல்லிய பிசின் வலையில்
இரையாக சிறைப்பட்டுக்கிடக்கும்
சிறு விட்டில் பூச்சிகளை கவ்விப்போகிறது
மூலை வாழும் பல்லி ஒன்று
பிறகு என்ன கருணை கூர்ந்ததோ
பிடியை சற்று நழுவவிட
பொத்தென்று விழுகின்றன இதயங்கள்
தரைமீது
என் தோளில் கை போட்ட போடி
இணையாய் நடந்து வரும் என் பிரியசகியே
வல்லமை கொண்ட ஆகாயப் பருந்து ஒன்று
எதிர்ப்பற்ற கோழிக்குஞ்சு என
என்னைத் தன் வலிய அலகினால்
கொத்தித் தூக்கிச் செல்லும் போது
திக் பிரமையுற்று சிலையென
நின்று கொண்டிருக்கும் நீ
எவ்விதம் என்னைப் பிரிவாய் சொல் ?
மனங்களில் சிறு குழிகள் வெட்டி
பணம் தன்னைப் புதைத்து விட்டு
அடுத்த வேட்டைக்குப் போகும்
ஆதி மனிதர்கள் மத்தியில்
மயானத்தில் பட்டுப்போன துளசி செடிக்கு
தண்ணீர் மொண்டு ஊற்றும்
உன் கருணைக்கு
நான் என்ன பதில் தரட்டும் மனதார
என்னை வாரிச் சுருட்டி
ஒரு மயிலிறகாக்கி
உன் உள்ளங்கைகளில்
வைத்து விடவா  ?
கடவுள் என்னும் ஒரு பெரும் சொல்லை
உருவமற்ற  பேதமற்ற
பாலினமற்ற
முலைக்காம்பில் துளிர்க்கும்
ஒரு துளி தாய்ப்பாலென
மாற்றி விடும் உன் இதயம் தன்னில்
நான் எவ்விதம் நிறைவது சொல் ?
நானே  கசிந்து  நதியாகி
பூக்களாய் நடந்து வரும்
உன் பாதங்களை கழுவி
முத்தமிட்டு
பின் பூமிக்குள் கரைந்தோடி
மறைவதைத் தவிர?
கவிதை 4
பொழுதுகள்
கயமை நிரம்பிய கருப்பு மதுவை
கசப்புச் சுவை தெரியாதிருக்க
கண்ணை மூடிக் கொண்டு குடிக்கிறோம்
நிமிட முள்ளும் நொடி முள்ளும்
பொழுதுகளின் மீது ஆணியடித்தபடியே
பழகிய பாதையில் நகர்கின்றன
வாழ்வைச் சலிப்புற்ற மனிதன்
தெருவைக்  காறி உமிழ்ந்தபடியே
கடக்கிறான்
ஈக்கள் மொய்த்துவிட்டு
அவனை விடாது பின் தொடர்கின்றன
போக்கிடமற்ற சந்துகள் எல்லாம்
சிதிலமடைந்த வீட்டுக்குள் கூடி
பேயுருக் கொள்கின்றன
கால வெளியில்
கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தது போல்
பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார்
கடவுள்
தங்கேஸ்
தமுஎகச
தேனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *