கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக ஊரடங்கு அறிவித்துள்ள காலத்தில், கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஏழை மக்களுக்கு உணவு அளிப்பதற்குப் பதிலாக, அரசாங்கமானது தானியங்களை மேலும் அதிகமான அளவில் தன்னுடைய கிடங்குகளில்  சேர்த்து  கொண்டிருக்கிறது. அரசாங்கம் தான் கொள்முதல் செய்கிற தான்யங்களை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்குப் போதுமான வசதிகள் இல்லாததால் அவை எலிகளுக்கு உணவாகிக்கொண்டும், வீணாகிக் கொண்டுமிருக்கின்றன.

Image

சென்னையில் புலம்பெயர் தொழிலாளர்கள், அரசு சாரலா நிறுவனம் ஒன்றிடமிடருந்து, உணவைப் பெற வரிசையில் நிற்கும் காட்சி. (படம் உதவி: அருண்சங்கர்/AFP)

அரசாங்கத்தின் இருப்பு, கடந்த நான்கு மாதங்களில் மட்டும், அதாவது ஜனவரி 1 முதல் மே 1 வரையிலும் மட்டும், அரிசி மற்றும் கோதுமை இருப்பு 7.2 லட்சம் டன்களிலிருந்து, 71.8 லட்சம் டன்களாக அதிகரித்திருக்கிறது. இவற்றில் கணிசமான அளவிற்கு வீணாகிவிட்டன, வீணாகிக்கொண்டுமிருக்கின்றன. இவை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோவிட்-19 சமூக முடக்கத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அளிக்கப்பட்ட தானியங்களைவிட அதிகமாகும்.

கடந்த மூன்றாண்டுகளாக இந்திய உணவுக் கழகம் மிகப்பெரிய அளவிற்கு மிகையாகவே உணவு தானியங்களை இருப்பு வைத்திருக்கிறது. இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை நாம் விவாதிப்பதற்கு முன்பாக, இந்த அரசாங்கத்தின் உணவுக் கொள்கை குறித்த அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாக, எப்படி இந்த அளவிற்கு அதீதமாக தானியங்களைப் பெற்றிருக்கிறது என்பது குறித்து விவாதிப்பது அவசியமாகும்.

இந்திய உணவுக் கழகம், பொது விநியோக முறை மற்றும் உற்பத்தியில் (மற்றும் கொள்முதலில்) ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அப்போது பயன்படுத்திக்கொள்வது போன்ற அரசாங்கத் திட்டங்களின் தேவைகளை எதிர்கொள்வதற்காக உணவு தானியங்களை இருப்பு வைத்து வருகிறது. இந்திய உணவுக் கழகம் ஆண்டின் பல்வேறு காலங்களில் எந்த அளவிற்கு உணவு தானியங்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு, அரசாங்கத்தின்திட்டவட்டமான நெறிமுறைகளும் உண்டு.

படம் 7: 2014 டிசம்பர் 1 முதல் 2020 மே 1 வரையிலும் இருப்பு வைத்துக் கொள்ளவேண்டிய அளவிற்கான நெறிமுறைகளுக்கும் மேலாக உள்ள உபரி இருப்பு.

Image

எனினும், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக, இந்திய உணவுக் கழகம் இருப்பை, தான் வைத்துக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை மீறி அதற்கும் மிகையாக, தொடர்ச்சியாக  அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதுபோன்று, உணவுக் கழகத்தின் உபரி இருப்பு 2018 அக்டோபருக்குப்பின்னர், 2010 மே வரையிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.அரசாங்கம் (அறவைக்கு அனுப்பாத நெல் உட்பட) 878 லட்சம் டன்கள் தான்யம் வைத்திருக்கிறது.இதில் 668 லட்சம் டன்கள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டிய நெறிமுறையைக் காட்டிலும் அதிகமாகும்.

இந்திய உணவுக் கழகம் இவ்வாறு ஏன் மிகையாக உபரி தானியத்தை வைத்துக்கொண்டிருக்கிறது?

ஏனெனில், அரசாங்கம் பொது விநியோக முறையின் கீழான திட்டங்களை விரிவாக்கிட விருப்பம் இல்லாது இருந்துவருவதே காரணமாகும்.(தற்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பொது விநியோக முறையின்கீழ் மான்ய விலையில் உணவு மற்றும் உணவு தானியங்கள் அளிக்கப்பட வேண்டும்.)

அரசாங்கம், இந்திய உணவுக் கழகத்திலிருந்து தான்யங்களை வெளியே எடுக்கும்போது, கழகத்திற்கு தான்யங்களின் பொருளாதாரக் கட்டணத்தைச் செலுத்திட வேண்டும்.இது, அந்தத் தானியத்தைக் கொள்முதல் செய்த கட்டணம், கிடங்கில் வைத்திருந்ததற்கான கட்டணம் மற்றும் அதனைக் கையாள்வதில் ஏற்பட்ட செலவினங்கள் அனைத்தும் அடங்கும். எனினும், இப்போதைய அரசாங்கம், நவீன தாராளமயக் கொள்கையை வறட்டுத்தனமான முறையில் பின்பற்றிக்கொண்டிருப்பதால், நிதிப் பற்றாக்குறையை மேலும் குறைக்க வேண்டும் என்பதற்காக, உணவு தான்யங்களை கிடங்குகளிலிருந்து வெளியே எடுக்க விரும்பவில்லை.

கடந்த காலங்களில் இந்திய உணவுக் கழகத்திலிருந்து உபரி இருப்புகளை முழுமையாக வெளியே எடுக்காதபோதும், அது கழகத்தின் செலவினங்களில் பெரும்பகுதியை செலுத்தி இருக்கிறது.எனினும், பாஜக அரசாங்கத்தின் கீழ், இது மாறிவிட்டது.கடந்த சில ஆண்டுகளில், இந்திய உணவுக் கழகத்தின் உணவு மான்ய செலவினத்தில் 60 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் அரசாங்கத்தால் செலுத்தப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர்கள் தங்கள் பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்து, குறைந்த நிதிப் பற்றாக்குறையைக் காட்டிய அதே சமயத்தில், இந்திய உணவுக் கழகம் தன்னுடைய பதிவேடுகளில் நஷ்டக் கணக்கைக் காட்டி, அதனைக் கடன்கள் பெற்றதன் மூலமாக சரி செய்திருக்கிறது. இது, இந்திய உணவுக் கழகத்தின் மீதும் சுமைகளை ஏற்றியிருக்கிறது.இவ்வாறு டிசம்பர் 31 வரையிலும் இக்கழகத்திற்கு 2.36 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டிருக்கிறது.இப்போதைய நெருக்கடிக் காலத்தில் ஒரு முக்கியமான அமைப்பு இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தக்காலத்தில், உணவுக் கழகம் கொள்முதல் செய்த உபரி தானியங்களை உரிய முறையில் வெளியே எடுப்பதற்குப் பதிலாக, அதன்மூலமாக பொது விநியோக முறையை விரிவாக்குபதற்குப் பதிலாக, அரசாங்கமானது, அந்த உபரி தானியங்களை வெளிச் சந்தை விற்பனைத் திட்டம் (Open Market Sales Scheme) மூலமாக, அடிக்கடி நட்டத்தில் (அதாவது இந்திய உணவுக் கழகத்திற்கு அதனைப் பெறுவதற்கு ஏற்பட்ட பொருளாதாரச் செலவினங்களைவிடவும் குறைவான விலையில்) விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. வெளிச் சந்தை விற்பனைத் திட்டம் 1990களின் மத்திய வாக்கில், வெளிச்சந்தையில் உணவு தானியங்களின் விலைகளைக் கூர்மையான முறையில் உயரும்போது அதில் அரசாங்கம் தலையிடுவதற்காக உருவாக்கப்பட்டது.

மறுபக்கத்தில், அது 2000களின் முற்பகுதியில் உபரி தானியங்களை வர்த்தகர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மான்ய விலைகளில் விற்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும், சில மாநில அரசாங்கங்களும் தங்கள் மாநிலத்தில் பொது விநியோக முறையின் கீழ் மக்களுக்கு உணவு தானியங்களை அளிப்பதற்குத் தேவையான உணவு தானியங்களை, முழு பொருளாதாரக் கட்டணங்களைக் கொடுத்து, இவற்றின் மூலம் பெற்று வந்தன.

வெளிச் சந்தை விற்பனைத் திட்டம் உருவாகி செயல்பட்டு வந்த கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில், அரசாங்கம் இத்திட்டத்தைப் பயன்படுத்தி, உபரி தான்யங்களை விற்பனை செய்வதில் பெரிய அளவிற்கு வெற்றிபெற்றதாகக் கூறமுடியாது. உணவுக் கழகம் நிர்ணயத்திடும் பொருளாதாரக் கட்டணம் என்பதும் அப்படி ஒன்றும் குறைவானதாக இருப்பதில்லை.ஏனெனில் அதற்கு உபரி தானியங்களை கிடங்குகளில் வைத்திருப்பதற்கும், அவற்றை நிர்ணயிப்பதற்கும் அதிக அளவில் செலவாகின்றன என்று அது கூறுகிறது.மேலும் வெளிச்சந்தையில் அதிக அளவில் உபரி தானியங்களை விற்பனை செய்தால் அது சந்தையிலும் பெரிய அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அது பயந்தது.

2019-20இல் 2019 டிசம்பர் வரையிலும் இந்திய உணவுக் கழகம், வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் மூலமாக, 14.5 லட்சம் டன்கள் கோதுமை மட்டுமே விற்பனை செய்தது.  அதிக அளவில் இருப்பு இருந்ததாலும், கிடங்குகளில் புதிதாக கோதுமை கொள்முதல் செய்யும்போது இடம் தேவைப்பட்டதாலும், அரசாங்கம், வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் தானியங்களை விற்பதற்கான விலைகளைக் குறைத்து, நட்டத்தில் விற்குமாறு கட்டளை பிறப்பித்தது.

இதன்காரணமாக, இந்திய உணவுக் கழகம் கூடுதலாக 21.8 லட்சம் டன்கள் தானியங்களை ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே விற்பதற்கு சாத்தியமானது.இது 2019-20இல் மொத்தம் விற்பனை செய்த கோதுமையின் அளவு 36.3 லட்சம் டன்களாகும்.இதில் 23 சதவீதத்தை, மாநில அரசாங்கங்களுக்கு மாநில அளவிலான திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

2019-20இல் மொத்தம் வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்கப்பட்ட அரிசியின் அளவு 16 லட்சம் டன்களாகும்.இதில் மாநில அரசாங்கங்களுக்கு 98 சதவீதமும், 10 சதவீதம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் விற்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, இந்த தானியங்களை ஏழைகளுக்கு வழங்குவதற்கு விருப்பம் இல்லாததன் விளைவாகவும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட குறைந்தவிலையில் வெளிச்சந்தையில் விற்பதற்கான வல்லமை அதற்கு இல்லாததாலும், ஏப்ரல் 1 அன்று, அரசாங்கம்  225 லட்சம் டன்கள் அறவைக்கு அனுப்பப்படாத நெல் உட்பட 823 லட்சம் டன்கள் தான்யங்கள் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இந்த அளவு என்பது கிட்டத்தட்ட அரசாங்கத்தின் அமோக விளைச்சல் காலத்தில் வைத்துக்கொள்ளும் இருப்பு தொடர்பான நெறிமுறைகளின்படியான 210 லட்சம் டன்களைவிட, நான்கு மடங்காகும்.

Image

அரசாங்கத்திடம் மிகப்பெரிய அளவில் தான்யங்களை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு வசதிகள் கிடையாது. மிகையாக வரக்கூடிய தான்யங்களை நீண்டகாலத்திற்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் போதுமான அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமலேயே வைத்திருப்பதால், அவற்றில் குறிப்பிட்ட அளவு வீணாகிவிடுகின்றன. மே 1 தேதி வாக்கில், அரசாங்கம் 60.5 லட்சம் டன்கள் கோதுமையும், 11.3 லட்சம் டன்கள் அரிசியும் ‘உடனடியாக உபயோகப்படுத்தக்கூடிய விதத்தில்’ வைத்திருந்தன.(அட்டவணை 5ஐக் காண்க.)இதில் தரமற்ற மற்றும் வீணாகிப்போன தானியங்களும் அடங்கும்.

உடனடியாக அப்படியே உபயோகப்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ள அரிசி மற்றும் கோதுமை ஆகியவை மொத்த இருப்பில், 11 சதவீதம் ஆகும். ஜனவரி 1க்கும் மே 1க்கும் இடையே உள்ள நான்கு மாதங்களில் மட்டும், அரிசி மற்றும் கோதுமை இருப்பில் “உடனடியாக உபயோகப்படுத்தக்கூடியவை” என்பது 7.2 லட்சம் டன்களிலிருந்து 71.8 லட்சம் டன்களாக உயர்ந்தது.

அரசாங்கம் இந்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் உணவு தானியங்களை வைத்திருப்பதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், அவற்றை கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சமூக ஊரடங்கு காலத்தில் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்ற ஏழைமக்களுக்கு இப்போதும்கூட பயன்படுத்த முடியும். அதன்மூலம் உணவுப் பாதுகாப்பின்மை நிலை அதிகரித்துவருதைத் தடுத்திட முடியும். இது அரசாங்கத்தின் தரப்பில் ஒரு கவர்ச்சிகரமான விருப்பத் தேர்வாகவும்கூட இருந்திட முடியும்.

எனினும், இந்த அரசாங்கம்  இதனை ஏழைகளுக்கு வழங்குவதற்கு மிகவும் தயங்கிக் கொண்டிருக்கிறது.  மார்ச் 26 அன்று நிதியமைச்சர், “80 கோடி மக்கள், அதாவது, இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM Garib Kalyan Ann Yojana) திட்டத்தின்கீழ் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் தானியங்களின் அளவைவிட இரு மடங்கு தான்யங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்காக வழங்கப்படும்.” என்றும் “அதுவும் இலவசமாக வழங்கப்படும்,” என்றும் அறிவித்தார்.

நிதியமைச்சர் கூறியதுபோல் நாட்டிலுள்ள மக்களில் மூன்றில் இரு பங்கு மக்களக்கு உணவு தான்யங்கள் அளிக்கப்பட்டிருக்குமானால், அரசாங்கம் அதிக அளவில் தானியங்களை விநியோகித்திருக்க வேண்டும்.

அட்டவணை 6

Image

எனினும், அட்டவணை 6, அரசாங்கம் சுமார் 43 லட்சம் டன்கள் உணவு தானியங்களைத்தான் ஒவ்வொரு மாதத்திற்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் விடுவித்திருக்கிறது என்பதும், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் விநியோகித்துள்ள மொத்த அளவு ஏப்ரலில் 26 லட்சம் டன்கள் என்பதும் மற்றும் மே மாதத்தில் 29 லட்சம் டன்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

மக்கள் பசி-பஞ்சம்-பட்டினியால் செத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் அவர்களுக்கு உணவுப் பொருள்களை இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுதும் எதிரொலித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அரசாங்கம் இவ்வாறு 55.5 லட்சம் டன்கள் தான்யங்களை மட்டுமே  மே 22 வரையிலும் மக்களுக்கு விநியோகித்திருக்கிறது.

அரசாங்கம் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன திட்டத்தின்கீழும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் (மே 22 வரை) 132.7 லட்சம் டன்கள் உணவு தான்யங்கள் (கோதுமை – 40.9 லட்சம் டன்கள் + அரிசி 91.7 லட்சம் டன்கள்) மட்டுமேவிநியோகித்திருக்கிறது.

அரசாங்கம் மே 15 வரை கொள்முதல் செய்திருக்கும் கோதுமையின் அளவு  283 லட்சம் டன்கள் ஆகும். ஏப்ரல் 1இல் இருந்ததைவிட மே 1இல் இந்திய உணவுக் கழகம் 55 லட்சம் டன்கள் கூடுதலாக இருப்பு வைத்திருக்கிறது. உறுதியளித்ததைவிட மிகவும் குறைவாகவே பிரதமர் கரீப் கல்யாண் அன்ன திட்டத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, முழுமையான அளவிற்குத் திட்டமிடாததும், முடிவுகள் மேற்கொள்வதில் தொடர்ச்சியின்மையும் தாமதம் மற்றும் பலர் விடுபட்டிருப்பது போன்றவற்றை ஏற்படுத்தி இருக்கிறது. பல மாநிலங்களில் மக்கள் எப்போதும் வழக்கமாக வாங்கும் ரேஷன் பொருட்களையே வாங்கி இருக்கிறார்கள்.கூடுதலாக எதுவும் வழங்கப்படவில்லை.

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்ட தானியங்களில் கணிசமான அளவிற்கு மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன. தல்பெர்க் குளோபல் டெவலப்மெண்ட் அட்வைசர்ஸ் (Dalberg Global Development Advisors) மேற்கொண்ட ஆய்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அந்த்யோதயா அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களில் 43 சதவீதத்தினர் தங்களுக்கான ரேஷன் பொருள்களை வாங்கவில்லை என்று கண்டிருக்கிறது.

மொபைன் வாணி (Mobile Vaani) என்னும் அமைப்பு பீகார், ஜார்கண்ட் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் 1,737 கிராமப்புற குடும்பங்களை ஆய்வு செய்துள்ளது. இதன் ஆய்வின்படி பீகாரில் 89 சதவீதத்தினரும், ஜார்கண்டில் 63 சதவீதத்தினரும், மத்தியப் பிரதேசத்தில் 69 சதவீதத்தினரும் எவ்விதமான இலவச ரேஷன் பொருள்களையும் வாங்கவில்லை.(பிரதமர் கரீப் கல்யாண் அன்ன திட்டத்திலும் வாங்கவில்லை, அந்தந்த மாநிலங்களில் உள்ள திட்டங்களின்கீழும் வாங்கவில்லை.)

இவ்வாறாக மக்கள் மீது சுமைகளை ஏற்றி அவர்களை கடும் வறிய நிலைக்குத் தள்ளியுள்ள தற்போதைய அரசாங்கம் அவர்களின் துன்பதுயரங்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கூருணர்வின்றி இருந்துவருவதையே மேற்கண்டவை நமக்குப் புலப்படுத்துகின்றன. அரசாங்கம், நாட்டு மக்களை பசி-பஞ்சம்-பட்டினிச் சாவிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக களஞ்சியங்களைக் காலி செய்வதற்குப் பதிலாக, களஞ்சியத்தில் மேலும் மேலும் தான்யங்களைக் குவிப்பதிலேயே குறியாக இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், உணவு தான்யங்களை ஏழைகளுக்கு விநியோகிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது அவர்களின் பசி-பட்டினி நிலையைப் போக்குவதற்கு உதவுவதோடு, பொருளாதாரத்தின் தேவையை வலுப்படுத்தவும், உணவுக் கழகம் இவற்றை தங்கள் கிடங்குகளில் பாதுகாப்பற்றநிலையில் வைத்திருப்பதால் ஏற்படும் சங்கடமான நிலைமைகளைக் குறைப்பதற்கும் உதவிடும். எனவே மத்திய அரசாங்கம் அனைவருக்குமான பொது விநியோக முறையை உடனடியாக அமல்படுத்துவதும், அனைத்து மாநிலங்களுக்கும் உணவு தான்யங்களை இலவசமாக விநியோகிப்பதும், அவை சமுதாய சமையல் கூடங்களை நடத்துவதற்கு இலவசமாக வழங்குவதும் அவசியத் தேவைகளாகும். அப்போதுதான் எவரொருவரும் உணவு இன்றி வாடி வதங்கும் நிலை இல்லாதிருப்பதை உத்தரவாதப்படுத்திட முடியும்.

(நன்றி: scroll.in)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *